மனமென்று ஒன்று இருப்பதால்தான் அவன் மனிதனாகிறான். மனத்தில்தான் எண்ணங்களின் குவியல் உருவாகிறது. மனம் ஒரு உறுப்பல்ல. எல்லோருக்கும் தெரியும். எனினும் நாம் மனம் என்ற ஒன்று இருப்பதாகவும், அதில்தான் நம் எண்ணங்களை வளர்த்தெடுக்கிறோம் என்று நாம் நம்புகிறோம்.
மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை. அந்த மனத்தைச் செம்மைப்படுத்தி எண்ணங்களை ஒரு நேர்கோட்டில் ஓடவிட என்ன செய்ய வேண்டும் என்று எண்ணிய முத்துக்கந்தனுக்கு அறிந்த ஒரு வழி, பார்வை மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்றோர்களுக்குப் பயிற்சி கொடுப்பது ஒன்றுதான். இப்பயிற்சி என்னும் முயற்சியில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். "மனிதருக்குள் ஏற்கனவே உள்ள முழுமையை வெளிக்கொணர்வதே கல்வி" என்கிறார் விவேகானந்தர். ரிச்சர்டு லிவிங்ஸ்டன் என்னும் கல்வியாளர் "ஒருவரிடம் ஒரு தாளையும் சிறு பென்சிலையும் கொடு, தான் யார் என்பதை அவர் காட்டி விடுவார்" என்கிறார். முத்துக்கந்தன் இவ்விரண்டையும் செய்து பார்த்திருக்கிறார்.
ஒரு சொல்லைக் கொடுத்து எழுதவைத்தல், ஒரு எண்ணைக் கொடுத்து அது சார்ந்த கற்பனையைச் சொல்ல வைத்தல், ஒரு தலைப்பைக் கொடுத்து கட்டுரை எழுத வைத்தல், அவர்கள் விரும்பிய தலைப்பில் கவிதை எழுத வைத்தல், கதை எழுத வைத்தல் என எல்லா முயற்சிகளையும் செய்திருக்கிறார் முத்துக்கந்தன். அடிப்படை நோக்கம் என்ன? ஒவ்வொருவருக்கும் தன் மனதில் இருப்பதைக் கொட்டி வைக்க ஒரு தளம் தேவைப்படுகிறது. அதை அவர்களுக்கு இப்போது தந்திருக்கிறார். அவர்களும் தங்கள் எண்ணங்களைக் கொட்டி வைத்திருக்கிறார்கள்.
‘செவி உள்ளவன் கேட்பானாக’ என்கிறார் இயேசு. இந்தச் சமூகம் மட்டும் கேட்க தங்கள் செவிகளைத் தயார் செய்து கொண்டால் இது மாதிரி எத்தனை விடயங்கள் கொட்டித் தீர்க்கப்படும். நாகரிகம், பண்பாடு, சமூகம் என்றெல்லாம் பேசுகிறோம். ஆனால் சமூகத்தின் விளிம்பில் இருப்பவரை நேசிக்க மறக்கிறோம். அந்த மனிதருக்குள் கொதித்துக் கிடக்கும் விம்மல்களை அசைபோட்டு சந்தோசப்படக் காத்திருக்கும் கற்பனைகளைக் கேட்பது யார்? இரசிப்பது யார்? இத்தகைய கேள்விகளுக்கு விடை காண முயன்றிருக்கிறது இந்த முயற்சி.
இதற்குச் சான்றாக நிற்கிறார்கள் பல மாணவ மாணவிகள். எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அலச நமக்கு நேரமில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஒரு சில எடுத்துக்காட்டுகளைக் காட்டியிருக்கிறோம். அதுவே மற்றெல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் காட்ட போதுமானது.
இயல்புள்ளம் எனும் தலைப்பில் செவ்வாய் கிரகம் அல்லது நான் கடவுள் என்கிற இரு சொற்களில் ஏதேனும் ஒன்று கட்டுரையில் கட்டாயம் வர வேண்டும் இது விதி. நடுவர் இடையிடையே பேச்சைக் கொடுத்து எண்ணங்களை திசைதிருப்புவார் அல்லது வேறு திசைக்கு அழைத்துச் செல்வார். இத்தகைய முயற்சிகளுக்கு மாணவர்கள் இலக்காகக் கூடாது. இப்படிப்பட்ட கடுமையான சோதனைக் களத்தில் அவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று பாருங்கள்.
இன்று உலகம் பேதத்தால் சிதைந்து போரால் நசிந்து பூமியெங்கும் மனித உடல்கள் சிதறிக்கிடக்க, தான் மனிதர் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டவர்கள் இன்று ஏன் மனிதராகப் பிறந்தோம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் உருவாகி ஊடுருவி இந்தியா முழுக்க பரவி பரந்து கிடக்கும் சாதியம் இவர்கள் பிழைக்க பிழைப்புத் தேடி ஓடிய நாடுகள்வரை விரவிவிட்டது. அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான கலிபோர்னியாவில் சாதி பேதங்களுக்கு எதிராகச் சட்டமியற்றும் அளவுக்கு அது வளர்ந்துவிட்டது. ஈழத்தில் சாதியால் இன ஒற்றுமை குலைந்து சின்னாபின்னமானதையும் நாம் பார்த்திருக்கிறோம். இவை செவ்வாய் கிரகம்வரை வந்துவிட்டதாக கோ. விஷால் கற்பனை செய்கிறார். அவர் மொழியிலேயே அதைப் பார்ப்போம்.
"என் அப்பனால் உருவான பூமி இன்று அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அவர் ஏசுவா, அல்லாவா, பிரம்மாவா, புத்தரா என்ற பிரச்சனைகளைப் பிறகு பார்ப்போம். இது அவர்களைப் பற்றிய கதை அல்ல. பூமி அழிந்துவிட்ட பின் ஒரு புதிய இனக்குழு செவ்வாய்க் கிரகத்தில் குடியேறியது. எலுமிச்சை கடலுக்கு அருகில் லைட்டர் கொண்டு தீப்பற்றி வாழ அவர்கள் கற்றுக் கொண்டனர். இவர்களிடையே பூமியிலிருந்த அந்தச் சாதிய ஏற்றத்தாழ்வு இங்கு இல்லை. என் கிரீடத்திலிருந்து வந்த நேரடி செவ்வாய் கிரகவாசிகள் பூமி வாசிகளை அடக்கி ஆண்டனர். என் தகப்பனின் தலையில் இருந்து வந்தவன், காலிலிருந்து வந்தவன், டேஷ்லிருந்து வந்தவன் என எல்லோரும் செவ்வாய் கிரக வாசிகளுக்கு அடிபணிந்து இழிகுலம் ஆனார்கள். ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டார்கள். ஏன் கோவிலின் புரோகிதர்கள் வேலை உட்பட எல்லா உயர்நிலைத் தொழில்களும் செவ்வாய்க் கிரகவாசிகளுக்கு உரித்தானது. அடிமைத்தனமும் அடக்குமுறையும் அன்று பூமியிலிருந்தது போல் இன்று செவ்வாய்க் கிரகத்திலும் இருக்கிறது. வெறுமையான இந்த வாழ்வில் வேறு எதுவும் புதிதாக இல்லை. என் தகப்பன் கைகட்டி வேடிக்கை பார்ப்பது போல் நானும் "அடிச்சுக்கிட்டு சாவுங்கடா" என்று எண்ணியபடி வேடிக்கை பார்த்தேன். என்ன செய்வது நானும் இப்பொழுது கடவுள்தானே.
இந்தப் படைப்பாளிக்குப் படைத்தவர் யார் என்பதில் சந்தேகம் இருக்கும் போலும். படைக்கப்பட்டவரும், நாவிலிருந்து, தோலிலிருந்து, தொடையில் இருந்து, பாதத்தில் இருந்து என்று படைக்கப்பட்டதில் கேள்வி இருக்கிறது. இப்படி தன் எண்ணங்களை வெட்ட வெளிச்சமாக்க படைப்பாளிக்கு ஒரு இடம் கிடைத்திருக்கிறது இல்லையா.
தன் எண்ணங்களைத் தயக்கமின்றி வெளியிட இந்த வாய்ப்பைப் படைப்பாளிகள் பயன்படுத்துகிறார்கள். தனக்கென ஒரு மாயா உலகத்தைப் படைத்த ரா. ஈஸ்வரன் தன்னை ஒரு மெசோகினிஸ்ட்டாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். தான் படைத்த மாயா உலகத்தில் எல்லாம் இருக்கும் இயற்கை வளங்கள், பறக்கும் பறவைகள், மிருகங்கள் என இயற்கை உலகம் அப்படியே நிறைந்திருக்கும். ஆனால் அந்த உலகில் பெண்கள் இருக்க மாட்டார்கள். சினிமா கொட்டகைகள் இருக்காது. வாகனங்கள் இருக்காது.
திரைப்படம் இல்லையென்றால் முதல்வராவது எப்படி. வாகனங்கள் இல்லையென்றால் தாமதமான வருகைக்குக் காரணம் சொல்வது எப்படி. இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இவர் விடை வைத்திருக்க கூடும்.
நம் எடுத்துக்காட்டில் வரும் லோ.சரண்குமார், H.G. வேல்சை நமக்கு நினைவு படுத்துகிறார். அவர் எழுதிய கதையில் (Country of the blind men by H.G. Wells) அந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பார்வையற்றவர்களே. அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், அவர்களின் மனோநிலை என்ன என்பதே கதையின் அம்சம். இங்கே படைப்பாளி தன் உலகத்தில் எல்லோரும் பார்வையற்றவர் என்று எழுதிவிட்டு இரண்டு நண்பர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறார். அவர்கள் இசை உலகு ஒன்றை உருவாக்க விரும்புவதாக கூறிய படைப்பாளி தன் குழப்பத்திலிருந்து மீண்டு "ஆமாம் நான்தான் கடவுளாச்சே! நான் ஏன் இப்படி எழுதுகிறேன்?" என்கிறார். எழுத்தின் தொடக்கத்தில் இத்தகைய குழப்பமான சிந்தனைகள் வருவது இயல்புதான். ஆயினும் தன் மனதில் உள்ளதைக் கொட்ட இடம் கிடைத்த போது அதை பயன்படுத்தியிருக்கிறார். அது பாராட்டுக்குரியதே.
கவிதைக்கு கவிமணி தேசிகவிநாயகம் உட்பட எத்தனையோ பேர் விளக்கம் தந்துவிட்டார்கள். எனில் அந்த விளக்கத்திற்குள்தான் கவிதை நிற்கிறதா? ஒரு மனம் எங்கே ஒரு சோகக் காட்சியைப் பார்த்து கசிகிறதோ அங்கே ஒரு சோகக் கவிதையும் எங்கே ஒரு காட்சியைப் பார்த்து பரவசப்படுகிறதோ அங்கே தாமாகவே அந்த மனம் ஒரு கவிதையைப் படைக்கிறது. கவிஞர் உருவாக்கப்படுபவர் அல்ல. அவர் பிறக்கிறார். அவருக்குள் இருக்கும் கவித்துவம் வெளிவருவதற்கு மட்டுமே காலமும் சூழலும் தேவைப்படுகின்றன.
கவிதைக்குள் அரசியல், கவிதைக்குள் பொருளாதாரம், கவிதைக்குள் சமூகம் என்று விரவிக்கிடக்கின்றன. இந்த மூன்றும் இல்லாமல் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாமல் நான் கவிதை எழுதுவேன் என்று சொன்னால் நாம் அவரை அனுதாபத்தோடு பார்க்கலாம்.
இக்கட்டுரையின் முன்பகுதியில் ரிச்சர்டு லிவிங்ஸ்டன் மேற்கோள் ஒன்றை காட்டியிருந்தோம். இதோ முத்துக்கந்தன் தாளையும் பென்சிலையும் கொடுத்திருக்கிறார். கவிஞர்கள் தாங்கள் யார் என்று நிருபிக்க முயன்றிருக்கிறார்கள். கவிதைக்கு ஏராளமான விளக்கங்கள் தரப்பட்டுவிட்டன என்று கூறும் கோ. விஷால் கனவில் உருவாகும் கவிதை என்னும் கருவைத் தடுப்பதே கொலைக்குச் சமம் என்று சாட்டையை சொடுக்கிறார். அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளும் வெப்பத் தெறிப்புகளாய் உதிர்கின்றன. கவிதையை தான் விதைப்பவனே தவிர அதன் காவல்காரன் அல்ல என்கிறார். அவருடைய காதல் கவிதையில் கூட அவனுடைய வெறுமையின் மூலம் இவர் தெரிந்து கொண்டதை சொல்ல நினைத்திருக்கிறார். எனினும் இது முற்றுப்பெறாமல் நின்றிருக்கலாம் அல்லது "வாசகரே மீதியை நீ புரிந்துகொள்" என்று விட்டுருக்கலாம். எது எப்படியாயினும் கோ. விஷால் போன்றவர்கள் இச்சமூகத்தில் நல்ல கவிஞர்களாக பரிமளிக்க வாய்ப்பிருக்கிறது.
இச்சமூகம் எவ்வளவு கொடூரமாகத் திருநரைத் தாக்குகிறது. தன் கையில் பென்சில் கிடைத்தவுடன் தன் ஆவேசத்தை கொட்டித் தீர்க்க முயன்றிருக்கிறார் செ. கோபிநாத். அவருடைய ஆவேச வரிகளைப் பாருங்கள்:
"திருநங்கை:
திரண்ட முலைகளுக்குப்
பெண்குறி இல்லை!
வளர்ந்த ஆண் குறிக்கும்
மார்பில் முடியில்லை என்பதால்
அரவாணி என்கிறாய்"
மௌனம் எரிமலை வெடிப்புக்கு முந்தைய நிலை. மௌனம் சம்மதத்தின் அறிகுறி என்று சொல்வது உண்மையல்ல. வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையின் அமுக்க நிலை. இதுதான் செ. கோபிநாத் நமக்கு உணர்த்தும் செய்தி.
இன்றைய சமூகத்தின் அவல நிலையை வெளிச்சமாக்கியிருக்கிறார் அ. அகிலேஷ். அன்றும் இன்றும் ஆட்சிகள் நம்மை என்ன செய்கின்றன. பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கின்றன. அறியாமையில் உள்ள நம் மக்களோ துள்ளிக் குதித்து ஆடுகிறார்கள். கவிதை அவர் எப்போதோ எழுதியது ஆனால் இன்றைய தமிழகத்தை நேரில் படம்பிடித்ததுபோல் இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் நாளை கவிஞர்களாக உருமாறும் போது இவர்களின் எழுத்துக்கள் சமூகத்தை மேம்படுத்த உதவலாம். அவர் கவிதையை அவர் வரிகளிலேயே வாசிப்போம்.
"சமூகப் புலம்பல் :
சமுதாயம் இரண்டு பக்கமும் பிளந்து நிக்குது!
நட்டநடுவில் நம் சனம் வாய்ப் பொளக்குது!
யாரு பக்கம் நியாயம் இங்குக் கொட்டிக் கிடக்குது?
நீதி கேட்கும் மக்களுக்குத் துன்பம் பிறக்குது,
ஆட்சி நம்ம வாழ்க்கையைத்தான் கூறு போடுது!
அறியாமையால் மக்கள் கூட்டம் துள்ளிக் குதிக்குது."
ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ எழுதுவதில் மு. மகாலிங்கம் தேர்ந்து வருகிறார். சாணத்துக்காகக் காத்திருக்கும் ஆடும் பல்லையும், துலக்கிய பின் காணாமல் போகும் பற்பசைக் குமிழும், நிகழ்ச்சியின் பிறகு செயல்பாட்டிலிருந்து நீக்கப்படும் மேசை ஒலிவாங்கியும் நம்மைச் சிரிக்கவைக்கும் போது, உணவுக்குப் பின் பாத்திரத்தில் காத்திருக்கும் பணியாளரின் பசி நம்மைச் சிந்திக்கவும் ஒரு வகை குற்ற உணர்வோடு நம்மை நாமே பார்த்துக் கொள்ளவும் வழிவகுக்கிறது.
சிறுகதைக்கு ரஷ்ய எழுத்தாளரான மிக்ஹல் சோளகவ்(Mikhail Sholokhov) ஒரு இலக்கணம் வகுத்திருந்தார். அதன்படி, கதை தொடங்கும்போது சுவரில் ஒரு துப்பாக்கி தொங்குமானால் கதை முடிவதற்குள் அந்த துப்பாக்கி வெடித்துவிட வேண்டும். இப்போது கதை எழுதும் உலகம் இந்த இலக்கணத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆம் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கண்டனரே தவிர இலக்கணம் கண்டதற்கு யாரும் இலக்கியம் கண்டதில்லை. நம் மாணவர்களும் அதுபற்றி கவலைப்படாமல் இலக்கியம் படைக்க முயன்றிருக்கின்றனர். இங்கே மு.மகாலிங்கம் என்பவர் "ஒரு வேளை" என்றொரு கதை எழுதியிருக்கின்றார். அறிஞர் ஜான்சன் ஒருமுறை சொன்னார், அதிர்ஷ்டம் ஒருமுறைதான் வாழ்க்கையில் கதவைத் தட்டும். படைப்பாளி கையைப் பற்றிய பெண்ணை உதறிவிட்டு திரும்பி வரும் போது ஒருவேளை ஒப்புக் கொண்டிருந்தால் என்று கவலைப்படுவது மனித எதார்த்தத்தின் உச்சம். இந்த ஒரு வேளைதான் மனித வாழ்வில் பல சம்பவங்களை மாற்றியமைக்கிறது. மனிதன் “அந்த ஒரு வேளையை” எப்போதும் நினைவில் வைத்துப் பணியாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் படைப்பாளிகள் எத்தனை வகை என்பதை எதார்த்தமாகப் படம்பிடிக்கும் சிறுகதை வெ. கார்த்திக் எழுதிய "ஒரு நாள்". இந்த சமூகத்தில் இன்னமும் இப்படித்தான். பலருக்கு அவார்டுகள் விருதுகள் கொடுக்கப்படுவதில்லை. அவை வாங்கப்படுகின்றன. விருதுகளைப் பற்றி கவலைப்படாமல் எழுதிய மா.அரங்கநாதன் போன்றவர்களே சிறந்த படைப்பாளிகள். புதுமைப்பித்தனின் "ஒரு நாள் கழிந்தது" கதைக்கும் வெ.கார்த்திக் எழுதிய "ஒரு நாள்" கதைக்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. கதாபாத்திரம், கதையம்சம் போன்ற அனைத்திலும் இது தெற்றென தெரிகிறது.
இம்முயற்சியில் முத்துக்கந்தன் பல தலைப்புகளைக் கொடுத்திருக்கிறார். மாணவர்களும் அவற்றை உள்வாங்கி ஈடுகொடுத்து எழுதியிருக்கிறார்கள். காலக்குறைவின் காரணமாக நான் இங்கொன்றும் அங்கொன்றுமாக வாசித்தேன். இதில் நான் முக்கியமான சில தலைப்புகளை மட்டுமே எடுத்திருக்கிறேன். பல தலைப்புகள் கட்டுரைக்குள் கொண்டுவராமல் வாசித்து விட்டுருக்கிறேன். பூப்பெய்தல் முதல் மாதவிடாய்வரை பல விடயங்களை மாணவ மாணவிகள் எழுதியிருப்பது இச்சமூகம் ஆரோக்கிய நிலையை நோக்கிப் போகிறது என்பதைக் காட்டுகிறது.
பார்வை மாற்றுத்திறனாளிகள் பலருடைய எழுத்தில் ஒன்றிணைந்த கல்விக் கொள்கை உதவாது என்ற வெளிப்படையான சுட்டிக்காட்டல்கள் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. பேராசிரியர் சரவணன் கூட தன் "காயலாங்கடை" கதையின் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட கல்வியின் தீங்குகளைச் செவ்வனே விவரித்திருந்தார். இந்த கோரிக்கையும் இந்தக் கோசங்களும் மேலும் மேலும் உயர்ந்து இனிவரும் நம் பார்வையற்ற சகோதரர்களுக்குச் சிறப்புப் பள்ளிகள் மூலம் தரமான கல்வி கிடைக்க உதவ வேண்டும். இவர்களின் குரல்கள் மேலும் உயர்ந்து அது கோரிக்கையைச் சாத்தியப்படுத்தலாம்.
உழைத்தோம், ஊதியம் பெற்றோம் உருப்படியாகக் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டோம் இதுதான் இன்றைய அறிவுஜீவிகளின் மனோநிலை. சமூகம் பற்றிய மாற்றுச் சிந்தனையே இல்லாத ஓர் அமைப்பில் முத்துக்கந்தனுக்கு எப்படி மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்றோரை மேம்படுத்தும் சிந்தனை வந்தது. இந்த சிந்தனை ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்ட ஒரு குழுவை மேம்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
தனக்கிருக்கும் ஏராளமான பணிகளுக்கு நடுவே இப்படியொரு முயற்சி பற்றி சிந்தித்துச் செயல்படுவது என்பது சாதாரண விடயமல்ல. அவருடைய தமிழ்த்துறைத் தலைவர் வில்சன் கூறுவதுபோல் இவர் இப்போது பூமியில் உப்பாய் இருக்கிறார். இவரது முயற்சி மேலும் மேலும் வளர வாழ்த்துவோம்.
