-->

அண்மை

கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர் படைப்பிலக்கியப் பயிலரங்கு - பயிற்சியாளர் வே. சுகுமாரன், பங்கேற்பாளர் சிந்தனைத் தூறல் ஸ்ரீதர்

கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர் படைப்பிலக்கியப் பயிலரங்கு குறித்த கட்டுரைகள். பயிற்சியாளர் சார்பில் வே. சுகுமாரன், பங்கேற்பாளர் சார்பில் சிந்தனைத் தூறல் ஸ்ரீதர் இருவரின் பதிவுகள்.


குறையொன்றுமில்லை - வே.சுகுமாரன்

குறைவு நிறைவால் நிரப்பப்படுகிறது. இது இயற்கை நியதி. இயற்கை எந்தக் குறையையும் இட்டு நிரப்ப நிறைவைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது. குறைவு உள்ளடக்கம் பற்றி பேசுவதில்லை. நிறைவு உள்ளடக்கம் பற்றி பேசுகிறது. இந்த அடிப்படையிலேயே 10.01.2026, 11.01.2026 ஆகிய நாட்களில் கோவை மசக்காளிபாளையம் பாலன் இல்ல கட்டிடத்தில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான படைப்பிலக்கியப் பயிலரங்கை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

யாதுமற்றவராக அல்லது எதுவுமற்றவராக எந்த ஒரு மனிதரும் பிறப்பதில்லை. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏதோ ஒரு வகைத்திறன் உள்ளடங்கிக் கிடக்கிறது. அதைக் குத்திக்கிளறி மேலெடுத்து வெளிக்கொணருவதே இந்தப் பயிற்சி முகாமின் அடிப்படை நோக்கம். மனிதருக்குள் இறுகிக்கிடக்கும் மௌனத்தை உடைத்து அவர் இதயத்தைப் பேச வைப்பதே பயிற்சி முகாமின் அடிநாதம். They are not numerous but they are clamorous என்று சொல்லப்படுவதற்கு நல்ல உதாரணம் இந்தப் பயிற்சி முகாம்.

 வந்த மாணவர்கள் குறைவு, பலனோ அதிகம். வழக்கம்போல குழுக்கள் பிரிக்கப்பட்டு கவிதை, கட்டுரை, புதினம், சுய வரலாறு என பலவற்றிலும் பயிற்சியும் விவாதங்களும் நடைபெற்றன.

என் போன்றோருக்கு கவிதை ஒரு கானல்வரி என்றெண்ணி வந்தவர்கள் என்னாலும் எழுத முடியும் என்று ஏற்றம் பெற வைத்தது இந்தப் பயிற்சி முகாம். கவிதைக்குப் பல்வேறு எடுத்துக்காட்டுகளும் கூடவே கொஞ்சம் கோட்பாடுகளும் விளக்கப்பட்டன. கோட்பாடுகள் வந்த புதியவர்களைச் சற்றே பயமுறுத்தியது என்றாலும் மற்ற செய்திகள் அவர்கள் இதயத்தை நிறைத்தன. எனக்குச் சொற்கள் கிடைப்பதில்லை என்றும், என்னால் சின்ன சின்னக் கவிதைகளாய் மட்டுமே யோசிக்க முடிகிறது என்றும் சொன்னவர்களுக்கு விளக்கம் தந்து அவர்களை யோசிக்க வைத்தது. மனதில் உள்ளதை எழுதுங்கள் என்று சொன்னபோது ஒருவர் எழுதினார், “நான் ஒரு உடைந்த கண்ணாடி/ மீண்டும் உடைய விரும்புகிறேன்/ நீ உடைக்க விரும்பினால்”. மனிதருக்குள் கதையும், கவிதையும், உரையும், சுயமும் உறைந்து நிறைந்து கிடக்கின்றன. அவற்றைப் பிரித்தெடுப்பது எப்படி? சுத்தப்படுத்தி அணியும் பண்டமாக்குவது எப்படி? சொல்லித் தந்த போது புரிந்து கொண்டார்கள்.

கதைக்கும் கட்டுரைக்கும் எடுத்துக்காட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டன. நிறைய கேள்விகள் பயிற்சிக்கு வந்தவர்களிடமிருந்து, கூர்நோக்கர்களிடமிருந்து வெளிப்பட்டன. இது அவரவர் தமக்குள் வைத்திருக்கிற இயலாமை என்னும் பிம்பத்தை உருக்காட்டியது. இலக்கியத்தில் அரசியல் புகுந்து இடர் செய்யுமா? இலக்கியத்தின் அழகியல் அடி வாங்குமா? இப்படியெல்லாம் கேள்விகள் இருந்தன. முற்றிலும் அரசியல் இல்லாத இலக்கியம் உருவாவது அசாத்தியம் என்றும் அரசியலையே இலக்கியமாக எழுத முயன்றால்  அது பிரச்சாரம் என்றும் விளக்கி உரைக்கப்பட்டது.

சுய வரலாறு என்னும் பகுதி பற்றிப் பேசுகையில் முன்னர் சொன்னதும் இப்போது சொல்லவிருப்பதற்குமான இடைவெளியில் ஒரு மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதே? முன்பு சொன்னதென்ன? நாம் எழுத அமரும்போது யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நம் மனதில் இருப்பதை எழுத வேண்டும். பிறரைப் பற்றி சிந்தித்தால் எழுத்தின் உள்ளடக்கம் நம்மிடம் விடை பெற்றுக் கொள்ளும். சரி! இப்போது நாம் சொல்வதென்ன? எல்லா உண்மைகளையும் வெளிப்படையாய்ச் சொல்லிவிட முடியாது சிலவற்றை மறைத்துத்தான் ஆக வேண்டும். கண்ணதாசனின் வனவாச நூலுக்கான முன்னுரையும், சத்திய சோதனையில் காந்தியடிகளின் முன்னுரையும் எடுத்துக்காட்டப்பட்டன. சுய வரலாற்றை முழுமையாக எழுதும்போது அதிலும் குறிப்பாகப் பெண்களுக்குப் பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகம். “மனம் விட்டு பேசுகிறேன் என்று கமலதாஸ் எழுதியபோதும் “தி லட்ஜாவை” நஸ்ரின் எழுதியபோதும் அவர்களுக்குச் சிக்கல் வந்தது. எனவே பெண்கள் சுய வரலாறு எழுதும்போது சிலவற்றைத் தவிர்த்து விட்டு எழுதுவது நல்லது தான்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த எஸ்.சண்முகம் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவசாமி அவர்களும் பயிற்சி முகாமின் தொடக்க நிலையில் வாழ்த்துரை வழங்கினர். செய்திக் குவிப்பைச் செம்மையாக வழங்குவதில் வல்லவரான மொழிபெயர்ப்பாளரும், சிறந்த எழுத்தாளருமான எஸ்.பாலச்சந்தர் இலக்கியத்தில் மாற்றுத்திறனியம் என்பது பற்றி ஏறத்தாழ ஒரு மணி நேரம் வெளிநாட்டு இலக்கியங்களிலும் ரஷ்ய இலக்கியங்களிலும் மாற்றுத்திறனியம் எப்படி விவரிக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி விரிவும் ஆழமும் கொண்ட ஓர் உரையை நிகழ்த்தினார்.

எம்மவர் அதனை மிக நுட்பமாக கவனித்தனர். அவர் உரை நிகழ்த்தியதோடு அல்லாமல் பிற்பகல் அமர்வில் மூன்று குழுக்களையும் உற்றுநோக்கி குறிப்புகள் எடுத்துக் கொண்டு முடிவில் சுருக்கமாக விளக்கினார். “பார்வையற்றோர்களான நீங்கள் படைப்பிலக்கியத்திற்குள் நுழையும்போது காட்சிப் படிமத்தைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. அதற்கு மாறாகத் தொடுதல் படிமத்தைப் பயன்படுத்துங்கள்.  இதன் பொருள் காட்சி படிமத்தை முற்றாகப் புறக்கணிப்பது என்பதல்ல என்று உரைத்தது மனங்கொள்ளத்தக்கது. தனிப்பட்ட முறையில் பின்பு பேசும்போது உங்கள் பயிற்சி முகாமின் அமைப்பு முறை மிக அற்புதம் என்றார். அறிவுஜீவிகளும் இப்படியாக நம்மவர்களோடு இணைந்து செயல்படுவது ஆக்கபூர்வமானது. அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிப்போம்.

வில்லெடுத்தால் பெருவிரல் இழப்போம், சொல்லெடுத்தால் சமூகத்தில் நம் சுயத்தை சுயமரியாதையை மீட்டெடுப்போம். எனவே இப்போது சொல்லுங்கள் நாம் எடுக்க வேண்டியது வில்லா? சொல்லா?   

மாற்றுத்திறனாளருக்கான படைப்பிலக்கியப் பயிலரங்கம் - சிந்தனைத் தூறல் ஸ்ரீதர் 

மரியாதைக்கு மலை, தொழில், கல்வி, மருத்துவம் இதற்கெல்லாம் சொர்க்க பூமி, தென்னிந்தியாவின் மான்செஸ்டர், கொங்குத் தமிழுக்குப் பெயர் பெற்ற, ‘என்ற ஊருங்க கோயம்புத்தூர்’ என்னும் ஊரில் நடந்த பார்வையற்றவர்கள் படைப்பார்க்கப் பயிலரங்கம் குறித்து ஒரு பார்வை. பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையமும் தனிச்சொல்லும் இணைந்து படைப்பிலக்கியப் பயிலரங்கை ஜனவரி 10,11, 2026 ஆகிய நாட்களில் நடத்தின. இதில், கவிதை, புனைகதை, தன்வரலாறு ஆகிய தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டன.

அறிமுகப் பகுதி

பாலையும் சர்க்கரையையும் கூட பிரித்து விடலாம் நட்பைப் பிரிக்க முடியாத அளவிற்கு நட்புகளும் உறவுகளும் நாங்கள் அறிமுகம் ஆகிக்கொண்டோம். முதலில் முகம் தெரியாத நண்பர்களும் முகம் தெரிந்த நண்பர்களும்.

என்ன எழுத வேண்டும், எதைப் படிக்க வேண்டும், உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை என எல்லா நொடிகளிலுமே என்ன வேண்டும் தோழரே எதை உங்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்று தோழர்கள் நட்பாய்ப் பழகி உடன் இருந்தனர். உறங்கும் பொழுதும் உணவு உண்ணும் பொழுதும் உடன்பிறப்புகளாய் உடன் இருந்தனர் நமது உறவுகள். இந்த உறவுதான் அடுத்த படைப்பிற்கான ஆரம்பம் என்று நான் நினைக்கிறேன் தொடரட்டும் எனது நட்பும் உறவும்

கவிதை  அமர்வு

சொல்வதற்கு ஒரு மொழி, பேசுவதற்கு ஒரு மொழி, படிப்பதற்கு ஒரு மொழி, உணர்வதற்கு ஒரு மொழி அது தான் கவிதை மொழி. கவிதை என்றாலே கனவும் தள்ளிப் போகும் நினைவும் நீர்த்துப்போகும். கவிதை என்பது எப்படி அமைய வேண்டும் எப்படி உருவாக்க வேண்டும் என்பதெல்லாம் பயிலரங்கத்தில் தனித்தனியாகவே பயிற்றுவிக்கப்பட்டது. குடும்பம், நட்பு, காதல் என மனிதரின் எல்லா வாழ்க்கை நிலைகளிலும் கவிதை இன்றியமையாத இடம் பிடித்திருக்கிறது என்று உணர்த்தப்பட்டது. எனவே மாற்றுத்திறனாளர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவங்களில் இருந்து கவிதையை எப்படி உருவாக்குவது என்று பயிற்றுவிக்கப்பட்டது. எடுத்துக்காட்டிற்கு எங்கள் குழுவினர் ஒரு கவிதை அமைத்தோம். ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று இறுதியில் எப்படி மாறுகிறது என் எதார்த்தத்தையும் பதிவு செய்தோம்.

புனைகதை அமர்வு

ஒரு ஊர்ல ஒரு அரசன் வாழ்ந்து வந்தான் என்பது நம் பல கதைகளில் படித்திருக்கிறோம். பல கதைகளில் பார்த்திருக்கிறோம். இது எல்லாம்தான் ஒரு கதைக்கான தொடக்கத்தையும் தருகிறது. கதை என்றால் என்ன, கதை எப்படி உருவாகிறது, எப்படி அமைய வேண்டும், கற்பனை வளம் எவ்வாறு இருக்க வேண்டும், உண்மைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் தனித்தனியாக எங்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது.

தன்வரலாறு

வரலாறு என்பது ஒரு தலைமுறை எப்படி வாழ்ந்தது, எப்படி வாழ்கிறது, எப்படி வாழ வேண்டும் என்பதையெல்லாம் சொல்வதுதான். இதில் தன்வரலாறு, வாழ்க்கை வரலாறு இரண்டு நிலைகளாகப் பிரிக்கப்பட்டது. தன்னைப் பற்றித் தானே மிகைப்படுத்தியும் மிகைப்படுத்தாமலும் எழுதுவது தன் வரலாறு ஆகும்.

அடுத்தவரைப் பற்றி அவர் அனுமதியோடு எழுதுவது விருப்பத்தின் அடிப்படையில் நாம் எழுதுவது வாழ்க்கை வரலாறு ஆகும். இதில் உண்மை கலந்த சம்பவங்களும் கற்பனை கலக்காமலும் எழுதலாம் அது எழுதுபவர்களின் மனநிலை பொறுத்தே வரலாறு என்பது அமையும். இவ்வாறு அமைந்த இந்த அமர்வு, தன்வரலாறு எழுதுவது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

ஆரம்பம்

இவ்வாறான பயிலரங்குகள் மாற்றுத்திறனாளர் படைப்புகளாக உருவாகும் என நான் கருதுகிறேன். இரண்டு நாள் பயிற்சி அது முயற்சியின் விதையாக மாறட்டும். வித்தியாச, வித்தியாசமான பார்வையில் பிறக்கட்டும் நிறைய நிறைய படைப்புகள் ஏராளம். மாறட்டும் இச்சமுகம் மெது மெதுவாய். இரண்டு நாள் பயிற்சி, அது முயற்சியின் விதையாக மாறட்டும்.

Author Picture

வே.சுகுமாரன்

கவிஞர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். கோவையில் இவர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவேதுணை ஆய்வு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவருடைய மொழிபெயர்ப்பு நூலான "காட்டு வாத்துக்கள்" முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Author Picture

சிந்தனைத் தூறல் ஸ்ரீதர்

கவிஞர், மாற்றுத்திறனாளருக்கான கணினி பயிற்றுநர். மாற்றுத்திறனியம் சார்ந்த கலை இலக்கியச் செயல்பாட்டில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு