மனித சாராம்ச உருவாக்கத்தில் அரசு, மதம், குடும்பம், கல்வி முதலிய சமூக நிறுவன தலையீட்டின் புனைவுகள் அல்லது உலகாயத பண்பு, ப்ராய்டு போன்ற உளவியல் ஆய்வாளர்கள் உருவாக்கிய உயிரியல் சாராம்சம் என்ற பொருட்சார் கருத்து என எந்த அறிதல்முறை வெளியிலிருந்தும் நீக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத உடல்களாய் சித்திரிக்கப்பட்டிருப்பவர்கள் திருநர்கள். திருநர்கள் அடையாளப்படுத்தும் ஆண்மை, பெண்மை கருத்துகள் ‘நிலையானதாகச் சொல்லப்பட்டிருக்கும்’ கருத்தியல்பால் சாராம்சங்களுக்கு அடிப்படையிலே எதிரானது. சொல்லப்பட்டிருக்கும் பால் பண்புகளிலிருந்தே உடல்மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் சாராம்சத்திற்கு எதிரான வாழ்வை சாத்தியமாக்கும்போது ஒரு பிரதியை அதன் அகச்சான்றுகள்வழியே தலைகீழாக்கும் புது அறிதல்முறை உருவாகிறது. ஆணுடலின்வழி நிகழ்த்தப்பெறும் பெண்மையப் புலன்முறை வழக்கமாக்கப்பட்டிருக்கும் ஆண்புனைவின் எதிரிடை பிம்பமான உடலியல் பெண்ணைச் சிதைத்து இருமைகளற்ற புதிய பெண்மையை உருவாக்கும். நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட இருமை உயிரியல் பண்பு புதுமையான உயிரியல் நடக்கைகளை, தன் அதிகார அமைப்புகளுக்கு எதிரான ஆபத்துகளாய் உள்ளுணர்கின்றன. புதிய குறிகளை எதிர்படும் விலங்கினங்களின் பேரச்சம் கருத்தியல் தளங்களை இயக்கும் மனிதக் கூட்டத்திற்கு ஒழுக்கவியல் வரையறைகளை உருவாக்குவதற்குக் காரணமாகின்றன. இந்தப் பண்பாட்டு ஒழுக்கவியல் விதிமுறைகளை ஏற்று நடைமுறைப்படுத்தும் அரசு அறவியல், நீதியியல் தளங்களுக்குள் அவற்றை இறுக்கப்படுத்தும். அரசின் சட்டமாகவும் மதங்களின் அறமாகவும் வளர்த்தெடுக்கப்படும் ஆண்xபெண் இருமையின் நடத்தைவெளி ஒட்டுமொத்த மொழிநினைவாக சமூக மூளைக்குள் பதிவுசெய்யப்படுகிறது. பிறழ்வுகளாகவும், குற்றங்களாகவும் மனித அறத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளாக விதியாக்கம் (Immortalisation) செய்யப்பட்டிருக்கும் மூளை நினைவுகளிலிருந்து தப்பித்தல், உடைமையாக்கப்பட்டிருக்கும் பால், பாலின இணைவுடையோருக்கு சாத்தியமில்லை. மனித அறிதல்முறையின் எல்லைகளைத் தீர்மானிக்கும் இந்த வரலாற்று கருத்தியல்களிடமிருந்தான விடுதலை வழக்கமாக்கப்படாத இன்னொரு இயற்கை உயிரியல் பண்பின் இருப்பால் அரசியலாக்கம் செய்யப்படுவதையே திருநரியமாக நாம் அடையாளப்படுத்தவேண்டியது. இது நிலையானவை என்று சொல்லப்பட்டிருக்கும் சாராம்சங்களுக்கு எதிராகச் செயல்படுத்தப்படவேண்டிய புது சாராம்சக் கலகம்.
பாலுடைமை, பாலினம் என்ற கருத்திற்கும் குறிக்குமான சமூக இணைவை ஏற்பதிலிருந்து பெறப்படுவது. பொதுபுத்தியால் தோற்றத்தில் உறைவிக்கப்பட்டிருக்கும் பாலினம், தான் கொண்டிருக்கும் உருவத்தை மறுப்பதன்மூலம் உடலுக்கும் அதன் சாராம்சத்திற்குமான உடைமைச் சலுகைகளை இழக்கின்றது. ஆண்மையற்ற ஆணுடல், பெண்மையற்ற பெண்ணுடல் சமூகம் தனக்கு அளித்திருக்கின்ற பாலின மதிப்பீட்டை இழப்பதால் நேரும் இழிவுக்கொடுமைகளைத் தாங்கமுடியாது பொதுமையாக்கப்பட்ட தோற்றத்திற்கும் பாலின சாராம்சத்திற்குமான இணைவை நோக்கி நகர்கிறது. திருநர்கள் தன்னுடைய பாலின உணர்வையே பெயர் மாற்றம், தோற்ற மாற்றம் என்பதன்வழி அடையாளப்படுத்தக்கூடிய நிலைமையை விளங்கிக்கொள்வதற்கு ஆண், பெண் இருமைகளுக்கு அத்தகைய உணர்வை ‘முழுமை’ என்பதாக வரலாற்றில் உற்பத்தி செய்திருக்கும் மொழிநினைவு, மூளை இயக்கத்திலிருந்து தொடங்க வேண்டும். நிலவியல், சமூகவியல், அரசியல் சூழல்களுக்கேற்ப மாறுபட்டிருக்கும் ஆண், பெண் பெயர்கள், தோற்றமுறைகள், நடத்தைமுறை, சிந்தனை முறை, பாலீர்ப்பு, பாலுறவு முறைகள் என அனைத்தும் மனித சாராம்ச நினைவுகளாக நமக்குக் கற்பிதம் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சாராம்சங்களை அப்பாலை நிலையிலோ அல்லது உயிரியல் சார்புடன் இயங்குவதாகவோ நாம் எவ்வித முரண் விவாதங்களுமின்றி ஏற்கிறோம். மூளையின் நினைவடுக்கிற்கு வராத இந்தத் தகவல்கள்தாம் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் உள்ளுறையாக இருந்து நம்மை இயக்கிவருகிறது.
திருநர்களின் சாராம்சக் கலகம் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் அவர்களின் இருப்பிலிருந்தே தொடங்குகிறது. ஆணின் சிந்தனை எல்லைக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பெண்மை நிகழ்த்துதல் திருநங்கையின் உடல்வழி நிகழும்போது சமூகக் கூட்டுநனவிலிக்குள் ஒளிந்திருக்கும் பேரெதிர்ப்பாற்றல் விழித்தெழுகிறது. வழக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும் பெண்மையின் இன்னொரு கிளையாகக் கடந்துவிடுவதற்கு மாற்றாக ஆணிருப்பிற்கு ஏற்பட்ட அழிவாக அவமானமாக எதிர்கொள்கிறது ஆணுளம். ஆணுடலுக்குச் சொல்லப்பட்டிருக்கும் ஆண் சாராம்சத்தின் அழிவும் பெண் சாராம்ச நிகழ்த்துதலும் ஒருசேர்ந்து பேரிழப்பாகச் சித்திரிக்கும் சமூகச் சொல்லுதல், ஆண் பெண் உடல்களை இயக்கும் கதையாக்கம் விதியாக்கமாக விரியும். இந்தக் கதைகளின் விதிகளைத் தொடர்ச்சியாகக் கலைத்துப் போட்டு எதிர்நேர் கதைகளை எழுதும் திருநர்கள் பொதுசமூகப் பார்வைக்குத் தொடர் அச்சுறுத்தலாகவே உணர்ப்பிக்கப்படுவார்கள். சொல்லப்பட்ட பாலின சாராம்சமாகவே இருப்பினும் உடல்+பால் இணைவின் அழிப்பில் இருந்து உருவாக்கப்பட்ட சாராம்சம் அரசியலாகவும் கலகமுமாகவே எதிர்கொள்ளப்பட வேண்டிய கால கட்டாயத்தில் இருக்கிறது. ஆண்மைய அறிதல் முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆண், பெண் பாலின சிந்தனை எல்லைகளை அடையாளப்படுத்தும் பெண்ணியப் புலன்முறை பாலினத்தை உடைமையாகக் கொண்டிருக்கும் ‘முழுமை’வாதிகளுக்கானது. பாலின மறுப்புவாதம் பாலினத்தை உடைமையாகக் கொண்டிருப்பவர்களாலே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. திருநர்கள் பெறவிரும்பும் ஆண், பெண் பாலின அடையாளம் பாலினத்தை உடைமையாகப் பெறவிரும்பும் சமூகப் புறக்கணிப்பிற்கு எதிரான உரிமைக்குரல். சமூகத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஆண், பெண் நடக்கைகள் ஆண்மைய அறிதல்முறையில் இருந்து பயிற்சிக்குள்ளாக்கப்பட்டிருக்கும் கருத்துருவங்களாக இருப்பினும் அது திருநர்களைப் பொருத்தவரை மறுக்கப்பட்ட அடையாளத்தை நிறுவுவதற்கான கருவியே. பாலின அடையாளங்களை ஏற்பது விடுதலை அரசியலின் முதல்நிலையாகவும் வரலாற்றுநிலைகளில் உருவான அரசு, குடும்ப ஆதிக்க வரம்புகளைக் களைவது அதன் அடுத்தநிலையாகவும் திருநர் அரசியலில் இயங்கும். திருநரியம் இதை இயல்பாக வாழமுடியாத சகஜத்தன்மையற்ற துயரநிலையாகவும் வெகுஜன பொதுபுத்திப் பண்பிற்கு எதிராக வாழும் கலக அரசியலாகவும் எட்டும் இரண்டு கட்டங்களாக எடுத்துக்கொள்கிறது
“பொதுவாக என்னைப் போன்ற திருநங்கைகளுக்குக் கண்ணாடி ஒரு வரப் பிரசாதம். கண்ணாடி எல்லோருக்கும் அவரவர் ஸ்தூல உருவத்தை மட்டுமே பிரதிபலிக்க, திருநங்கைகளுக்கு மட்டும் அவர்களின் மனத்தை, உள்ளே கொந்தளிக்கும் உணர்வுகளை, உள்ளார்ந்த அவர்களுடைய பெண்மையை ஒரு சித்திரமாக மாற்றிக் கண்ணெதிரே காட்டும். இதை மற்றவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. உங்களுக்கு முகத்தையும் எனக்கு முகத்துக்குப் பின்னால் இருக்கும் மனத்தையும் காட்டக்கூடிய கருவி அது. எனக்கு என்றால் எங்களுக்கு. எங்கள் எல்லாருக்கும்!” (ப.58)
“என் எதிர்பார்ப்புகள் மிகவும் எளிமையானவை. எல்லா ஆண்களையும் பெண்களையும் போல ஓர் இயல்பான வாழ்வை நான் மிகவும் விரும்பினேன். நான் திருநங்கையாக இருப்பது மிகவும் இயற்கையானது. ஓர் ஆண் எப்படி ஆணாக இருக்கிறானோ, ஒரு பெண் எப்படிப் பெண்ணாக இருக்கிறாளோ, ஒரு நாயும் பூனையும் எவ்வாறு நாயாகவும் பூனையாகவும் இருக்கிறதோ, அம்மாதிரி. இது மற்றவர்களுக்குப் புரியாதபோதுதான் எங்களுக்குப் பிரச்சனைகள் வருகின்றன.” (ப. 155)
“சட்ட விரோதமாகவாவது அப்படி ஒரு அறுவை சிகிச்சை ஏன் செய்து கொள்ள வேண்டும்? இது நல்ல கேள்வி. இதற்கான பதில், நாங்கள் எங்களை ஆணாக ஒருபோதும் உணர்வதில்லை என்பதுதான். ஆணுக்குரிய பிறப்புறுப்பு அடையாளம் துரதிருஷ்டவசமாக எங்களுக்கு அமைந்து விடுகின்றது. மனத்தளவில் பெண்ணாகவே எங்களைக் கருதுகிறோம்” (ப.110)
“யோசித்துப் பார்த்தால், பெண்களை இழிவாகக் கருதும் சமூக அமைப்பில், ஆணாகப் பிறந்த நபர் பெண்ணாக மாறுவதென்பது ஆண் வர்க்கத்துக்கும், ஒட்டுமொத்த ஆண்மைக்குமான அவமானம் என்ற தட்டையான ஆணாதிக்கச் சிந்தனையே திருநங்கைகளைப் பெண்ணாக ஏற்க முடியாமைக்குக் காரணமோ என்று தோன்றுகிறது. ஆணிடம் அடிமைப்பட்டே வாழ்ந்து பழகிவிட்ட சில பெண்களும் இதே சிந்தனைக்குப் பழகிவிடுகிறார்கள்.” (ப.165)
‘லிவிங் ஸ்மைல்’ வித்யா எழுதிய தன்வரலாற்று நூல் (நான் வித்யா) திருநங்கையின் பெண்மை இருப்பை, அடையாளத்தை நிறுவத்துடிப்பதால் பெறும் அக, புற போராட்டங்களின் சாட்சியம். தோற்றத்தைக் கழட்டி எறிவதன் மூலம் பெறப்படும் பொதுமை செய்யப்பட்ட அடையாளம்கூட உள்ளீடாகச் செயல்படும் தலைகீழாக்க அரசியலின் பகுதியாகிறது. அதேசமயத்தில் ஒட்டுமொத்த ஆண்மைய சிந்தனைமுறைக்கு எதிரான உடலியல் களைவை நிகழ்த்திப் பார்க்கிறது. ஆண்மை, பெண்மை என்ற சாராம்ச அடையாளங்களின் மீறல் குறைபாடாக, பிறழ்வாகப் பார்க்கப்படுவதைத் தாண்டி தந்தைமையை இழிவுப்படுத்தியதாக விளங்கிகொள்ளும் சமூகமொழி நினைவு பாலின சாராம்சத்திற்கும் ஆண்மை அடையாளத்திற்குமான இணைப்பைப் புலப்படுத்தும் புள்ளி. திருநங்கை, திருநம்பி மற்றும் பால்புதுமையோர் உடல்களின்மீது சமூகம் செயல்படுத்தும் கட்டற்ற வன்முறைக்கும் ‘ஆண்மை’ அடையாளத்திற்கு ஏற்பட்ட அவமானம் என்ற கூட்டெண்ண உளவியல் உருவாக்கத்திற்குமான பண்பாட்டு, அறிவியல் விளக்கங்களை மறுஆய்வு செய்யவேண்டும். ஆண்மைமீது திருநர்களால் தொடர்ந்து ஏவப்படும் உடலியல், கருத்தியல் தாக்குதல்கள் நவீன தொழில்நுட்ப அறிவியல்சார்புடன் உயிரியல் அச்சமாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. உயிரியல் அச்சமென்ற பண்பு இயல்பாக வரலாற்றுவெளியில் பேரிடர், பெருஞ்சாவு, காக்கமுடியாத வகையில் விலங்குகளால் ஏற்படும் பெரும் உயிரிழப்பு என்ற சூழலியக் கூறுகளால் உருவாக்கப்படுவதற்கும் நவீன பின்னை முதலாளிய தொழில்நுட்பக் காட்சி, எழுத்துச் சாதனங்களால் பெருக்கப்படுவதற்கும் - மூளை இயக்குவித்தலின் இயற்கை மற்றும் பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களுக்கு இடையிலான நரம்பியல் போர் (Neuro War) வெளிப்படுகிறது. இருமை உடல்களை, அழகு என்ற கருத்தால் நிரப்பும் நிற, வடிவ காலனிய சிந்தனைகளுக்குள் அடக்குவதோடு பாலியல் மிகையாக்கம் (Hypersexualization) செய்யும் எண்ணிம உலகம் குயர்வெறுப்பு, திருநர்வெறுப்பு முடிவுகளை நகை, இழிவு, கட்டற்றகோவம், சுயபெருமிதம் என்ற பல்வேறு உணர்வுத் தளங்களில் உபரியாக்கம் செய்கின்றன. எண்ணிமத் தரவுகளின் செயற்பாட்டை -Algorithm- வரலாற்றுப் பரப்பு உருவாக்கிய மனிதக் கூட்டுளத்தின் வன்முறை இயங்கியலை மாதிரியாகக் கொண்டு உருவாக்கும் தொழில்நுட்பக் கலாச்சாரம் உயிரியல்நிலைப்பட்ட பாலின சாராம்ச மனநிலையை குயர், திருநர் வெறுப்புப்பெருக்கம்வழி புனைகிறது. இந்தப் புனைவு வரலாற்று நிறுவனவெளிகள் உருவாக்கிய உயிரியல் அச்சப்பண்பைக் காட்டிலும் விரைவானதாகவும் நிலயெல்லை, பண்பாட்டெல்லைக் கடந்த ஒட்டுமொத்த மனித சமூகத்தின் பேரச்சமாகவும் பெருக்கப்படுகிறது.
“ஒரு முறை ஃபீல்ட் ஒர்க்கிற்காகச் சென்று கொண்டிருந்த போது, சில சிறுவர்கள் என்னைப் பார்த்து, ‘ஊரோரம் புளிய மரம்...’ என்று பாட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு அதிகபட்சம் இருந்தால் பத்து, பதினொரு வயதுக்குள்தான் இருக்கும். யார் இவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது? என்னைப் பார்த்ததுமே கிண்டல் செய்யும் எண்ணம் எப்படி உதிக்கிறது? பிறவியிலேயே அது வருமா? ரத்தத்திலேயே இருக்குமா? இதுவும் ஒருவித ஆதிக்க மனோபாவம் இல்லையா? சாதி, மத, இன, மொழி வித்தியாசங்களே இதில் கிடையாது. திருநங்கையா? கிண்டல் செய். சந்தர்ப்பம் கிடைத்தால் தாக்குதல் செய். அவமானப்படுத்து. அழச்செய். அலறி ஓடச் செய். என்ன உலகம் இது? நான் திகைப்புடன் அந்தச் சிறுவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு சிறுவன் தான் குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாக்கெட்டைச் சடாரென்று என்மீது வீசிவிட்டு ஓடினான். சற்றுத் தொலைவிலிருந்து அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் சிரித்தார்கள். சில பெண்களும் கூட.” (ப. 162)
திருநர்கள் மீது உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வரம்பற்ற வெறுப்புணர்ச்சி வெகுஜன ஊடகங்களுக்குத் தினத்தீனியாகவும் அறிவுவெளி என்றபேரில் இயங்கும் ஆராய்ச்சி, கலை, அரசியல் தளங்களில் நுட்பமான அறிவுப்பகடிக்கான ஆயுதங்களாகவும் கொள்ளப்படுகின்றன. இருமை உடல்களுக்கு இடையிலான காதல், துயரம், வன்மம் முதலியவற்றை எடுத்துரைப்பதில்கூட ஒரு சலிப்புநிவாரணியாக திருநர், குயர் வெறுப்புப் பேச்சுகளைத் தொட்டுக்கையாக்கிக் கொள்வது பெருவணிக உத்தியாகப் புனைவுலகம் புரிந்துவைத்திருக்கிறது. பண்பாட்டு எல்லை வெளிக்குள்ளாக இரட்டை அர்த்தங்களால் பெண்களை இழிவுப்படுத்திய முதற்கட்ட தொழில்நுட்ப ஆயுதக் கலாச்சாரம் தற்போது பெண்கள், மாற்றுத்திறனாளர்கள், திருநர், குயர் சமூகத்தாரை இழிவுசெய்யும் ஒருங்கிணைந்த உலகளாவிய தாக்குதலுக்குத் தயாராகியிருக்கிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சி என்றபேரில் நிகழும் இந்த மனிதவெறுப்பு ஆபத்தானது. நவீன சமூக ஊடகங்களின் ஆக்கம் ‘இணைத்தல்’ என்ற அளவில் அனைத்து மக்களுக்கானதாக வடிவமைக்கப்பட்டு, அதன் உள்ளியங்குமுறை இருமையோருக்கு மட்டுமானதாகச் செயல்படுத்தப்படுவது உடற்சுரண்டல் அன்றி வேறில்லை. குடும்பம், கல்வி நிலையங்கள், அலுவலகம் என மனிதவெளி எதுவும் இத்தகைய பாலின சாராம்ச மையங்களாக உருவாக்கம்பெறுவதும் உயிரியல், மருத்துவ அறிவியல் தொழில்நுட்பங்களால் இருமை உளம் தீவிரமடைவதும் ஒருசேர வெகுவிரைவான அளவில் நடைபெறுகின்றது. மனித உயிரியல் பண்பை ஏற்கனவே வரலாற்றின்வழி தொலைத்த மனித இனம் தற்போது எவ்வாறு அந்நியப்படவேண்டும் என்ற விதிகளோடு நவீன முதலாளிய சிந்தனைமுறையின் வேட்கை நுகர்வுத் திரைமறைப்புகளுக்குள் சிக்கித்தவிக்கிறது.
உயிரியல், மருத்துவ, எண்ணிம வெளியின் மனித சாராம்ச உருவாக்கம் என்ற இப்போரில் இயற்கையான முறையில் அதன் எதிர்ப்பாற்றலாக, முரண்சக்திகளாக வெளிப்படும் திருநர்கள் ஒரு குழுவாகச் சேர்வதும் தனக்கான மொழிகள், குறிகள், சடங்கியல், வாழ்வியல் முறைகளை உருவாக்கிக் கொள்வதும் புறநிலையிலிருந்து அரசியலாகவும் அகநிலையில் மனிதவாழ்விருப்பின் சாதாரண இயங்குநிலைகளில் ஒன்றாகவும்தான் உணரமுடியும். வரலாற்றில் ஒரு மனிதக்குழுவின் உருவாக்கம் பல்வேறு குழுக்களுக்கு மத்தியிலான தன்னிருப்பின் அடையாளத்தை நிறுவுதல் மற்றும் அதன் உயிர்ப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான இனப்பெருக்கம் என்ற அளவில்தான் நிற்கின்றன. இதைமையமிட்டே ஒரு சமூகத்தின் சடங்குகள், நம்பிக்கைகள், வாழ்முறை யாவும் பின்னப்படுகின்றன. மனித சிந்தனை எல்லை என்ற இந்தப் பண்பிற்கு யாராலும் விதிவிலக்காகிவிடமுடியாது. திருநங்கையர் குழுவாகி வாழ்வதுபோல் திருநம்பி, பால்புதுமையோர் குழுவாதலில் இருக்கும் பண்பாட்டுத் தடைகளினுள்ளும் இந்த மனித சிந்தனை எல்லையின் (Cognitive limits) தாக்கம் இயங்குகிறது. மனித சிந்தனை என்று உலகளாவிய அளவில் அடையாளப்படுத்துவது பொதுவாக ஆண்களின் சிந்தனையாக இருப்பதே பெருமளவிலான இச்சிக்கலுக்குக் காரணமாகும்.
திருநங்கைகளின் குழுவாதல் பண்பிலேயே அவர்களுக்குள்ளாக இயங்கும் வெள்ளைமைய வடிவ, நிற அழுகுணர்ச்சிகளின் மதிப்பீடும் பெரியோர் சிறியோர் என்ற வயது பாகுபாட்டு வணக்கமுறைகளும் சாதி, மத கட்டமைப்புகளின் இறுக்கங்களும் உடனுறைந்து கடைப்பிடிக்கப்படுவதை வரலாற்றில் உருவாக்கப்பட்ட மனித சிந்தனை எல்லையின் பகுதியாகவே வைத்து விளங்கப்படவேண்டும். திருநங்கையர் அமைப்புகள் மீது சொல்லப்படும் இந்தக் குற்றங்கள் இயல்பாக்கம் செய்யப்பட்டிருக்கும் பொதுசமூகத்தின் நடைமுறை வாழ்வியலாக்கப்பட்டிருப்பது எவ்வித கேள்வியுமின்றி கடக்கப்படுகிறது. பாலின உடைமையற்ற மக்கள்மீது ஏவப்படும் இந்த வலிமையான கேள்விகள் ஏன் பொதுசமூக அமைப்புகளின்மீது தொடுக்கப்படுவதில்லை? என்ற விசாரணையின் மூலம் அடிப்படையிலே மனித சிந்தனையின் எல்லைகள் ஆண், பெண் வாழ்வியல் பாதுகாப்பின் இருமைக்குள்ளாக இருந்து இயக்குவிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் உணரவேண்டும்.
“பொதுவாகவே வயதில் மூத்த திருநங்கைகள், இளையவர்களிடம் அதிகம் மரியாதை எதிர்பார்ப்பார்கள். எதிர்க்கேள்வி கேட்காமல் சொன்னதைச் செய்யவேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களுக்கு இணையாக நாம் உட்காரக் கூடாது என்பார்கள். சந்திக்கும் போதெல்லாம் ‘பாம்படுத்தி’ சொல்லி பாதம் தொட்டு வணங்கச் சொல்வார்கள்” (ப.77)
“சமூக அந்தஸ்து என்பதே இல்லாமல், ஒதுக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வாழ்ந்து தீர்க்க சபிக்கப்பட்டவர்களுக்கும் எப்போதாவது யாரையாவது அதிகாரம் செய்து கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொள்ளத் தோன்றலாம் அல்லவா? அந்த மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்” (ப.78)
சொல்லப்பட்டுவந்த சாராம்சங்களைத் தகர்க்கும் காலம், மறுக்கப்பட்டு வந்தவர்கள் அதைப் பெறுவதிலிருந்து தொடங்க வேண்டும். மார்க்சிய, பெண்ணிய, பின்நவீன தத்துவங்கள் இந்தப் புள்ளியிலிருந்துதான் மூன்றாம் உலகநாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலை முழுமைப்படுத்த முடியும். வன்முறைகளை உயிரியல் இயல்பாக வளர்த்தெடுக்கும் பாசிச சாராம்சவாதங்களுக்கு எதிரான திருநரிய சாராம்சக் கலகம் ஒட்டுமொத்த உலகளாவிய எதிர் அடையாள அரசியலுக்கான துவக்கமும் வழிகாட்டலும் ஆகும். அந்தவகையில் தமிழ்ச் சூழலில் ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா அக்கலக அரசியலுக்கான ஒரு திறப்புவழி. சாதி, மத, வெள்ளைமைய உலகமயமாக்கலின் பன்னாட்டு இருமை அறிவுப்பொதுமையாக்க நெருக்கடிகளுக்கு மத்தியில் அடித்தளத்திலிருந்தான திருநரிய அறிவுக்கட்டமைப்பு உருவாக்கத்திற்கான ஆதாரம்.
தீசன்

