-->

அண்மை

மழைவில் கவிதைகள்


ஆடு மேய்ச்ச கத

ஓட்டிவரும் ஆட்டுமந்த
ஒத்தக் கெடா மறிக்குதென்ன
ஒத்தக் கெடா மறிக்கையில
முட்டிப் பாக்க தோணுதையா

வாசம் மட்டும் ஆடாட்டம்
ஒடம்பென்ன ஆளாட்டம்
வாசம் என்னக் கெறங்கடிக்க
வந்து நீயும் அணைச்சுப்புட்ட

எட்டி நீயும் அணைக்கையில
என் ஒடம்புத் தாங்கலையே
காலு ரெண்டும் தப்பிப்போக
புல்லுமேல விழுந்துப்புட்டோம்

கலந்துபோச்சு மந்த ரெண்டு
மந்தைக்குள்ள மனுசன் ரெண்டு
காவக்காக்கும் ஆட்டுக்கூட்டம்
கேப்பாரில்ல நம்ம கொட்டம்

கம்பளிக் கணக்கா உன் ஒடம்பு
கருகருனு முடி நெறைய
கத்தரி வெயிலும் எனக்குக்
கடுங்குளுரு ஆனதென்ன

ஊறுகாப் பத்தையாட்டம்
உன் உதடு பருத்திருக்க
நெல்லுச்சோறு கணக்கா
நெதந்தின்ன நெனைக்குறேனே

தெள்ளவாரி புள்ள தேறிப்புட்டான்னு
புல்லரிக்கும் எங்காத்தா
தேடி உன்னக் காணத்தான்
ஓடி வாரேன்னு‌ அறியாம

ராவெல்லாம் உன் நெனப்பு
பவலெல்லாம் உன் இருப்பு
நாள்முழுசும் இந்தக் கெடாவுள்ள
நடமாடும் ராசாவே

ஒத்த நாளு ஒடம்பு முடியாம
ஆத்தா ஆட்டப் பத்தி வர
என்னக் காணாம நீயும்
ஏங்கிக் கலங்கித்தான் நின்னீயே

மறுநாளும் நான் வராம
மந்தையிலில்ல உன் நெனப்பு
பட்டியில ஆட்ட அடைச்சுப்புட்டு
பாவி ஊருதேடி வந்துப்புட்ட

கம்மா தாண்டி காடுகரைத் தாண்டி
களத்து மேடத் தாண்டி
ஓடதாண்டி ஒத்தப்பனைத் தாண்டி
என் ஊடு தேடி வந்தீயே

வேடியப்பன் தின்னூருன்னு
வேண்டிக்கிட்டு நீ பூச
வேகாளம் புடிச்ச நோவெல்லாம்
விறுவிறுன்னு ஓடிருச்சி

குட்டிப்புளியான் பாலும் 
கூடக் கலந்த ஆட்டுப்பாலும் போலக்
கட்டிப்போயிக் கெடக்குதையா
தெவுட்டத் தெவுட்ட நம்மொறவு

தோளுமேல பொறந்த ஆட்டுமறி
தொடருதய்யா பெத்த ஆடு
ஆட்டுமறியா உன் தோளேற
பெத்த ஆடா அலையுறேனே

வேத்தாளு ஒறவு
வேண்டாய்யா‌ நமக்குன்னு
உன் ஆத்தா சொல்லுதையா
உள்மனச அறியாம

கூட்டாளினு சொன்னதுக்கே
கூடாதுனு சொல்லுறாளே
கூடினவன்னு சொன்னாக்கா
குடிமுழுகிப் போவாளோ

ஆரென்ன சொன்னாலும் எஞ்சாமியென்ன விடாதுன்ன
ஊரென்ன சொல்லுமின்னு
உசுருல ஆக்கருவா வீசுறியே

உள்ளதப் பேசியுண்டான சண்டைக்கு
ஒரு தீர்வும் இல்லாம
முறுக்கிட்டுப் போறியே நீ
பதிலேதும் சொல்லாம

வேணுமின்னே ஓராட்ட
உன் மந்தையோட பத்திவிட்டேன்
மீண்டும் உன்னைக் காண
வழியொன்னு கண்டடஞ்சேன்

ஊடுதேடி வந்தவன் கண்டு
உள்ளழைக்காம நிக்கிறியே
ஆடுதேடி வந்தேன்னு சொல்ல
அறிஞ்ச மாரி சிரிக்கிறியே

பட்டியில கெடந்த ஆட்ட
பதமாப் புடிச்சு இழுக்கையில
பாவிமனசப்போல பரிதவிச்சு மறுக்குதையா

மந்த மாறுன ஆடா உன்முன்ன
மனசு கலந்து நிக்கிறனே
திருப்பி அனுப்ப முடியாம
தெகமாரிக் கெடக்குறியே

ஆடறியும் ஆடுண்ணும் புல்லறியும்
காடறியும் கம்மா மீனறியும்
வானறியும் வந்த மழையறியும்
காத்தறியும் கடந்த வழியறியும்

ஏடெழுதா நம்மொறவ
எல்லாமே அறிஞ்சிருந்தும்
எழவெடுத்த மனுசப்பய
மறுப்பதென்ன மவராசா

-------------

தேவதைச்சாத்தன்

ஓரளவுக்கு அனைத்தையும் உணர்ந்து
தெளிவு பெற்று
சுயம் நேசிக்கத் தொடங்கிய பிறகும்

பழக்கப்படுத்தப்பட்ட தேவதைச்சாத்தான்
அதனதன் நிகழ்தலில்
தன்னிச்சையாய் அசரீரியென ஒலிக்கிறது

நடக்கும்போது - ஏன் உனது நடை
இவ்வளவு நளினமாக உள்ளது

பேசும்போது - ஏன் நீ குரலை
நீட்டிமடக்கிப் பேசுகிறாய்

கையசைவில் - உன் உடல்மொழி
ஓர் ஆணுக்குரியதாக இல்லை

சிரிக்கும்போது - யாராவது
பெண்போல் சிரிக்கிறாய்
என்று கூறிவிடப்போகிறார்கள்

அழும்போது - ஆண்மையின் கம்பீரம் இழந்து கண்ணீர் வடிக்கிறாயே

இருந்தால் என்ன
என்று கூறி அவற்றை
இப்பொழுதெல்லாம்
எளிதாக ஒதுக்கிவிட்டு
நகர்ந்திட முடிகிறது

ஆனால் விடையளிப்பிற்கு
இடைப்பட்ட கணநேரத்தில்
ஊடுபாயும் கடந்தகால நானிடமிருந்து
என்னை என்னால் மீட்கமுடியவில்லை

அக்கடந்தகால நான்
நீங்கள் பரிசளித்த காயங்களே
இயல்பென்று நம்பியவன்
தேவதைச்சாத்தானின் ஆணையேற்று
தன்னை மாற்றிக்கொள்ள எத்தனித்து
தோல்வியுற்றுச் சோர்ந்தவன்
உங்களை எதிர்கொள்ளவே பயந்து
தாழ்வுமனப்பான்மையில் ஊறியவன்
தன்னையே வெறுத்தவன்
அவன் அத்துணை
சிறிய குழந்தை
அப்பாவி
வெகுளி
பலவீனமானவன்

நீங்கள் பரிசளித்த காயங்கள்
அவ்வளவு எளிதில் ஆறிடப்போவதில்லை

அதனதன் காட்சிகள்
மீண்டும் மீண்டும்
வாழ்வில் நிகழும்போதெல்லாம்
முறையே
முழுதாக ஆறிடாத
வடுக்களைக் கீறியும் விடும்
கொப்புளிக்கும் குருதியைக் கண்டு
வலியில் துடிக்கவும் செய்யும்
உண்மையை நினைவுபடுத்தி
ஆசுவாசமடைந்து
புண்களை ஆறவும் வைக்கும்

மனமெனும் தேவதைச்சாத்தான்‌

-------------

கேள்வி

எனது பாலினத்தையும்
பாலீர்ப்பையும்
பற்றித் தெரிந்தவுடன்
தங்களது இருள் மனக்காட்சியில்
எனது புணர்ச்சியைக்
கள்ளத்தனமாய்க் கண்டு
சிரிப்போரே
ஒரு கேள்வி
வெட்கமாயில்லை‌ உங்களுக்கு
எனக்கு விளக்குப் பிடிக்க?

-------------

முகமூடிகள்

முகமூடிகள் எங்களின் மேல் திணிக்கப்பட்டவை

ஏன் நீங்கள் முகமூடி அணிகிறீர்கள் எனக் கேட்கும் முன்
நீங்கள் அணிந்துள்ள அறியாமைக் கண்ணாடியைக்
கொஞ்சம் கவனியுங்கள்

கறுப்பு வெள்ளையை மட்டுமே காட்டும்
அக்கண்ணாடிக்கு
எங்களின் வானவில் வண்ணங்கள்
வேண்டாத விசித்திரங்கள்

இருமையை‌ மட்டுமே உணர்த்தும்
அதற்கு
எங்களின் இயல்பு
எங்களைப் படைத்த
இயற்கைக்கு மாறானது

இனப்பெருக்கத்தை மட்டுமே
அடிக்கோடிடும்
அதற்கு
எங்களின் இருப்பு
மாந்தரின அழிவின் ஊற்று

கலாச்சாரக் காவலரான
அதற்கு
எங்களின் உணர்வுகள்
மேலைநாட்டு இறக்குமதி

எங்கள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள்
அதற்கு
‌எங்களையும் படைத்ததாகக் கூறும் கடவுளின் கட்டளைகள்

எங்களை நோக்கி வீசப்படும் வரைமுறையற்ற வார்த்தைக்கத்திகள்
அதற்கு
மென்மையான நகைச்சுவைத் துணுக்குகள்

எங்களைச் சுற்றி எழுப்பப்படும் தீண்டாமைச் சுவர்கள்
அதற்கு
மலத்தைக் கண்டு
ஒதுங்கும் அருவருப்பு

சிலர் இவற்றையும் தாண்டி தைரியமாகத் தங்கள் முகமூடிகளைக் கழற்றிவிட்டுத்தான் வருகின்றனர்

சிலரது முகமூடிகள் வேண்டுமென்றே கிழித்தெறியப்படுகின்றன

முகமூடிகளுக்குள்ளே நின்ற, நிறுத்தப்பட்ட மூச்சுக்காற்றுகளை அறிவீர்களா

இத்தனைக்குப் பிறகும் கேட்பீர்களா முகமூடி ஏன் என

முகமூடிகள் எங்களின் மேல்
திணிக்கப்பட்டவை

நீங்கள் அணிந்துள்ள அறியாமைக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு
காட்சிப்பிழையை உணர்ந்து திருந்துங்கள்

அப்பொழுதுதான் இங்கே பலரும்
முகமூடிகளின் மூச்சடைப்பு இன்றி
விடுதலைக் காற்றை சுவாசிப்பர்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு