-->

அண்மை

திருநங்கை ஜாஸ்மின் கவிதைகள்

ஓவியம் - சாய் அரிதா

1.
இது என்னவோ
என்னுடைய காதலோ
கவிதையோ
கதையோதான்

அமைதியாக என்
கதவு மணி அடித்தது

கதவுகளைத் திறந்தேன்
கூடவே என்
மனக்கதவுகளையும் சேர்த்துத்தான்

உள்ளே வந்தவனைக்
கட்டி அணைத்தேன்
அவன் என் கண்களை நோக்கினான்
நான் அவன் கருவிழிகளை நோக்கினேன்

நோக்கிய உடனே
என் கண்களுக்கு இரண்டு முத்தங்கள்
பரிசாகக் கிடைத்தன
முத்தம் கிடைத்த உடனே
சொக்கித்தான் போனேன்

என் கன்னத்தில் ஒரு செல்லக்கடி
என் காதுகளில் அவன் விடும் பெரும் மூச்சில்
அடைந்து போயின

என் கழுத்தில்தான்
அத்தனை முத்தங்கள்
சிவக்கும் அளவுக்கு
ஆயிரம் காதல் கடிகள்
என் சேலையை உருவி விடுவானோ
என்ற அச்சம்
அவனோ..
என் சேலையோடு சேர்த்து
என் ரவிக்கையையும் கலைந்தான்

என் மார்புகள்தான்
அவன் விளையாடக் கிடைத்த பந்தோ
இல்லை சாப்பிடக் கிடைத்த பழமோ

இந்த முறை என் முக்கல்கள் முனகல்கள்
அதிகமாகவே கேட்டன

போதும் என்றேன்
அவன் வேணும் என்றான்

என் இடுப்பில்தான் முத்தங்களோடு சேர்ந்து
அவன் பல்லும் பதிந்தது

என் இடுப்பும்
அவன் கைகளில் அடங்கிப் போனது
பிறகு என்ன? ...என் யோனியும்
அவனை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தது

எல்லாம் நன்றாகவே முடிந்தது

இவை அனைத்தும்
அவன் கொடுத்த ஆயிரம் ரூபாய்க்கு
நான் நடித்த நாடகம்

நீங்கள் கேட்கலாம்
காதல் கவிதை என்றுதானே கூறினாய்

இருக்கட்டும்
கவிதைக்குப் பொய்யும் அழகுதானே

என் கண்களில் அவன் முத்தமிடும்போது
அவனுக்கு வெளியேறி விடாதா என்ற ஏக்கம்
என் காதுகளோ
அவன் மூச்சுக்காற்றை வெறுத்தன
ஆனால் நான் நடித்தேன்

என் மாரைப் பிசைந்தபோது
இந்த முறையாவது
அவன் விந்து வெளியேறாதா என
இயக்கத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டாய்

இல்லையே
என் யோனிதான்
அவன் விந்தை வெளியேற்ற உதவியது
வந்தது அவன் சென்றான்

நானும் கதவை அடைத்தேன்
அடுத்து ஒரு ஆயிரம் ரூபாய்க்கு
அதுவரை என் கதவுகள் திறவாது

சினிமாவில் கோடி பணம்
ஆனால் பல கதாபாத்திரங்கள்

எனக்கு ரூபாய் ஆயிரம்
ஒரே நடிப்பு
அது என் முக்கல் முனகல்
…………………

2.
நானோ நாங்களோ
நான் கூறுவதைக் காதைத் திறந்து அல்ல
காதைக் கிழித்து கேளு

இரவில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்க எனக்குத் தெரியும்
ஏனென்றால் நான் படித்து விட்டேன்
காவலர் ஆகிவிட்டேன்

எனக்கு உனக்கு
கற்பிக்கும் அளவுக்குத் திறனும் வளர்த்துக் கொண்டேன்
ஏனென்றால் நான் படித்து விட்டேன்
ஆசிரியராகவும் ஆகிவிட்டேன்

உன் பிணிகளை நோக்கும் அளவிற்கு
அறிவியலும் படித்துவிட்டேன்
ஏனென்றால் நான் படித்து விட்டேன்
மருத்துவர் ஆகிவிட்டேன்

நீ போகும் இடம் எங்கே என்றுசொல்
உன்னைப் பத்திரமாக இறக்கி விடுவேன்
ஏனென்றால் நான் படித்து விட்டேன்
ஓட்டுநராகியும் விட்டேன்

உள்ளூர் அரசியல்முதல் உலக அரசியல்வரை
என்னால் பேசவும் தெரியும்
அதைக் கோர்வையாகப் படிக்கவும் தெரியும்
ஏனென்றால் நான் படித்து விட்டேன்
செய்தி வாசிப்பாளராகவும் ஆகிவிட்டேன்

நான் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக மட்டுமல்ல
நிறைய கற்றுக் கொண்டேன்

உன் கூற்றுப்படி
என் கூற்றல்ல
உன் கூற்றுப்படி
நான் நேர்மையான வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டேன்
ஆனால் இன்னும் உன் கேள்வி

"உங்களுக்கு அது எப்படி இருக்கும் "

அடப்பாவி

உன் தேடல் என் வாழ்வா இல்லை என் உறுப்பா

இதை என் எழுத்து மூலம் கேட்டு
நானும் இன்று எழுத்தாளராகவும் ஆகிவிட்டேன்
………………

3.
இதுதான் வாழ்க்கையா
இன்னும் எத்தனைத் திருநங்கைகளின் 
உயிரைக் காவு வாங்கக் காத்திருக்கிறதோ 
இந்த ஆண்கள் சமுதாயம் ...?

காதலுக்கும் காமத்திற்கும்
வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு
வளர்ந்து இருக்கிறதோ
இந்த இளைய திருநங்கைச் சமுதாயம்

ஆண்குறி அறுத்து
நெஞ்சை கிழித்து
தன்னைப் பெண்ணாகமாற
எவ்வளவு துடித்திருப்பாய்

அந்தத் துடிப்புகூடவா ஞாபகப்படுத்தவில்லை
இந்தக் காதல் இல்லை வெறும் காமம் என்று..

உன் தாயின் முகத்தை
நினைத்துப் பார்த்தாயா

உன் தந்தையின் நினைவுகள்
உன் நினைவில் ஓடவில்லையா

உன் திருநங்கைக் குடும்பத்தை நினைத்து
ஒரு நிமிடம் யோசித்து இருக்கலாமே

எப்படியும் உன் அம்மா
இவ்வுலகில் உள்ளாக்கி கொண்டுதான் இருக்கும் ..

ஒருவேளை கடவுள் உன்னை
சொர்க்கத்துக்கு அழைத்தால்
அவரிடம் கூறு
ஆறு மாதம் கழித்து வருகிறேன் என்று

ஏனென்றால் வெறும் ஆறு மாதம்
உன்னை ஏமாற்றிய கயவன் கல்யாணக் கோலத்தில்
இவ்வுலகில் உலாவுவான்

போதும் இளைய சமூகமே காதல் என்று
இன்னும் எத்தனைத் திருநங்கைகளின் உயிரைக்
காவுவாங்க இந்த ஆண் சமுதாயம் காத்திருக்கிறது என்று தெரியவில்லை

நீ இந்த மரணத்திற்குத் தகுதியானவன் இல்லை
நீ மட்டுமல்ல
காதலால் உயிரை மாய்த்துக் கொள்ளும்
எந்தத் திருநங்கைக்கும்
இப்படிப்பட்ட ஒரு வருடம் தகுதியானது இல்லை .
Author Picture

திருநங்கை ஜாஸ்மின்

எழுத்தாளர், கவிஞர், ஒப்பனைக் கலைஞர், கலை இலக்கியச் செயற்பாட்டாளர்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு