ஒன்பது நிமிடங்கள்
ஆயிரம் ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றுகிறோம்.
அலை எழுப்ப மறுத்தன.
மண்ணிலிருந்தும் மாடங்களிலிருந்தும்
அவை மேலெழுகின்றன.
ஒளியை விட மேலோங்கும் நீலப் புகை
மந்திர வனப்பும் கடவுளர் விருப்பும் கூட வர
அவை
சென்ற இடமும் ஒளிர்ந்த இடங்களும் இறங்கிய நிலமும்
தொழுநோய் வராத
புண்ணிய பூமி என்பது ஐதீகம்
அதை நம்பியவர்களின்
வீட்டிலும் நாட்டிலும் மாளிகைகளிலும்
அவை இறங்கவில்லை
துயரம் தெருக்களாய் விரிந்த
பாலை வனங்களிலும்
எல்லோருடைய வியர்வையும் எல்லோருக்கும் மணக்கும்
அகதி முகாம்களிலும்
கூலிகளின் கொட்டகைகளிலும்
பள்ளிவாசல்களின் மேலும்
கையறு நிலையில் மருத்துவமனையில் இருந்து
வீசப்பட்ட கறுப்பு மக்களின் இறுதி விருப்பின் மீதும்
மீன்களற்ற கடலின் மீதும்
அவை இறங்கின.
நீரில் எரியும் விளக்கு
................................
பனியில் எழுதுதல்
இன்று பின்மாலை
உறைபனி, மென்பனி, பிஞ்சுப்பனி,
தூவிப்பனி, உலரும்பனி
எல்லாவறையும் கடந்து
ஈரக் காட்டுக்குள் வருகிறேன்.
அந்த காட்டின் பின்னால்
முற்றாய் உறைந்திருக்கும்
பாதிக் கடல்
கரையில் எஞ்சி இருந்த மரத்தின்
மூன்று கொப்புகளிலும்
மூன்று பறவைகள்.
துடிக்கும் வால்.
நிராசையுடன் பறக்கும்
எஞ்சியிருந்த இலைகள்.
முகில் எங்கிருந்து
உருவாகின்றதென
அப்போது கண்டேன்.
அவை மேலெழுந்து திசையறியாது
பரந்த போது
பிரியாவிடை சொல்லத் தோன்றவில்லை.
...........................
கறுப்புக் கடல்
தென்திசைக் காற்றில்
ஓராயிரம் இலைகள்
துயருடன் பறக்கின்றன
எந்தக் கடலிலும்
விழ மறுத்து அலைகின்றன
அவைக்குத் துணை நிற்பது
எப்போதும் அணையாத
கொங்கைத் தீ
அதில்
ஒரு பொறி உனக்கு
ஒரு பொறி, நாம் கடக்க முடியாத
கறுப்புக் கடலுக்கு.