-->

அண்மை

தமிழ்ச் சூழலில் தலித்திய முன்சுவடுகள் (இந்திரனின் பிணத்தை எரித்தே வெளிச்சம் நூலை முன்வைத்து) - மு.ரமேஷ்

பிணத்தை எரித்தே வெளிச்சம்

முன்னுரை

தமிழ்ச் சூழலில் தலித்திலக்கியம் தோன்றி 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இன்று தலித்திலக்கியம் என்பது கலக இலக்கியம், எதிர் இலக்கியம், மாற்றிலக்கியம் என்று கோட்பாட்டு ரீதியாக ஓரளவு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்ச் சூழலில் பொழுதுபோக்கு, ஆதிக்கச் சாதிக் கருத்தியலுக்கு எதிராக தலித் சினிமாவும் வரத் தொடங்கியுள்ளது. தலித்திலக்கிய முன்னோடிகளுள் ஒருவரான பூமணியின் ‘வெக்கை’ குறுநாவல் அசுரன் படமாக வந்துள்ளது. இதன் ஆரம்பகாலம் அடாவடி இலக்கியம், சாதியிலக்கியம், புலம்பல் இலக்கியம், கொச்சையிலக்கியம் என்றெல்லாம் தமிழ் எழுத்தாளர்களாலும் விமரிசகர்களாலும் புறந்தள்ளப்பட்டது. பெரும்பாலான இடதுசாரிகள், வலதுசாரிகள் தமிழ்த் தேசியவாதிகள், தனித்தமிழ் பற்றாளர்கள், திராவிட இயக்க இலக்கியவாதிகள் என்று யாரும் இதற்கு விதிவிலக்கில்லை. அம்பேத்கரியச் சிந்தனைகளால் ஊக்கம்பெற்ற எழுத்தாளர்களின் முயற்சியால் ஒரு கருத்தியக்கமாக இவ்விலக்கியம் வடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய சாதனையாகும். இச்சாதனைக்கு வித்திட்டோராகப் பலருடைய இலக்கியங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அதனால் இத்தொகுப்பில் கவனப்படுத்தப்படாதவர் என்றால் நிறப்பிரிகைக் குழுவினரை நன்றியோடு குறிப்பிடவேண்டியுள்ளது. நிறப்பிரிகைக் குழுவினர் (பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், து.இரவிக்குமார், பிரேம், ரமேஷ்) மற்றும் கலையிலக்கிய விமர்சகர் இந்திரன் உள்ளிட்டோர் தனித்துக் குறிப்பிடவேண்டியவராவர்.

அந்தவகையில் இந்திரன் கொண்டுவந்த ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’ என்கிற தொகுப்பு தமிழ்ச் சூழலில் தலித்திலக்கியத்திற்கான முன்சுவடாக அமையக்கூடியது. குஜராத்தி, மராத்தியில் உள்ள தலித்திலக்கியத்தின் ஆழ அகலங்களைத் தமிழ்நாடு, இலங்கை தமிழ்ச் சூழலில் பொருத்திக்காட்டினார். சமகாலச் சக போர்பாடிகளான ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ என்னும் கறுப்பினக் கவிதைகளையும் கடவுளுக்குமுன் பிறந்தவர்கள் என்னும் ஆதிவாசி கவிதைகளையும் தமிழுக்குக் கொண்டுவந்ததன் தொடர்ச்சியாக இத்தொகுப்பையும் கொண்டுவந்தார். இப்பின்புலத்தில் வைத்துப் பார்க்கிறபோது இத்தொகுப்பு முன்சுவடாகிறது. தமிழ்ச் சூழலில் தலித்திலக்கியம் அரும்பியதன் வரலாற்றைச் சுருக்கமாக அறிவதற்குப் பிணத்தை எரித்தே வெளிச்சம் என்கிற இத்தொகுப்பை அறிமுகப்படுத்துவது தேவையாகிறது.

எனினும் தலித்திலக்கியத்தின் முன்சுவடுகளைத் தமிழ்ச் சூழலுக்கு அகவிழிப்போடு அறிமுகப்படுத்திய இந்திரனின் வாழ்வையும் பணிகளையும் சுருக்கமாகவேனும் விளக்குவது இன்றியமையாததாகிறது.

இது இந்திரன் காலம்

தற்போது சென்னைக் கோடம்பாக்கத்தில் வாழ்ந்துவரும் இந்திரன் தமிழ் இலக்கிய வெளியில் சிறந்த கலையிலக்கிய விமரிசகராகக் கொண்டாடப்பட்டு வருகிறார். 1948ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இது 75ஆம் ஆண்டாகும் அதாவது பவளவிழா ஆண்டாகும்.

இவர் புதுச்சேரியில் பிறந்து சென்னையில் வளர்ந்து மும்பை அவுரங்கபாத்தில் இந்தியன் வங்கி மேலாளராகப் பணியாற்றி பின் தற்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவர் வாழ்க்கை முழுவதும் நகரத்தால் ஆனதால் தன்னை நகரக் கவிஞன் என்று சொல்லிக் கொள்கிறார். ‘முப்பட்டை நகரம்’, ‘மின்துகள் பரப்பு’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் நகரத்தின் இயல்பைச் சொல்லக் கூடியன. நகரத்தின் உயிர்த்துடிப்பு மின் இணைப்புகளாலும் வாகனப் போக்குவரத்துகளாலும் அவற்றின் ஓசைகளாலும் கூடுபவை. எலக்ட்ரோ மேக்னடிக் பீல்ட் (Electro Magnetic Field) என்பதை ‘மின் துகள் பரப்பு’ எனக் கவிதைத் தொகுப்பிற்குத் தலைப்பிட்டுள்ளார். பணிவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் நகரத்தை வாழ்விடமாகக் கொண்ட எழுத்தாளர்கள் பெரும்பாலோர் தங்களைக் கிராமக் கடவுள்கள் போல எழுதியும் பேசியும் வருகின்றனர். திறந்த குடிசைகளைக் கொண்ட கிராமங்கள் கருத்தியல் ரீதியாக மூடுண்ட பகுதி. இதுகுறித்துப் புகார் எதுவும் தெரிவிக்காத இந்த நகரக் கவிஞர் எப்போதும் மாற்றங்களையும் புதுமைகளையும் உருவாக்குவது, வரவேற்பது என்கிற மனநிலையோடு விளங்குகிறார். ‘Machine Aesthetic’ எந்திர அழகியலைக் கொண்டுவரவேண்டும் என அவர் விரும்புவதும் இந்த மனநிலையோடுதான். இதற்கு முன்பே உருஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் 1915 வாக்கில் தொடங்கப்பட்ட மொழியியல் வட்டத்தைச் சார்ந்த வடிவவாதிகளால் (Formalists) எந்திரவாத அழகியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியாதவர் அல்லர் அவர். இது தமிழ்ச் சூழலுக்கேற்ப அசலாக வரவேண்டும் என்பதனை இப்படிச் சொல்லுகிறார்.

‘மும்பையில் உள்ள அவுரங்கபாத் இந்தியன் வங்கியில் பணியாற்றியபோது தலித் பேந்தர்ஸ் அமைப்பைச் சார்ந்த பலரும் வாடிக்கையாளர்களாக இருந்தனர். இதன் காரணமாக அவர்களோடு தொடர்பு ஏற்பட்டது. மாலையில் இவர்களோடு இலக்கியச் சந்திப்பு ஏற்படும். தலித் பேந்தர்ஸ் அனைவரும் சுத்தமான துணிமணிகளை அணியக்கூடியவர்கள், ஒவ்வொருவரும் கருத்துத் தெளிவுமிக்க பேராளுமைகள். கறுப்பர் இலக்கியம் வட அமெரிக்க பகுதியில் நகரத்திற்கு வெளியில் இருந்த துணைநகரமான ஏர்லின் பகுதியில் இருந்துதான் தோன்றியது. அதுபோலதான் எங்களுடைய இலக்கியச் சந்திப்பும் அமைந்தது. இந்தச் சூழலில்தான் தலித்திலக்கியத்தை எப்படியாவது தமிழுக்குக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணி இயங்கினேன்’ என்கிறார். (இந்தியச் சாகித்திய அகாதெமி முதல் தலித் சேதனா தலைமை உரை- 2019).

நூல் பணிகள்

புனைவிலக்கியம், சிறுகதை, கவிதை, கலையிலக்கிய விமரிசனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனத் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக நாற்பதற்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை இவர் வெளியிட்டுள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, எகானாமிக்ஸ் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய தேசிய நாளேடுகளிலும், தமிழின் பிரபல இதழ்கள், சிற்றிதழ்களிலும் நவீன ஓவியம், சிற்பக்கலைகள் குறித்துப் பரவலாக எழுதி வருபவர். கவிதை நூல்கள், அதிநவீன அழகியல் போக்குகளைக்கொண்ட இவர் கவிதைகளைத் ‘தமிழுக்கு ஒரு பரிமாண விஸ்தரிப்பு’ என்கிறார் எழுத்தாளர் சுஜாதா. இவருடைய நூல்கள் 1972 - திருவடி மலர்கள், 1982 - அந்நியன், 1991 - முப்பட்டை நகரம், 1994 - சாம்பல் வார்த்தைகள், 1982 - Syllables of Silence, 1996 - Acrylic Moon, மிக அருகில் கடல் குதுலுப் தீவு குறித்த கவிதைகள், மின் துகள் பரப்பு நகரம் குறித்த கவிதைகள் இவற்றோடு சில எதிர்க் கவிதைகளைத் தாங்கிய தொகுப்பு ஒன்றும் தற்போது வந்துள்ளது.

இவர் புனைவிலக்கியத்திற்கு இணையாக மொழிபெயர்ப்பிலும் கவனம் செலுத்தியுள்ளார். அந்தவகையில் இவருடைய மொழிபெயர்ப்புகள் - அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - 1982, காற்றுக்குத் திசை இல்லை - 1986, பசித்த தலைமுறை - 1994, பிணத்தை எரித்தே வெளிச்சம் -1995 (குஜராத்தி - மராத்தி - தமிழ் என ஆகச்சிறந்த தலித்தியல் படைப்புகள்), கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் - ஆதிவாசி கவிதைகள் – 2002 ஆகியவற்றை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தி தமிழ் இலக்கிய வெளியைப் புதிய திசைகளை நோக்கி இழுத்தார். இவை மட்டுமா இவர் ஓவியர் என்பதனால் பிற நுண்கலைகளை இலக்கியத்தோடு இணைத்தார். ஓவியம், சிற்பம், சினிமா உள்ளிட்டவற்றை இலக்கிய அரசியலோடு வைத்துப் பார்த்தார். இதனால் இவர் சிறந்த கலையிலக்கிய விமரிசகராகத் தமிழ்ச் சூழலில் கொண்டாடப்படுகிறார். தமிழ் அழகியல் என்பது எழுதப்பட்ட இலக்கியங்களில் இல்லை. அது வெகுமக்களின் புழங்குவெளிப் பண்பாட்டிலும் அவர்களின் அன்றாடப் பேச்சுகளிலும் இருக்கிறது என்கிறார். ஜெர்மானியச் சிந்தனையாளர் விட்கன்ஸ்ட்டேன் அவர்களின் போட்டோ கவிதைக் கோட்பாடு குறித்துத் தனது கவிதையரசியல் நூலில் விவாதிக்கிறார். இப்படியான மாற்று மரபுகளை உள்ளிழுக்கும் நிலையில் இவருடைய கலையிலக்கிய விமரிசன நூல்கள் அமைந்துள்ளன.

இவருடைய கலை விமர்சன நூல்கள் - தமிழ் அழகியல் 1994, தற்காலக் கலை - அகமும் புறமும் - 1996, Taking his Arts to tribals - 1999, தேடலின் குரல்கள் – 2000, கவிதையின் அரசியல் - 2000, சினிமா விமர்சனம்; ரே - சினிமாவும் கலையும், உரையாடல்; Man & Modem Myth; A Dialogue with S Chandrasekaran, Artist-Singapore 1994.

இவற்றோடு எக்கனாமிக்ஸ் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, இல்லிட்டரஸ்ட்டேட் வீக்லி உள்ளிட்ட இதழ்களில் இவர் மும்பையில் பணியாற்றிய காலத்திலிருந்து தமிழின் மாற்றடையாளங்களையும் பன்மைத்தன்மைகளையும் தொடர்ந்து எழுதிவருகிறார். கே. எம். கோபால் குறித்த கட்டுரைதான் முதன்முதலில் இல்லிட்டரஸ்ட்டேட் வீக்லியில் வந்தது என்று தனது முதல் ஆங்கிலக் கட்டுரை குறித்து நினைவுகூறுகிறார். மும்பையில் புகழ்பெற்ற ஜகாங்கீர் ஆர்ட் கேலரியில் கே. எம். கோபால் அவர்களின் ஓவியங்களைக் காட்சிப்படுத்தினார் என்பது இவருடைய கலையார்வத்திற்குப் போதுமான சான்றாகும். வள்ளுவர் சிலையைக் குமரி முனையில் நிறுவியபோது கலைஞரின் வேண்டுகோளுக்கேற்ப வெவ்வேறு மாநிலங்களிலிருந்து 133 ஓவியர்களை அழைத்துக் குறளோவியக் காட்சியை நடத்தினார். இந்திரனின் கலை சாட்சியங்களில் இது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இனிப் பிணத்தை எரித்தே வெளிச்சம் என்னும் இப்பனுவல் குறித்து விளக்குவது தகும்.

பெயர் என்னும் அடையாளம்

பின்காலனியச் சூழலில் எதுவொன்றும் அடையாளம்தான். தலித்திலக்கியத் தொகுப்பு ஒன்றிற்குப் ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’ என்கிற பெயர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அன்றைய தமிழ்ச் சூழலில் பார்க்கப்பட்டது. ஏனெனில் இத்தலைப்பு பேரதிர்வை ஏற்படுத்தியிருந்தது. இப்பெயர் வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நவீன நாடக ஆசிரியர் பாதல் சர்க்காரின் நாடகத்தில் வரும் பாடல் ஒன்றின் கடைசி வரியாகும். இங்கிருந்துதான் இத்தலைப்பைத் தேர்ந்துகொண்டேன் என்று பல மேடைகளில் இந்திரன் குறிப்பிட்டுள்ளார். நாலாப்புறமும் இருள்சூழ்ந்த நிலையில் ‘பிணத்தை எரித்து வெளிச்சத்தைப் பெறுவேன்’ என்று பாடிக்கொண்டே அந்த நாடகம் முடியும் அதனை எடுத்து இந்திரன் இத்தொகுப்பிற்குப் ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’ என்று பெயர் சூட்டியுள்ளார். இது கலகத்தனமானது மட்டுமல்ல எதிர் அழகியல் அல்லது மாற்றழகியல் தன்மை கொண்டதாகும். இன்னும் சொல்லப்போனால் இதுதான் தலித்தழகியலாகும். நவீனத்தின் தொடக்க காலம்வரை கலை அழகைத் தேடிக்கொண்டிருந்தது. ஜனநாயகமும் மனித உரிமைகளும் உரையாடலுக்கு உகந்த கோட்பாடுகளாக வந்தபிறகு விளிம்புநிலையில் கிடந்த மறைக்கப்பட்ட உண்மைகள் யாவும் அரங்கின் முன்பகுதிக்கு வரத் தொடங்கின. அவற்றுள் தலித்தியமும் ஒன்று. இக்கட்டத்தில் கலை உண்மையை அனுமதித்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் வந்துவிட்டது. இதன் காரணமாகத்தான் தலித்தழகியல் என்கிற ஒன்றும் ஈர்ப்புவிசையாக மையம் கொண்டுள்ளது. இதற்கு இப்பெயரிடுதலும் முக்கியமான காரணமாகும். இங்கு முதன்மையாகக் குறிப்பிடப்படவேண்டிய செய்தி ஒன்று ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’ என்ற இத்தொகைநூல் தலைப்பு ‘பாதல்சர்க்காரின்’ வரியென்பதனை இந்நூலின் அட்டைப் படமே நமக்குச் சொல்லிவிடுகிறது. மொழியோ பழசு; கதையோ நைந்துவிட்டது. வெளிச்சக்கிரணம் மிகவும் மெலிது, எல்லாம் மங்கித் தெரியும், இக்கணம் சலனமற்று நாற்புறமும் சமைந்துவிட்டன; இன்று பிணத்தை எரித்தே வெளிச்சம் என அழகுற இந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.

பனுவலின் அமைப்பு

குஜராத்தி, மராத்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் வெளிவந்த கவிதைகள், சிறுகதைகள், நாவல்களின் ஒவ்வொரு பகுதி, நாடகங்கள் அப்படித்தான், உரையாடல்கள், கட்டுரைகள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித்திலக்கியத் தொகுப்பு இதுவாகும். குஜராத்தில் ஆறு, மராத்தியிலிருந்து பத்து, தமிழிலிருந்து பன்னிரண்டு என முப்பது தலித்திலக்கியங்களின் தொகுப்பாக இது அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புடைய இத்தொகைநூலைத் தமிழ் தலித்திலக்கிய வளர்ச்சியின்மீது கொண்ட பெருவேட்கையாலும் அக்கறையாலும் தொகுத்துத் தமிழில் மொழிபெயர்த்த நிலையில் இவர் தமிழ் தலித்திலக்கியத்தின் முன்னோடியாக வரலாற்றை வயப்படுத்திகொண்டார். குஜராத்தி, மராத்தி இலக்கியங்களை ஆங்கிலத்தின் வழி வாசித்துத் தமிழ்ப்படுத்தியுள்ளார்.

குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த கே.எம்.ஷெரிஃப், ஈ.வி.ராமகிருஷ்ணன், மராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த ப்ரியா அதர்கர், வாந்தா கோகலே, விலாஸ் சரங், ராதா அய்யர், ரமேல் தியாதே, வலிதா பரஞ்சபே, அனில் ரகுநாத், குல்கர்னி ஆகியோர்க்கு நன்றி சொல்லியுள்ளதன் வழி முறையே குஜராத்திலிருந்தும் மராத்தியிலிருந்தும் ஆங்கிலத்திற்குக் கொண்டுவந்தவர்கள் இவர்கள் என்பதனை அறியமுடிகிறது. மேற்சொன்ன மொழிபெயர்ப்பாளர்கள் குறித்தோ இந்திரன் தன்னுடைய மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்தோ இந்நூலின் முன்னுரையில் எதுவும் மேலதிக விவரங்கள் எதுவும் தரப்படவில்லை. எனினும் இனி வருவது தலித்திலக்கியத்தின் பண்பாட்டுக் காலம் என்பதனை முன்னுணர்ந்து மிகத் தெளிவாகவும் திடமாகவும் முன்னுரையை நான் யார்? என்கிற கேள்வியிலிருந்து தொடங்கி தலித்துகள் தன்னடையாளங்களை எழுதுதலின் மூலம் தலித்துகளின் தன்னிலைகளை நிலைநிறுத்த முடியும் என்கிற வரலாற்றுச் சாத்தியத்தை உணர்த்துவதையும் வாசிக்க முடிகிறது.

முன்னுரையை வாசித்தபோது

நான் யார்? என்கிற கேள்வியோடு தொடங்கும் முன்னுரை, ‘நான் யார்? இந்திரன் ஆற்காடு சாலை கோடம்பாக்கம் சென்னை’ என்று முடிகிறது. இதனை நுண்ணரசியலைப் பேசும் நுண்ணழகியல் எனக் கொள்ளமுடிகிறது. “நான் யார்?”

இந்தக் கேள்வி பொதுவாகத் தலித் அல்லாதவர்களுக்கு ஒரு தத்துவார்த்தமான கேள்வியாக இருக்கலாம். ஆனால் தலித்துகளைப் பொறுத்தமட்டிலும் இது ஒரு அரசியல் கேள்வி. இந்தியத் தமிழ்ச் சூழலில் தலித்துகளுக்கும் தலித் அல்லாதோருக்கும் இடையே உள்ள பாரதூரங்களைச் சுட்டிக்காட்டுகிறது. தலித்துகளின் இருப்பு இன்மையில் இருக்கிறது. அதாவது அடையாளமற்ற வரலாற்றுப் புறவெளியைக் கொண்டதாக இருக்கிறது. தலித் வரலாற்றுக்கான தன்னிலையாக்க உந்துதல்களை பிளாக் ரைட்டிங்கில் இருந்து, கறுப்பின எழுத்துகளிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

“உங்களது கறுப்புத் தோலை உடலை மூடும் ஒரு அங்கியைப் போல் அணியாதீர்கள். அதனை ஒரு போர்க் கொடியைப்போல் உயர்த்திப் பிடியுங்கள்” என்று குரல் கொடுக்கிறான் அமெரிக்க கறுப்பு மகாகவிஞன் லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் எனக் குறிப்பிடுவதன் வழி இதனை உணர்த்துகிறார் இந்திரன்.

மெல்ல மெல்ல இந்த முன்னுரை அடையாளச் சிக்கலைக் கவனப்படுத்துகிறது. தன்னிலை குறித்த வெறுப்பு, நேசம் என்று உள்ள அடையாளச் சலனத்தைத் தீண்டி கூர்மைப்படுத்துகிறது. கறுப்பர்களுக்காவது தாயகம் என்று சொல்லிக்கொள்ள நிலமிருக்கிறது. தலித்துகளுக்கு அப்படி ஏதாவது உண்டா?

கறுப்பர்களைக் காட்டிலும் தலித்துகளின் நிலை மிகவும் கீழ்நிலைப்பட்டது என்று தலித் தன்னிலையாக்கத்திற்கான தேவையை எடுத்துரைக்கிறது இம்முன்னுரை.

இத்தொகுப்பின் தேவையைப் பின்வருமாறு இந்திரன் விளக்குகிறார். தமிழில் எழுதப்பட்டு வரும் தலித் இலக்கியங்களைப் பிறமொழிகளில் எழுதப்பட்ட தலித் படைப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியும் இருக்கிறது. எந்தெந்தப் போக்குகளைக் கைக்கொள்வது, எந்தெந்தப் போக்குகளை விட்டுவிட வேண்டி இருக்கிறது என்பதை முடிவு செய்ய இவை தேவைப்படுகின்றன.

குஜராத் சூழலில்

எழுபது எண்பதுகளில் குஜராத்தில் மிகத் தீவிரமாக இயங்கிய தலித்தெழுத்தாளர்களின் எழுத்துகள் இத்தொகுப்பில் கவனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில்,

ஜயத் பாமன் அவர்களின் தூக்கு தண்டனை, நானும் மனிதன்தான், எஷ்வத்கெலானி அவர்களின் அடையாளம், தவத்சவா அவர்களின் மாற்றம், ஷங்கர் பெயின்ட்டர் அவர்களின் சமூகத் தொண்டர், நர்சிம் ஜெம்பா அவர்களின் வார்த்தைகள், மங்கல் ரத்தோட் அவர்களின் தாகம் தீர்த்தவர், கே.எம்.ஷெரிப் அவர்களின் ராஜ்சோலங்கி உரையாடல், ஹரீஷ் மங்களம் அவர்களின் தனிமொழி ஆகியனவாகும். இவற்றுள் மாற்றம் என்கிற சிறுகதையும் கே.எம்.ஷெரிப் அவர்கள் ராஜ்சோலங்கியிடம் நடத்திய உரையாடலும் தவிர மற்றவை அனைத்தும் கவிதைகள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் ஆரம்பகாலத் தலித்திலக்கிய பின்புலம்

குஜராத்தி மொழியில் 70களில்தான் தலித் அடையாளத்துடன் கூடிய இலக்கியம் உருவாகத் தொடங்கியது. இதற்கான பங்களிப்பைப் பல தலித் வெளியீடுகள் செய்தன.

1971 லிருந்து 1974 வரை ஒழுங்கற்ற இடைவெளிகளில் வெளிவந்த ‘ஹீன்’ எனும் இதழ் இதில் குறிப்பிடத்தகுந்தது. 1971 இல் ‘சிறுத்தை’ என்ற வெளியீடு தலித் இலக்கியத்திற்கென்று தனியாக வெளியிடப்பட்டது. ராமேஸ் சந்திரபார்மர் கொண்டுவந்த இந்த வெளியீட்டைத் தொடர்ந்து ஏராளமான தலித் இதழ்கள் வெளிவந்தன என எழுதிச் செல்லும் இந்திரன் மேலும் ‘ஆக்ரோஷ் (கோபம்), காலா சூரஜ் (கருப்பு சூரியன்), கருட் (கருடன்), தலித் பந்து (தலித் சுற்றம்), நயா மார்க் (புதிய பாதை), திலா (இசை) என்று பல ஏடுகள் குஜராத்தி இலக்கியத்தின் எதிர்மரபு இலக்கிய அணியைக் கட்டின’ எனத் தலித்திலக்கியத்திற்குக் குஜராத்தில் இதழ்கள் ஆற்றியப் பங்களிப்பைச் சிறப்பாகக் கவனப்படுத்துகிறார். அடுத்த நிலையில், இடஒதுக்கீடு தொடர்பான உரையாடலிலும் குஜராத் தலித்திலக்கியவாதிகள் தங்களுடைய பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

‘1981 இல் இடஒதுக்கிட்டிற்கு எதிரான இயக்கங்கள் குஜாராத்தில் ஓங்கியபோது, தலித் இலக்கியம் அதன் முழுவீச்சுடன் அதனை எதிர்கொண்டது’ என்று இந்நூல் எடுத்துரைப்பதிலிருந்து இக்கருத்தினை உறுதிசெய்யலாம். மேலும், குஜராத்தில் அக்காலத்திலேயே நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் என்று தலித்திலக்கியம் அனைத்து வகைவடிவங்களிலும் வெளிவந்து பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகத் தலித் இலக்கியவாதிகள் குஜராத்தி மொழியின் முக்கிய இலக்கியவாதிகளாக அங்கீகரிப்பட்டனர். ஜோசப் மக்வான், மோகன் பார்மர், ஹரீஷ் மங்களம், மங்கள் ரத்தோட், கிசான் சோசா என்று பல குஜராத்தி தலித் எழுத்தாளர்கள் அவர்களது இலக்கியப் பங்களிப்புக்காகப் பாராட்டப் பெற்றனர்.

குஜராத் தலித்திலக்கியத்தின் முக்கிய பண்புகள்

குஜராத்தி தலித் இலக்கியத்தின் முக்கிய பண்புக் கூறுகளாகக் கீழ்க்கண்டவற்றைக் கூறலாம். குஜராத்தி பேச்சு மொழியிலிருந்தும், நாட்டுப் பாடல்கள், நாட்டுப்புற நிகழ்கலை வடிவங்கள் ஆகியவற்றிலிருந்தும் ஏராளமாகப் பெற்றிருக்கிறது குஜராத்தித் தலித் இலக்கியம். தலித்திலக்கியத்தின் அடிப்படைகள் எதிர்மரபுக் கூறுகளாலானது. அந்த வகையில் தொன்மங்களை, அதில் உள்ள ஆதிக்கக் கருத்தியலுக்காகக் கேள்வி கேட்டல், மறுவிசாரனை செய்தல் என்பதுவும் பொதுவான ஒன்று. இத்தொகுப்பில் உள்ள ‘தூக்குத் தண்டனை’ கவிதை மனுவைத் தூக்கில் ஏற்றப்போவதாகச் சொல்லுகிறது.

‘ஓ மனுவே ஒரு நாள் என் வீட்டின் முன்னுள்ள வேப்ப மரத்தில் உன்னை நிர்வாணமாகத் தூக்கிலிடுவேன், மனுவே உனது ரத்த நாளங்களைப் பிளந்து திறப்பேன், எங்கள் முதியவர்களின் ரத்தத்தை எவ்வளவு குடித்திருக்கிறாய் என்பதைப் பார்ப்பதற்காக! ஒருநாள் உனது தோலை நான் உறிப்பேன். பிராமணர்களுக்கும், ஷத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் மட்டும் சேவை செய்யவே நீ எழுதினாய். சாமர்களின், பங்கிகளின், சந்தல்களின் தலை எழுத்தை நீ எழுதினாய். அவர்களைக் கிராமத்திலிருந்து விலக்கி வைப்பதற்காகவும் உடைந்த பாத்திரங்களிலிருந்து அவர்களை உண்ணச் செய்வதற்காகவும் நீ எழுதினாய். (தூக்குத் தண்டனை, ஹயந்துபாமான்) என்று தொடர்கிறது இக்கவிதை. மனுச் சட்டத்தின் உளவியல் இந்திய உளவியலாக இருக்கிற இப்போதும் இக்கவிதைக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இதைப்போலவே, ‘அடையாளம்’ என்னும் கவிதையும் குறிப்பிடத்தக்கது. ‘இங்கே அவர்களுக்குத் தெரியும் நான் யாரென்று. ஆனால் ஒன்றும் தெரியாததுபோல் அவர்கள் கேட்கிறார்கன் நீ யார்? நான் அவர்களுக்குச் சொல்கிறேன்; இந்தத் தலை சம்புகனுடையது, இந்தக் கரங்கள் ஏகலைவனுடையது, இந்த இதயம் கபீரினுடையது. நான் ஜபாலி சத்யகம் ஆனால் இந்தக் கால்கள் இன்னமும் தீண்டத்தகாதவைதான். இன்று நான் ஒரு மனிதன் அது போதுமானது இல்லையா? சரி, நீ யார்?’ (கவிதை: அடையாளம், கவிஞர்: எஷ்வத்வகேலா).

தலித் தன்னிலை அடையாளங்களை நினைவுப்படுத்திக் கொண்டே ஆதிக்கத் தன்னிலையின்மீது நீ யார்? என்கிற கேள்வியை எழுப்புகிறது இக்கவிதை. இந்த அம்சம் இன்றியமையாத ஒன்று.

‘மராத்தி தலித் இலக்கியத்தினால் உத்வேகம் பெற்று எழுந்த குஜராத்தி தலித் இலக்கியம் இன்று தனக்கெனத் தனியானதொரு அடையாளம் கொண்டதாக மாறிவிட்டது. மராத்தி தலித் இலக்கியம், கன்னட தலித் இலக்கியம் ஆகியவற்றை விமர்சனப் பூர்வமான பார்வையில் பார்த்து அந்த இலக்கியங்கள் செய்த தவறுகளைக் குஜராத்தி தலித் இலக்கியம் தவிர்த்து வளர்ந்திருக்கிறது. இன்னமும் பல பரிமாணங்களுடன் வளர்ந்து வருகிறது.

மராத்தியச் சூழலில்

அரசியல் நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் தலித்தியம் என்னும் கருத்தாக்கமாக ஆனாலும் கோட்பாடாக ஆனாலும் முதன்முதலில் மராத்திய மண்தான் இந்தியத் துணைக் கண்டத்திற்கு அறிமுகப்படுத்தியது. அரசியல் உள்ளிட்ட அனைத்து வடிவநிலைப் புரட்சிக்கு வித்திட்டவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் என்றால் பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டவர் மகாத்மா ஜோதிராவ் பூலே ஆவர். முதன்முதலில் தலித் என்கிற சொல்லை உருவாக்கியளித்தவரும் பூலேதான். 19ஆம் நூற்றாண்டு முதலாக மராத்திய மண்ணில் தலித் விடுதலை குறித்த ஓர்மை தலித்தென்ற சொல்லோடும் கருத்தோடும் உருவாகிவந்திருக்கிறது. கறுப்பர் விடுதலைக்காக அமெரிக்காவில் தொடங்கப்பட்ட பிளாக் பேந்தர் என்னும் இயக்கத்தின் தாக்கத்தினால் மராத்திய மண்ணில் 1970களில் தலித் பேந்தர்ஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் நீக்ரோக்கள் முன்னிறுத்திய கறுஞ் சிறுத்தை (Black Panther) இயக்கத்தைப் போன்ற ஒன்றை அமைக்க முயன்றனர். இதன் விளைவாக, நாம் தியோதாசல், அர்ஜுன் டாங்ளே, ஜே. வி. பவார் ஆகிய மூவரின் முயற்சியால் ‘தலித் சிறுத்தைகள்’ எனும் அரசியல் அமைப்பு 1972இல் தோன்றியது. இந்த இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் எழுத்தாளர்கள். இந்தியாவில் முதன் முறையாக எழுத்தாளர்கள் ஒரு அரசியல் இயக்கத்திற்காக ஒன்றிணைந்தனர். அது எதிர்ப்பு இலக்கியமாக உருவெடுத்தது. இது மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒரு முன்னெடுப்பாகும். சரத்சந்தரர், சரண்குமார் லிம்பாலே, அர்ஜுன் டாங்களே, அர்ஜுன் காம்பலே, காஞ்சாயலைய்யா, வசந்த்மூன், ஆன்ந்த்டெல்டும்டே இப்படி எத்தனையோ தலித்திலக்கிய ஆளுமைகளைக் குறிப்பிடமுடியும்.

இத்தொகுப்பில் உள்ள மராத்தி இலக்கியம் என்று எடுத்துகொண்டால் பாபுராவ் ஐக்தப் ‘உடைந்த நாடு’, ஜோதி லன்ஜேவர் ‘கலகக்காரன்’, அர்ஜுன் டாங்ளே ‘பெயர் வேண்டும்’, சரண்குமார் லிம்பாளே ‘வெள்ளைத்தாள்’, சரத்சந்திர முக்திபோத் ‘எது தலித் இலக்கியம்?’, தயா பவார் ‘நெருப்பில் சுடுவோம்’, பகவன் சவாய் தத்தகதா, ‘இரண்டு பார்வை ஒன்று’ அர்ஜுன் காம்ப்ளே, ‘அறிவிப்பு’ பாபுராவ் பாரும், ‘போர்செய்’, ஷங்கர் ராவ் கராட் எலும்பு வியாபாரி - ஒரு சுயசரிதை விஷரொட்டி, அர்ஜூன் டாங்ளே பதவி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றுள் எலும்பு வியாபாரியின் சுயசரிதை, விஷரொட்டி, பதவி ஆகியன சிறுகதைகளாகும். தலித் கண்ணோட்டத்துடன் படைக்கப்படுவது தலித்திலகியம் ஆகும் என்கிற கருத்தை எது தலித்திலக்கியம் என்கிற சரத் சந்தரமூர்த்தியின் கட்டுரை சிறப்புற எடுத்துரைக்கிறது. ததாகரிடம் வேண்டுவதாகத் தத்தகதா ‘இரண்டு பார்வை ஒன்று’ என்னும் கவிதை இத்தொகுப்பில் உள்ளது.

‘தத்தகதா நான் உன்னிடம் வந்திருக்கிறேன் என் எலும்புகளிலும் பாய்ந்திருக்கும் துயரங்களோடு உன் ஒளிவட்டத்தின் ஆரக் கால்களுக்குள் எனது இருட்டை நான் கொண்டுவருகிறேன். எனது இருளிலிருந்து விலக்கி உனது அணைப்பிற்குள் என்னை ஏற்றுக்கொள். அவர்களின் விழாக்களில் குத்துப்பட்டு என் சுய அடையாளங்களை இழந்துகொண்டு என்னை நானே தேய்த்துக் கொண்டேன், தத்தகதா இனியும் வினாக்கள் வேண்டாம்.’ போர் செய் என்னும் கவிதை இத்தொகுப்பில் மிகவும் கவனிக்கப்படவேண்டி கவிதையாக இருக்கிறது. இதன்காரணமாக அக்கவிதை இங்குத் தரப்படுகிறது.

‘வெளிநாடுகளுக்காகச் சொந்த மண்ணைப் பிரிபவர்களே, பிற மொழிகளைத் தழுவிக் கொள்பவர்களே, அந்நிய உடைகளை அணிபவர்களே, இந்த நாட்டை மறப்பவர்களே - உங்களுக்கு நான் சலாம் செய்கிறேன். நூற்றாண்டுகளாக அடித்து உதைக்கப்பட்ட பின்னரும்கூட மாறாதவர்களே, மறக்காத உள்ளொன்றும் வெளியொன்றுமாக இருப்பவர்களே உங்களைக் கேட்கிறேன்; தீண்டாமை என்றால் என்ன என்று யாரேனும் உங்களைக் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? தீண்டாமை, கடவுளைப் போல நிலையானதா? தீண்டத்தகாதவன் போலிருத்தல் என்றால் என்ன? அவன் யாரைப் போல் இருப்பான்? அவன் குஷ்டரோகியைப் போல் இருப்பானா? அல்லது தீர்க்கதரிசியின் எதிரியைப் போல் இருப்பானா? பாவியைப்போல் ஒரு ஒழுக்கமற்றவனைப்போல் அல்லது ஒரு நாத்திகனைப்போல் இருப்பானா? உனது பதில் என்னவாக இருக்குமென்று சொல். “நான் தான் தீண்டத்தகாதவன்” என்று தயக்கமின்றி நீ சொல்வாயா? அதனால்தான் சொல்கிறேன் இந்த நாட்டில் பிறந்த தவற்றைச் செய்த நீங்கள் இப்போது அதைத் திருத்த வேண்டும் நாட்டை விட்டுப்போ அல்லது போர் செய்.

மராத்தியத் தலித்திலக்கியச் சூழல் குறித்துப் பார்க்கையில் ஆய்வாளர்கள் கூறுவதாவது ‘மராத்தித் தலித் இலக்கியம் கவிதைகளிலும், சுய சரிதைகளிலும் சிறந்து விளங்குகிறது. சிறுகதை, நாவல் போன்ற துறைகளிலும் மராத்தி தலித் இலக்கியம் வெற்றிகளை ஈட்டி இருக்கவே செய்கிறது. ஆனால், தலித் நாடகம் என்பது மேலும் சிறக்கவேண்டியிருக்கிறது.

மராத்தித் தலித் இலக்கியம் வெறும் எழுத்துச் சம்பந்தப்பட்டதல்ல, சமூகப் புரட்சியின் ஒரு கருவியாகவே, ஒரு செயல்பாடாகவே மராத்தித் தலித் இலக்கியம் கருதப்படுவதால் அது தனது போர்க்குணத்தை இழக்கமறுக்கிறது.

தமிழ்ச் சூழலில் தலித்தியக் கருத்தாக்கம்

தமிழில் தலித்திலக்கியம் என்பது அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி முதன்மையான கவனத்தைப் பெற்றது என்றாலும் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் 19ஆம் நூற்றாண்டிலேயே தலித் கருத்தாக்கம் குறித்த உரையாடல் தொடங்கிவிட்டது. திராவிடர், ஆதிதிராவிடர், பூர்வபவுத்தர், ஆதித் தமிழர் போன்ற பெயர்களில் தலித்தியக் கருத்தாக்கம் குறித்த உரையாடல் தமிழ்நிலத்தில் இருந்தது. பண்டிதர் அயோத்திதாசர், தாத்தா இரட்டமலை சீனிவாசன் போன்றோர் இத்துறையில் விளங்கிய முன்னோடிகளாவர். இலக்கியம் என்று பார்த்தால் தமிழ்நாட்டில் பூமணி, இலங்கையில் டேனியல் போன்றோர் 70களின் பின்பகுதியில் தலித் புனைவிலக்கியங்களை எழுதத் தொடங்கிவிட்டனர். 80களில் ராஜ்கவுதமன் போன்றோர் தலித் விமரிசனத் துறையைத் தொடங்கிவிட்டனர். அதன்பின் 90களில் தலித்திலக்கியம் வேகமெடுக்கத் தொடங்கியது.

ஆரம்பகாலத் தமிழ் தலித்தெழுத்துகள்

தமிழில் வந்த ஆரம்பகாலத் தலித் இலக்கிய வகைமாதிரிகள் இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் டேனியலின் ‘கானல்’ குறுநாவலின் ஒருபகுதி, பூமணியின் பிறகு குறுநாவலின் ஒருபகுதி, ராஜ்கவுதமனின் ராக்கம்மாப்பேத்தி, கே.ஏ.குணசேகரனின் தலித் கலையிலக்கியம், சிவகாமியின் பழையனக் கழிதலும் குறுநாவலின் ஒரு பகுதி, பிரதீபா ஜெயச்சந்திரனின் எவன் சிறுகதை, இன்குலாப்பின் மனுஷங்கடா கவிதை, இரவிக்குமாரின் ‘தமிழ் அது தவிர’ கவிதை, ‘காவலூர் ஜெசுதாவின் நீர்ப்பூத்த’, இந்திரனின் ‘பள்ளியில் பிணம்’, ‘தோற்றவன் குரல்’, விழி.பா. இதயவேந்தனின் ‘சோறு’ சிறுகதை, அ. மார்க்ஸின் ‘கலகம்செய்’ கட்டுரை ஆகியன இத்தொகுப்பில் உள்ளன.

ஆதிக்கச் சாதியினரின் கிணற்றில் குளிக்கப்போன தலித் குழந்தைகள் இருவரை மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற அரியலூர் உண்மை சம்பவத்தைக் கொண்டு இன்குலாப் ‘மனுஷங்கடா’ பாடலை எழுதினார்.

‘கிணத்துத் தண்ணியும் சாதி எழவை
எழுதிக் காட்டுமா?
எங்க கொழந்தையெல்லாம் ஒங்க
சாதி வெவரம் எட்டுமா?
குளப்பாடி கிணத்துத்தண்ணி
புள்ளையைச் சுட்டது – எங்கப் புள்ளையச் சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது-
இந்த ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது?
எந்த மிராசைத் தொட்டது?
மனுசங்கடா – நாங்க மனுசங்கடா
ரத்தக் கணக்கைத் தீக்கவந்த மனுசங்கடா –
ஒங்க கட்டை எல்லாம் வெட்டி எறியும் மனுசங்கடா - டேய்
மனுசங்கடா!

(அரியலூருக்கு அருகே குளப்பாடி என்ற கிராமத்தில் மிராசுதாரின் கிணற்றில் குளிக்கப் போன தாழ்த்தப்பட்ட வீட்டுக் குழந்தைகளைத் தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சிக் கொன்றனர். இதன் நினைவாக இந்தப் பாடல்).

வாக்குச் சீட்டையே ஆயுதமாகப் பயன்படுத்த நினைக்கும் இந்திரனின் ‘தோற்றவன் குரல்’ கவனிக்கத்தக்க ஒன்று. தலித்துகள் மட்டுமே ஆரம்பகால தலித் இலக்கியங்களைச் செய்யவில்லை. இடதுசாரி சிந்தனை கொண்ட பொதுவுடைமை வாதிகள், திராவிட இயக்கச் சிந்தனைவாதிகள், இப்படிப் பலரும் ஈடுபட்டுத் தமிழ் தலித்திலக்கியத்திற்குப் பங்காற்றியுள்ளனர்.

நிறைவாக

தலித்திலக்கியம் மராத்தியத்தில்தான் பேரியக்கமாக வடிவம் கொண்டது. அமெரிக்காவில் கறுப்பின விடுதலை இலக்கியத்தின் தாக்கத்தினாலும் அங்குத் தொடங்கப்பட்ட பிக் பேந்தர்ஸ் அமைப்பின் மாதிரியைக் கொண்டு மராத்தி எழுத்தாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தலித்பேந்தர்ஸ் அமைப்பை உருவாக்கி இயங்கினர். இது இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் முன்சுவடாக இருந்து பரவியது.

மராத்தியத் தலித்திலக்கியத்தில் கவிதைக்கும் தன்வரலாற்றிற்கும் ஒரு முதன்மை இடம் உருவானதை அறியமுடிகிறது.

மராத்தியிலும் கன்னடத்திலும் தலித்திலக்கியம் தோன்றிய பிறகு, குஜராத்தில் தலித்திலக்கியம் தோன்றியது. இங்குக் கவிதைகளும் நாடகங்களும் அதிகமாக எழுதப்பட்டன. தமிழ்ச் சூழலில் ஆரம்பகாலத்தில் கவிதைகள் மிகுதியாக வரவில்லை. சிறுகதைகளும் நாவல்களும்தான் மிகுதியாக வந்தன. ‘இரண்டாயிரமாண்டிற்குப் பிறகுதான் தலித் கவிதைகள் அதிகமாக வரத் தொடங்கின’ என்பன போன்ற கருத்துகளை அறிய ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’ என்கிற இந்நூல் முன்சுவடாகத் தமிழ்த் தலித்திலக்கியச் சூழலைக் காட்டுகிறது. 

குறிப்பு: "தன்னடையாளங்களை எழுதிப் பார்த்தல்" எனும் பெயரில் வெளிவரவுள்ள நூலின் ஒரு கட்டுரை

Author Picture

மு.ரமேஷ்

சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர். காட்சியதிகாரம், கவிதையியல் மறுவாசிப்பு போன்ற ஆய்வுநூல்களும் என் தேசத்து ஜதிகள், வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம் போன்ற கவிதை நூல்களும் வெளிவந்துள்ளன. மாற்றுத்திறனாளர் ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு