-->

அண்மை

கவிஞர் ஜிகுனா சுந்தர் கவிதைகள்


சிறகுச் சந்தை

ரக ரகமாய்த்
தரம் பிரிக்கப்பட்டுப்
பலவிதப் பெயர்களில்
முத்திரை பொறிக்கப்பட்டு
இருக்கின்றன சிறகுகள்
கற்பு மறைப்பு புனிதம்
ஆபாசம் நிர்வாணம்
மரபு பாரம்பரியம் பண்பாடு
நவீனம் நாகரிகம்
உரிமை சுயம் சுதந்திரம்
பெண்மை தாய்மை மலடி
உத்தமி விதவை விபச்சாரி
சிறகுகள் வாங்கலையோ சிறகு
அது சமூகத்தின் பெயரில்
ஆண்களால் நடத்தப்படும் சிறகுச் சந்தை
அங்கே பெண்கள் கூட்டம் கூட்டமாய்
தனக்கான சிறகுகளைப் பேரம் பேசியபடி

எங்களின் புனிதங்கள்

பார்வையற்றோருக்கான
கிரிக்கெட் மேச் நடத்துவதற்காக
மைதானத் தேர்வின் நாட்களில்
மைதானம் மைதானமாய் அலைந்தோம்
கடைசிக்கும் கடைசியாய்க் கைவரப்பெற்ற
அந்த ஒற்றை மைதான உரிமையாளரிடம் பேசி
கிரிக்கெட் மேச்சிற்கு
மைதானத்தைப் பதிவுசெய்ய அழைப்பு
அவருக்குத் தெரிந்த தமிழில் உள்ள அத்தனைக் கேள்விகளையும்
கேட்டுமுடித்த பின்னர்
ஒருநாளைக்குப் பத்தாயிரம் தொகை என்று முடிவானது
இந்தத் தொகை உங்களுக்கு மட்டும்தான்
மத்தவுங்களுக்கெல்லாம் இருபதாயிரம் வாங்குவோம்
நீங்கன்றதுனாலத்தா இவ்வளவு கம்மியா சொல்லியிருக்க
கூடவே தொகை குறைப்பிற்கான விளக்கவுரைகள்
இடைவெளியில்லாமல் பின்னொட்டுகளாய்
அவர் சொன்னா
இவர் சொன்னா
அப்படி என்றார்கள்
இப்படி என்றார்கள்
என்றெல்லாம் முகவரி அட்டையை வாசித்ததில்
ஒருவழியாக
ஐந்தாயிரத்துக்குக் குறைந்தது மைதானத்தொகை
உங்களுக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்யப்போறன்
நீங்களெல்லாம் கடவுளோட பிள்ளைங்க
உங்களுக்கு உதவி செய்யிறது எனக்குக் கெடச்ச பாக்கியம்
புண்ணியமும் கூட
ரொம்பப் புனிதமான செயல் அப்படின்னே சொல்லனும்
என்றெல்லாம் தொகையோடு சேர்த்துக் கருணை மொழிகளும்
இறுதியாய் அவர் கேட்ட கேள்வியின் விளைவில்
இலவசமாகவே கிடைத்தது
அன்றைய மேச்சுக்கான மைதானம்
மேச்சின் முடிவில்
அவர்களின் இலவசத்திற்கு
எங்களது நன்றிக்கடனாய்
நாங்கள் விதைத்துவிட்டு வந்திருக்கின்றோம்
அந்த மைதானத்தின் வெறுமையில்
எங்களின் புனிதங்களை
Author Picture

ஜிகுனா சுந்தர்

கவிஞர், கலை இலக்கியப் பயிற்றுநர். மாற்றுத்திறனியம் சார்ந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு