-->

அண்மை

நிமாய் டோம் - சியாமல்குமார் பிரமாணிக் (வங்கத்திலிருந்து தமிழில் ஞா.சத்தீஸ்வரன்)


குளிர்காலத்தின் விடியற்காலை. சூரியன் இன்னும் உதிக்கவில்லை. காலைப்பனி வெளியெங்கும் சூழ்ந்துள்ளது. மார்கழியின் பனிக்காற்று தெற்கிலிருந்து வீசுகிறது. காலைப்பனியைப் பிளந்துகொண்டு வெள்ளைக்கொக்குகள் தெற்குநோக்கிக் கூட்டமாகப் பறக்கின்றன. கொஞ்சம் வெயில் வாங்குவதற்காக நிமாய் டோம் இந்த அதிகாலையிலேயே தனது வீட்டுமுற்றத்தில் அமர்ந்திருக்கிறார். நிமாய் டோம் வசிப்பது மண்குடிசை. குடிசைச்சுவர் பெயர்ந்து விழுந்துகொண்டே இருக்கிறது. என்றாவது ஒரு நாள் வீடே இடிந்து விழக்கூடும். வீட்டின் வைக்கோல் கூரை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புதிய வைக்கோல் கொண்டு வேயப்படவில்லை. பழைய வைக்கோல் வெயிலில் கருகி, மழையில் நனைந்து அழுகி மக்கி உதிர்ந்துகொண்டே இருக்கிறது. மழைநீர் வீட்டுக்குள் கொட்டுகிறது. குளிர்காலத்தில் பனிக்காற்று வீட்டினுள் நுழைகிறது. நிமாய் டோம் கிடுகிடுவென நடுங்குகிறார். அப்போது தான் உடுத்தியிருந்த கிழிந்த துணியை மார்புக்கு அருகில் இழுத்துக்கொண்டார்.

நிமாய் டோமுக்கு எழுபது வயது இருக்கும். அவரது குடும்பத்தில் யாரும் இப்போது உயிருடன் இல்லை. அவரது மனைவி சோனாமணி கடந்த ஆண்டு இறந்துபோனார். ஏதோவொரு நோயால் அவர் நீண்ட நாட்களாக அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். நிமாய் தனது மனைவியை ராதாகாந்த தாஸ் என்ற அரைகுறை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். “நிமாய்! உன் பொண்டாட்டிக்கு ரொம்ப மோசமான வியாதி. கொல்கத்தா நகரத்துல நல்ல மருத்துவர்கிட்ட கூப்ட்டுப் போ” என்றார் ராதாகாந்த தாஸ். ஆனால், கொல்கத்தாவில் நல்ல மருத்துவரிடம் போ என்றால் முடிந்துவிட்டதா? அது என்ன அவ்வளவு எளிமையானதா? அவருக்குக் கொல்கத்தா நகரம்தான் தெரியுமா! அல்லது போய்வர வழியாவது தெரியுமா? நல்ல மருத்துவரைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? அதுமட்டுமின்றி தனது மனைவியை நல்ல மருத்துவரிடம் அழைத்துக்கொண்டுபோய் பார்க்க அவரிடம் பணம் எங்கே இருக்கிறது? ஒரு நாளைக்கு இரண்டு வாய் சோறு அவருக்குக் கிடைக்கவில்லை. அதற்கே பிச்சை எடுக்கவேண்டி இருக்கிறது. இப்போதெல்லாம் நிமாய் டோமின் இரண்டு கண்களும் சரியாகத் தெரிவதில்லை. நேராக நிமிர்ந்து நிற்க முடியாது. இருப்பினும், அவர் தனது மூங்கில் புதரிலிருந்து மூங்கில் கொம்பை வெட்டி ஒரு கம்பு செய்துகொண்டார். அந்தக் கம்புதான் அவரது உற்றதுணை, பற்றுக்கோடு.

நிமாய் டோமால் தனது மனைவியைக் கொல்கத்தா நகரத்திற்கு அழைத்துச்சென்று நல்ல மருத்துவரிடம் காண்பிக்க முடியவில்லை. அவரது மனைவி மரணப்படுக்கையில் கிடந்தபடி நிமாயிடம் கூறினார், “நான் செத்துப்போவேன், அதனால கஷ்டமில்ல, ஆனா உங்கள யாரு பாத்துப்பாங்க? உங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம்!”

சோனாமணி நிமாயை அவ்வளவு நேசித்தார். நிமாய்க்குப் பதினெட்டு வயது. அப்போது அவர் துணிச்சல் மிக்க இளைஞனாக இருந்தார். டோல் வாசிப்பதில் கைதேர்ந்தவராக இருந்தார். டோம்பாராவைச் சேர்ந்த இளைஞன் டோல் வாசிப்பது, புல்லாங்குழல் இசைப்பது வழக்கமான ஒன்றுதான். அதுமட்டுமின்றி நிமாய் டோம் சிறந்த கலைஞனும்கூட. இந்த வட்டாரத்தில் அவரைப்போல வேறு யாராலும் மூங்கில் கூடைகளைச் செய்ய முடியாது. வெறும் மூங்கில் கூடை மட்டுமா! நிமாய் டோம் மூங்கில்களைக் குச்சிகளாக வெட்டி பலவிதமான வீட்டு உபயோகப் பொருட்களையும் செய்துவந்தார். அவற்றைச் சுகதேவ்பூரில் உள்ள கஞ்ச் மார்க்கெட்டில் விற்பனை செய்வார். ஒருமுறை அவரது கிராமத்தின் ஆச்சாரியார் வீட்டு உறவினர் ஒருவர் கொல்கத்தா நகரத்திலிருந்து வந்திருந்தார். நிமாய் டோமின் மூங்கில் வேலைப்பாடுகளைப் பார்த்து அவர் வியந்துபோனார். இது போன்ற மூங்கில் கலை வேலைப்பாட்டினை அவர் இதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை. நிமாய் டோமிடம் அவர் ஒன்றிரண்டு மூங்கில் பொருட்களை வாங்கினார். பல்வேறு மூங்கில் கலைப் பொருட்களைத் தனது கேமராவிலும் படம்பிடித்தார். அதன் பிறகு ஒருநாள் கொல்கத்தாவிலிருந்து ஒரு குழுவினர் நிமாய் டோம் வீட்டுக்கு வந்தனர். கொல்கத்தா நகர மைதானத்தில் கிராமியக் கலைக் கண்காட்சி நடைபெற உள்ளது. அந்தக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக நிமாய்க்கு அழைப்பு விடுத்தனர். அவர்கள் நிமாயிடமிருந்து சில பொருட்களையும் வாங்கிச்சென்றதால், அவருக்குக் கொஞ்சம் பணமும் கிடைத்தது. கொல்கத்தா நகரில் அவர் செய்த மூங்கில் கலைப்பொருட்களைப் பார்த்து பாபுக்களும்-பீபிகளும் அவரை எவ்வளவு பாராட்டினார்கள்! சோனாமணி அப்போது பதினாறு வயது சிறுமி. உடலில் இளமையின் மினுமினுப்பு. அவர் பார்ப்பதற்கு அத்தனை அழகு! கறுத்த விழிகள், பிரகாசமான மாநிறத்தோல். நிமாயை நினைத்து அவர் தனது மனதுக்குள்ளேயே கனவுக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தார். ஆனால், மனக்கோட்டையை நனவாக்குவது அவ்வளவு எளிதா என்ன! சோனாமணியின் அப்பா ஆலாமோகன் சிமுல்பூரின் டோம்பாராவில் மற்ற அனைவரையும்விட நல்ல வசதியாக இருந்தார். அவருக்குக் கொஞ்சம் நிலபுலமும் இருந்தது. அவர் பள்ளிக்கூடம் போய் எழுதப்படிக்கவும் கற்றிருந்தார். பார்த்து விசாரித்து நல்ல இடத்தில் பெண்ணைக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது ஆலாமோகனின் விருப்பமாக இருந்தது.

ஒருநாள் சோனாமணி நிமாயுடன் சிமுல்பூர் கிராமத்தைவிட்டு ஓடிப்போய்விட்டார். அதன் பிறகு, பல ஆண்டுகள் அவர்களைப் பற்றி யாருக்கும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சோனாமணியும் நிமாயும் ராணிகஞ்ச் சென்றுவிட்டனர். அங்கே நிமாய் ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். அவர்கள் ராணிகஞ்ச் நகரில் ஒரு குடிசைப்பகுதியில் வசித்தனர். நாள்முழுக்கக் கடுமையாக உழைத்துவிட்டு நிமாய் தனது குடிசைக்குத் திரும்புவது வழக்கம். சின்னஞ்சிறிய வீடு. சோனாமணி அவருக்காகக் காத்திருப்பார். நிமாய் வீடு திரும்பியதும் சோனாமணி அவருக்கு அக்கறையுடன் உணவளிப்பார். இரவில் படுக்கையில் படுத்திருக்கும்போது நிமாய் சோனாமணிக்கு ஏராளமான தேவதைக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பார். பாட்டுப் பாடி கேட்கச் செய்வார். எப்போதாவது புல்லாங்குழல் வாசிப்பார். அப்போது சோனாமணி கனவுலகில் மிதப்பார். கனவில் அவர்களுக்குக் கைநிறைய குழந்தைகள் பிறப்பார்கள். ஆனால், உண்மையில் கடவுள் அவர்களுக்குக் குழந்தைப் பாக்கியத்தைக் கொடுக்கவில்லை. சில சமயங்களில் சோனாமணி நிமாயிடம், “நீங்க வேறொருத்திய கட்டிக்கோங்க” என்பார். நிமாய் சிரித்துக்கொண்டே சொல்வார், “என்ன சொல்ல! ஒருவேளை இதைத்தான் அந்த தர்மராஜன் விரும்புகிறானோ என்னவோ!. சோனாமணி, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் எழுதப் படிக்கக் கத்துக்க முடியலையேன்னு மட்டும்தான் வருத்தம்.” நிமாய்க்கு ஆறு வயதாக இருந்தபோது, அவரது அப்பா சிவகிஷோர் அவரைக் கிராமத்திலிருந்த தொடக்கப்பள்ளியில் சேர்த்தார். ஆனால் வாத்தியார்கள் எப்படியாப்பட்டவர்கள்? வாத்தியார்கள் தன்னை வார்த்தைகளால் காயப்படுத்துவதாக நிமாய்க்குத் தோன்றியது. அவரால் சரியாகப் படிக்க முடியாவிட்டால், “டேய், டோம் மகனே! உனக்கெல்லாம் படிப்பு வராது, மூங்கில் வெட்டி கூடை, பாய் பின்னத் தெரியும்ல? அதுலதான் உனக்கு எதிர்காலம் இருக்கு” என்றனர் வாத்தியார்கள். வகுப்பில் சக மாணவர்களும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவரை அவமானப்படுத்தினார்கள். இருந்தாலும், நிமாய் தொடக்கப்பள்ளியின் அனைத்து வகுப்புகளிலும் தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு அவர் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லவே இல்லை. அவரது தந்தை சிவகிஷோரும் தனது மகனை அதற்குமேல் பள்ளிக்குச் செல்லுமாறு வற்புறுத்திக் கூறவில்லை. ஒருவேளை அவரது அம்மா உயிரோடு இருந்திருந்தால் அவரைப் பள்ளிக்கூடம் போகச் சொல்லியிருப்பார். ஆனால், நிமாய் குழந்தையாக இருக்கும்போதே அம்மா அவர்களைவிட்டுப் பரலோகம் போய்விட்டார். ஒரு குறிப்பிட்ட வயதுவரை நிமாய்க்குத் தன் அம்மா மீது கடும் கோபம் இருந்தது. தனது அம்மா மிகவும் சுயநலவாதி என்று அவருக்குத் தோன்றியது. இப்போது அதை நினைக்கும்போது நிமாய்க்கு வேதனையாக இருக்கிறது. அவரது அதிர்ஷ்டங்கெட்ட தாய், அவர்களது குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் தன் தோளில் சுமந்து, எத்தனை நாட்கள் தன் வயிற்றைப் பட்டினி போட்டு தனது குழந்தைக்கு ஒரு வாய் சோறு ஊட்டினாள்! அவர் மெல்ல மெல்ல மரணத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது நிமாயால் அம்மாவுக்காக எதுவும் செய்யமுடியவில்லை.

இளமை கடந்து நிமாய் முதுமை அடைந்தபோது, நிலக்கரிச் சுரங்கத்தில் உழைத்து உழைத்தே அவரது பார்வை குறைந்துவிட்டபோது, உடல் அதற்குமேல் நிமிர்ந்து நிற்க முடியாதபோது அவருக்கு தனது சிமுல்பூர் கிராமம் நினைவுக்கு வந்தது. சிமூல்பூர் அவர் பிறந்த மண். அது அவரை விட்டுப் பிரிய விரும்பவே இல்லை. தன்னை நோக்கி அவரை அழைத்துக்கொண்டே இருந்தது. அவர் பிறந்த அந்த அமைதியான கிராமம்! ஒவ்வொரு நாளும் சூரியனின் கடுமையான ஒளி அங்கு கொளுத்துகிறது. மா, நாவல், பலா மரங்களின் நிழலில் மைனாக்களும் கிளிகளும் விளையாடுகின்றன. மந்தமான கோடையின் மதியத்தில் புறாக்கள் முனகுகின்றன. காலையிலும் மாலையிலும் கொக்குகளின் கூட்டம் பறந்து செல்கின்றன மீண்டும் வருகின்றன.

ஒருநாள் நிமாய் ராணிகஞ்ச் நகரைவிட்டு சோனாமணியின் கைகளைப் பற்றிக்கொண்டு தனது பால்யகாலத்தின் கிராமமான சிமுல்பூருக்கு வந்துசேர்ந்தார். அவர் தனது பூர்வீக வீட்டைப் பழுதுபார்த்துச் செப்பனிட்டார். கிராமம் எவ்வளவோ மாறிவிட்டது. நிமாய் டோமை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. கிராமத்தில் இருந்த பழைய ஆட்கள் பெரும்பாலானவர்கள் இறந்துவிட்டனர். ஒரு புதிய தலைமுறை வந்துவிட்டது. நிமாய்க்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை. சாதி இந்துக்களின் குடியிருப்பைச் சேர்ந்த பாபுக்களின் நிலைமை இப்போது முன்பைவிட மிகவும் மாறியுள்ளது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஆட்சி இப்போது இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு இடது முன்னணி ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சியில் ஏழை விவசாயிகளின் பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டது. இப்போது இடது முன்னணி ஆட்சியும் இல்லை. இன்னொரு அரசு வந்துவிட்டது. ஆனால் டோம்பாராவில் டோம்களின் நிலைமை முன்பு எப்படி இருந்ததோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறது. ஏழ்மையும் படிப்பறிவின்மையும் அவர்களது நிரந்தரச் சாபம் போல!

சிமுல்பூர் கிராமத்துக்குத் திரும்பிய சில நாட்களுக்குப் பிறகுதான், சோனாமணியின் உடலில் அத்தனை வகையான நோய்க்கிருமிகளும் குடியேறிவிட்டதா என்பது யாருக்குத் தெரியும்! சில நேரங்களில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். சோனாமணிக்கு இனி மூச்சு விடவே முடியாது என்று தோன்றும். தனது கண் முன்னே உலகமே இருண்டு போவதாக அவருக்குத் தோன்றும். நிமாய் டோம் சோனாமணியை சிமுல்பூரின் மருத்துவர் ராதாகாந்த தாஸிடம் அழைத்துச் செல்வார். ராதாகாந்த தாஸ் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் சோனாமணிக்குத் தன்னால் முடிந்தவரை மருத்துவம் பார்ப்பார். ஆனால் மருத்துவத்தில் அவருக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது!

ராதாகாந்த தாஸின் தந்தை ரஜினிகாந்த தாஸ் ஹவுரா இரயில் நிலையத்தில் சுமைகூலித் தொழிலாளியாக இருந்தார். கொல்கத்தாவின் மாணிக்தலாவில் உள்ள ஒரு குடியிருப்பில் அவர் வசித்து வந்தார். ராதாகாந்த தாஸ் சிறுவயதிலேயே கொல்கத்தாவுக்குப் போய்விட்டார். அங்கே ஒரு மருத்துவர் வீட்டில் வீட்டுவேலைகளைச் செய்தார். இளமைக்காலம் இப்படியே கழிந்து வளர்ந்து பெரியவாரானார். அந்த மருத்துவரிடம் ஓரளவு மருத்துவச் சிகிச்சை தொடர்பாகக் கொஞ்சம் அறிவைப் பெற்றார். அதன்பிறகு, ராதாகாந்த தாஸின் தந்தை காலத்தின் விதிப்படி பரலோகத்திற்குச் சென்றார். ராதாகாந்த தாஸ் தனது சொந்தக் கிராமமான சிமுல்பூருக்குத் திரும்பினார். அதற்குமேல் அவர் திருமணம் முடிக்கவில்லை. எனவே, அவருக்குக் குடும்பம் குட்டி ஏதும் இல்லை. கிராமத்தில் உள்ள படிப்பறிவில்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தன்னால் இயன்றவரை மருத்துவச்சேவை செய்து உதவுவதாக அவர் ஒரு பெரிய சபதம் ஏற்றுக்கொண்டார். அதனாலேயே அவர் நிரந்தரமான ஏழையாக இருந்தார். ஏனென்றால், ஏழைகளான அவரது நோயாளிகளால் பெரும்பாலும் அவருக்குப் பணம் கொடுக்க முடியவில்லை.

ஒரு நாள் சோனாமணி இறந்துபோனார். இது தனது துரதிர்ஷ்டம் என்பதாக நிமாய் டோமுக்குத் தோன்றியது. ஆனால் நிமாய் இன்னும் சாகவில்லையே, எப்படியும் அவர் வாழ்ந்தாக வேண்டும். அவர் வேலை தேடி சிமுல்பூர் கிராமத்தின் ஊராட்சித் தலைவரிடம் சென்றார். ஊராட்சித் தலைவர் ஷசதர் சக்ரவர்த்தி, “பாரு நிமாய், இனிமே உனக்கு வேலை கொடுக்க முடியாது. அதுக்குமேல கொடுக்கனும்னாலும் வேலை எங்க இருக்கு? அதுமட்டுமில்லாம, உனக்கு வயசாயிடுச்சு, இனி உன்னால் கடினமான வேலைகளைச் செய்யமுடியாது. அதுக்குப் பதிலாக, உன்னிடம் உள்ள மூங்கில் தோப்பிலிருந்து மூங்கில்களை வெட்டி மூங்கில் கூடையைப் பின்னு” என்று அவரிடம் கூறினார்.

நிமாய் டோமுக்கு ஊராட்சியிலிருந்து எந்த வேலையும் கிடைக்கவில்லை. கடன் ஏதாவது கிடைக்குமா என்று அவர் முயற்சித்துப் பார்த்தார். அரசாங்கம்தான் எவ்வளவோ கடன்கள் தருகிறதே! “அரசாங்கக் கடன் கிடைக்கிறது அவ்வளவு சுலபமா! அதுமட்டுமில்லாம, கடன் வாங்கிட்டா நீ அதைத் திருப்பிச் செலுத்த மாட்ட. போ, இனிமேல் எப்பவும் இந்தப் பக்கமே வரக்கூடாது.” ஷசதர் சக்ரவர்த்தி எரிச்சலையும் வெறுப்பையும் வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு நிமாய் டோம் மீண்டும் ஊராட்சிப் பக்கம் போகவே இல்லை. அவருக்குச் சொந்தமாக ஒரு மூங்கில் புதர் இருந்தது. நிமாய் டோம் அந்த மூங்கில் புதரில் மூங்கிலை வெட்டி கூடை, கிண்ணம், தட்டு போன்றவற்றைச் செய்தார். சுகதேவ்பூரின் கஞ்ச் மார்க்கெட்டில் அவற்றை விற்பனை செய்தார். ஆனால் அவருக்கு வயதாகிவிட்டது. வயதின் எடையால் உடல் கூன் விழுந்துவிட்டது. அந்த உடம்பினால் இந்த வேலைகளையெல்லாம் செய்ய முடியவில்லை. மூங்கில்களை வெட்ட அரிவாளைக் கொண்டு செல்லும்போது அவரது உடல் நடுங்குகிறது. மூங்கில் கூடைகளைப் பின்னும்போது, அவருக்குக் கண் சரியாகத் தெரிவதில்லை. சுகதேவ்பூரில் உள்ள கஞ்ச் சந்தைக்குச் செல்லும்போது, அவரால் நடக்க முடிவதில்லை. ஒரு நாள் நிமாய் டோம் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பிச்சைப்பாத்திரத்துடன் தெருவில் அமர்ந்தார். சிமுல்பூரில் உள்ள டோம்பாராவைச் சேர்ந்த ஓரிருவர் இரண்டு கைப்பிடி அரிசியை டோமுக்குப் பிச்சையாகக் கொடுத்தனர். இது தனது துரதிர்ஷ்டமென்று நிமாய் டோம் நினைத்தார். ஆனால், அவர் பிச்சை எடுப்பதற்குப் பின்னால் சமூகப்-பொருளாதார-அரசியல் காரணங்கள் ஏதுமில்லையா என்ன! மேல்வருணத்தைச் சார்ந்தவர்கள் எப்படி தலை நிமிர்ந்து நடக்கிறார்கள், அவர்களுக்கு எவ்வளவு சமூக அந்தஸ்து இருக்கிறது, அவர்கள் நில உடைமையாளர்கள், பல்வேறு தொழில்களைச் செய்வதற்கு அரசாங்கத்திடம் கடன் பெறுகிறார்கள். பஞ்சாயத்துத் தலைவர்கள் முதல் சிறிய-பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரை அனைத்திலும் அவர்களே உள்ளனர்.

சிமுல்பூர் கிராமத்தில் அன்று தர்ம பூஜை. வருடத்தில் இந்த ஒரு நாள் சிமுல்பூரின் டோம் மக்கள் தர்ம பூஜை திருவிழாவில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இதுதான் அவர்களது திருவிழா. டோம்பாராவில் உள்ள தர்மடாகூரின் பீடத்தில் காலு டோம் பூஜை செய்கிறார். பிராமணப் புரோகிதர்கள் எவரும் இல்லை. இந்தத் திருவிழா எப்போதிலிருந்து நடந்து வருகிறது என்று நிமாய் டோமுக்கும் தெரியாது. அவரது தாத்தா, தாத்தாவின் தாத்தாவுக்குப் பதினான்கு தலைமுறைகளுக்கும் முன்பிருந்தே டோம்கள் இந்த தர்ம பூஜையைச் செய்துவருகின்றனர். காலு டோம் தர்மடாகூருக்குப் பூஜை செய்கிறார். டோம்பாராவின் இளைஞர்களும் இளம்பெண்களும் முதியவர்களும் தர்மடாகூரின் பீடத்தைச் சுற்றித் திரண்டு நிற்கின்றனர். காலு டோம் தர்மடாகூர் பூஜையின் முடிவில், ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து, கூடியிருந்த டோம்களை நோக்கிப் பேசத்தொடங்கினார். “சகோதரர்களே, சகோதரிகளே, தாய்மார்களே, கேளுங்க. நான் சில விசயங்களைச் சொல்ல வேண்டும்.

ஏக் சோ பத்மா சௌசட்டி பாகுரி
தாஇ சரி நாச்தன் டோம்பி பாப்புரி.

அதாவது, அறுபத்து நான்கு இதழ்கள் கொண்ட தாமரை மலரில் டோமினி நடனமாடுறதா ஞானபுராணத்தில் எழுதப்பட்டிருக்கு. நாம் இப்போது தாழ்த்தப்பட்ட சாதியாக இருக்கலாம். ஆனால் வரலாற்றைப் பார்த்தால் நாம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. நாம் அரசாண்ட இனம்.” காலு டோம் தனது கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்களைத் தனது இனத்தினர் அனைவருக்கும் முன்பாகத் திறந்துகாட்டினார். அது ரமாய் பண்டிதரின் 'சூன்ய புராணம்'. டோம் சமூகத்தினர் ஒரு காலத்தில் ‘மானி’ பழங்குடியினராக இருந்தனர். அவர்கள் பல இடங்களை ஆட்சி செய்தனர். அவர்களுக்கு ஓர் அரசன் இருந்தான். அவர்களது முன்னோர்களின் குலகுரு ரமாய் பண்டிதர். ஃபுல்லரா-காலகேது-லாவ்சென் உள்ளிட்டோர் டோம் ஆட்சியின் சிறப்புமிக்க அரசர்கள். மேலும் அவர்களுக்கென்று உன்னதமான ஒரு மதம் இருந்தது, அதுவே பௌத்த மதம். அவர்கள் ஒருபோதும் இந்துக்கள் அல்ல. காலப்போக்கில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன! நாம் புதிதாகச் சிந்திக்க வேண்டும். இந்தச் சீரழிவிலிருந்து நாம் மீண்டெழுந்து நிற்கவேண்டும்” என்று சிமுல்பூரின் டோம்பாராவில் உள்ள தர்மடாகூரின் பீடத்தில் நின்று காலு டோம் கூறியபோது அவரது பேச்சை டோம்கள் அனைவரும் கவனமாகக் கேட்டனர். அந்த டோம்களின் கூட்டத்தில் நிமாய் டோமும் இருந்தார். இப்போது அவரது மனசு இலேசானது போல் இருந்தது. அவரும் சிறுவயதில் தனது தாத்தாவிடம் இதைப்பற்றியெல்லாம் கேட்டிருக்கிறார். இருந்தும் எதனாலோ அவர் இவ்வளவு காலமும் இதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. சிந்தித்திருந்தால் அவருடைய வாழ்க்கையே வேறுவிதமாக இருந்திருக்கும்! காலு டோம் இவற்றையெல்லாம் கூறும்போது கூடியிருந்த டோம்களும் டோமினிகளும் அவரது பேச்சை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அன்று இரவு, நிமாய் டோம் தனது இடிந்த மண்வீட்டின் முற்றத்தில் ஒரு கிழிந்த கந்தல் துணியை விரித்துப் படுத்துக்கிடந்தார். எல்லையற்ற வானத்தில் லட்சம் கோடி விண்மீன்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. தெற்கிலிருந்து குளிர்ந்த காற்று வீசியது. அந்தக் காற்றில் மூங்கில் இலைகள் சலசலத்தன. ஆகாயத்தில் நிலவு தோன்றியது. இரவுப்பறவைகளின் கூட்டமொன்று நிலவொளியில் பறந்துசெல்வதை நிமாய் டோம் தாழ்வாரத்திலிருந்து பார்க்க முடிந்தது. அதன் பிறகு எப்போது அவர் உறங்கிப்போனார் என்பது யாருக்குத் தெரியும்.

இரவின் முடிவில், காலைச் சூரியன் வானத்தில் உதித்தது. நிமாய் டோம் முழு அமைதியுடன் தூங்கிக்கொண்டிருந்தார். பக்கத்து வீட்டு சனாதன் டோம் ஏதோ ஒரு வேலையாக வந்தார்.

“ஓ நிமாய்தா!”

பதிலேதும் கிடைக்காததால், சனாதன் நிமாய் டோமின் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் நிமாயைக் கூப்பிட்டுப் பார்த்தார். நிமாய் எழவில்லை. சனாதன் டோம் அருகில் சென்று பார்க்கும்போது, நிமாய் டோம் நித்திய உறக்கத்தில் பூரண அமைதியுடன் மண் தரையில் படுத்துக்கிடந்தார்.

Author Picture

சியாமல்குமார் பிரமாணிக்

வங்காளத்தில் தற்போது எழுதிவரும் தலித் எழுத்தாளர்களில் முதன்மையானவர். தலித் சாகித்திய அகாதெமி, தலித் சாகித்திய சன்ஸ்தா உள்ளிட்ட பல்வேறு தலித் இலக்கிய அமைப்புகளில் இணைந்து செயலாற்றி வருகிறார். இவரது இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் பங்களிப்பு செலுத்திவருகிறார். இவரது கவிதைகளும் சிறுகதைகளும் ஆங்கிலம், இந்தி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய சிறுகதைகள் கொல்கத்தா பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அனன்ய நந்தனிக் இலக்கிய விருது, சக்திகுமார் சர்க்கார் நினைவு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

Author Picture

ஞா. சத்தீஸ்வரன்

மேற்குவங்கம் விசுவபாரதி நடுவண் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 'தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்' கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. தமிழ்-வங்காள இலக்கிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.'பாங்ளா பாஷாய் தமிழ் ஷேக்கா' நூலை வங்காள மொழியில் எழுதியுள்ளார். வங்காள மொழிபெயர்ப்புக்காக கொல்கத்தா கவிதை சங்கமத்தின் மொழிபெயர்ப்பு விழாவில் 2022-ஆம் ஆண்டிற்கான 'சோனாலி கோஷல் நினைவு விருது' பெற்றுள்ளார். அகதிகள், சீதாயணம் மரிச்ஜாப்பி ஆகிய நூல்களை வங்காளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆயிஷா, சுகிர்தராணி கவிதைகள் உள்ளிட்ட நூல்களைக் கவிஞர் சீர்ஷா மண்டலுடன் இணைந்து தமிழிலிருந்து வங்காளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

மின்னஞ்சல் - tamilsathi1996@gmail.com

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு