-->

அண்மை

டோரதி: ஆண்மையப் பாலதிகாரப் பண்பாட்டை எதிர்க்கும் கலகத்திரைமொழி - லக்ஷயா மன்னார்


தமிழ்ச் சமூகத்தில் திரைக்கலையின் தாக்கம் எத்தகையது என்பதற்கு நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் முடிவுகளைக் கவனித்தாலே போதும். இப்படியான ஓர் துறையை, ஓர் கலை வடிவத்தை வைத்துக்கொண்டு, எவ்வளவோ சமூக மாற்றங்களை உருவாக்கியிருக்க முடியுமேயென்று நினைக்கத்தோன்றும். ஆனால், ஆண்மையச் சிந்தனாவாதிகள் நிரம்பிய, சாதி, மத, ஆளும்வர்க்க ஆதிக்கம் கோலோச்சுகின்ற, முழுக்க வணிகமயமாகிவிட்ட, முதலாளித்துவ கொடும்புலிகள் கொட்டமடிக்கும் ஓர் துறையில் சமூக மாற்றத்திற்கான திறவை மேற்கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் "புலிகள் ஒருபோதும் புல்வாய்களின் விடுதலையை விரும்புவதேயில்லை". இருப்பினும் அப்புலிகளை, அதன் வழியினூடே சென்று அச்சுறுத்திப்பார்க்கும் "பிடி"யின் பிளிறளே "டோரதி" . 

தமிழ்த் திரையுலகில் திருந(ர்)ங்கை பற்றிய படைப்புகள் 

95 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில், 'லூர்து சேவியர்' இயக்கத்தில் வெளிவந்த "கருவறைப்பூக்கள்"(2011), 'விஜயபத்மா' இயக்கத்தில் "நர்த்தகி"(2011), விஜய பாஸ்கர் இயக்கத்தில் “பில்டர் கோல்ட்” (2021), ‘சம்யுக்தா’ இயக்கத்தில் “நீல நிறச்சூரியன்”, 'திவ்யபாரதி' இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த "ஜில்லு"(2024) ஆகியவையே முழுமையாகத் திருநங்கைகளை மட்டுமே மையப்படுத்திய கதையம்சம் கொண்ட திரைப்படங்கள்.

வெகுசன மக்களை மையப்படுத்திய கதைகளில் "தெனாவட்டு","ஓநாயும் ஆட்டுக்குட்டியும்", "காஞ்சனா", "அருவி", "தர்மதுரை", "பேரன்பு","கார்கி", "நட்சத்திரம் நகர்கிறது" போன்றவை திருநங்கைகளை மரியாதைக்குரிய வகையில் காட்சிப்படுத்தியிருக்கும் திரைப்படைப்புகளாகும்.

"மிஸ்டர் லோக்கல்", "திட்டம் இரண்டு", "அதர்ஸ்" ஆகிய திரைப்படங்களில் திருநம்பிகள் பற்றிய கதை இடம்பெற்றிருப்பினும் வழக்கம்போல் இதிலும் தவறான, கேவலமான, சித்தரிப்புதான். இதிலெல்லாம் சற்றே வேறுபட்டு, வெகுசன கதையமைப்பினுள் ஓர் மாறுபாலினப் பெண்ணின், பால்மாறும் பயணத்தினூடே, ஆணாத்திக்க வெறிபிடித்த சமூகத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்காகவும் திருநங்கைகளுக்காகவும் நிற்பதுதான் "டோரதி"-யின் சிறப்பு.

இதுவரையிலான தமிழ்க் கலை-இலக்கியச் சூழலில் காணக்கிடைக்கும் திருநர் மற்றும் பால்பன்மையர் சார்ந்த நூல்கள், அவர்கள் குறித்து இயற்றப்பட்ட நாடகங்கள் மேற்குறிப்பிட்டுள்ள திரைப்படங்களென, இவைகள் ஏற்படுத்திய சிறு விழிப்பின், பாதையில்தான் "டோரதி"-யின் இந்த வெற்றி சாத்தியப்பட்டுள்ளது.

படத்திற்கான வெறுப்புப் பிரச்சாரம் ஒருபுறமிருக்க, இக்கலைப்படைப்பு ஆழமானதொரு உரையாடலை மக்களிடையே நிகழ்த்தியுள்ளது வரவேற்கதக்கது. 

போலிப்புனிதங்களை அம்பலப்படுத்தும் டோரதியின் சாட்லா (கரவொலி) 

திரைப்படத்தின் இறுதியில் நாயகனும் (கார்த்தியும்) நாயகியும் (டோரதியும்), "காதலாகிக் கசிந்து" முத்தமிடும் ஒற்றைக் காட்சியென்பது கலாச்சாரக் காவலர்களின் மேல் உதட்டு மயிரை உசுப்பிவிட்டிருக்கிறது.

உடனே அவர்கள் ஆண் - பெண் காதல் மட்டுமே இயற்கை. அதன் வழியேதான் மனித இனம் தழைக்கும். இன்று திருநங்கையும் ஆணும் காதலிப்பது போன்ற காட்சிகளை அனுமதித்து, அதை இயல்பாக்குவதன் மூலம், நாளை "ஆணும் ஆணும்" "பெண்ணும் பெண்ணும்" காதலிப்பது தவறில்லை என்ற கருத்தை நோக்கி மக்கள் நகர்வார்கள். இதனால் மனிதகுலமே வேரோடு அழிந்துபோய்விடும் என்று குய்யோ முய்யோவென கதறிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவர்களின் அக்கறையெல்லாம் இயற்கையின் மீதோ மனித குலத்தின் மீதோ அல்ல. அடக்கி ஆள நினைக்கும் ஆ(ணா)திக்கத்தின் மீதே.

பல நூற்றாண்டுகளாகத் தந்தை வழிச்சமூகம் அளித்துள்ள ஆதிக்க மரபைச் சிதைய விடாமல் காப்பதன் மூலம் பாலினப் படிநிலையில் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கான யுக்தி. அப்பாலாதிக்கப் படிநிலையை அடித்து நொறுக்கத்துணியும், கேள்விக்குள்ளாக்கும், கலை இலக்கியப் படைப்புகளை, அறிவார்ந்த தளத்தில் கருத்துகளால் எதிர்கொள்ளத் துப்பில்லாத ஆ(ணா)திக்க சக்திகளே, 'இயற்கைக்கு எதிரானது', 'இறைவன் மன்னிக்கமாட்டார்' 'கலாச்சார சீரழிவு', 'பண்பாட்டுப் பாழ்' என வெற்றுக்கூச்சலிட்டு, வெறுப்பை உமிழ்கின்றனர்.

உண்மையில் இவர்கள் ஆண் பெண் காதலைக் கொண்டாடுகிறவர்களா..

ஆம் எனில் எப்பொழுது...?

ஆண் பெண் இருவரும், ஒரே மதத்தைச் சார்ந்து, ஒரே மதத்தில் ஒரே சாதியைச் சார்ந்து, ஒரே சாதியில் ஒரே உட்பிரிவைச் சார்ந்து, ஒரே உட்பிரிவில் வர்க்க நிலையில் சமமாக இருக்கும் வரையில் கொண்டாடுகிறவர்கள்தான். இதில் ஏதேனும் ஒன்று பிசகினால் கூட அக்காதலின் நிலை என்னவாகுமென திரைப்படத்தில் வரும் "கார்த்தி' 'தங்கமலர்', "தனம்" "சேகர்" இவர்களின் காதலும் அக்காதல் என்னவானதும் என்பதே சமூக எதார்த்தம்.

குடும்பம் என்கிற நிறுவன முறையில் பெண்கள் எவ்வாறெல்லாம் ஆணாதிக்க ஆண்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்று காட்சிகளிலும் வசனங்களிலும் நிரம்பி இருக்கிறது. பெண்ணை அடிமைப்படுத்தத் துணிவது ஆணென்கிற ஆதிக்கத் திமிர் மட்டுமல்ல, அத்திமிருக்கு வளமூட்டுகிற சமூகக் கட்டமைப்புகளுமே என்பதை முதற்பாதி முழுக்க உணர்த்திக்கொண்டே போகிறது.

"உங்க அக்கா பொறந்துச்சா. விசில் அய்யாவுக்கு கடைசியாகப் பொம்பளப் புள்ள பொறந்ததும் ரொம்ப அவமானமா போய்டுச்சு, எங்க "கள்ளிப்பாலை" ஊத்தி கொன்னுடப்போறார்ன்னு சொல்லி.." என்ற வசனத்திலும் , திரையரங்கில் பாரதிராஜா-வின் "கருத்தம்மா" படம் வெளிவந்திருப்பாதாகக் காட்சிப்படுத்தியிருப்பதிலும் (குறியீடாக) இயக்குனர் பெண்சிசுக்கொலைப் பற்றிப் பேசியிருப்பார்.

"உங்க அப்பாவுக்கு உங்க அம்மா வேணாம், அவங்க கொண்டு வந்த சீதனம் மட்டும் வேணும்". என்று டோரதி சுப்புவிடம் பகடியாகச் சொல்லுமிடத்தில் வரதட்சிணைப்பற்றியும்,

"எங்க அம்மாவும் அக்காவும் இந்தக் கெணத்துலதான் செத்து கெடந்தாங்க" என்று தன் அக்காள் இறந்த விஷயத்தை சுப்பு பகிருமிடத்தில், சாதிய ஆணவப்படுகொலை பற்றியும், வட்டிக்கு காசு வாங்க வரும் பெண்ணிடம் விசில் வீரய்யா நடந்துக்கொள்ளும் காட்சியில் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் பற்றியும் சுப்புவும் டோரதியும் பாத்திரம் துலக்கும் காட்சியொன்றில் அதை கிண்டலடிக்கும் கார்த்தியிடம் "இவங்க வர்ரதுக்கு முன்னாடி மாத்தி மாத்தி நாங்கதானே இந்தவேலையெல்லாம் செஞ்சிக்கிட்டிருந்தோம்" என்று சுப்பு கூறுவதிலிருந்து, அதுவரை ஆண்கள் பகிர்ந்து கொண்டிருந்த வீட்டு வேலைகள் "டோரதி" வந்தவுடன் அது பெண்களுக்கான வேலையாகிப்போனதாகப் பார்க்கையில் வீட்டில் உள்ள பாலின ரீதியிலான உழைப்பு (சுரண்டல்) வகைமை பற்றியுமென, இப்படி ஆண்களுக்கான அடிமைகளாகப் பெண்களைத் தயார் செய்யும் இடமாக வீடும் குடும்பமும் உள்ளதையும், அவ்வடிமைச் சங்கிலியை உடைக்கத்துணியும் பெண்களை அவ்வீட்டின் கொடுங்கரங்கள் கொன்று புதைப்பதையும் சமரசமில்லாமல் பார்வையாளர் முன் வெளிச்சமிட்டிருக்கிறது.

கதை புனைவுதான். ஆனால் காட்சிகள் படத்திற்காக அமைக்கப்பட்டவையல்ல. நித்தமும் இவை நம் வீடுகளில் நடந்தேறுகின்றன, என்பதற்கு நிகழ்கால உதாரணம் 2005 - இல் கொண்டு வரப்பட்ட "குடும்ப வன்முறைச் சட்டம்"(Protection of Women from Domestic Violence Act- 2005) நாளுக்குநாள் இச்சட்டத்தின் மூலம் பதியப்படும் வழக்குகளுமே சாட்சி. திரைப்படத்தின் முதல் இருபது நிமிடங்களில் கிணற்றில் இறந்து மிதக்கும் முதியவள் ஒருத்தியின் சடலத்தை மீட்கும் காட்சியின் பின்னனியில் வரும் "எழுவது வயசு கெழவிய சோத்துக்கு சாவ விட்டுட்டு, இப்ப வந்து அய்யோ அம்மான்னா எந்திரிச்சு உக்காந்துருமாடா..?" என்கிற வசனம், காலங்காலமாக உயிரியல் ரீதியாக அமையப்பெற்ற குடும்பமே (Biological family) சிறந்தது. அதுவே இந்தியக்கலாச்சாரம் என்று சிலாகிக்கும், சிறு புத்தியாளர்கள் மீதான சவுக்கடி.

பெண் என்பவள் கீழானவள். இழி பிறவி, அவளை ஒருபோதும் நம்பக்கூடாதென ஆணாதிக்க மலத்தில் நெளியும் புழுக்களான சுப்புவின் அப்பா விசில் வீரய்யா'-வும், அவரின் அடியொற்றியே நிற்கும் மற்ற இரு மகன்களான 'கலை மற்றும் வேலு'வும், பெண்பாலின அடையாளத்தை ஏற்கின்ற சுப்புவை, கொல்லத்துணிவதில் வியப்பேதுமில்லை. ஆனால் "அன்புக்கு எதுக்குடா காசு மசுரு" என்று சிறுவயது கார்த்தி சுப்புவின் நட்பை வியந்த உணவக உரிமையாளர், "திருநங்கையாக" மாறிய சுப்புவைக் கொலைசெய்யத் தூண்டப்படும் கார்த்தியிடம் "இதுவும் ஒரு வகையான கருணைக்கொலை" என்று அக்கொலையை நியாயப்படுத்தும் நோக்கில் பேசும்போது, இப்போ மட்டும் 'அன்பெல்லாம் மசுராப்போச்சோ'...? என்று நினைக்கத் தோன்றுகிறது.

இப்பாலாதிக்கச் சமூகம் புனிதமென கட்டமைத்துள்ள காதல், குடும்ப உறவு, நட்பு இன்னும் பல அறமற்றச் சமூக ஒழுங்கின் போலித்தன்மையைத் திரைப்படமானது, "டோரதி"-யின் வழியே அம்பலப்படுத்துகிறது.

பெண் விடுதலையல்லாது திருநர் விடுதலை சாத்தியமில்லை

இரண்டாம் பாதியில் சுப்பு பேசுவதாக ஓர் வசனம் வரும் "நாடு ,மொழி, மதம், இனம் கடந்து உலகில் உள்ள அனைவரும் ஒற்றுமையாகக் கடைப்பிடிக்கும் கொள்கை எது...? பாலினப் பாகுபாடு" எண்ணிக்கையில், அறிவில், திறனில் ஆண்களுக்கு நிகராக பெண்களிருந்தும் "பாலினப் பாகுபாடெனும்" பாழும் கிணற்றில் சிறைப்பட்டுக் கிடக்கும் பெண்கள் மீளாது "திருநர்" சமூகத்தின் மீட்சி என்பது சாத்தியமில்லை. பாலினப் பாகுபாடெனும் பாழுங் கிணற்றில் பலியாகிப்போன சுப்பு-வின் தாய், தமக்கை ,தோழி டோரதி ஆகியோர் சேர்ந்து, மூழ்கவிருந்த சுப்புவைத் தூக்கிவிடுவதாய் வரும் காட்சியினை, மானுட விடுதலையை நோக்கி நகர, பெண்களும் திருநர்களும் கைக்கோர்க்க வேண்டும் என்பதாய் நான் புரிந்துகொள்கிறேன்.

'சுப்பு' குன்றின்மீது நின்று 'கார்த்தி'-யிடம் பேசும், "ஆம்பளைத்திமிரு ,சாதி, மயிறு மட்டைன்னு எதையோ ஒன்ன புடிச்சு தொங்கிகிட்டு, அடிச்சு கொன்னு நாறிக்கிட்டிருக்க உங்களுக்கெல்லாம்... நீங்க புடிச்சு தொங்குற எதுவும் நிலையானது கெடையாது" என்ற வார்த்தைகளை இன்னும் பலமாகக் கூற வேண்டும்

திருநர் வெறுப்பும் திரைப்படத்திற்கான எதிர்ப்பும்

கலாச்சார சீரழிவு, இயற்கைக்கு எதிரானது, கடவுளின் பார்வையில் பாவிகள், இலுமினாட்டிகள் சதி, இந்தியப் பண்பாட்டைச் சிதைக்க முற்படும் மேல்நாட்டு பரப்புரை, சந்ததிகளை உருவாக்க இயலாத இவர்களால் மனித இனமே அழிந்துபோய்விடும் என்ற பிற்போக்குத் தனமான பல கேள்விகளுக்கு இணையத்தில் அறிவியல் ரீதியான பதில்களும், பால்பன்மையர் சமூக மக்களின் அறிவார்ந்த பதில்களும், எதிர்க் கேள்விகளும் கொட்டிக்கிடக்கின்றன. கொஞ்சம் நேரம் ஒதுக்கி திறந்த மனத்தோடு அவற்றை அணுகுதல் மட்டுமே அவசியம். கூடவே திரைப்படமும் அதனளவில் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்குப் பதிலாகவும் உள்ளதை உற்று நோக்கினால் விளங்கும்.

படம் திருநங்கைகள் உரிமைகளை, அவர்களின் பாலின உணர்தல் நிலைக்கான அறிவியல் காரணங்களைப் பேசாமல், "சாமி கடவுளென்று" புனிதப்படுத்துவதும், கதையைக் காதலென்ற கோணத்திற்கு நகர்த்தி உணர்வெழுச்சிக்குள் பார்வையாளர்களைச் சிக்க வைப்பதும் தேவையா..? என்ற விமர்சனத்தைச் சிலர் எழுப்புகின்றனர். உரிமைகள் குறித்தும், திருநர் சார்ந்த அறிவியல் உண்மைகள் பற்றியும் பேசவேண்டியது அவசியம். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் திரைக்கதை அமைக்கப்பட்ட காலத்திற்கும், தமிழ்நாட்டில் திருநர் உரிமை சார்ந்த கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கிய காலத்திற்கும் நிஜத்திலேயே பெரிய கால இடைவெளி உள்ளதை உணரவேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் "திருநங்கை" என அழைக்க வேண்டுமென்கிற அரசாணையே "2011"ஆம் - ஆண்டுதான் வெளியிடப்பட்டது. நிதர்சனம் இப்படியாக இருக்கையில், உரிமைசார்ந்த போராட்டத்தைக் காட்சிப் படுத்தியிருந்தால், கதையில் ஒட்டாமல் ஓர் செயற்கைத் தனத்தை ஏற்படுத்துகிற வாய்ப்பும் உண்டு. மேலும் திருநர் சார்ந்த அறிவியல் விவாதங்களோ ஆய்வறிக்கைகளோ இந்தியாவில் பெரிதாகப் புழங்குவெளி இல்லாத அக்காலத்தில், மாறுபாலின ஏற்பை வலியுறுத்தும் பொருட்டு "கடவுளோட ஸ்பெஷல் படைப்பு" , "நாமல்லாம் சாமிங்க" என்று வசனங்களில் வரும் சமூக யதார்த்தத்தைப் பெரும் குறையாகச் சொல்ல முடியாது. பெற்றோரும் சுற்றமும் கண்டுகொள்ளாமல் கைவிட்டபோது, அந்த நம்பிக்கைதான் ஏதோ ஒரு வகையில் திருநங்கைகளின் பிழைப்பாதாரமாக இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. படத்தில்கூட பேருந்து நிலையத்தில் அப்படியான ஒரு காட்சி வரும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு-21 வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் "திருமணம் மற்றும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை"யும் இதில் அடங்கும். எனில், இந்தப் பாலாதிக்க இந்தியச் சமூகத்தில் திருநர் மற்றும் பால்பன்மையினர் காதல் மற்றும் திருமணத்திற்கான அங்கீகாரம் என்பது சட்டப்பூர்வமானதாக ஆக்கப்படாமல் இருக்கும்போது, நான் படத்தில் காட்டப்பட்டுள்ள காதலை 'உணர்வு' என்பதைத் தாண்டி "உரிமை" என்கிற ரீதியிலேயே அணுக நினைக்கிறேன்.

திருநர் காதலைச் சொல்லும் வகைமையில் "டோரதி" ஒரு துவக்கம்தான். இதே பாணியில் பல படங்கள் வந்திருந்து, இன்னும் காதலையே வட்டமடிக்குறீர்கள் என்று கேட்டால் கூட ஓர் நியாயமிருக்கும். அதை விடுத்து, இது இல்லை, அது இல்லை என்று திருநர் சமூகத்தின் மீது அக்கறையாகப் பொங்கியெழுபவர்கள், இதுவரை திருநர் சமூகம் குறித்து, திரைப்படத்தில் வந்திருந்த இழிகாட்சிகள் தவறான சித்திரிப்புகள் குறித்து என்றேனும் வாய் திறந்திருப்பார்களா..? என்ற கேள்விதான் எழுகிறது. அதற்காகப் படத்தை விமர்சிக்கவே கூடாதா என்றெல்லாம் கூறவில்லை. அந்த விமர்சனமானது அர்த்தமாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டுமேயொழிய, வெறுப்பாளர்களுக்குத் தீணிபோடும் விதமாக அமைந்துவிடக் கூடாதென்பதே என் அவா.

குற்றமுள்ள மனங்களைக் குத்திய முத்தம்

திரைப்படத்தின் இறுதி இருபது நிமிடங்களே படத்தின் இருதயம் போன்றது. சுப்புவின் பிரிவு கார்த்திக்குள் இனம்புரியா உணர்வை விதைக்கிறது. அது காதலெனச் சுட்டப்படுகையில் முதலில் ஏற்க மறுத்து, தயங்கி, பின்னர் அவன் காதலியைத் தேடிச்சென்று முத்தமிடுவதாகப் படம் முடிவடையும். இக்காதலும் முத்தமும் பலரை எரிச்சலடைய வைத்திருக்கிறது. கூடவே பல முற்போக்குப் பாலாதிக்கவாதிகளின் முகமூடிகளையும் கழற்றி விட்டிருக்கிறது. இதுவரை தமிழ்த்திரையுலகில் பார்த்ததும் காதல், பார்க்காமல் காதல், பைத்தியமாக அலையவைத்த காதல், பலவந்த காதலென எல்லாவற்றையும் கொண்டாடித்தீர்த்த பாலாதிக்க மக்களால் "பால்பன்மையர்" காதலை மட்டும் ஏற்கக் கசப்பதன் காரணம், இவர்களின் மனங்களில் அழுகித் தேங்கியுள்ள பாலாதிக்க வன்மமே.

"கார்த்தியும் சுப்புவும் இறுதிவரை நண்பர்களாகவே இருந்திருக்கலாம்", "வரேண்டின்னு இறக்கி விட்டதோடு படம் முடிஞ்சுருக்கலாம்", "கொலை செய்யாம, கார்த்தி மனம் திருந்தினதோடவே நிறுத்தியிருக்கனும்" என்றவாரெல்லாம் சமூக வலைதளம் முழுக்க அழுகிப்போன பாலாதிக்க வன்ம துர்நாற்றங்கள் வீசுகின்றன. படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் திணிப்பதை அனுமதிக்க முடியாதென்று குமுறுகின்றனர். அதே படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் "நச்சு மிக்க ஆண்மைய" சிந்தனைகளைத் தூவி, போதை நுகர்வை, வன்முறையை, பாலியல் வன்முறையைக் காண்பிக்கும் குப்பைப் படங்களை இவர்கள் எதிர்க்கத் துணியாதது ஏன்..? இந்தப் பாலாதிக்கச் சமூகத்தில் ஓர் ஆணின் காதலும் திருமணமும் அவன் "ஆண்" என்கிற ஆதிக்கச் சிந்தனையைத் தூக்கிப்பிடிக்கும் கருவிகளாகவே பெரும்பாலும் உள்ளன.

அவன் திருமணம் செய்யப்போகும் பெண் சாதியில், பொருளாதாரம் (வரதட்சணையில் கூட),புறத்தோற்ற அழகிலென, தனக்கு நிகராகவோ அல்லது தன்னைவிட மேம்பட்டவராகவோ இருக்க வேண்டுமென்ற காரணிகள், அவனின் "ஆண் நெடில்" என்கிற குறுகிய எண்ணத்திற்கு வளம் சேர்ப்பவை. எல்லாவற்றிலும் மேலாகத் திருமணமான பத்தே மாதத்தில் பெத்துப்போடவில்லையென்றால் அது "ஆண்மைக்கே" இழுக்கு எனச் சமூகம் கற்பித்து வைத்துள்ளது. இதையெல்லாம் உடைத்து, ஊரும் சமூகமும் என்ன பரிகசித்தாலும் கவலையில்லையெனத் துணிகின்ற ஒருவனாலேயே, ஓர் திருநங்கையுடன் (நேர்மையான) காதல், இல்வாழ்க்கை என்பதை நோக்கி நகரமுடியும். அப்படி உடைத்து வெளியேறிய ஓர் ஆணின் பிரதி பிம்பம்தான் நாயகன் "கார்த்தி".

வெறுப்பவர் அதிகம் இருப்பினும் இந்தக் காதலை இவர்களின் முத்தத்தை இயல்பாக ஏற்று, கொண்டாடும் பல "டோரதி"களும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களே எதிர்கால "சுப்பு"க்களின் நம்பிக்கை.

Author Picture

லக்ஷயா மன்னார்

எழுத்தாளர். கலை இலக்கிய இயக்கச் செயல்பாட்டாளர், அரங்கக் கலைஞர், திவ்ய பாரதி இயக்கத்தில் வெளிவந்த 'ஜில்லு' திரைப்படத்தில் நடித்திருப்பவர். 'சுடுமண் பொம்மைகள்' கவிதை நூல் ஆசிரியர்.

1 Comments

  1. வணக்கம் தோழர்:உங்களின் டோரதி பட விமர்சனம் மிக அருமை..அதிலும் திருமணம் என்று வந்துவிட்டால் ஆண் பெண் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பேசுவோர் அதில் சாதி மதம் இனம் இருபக்க சம்பளம் அந்தஸ்து எல்லாம் பார்க்காமலா என்ற வாதம் மிக சிறப்பு.. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துகள்

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு