நகரம் நீங்கி ஊருக்குச் சென்றதும்
நான் பால்யகாலத்தவன்
ஆகிப்போகிறேன்
ஊரும் ஊரிலுள்ள எல்லோரும்
மாறிவிட்டார்கள்
நான் மட்டும் திருதிருவென விழிக்கும்
குட்டையான
தொளதொளத்த ஆடை அணிந்த
இயல்பாகப் பேசப் பழகத் தெரியாத
அதே பதின்வயதுச் சிறுவனாகவே
இருக்கிறேன்
தேவிடியாளுக்குப் பொறந்தது
என வசை புரிந்த அம்மா
அவன் ஒரு பைத்தியம் என
ஊர்ப்பசங்களின் முன்
கலாய்த்த அண்ணன்
திருநங்கையைத் தொலைக்காட்சியில்
காட்டும்போது என்னை
ஏளனத்துடன் பார்த்த அக்கா
பொட்டப் புள்ளயாட்டம் கோலம் போடுற,
சமைக்கிற என்று திட்டிய
பக்கத்து வீட்டுக்காரி
நீயெல்லாம் ஏன் உசுரோட இருக்குற
எனக் கேட்ட ஊர்க்காரன்
கூட்டாஞ்சோறு சமைத்ததற்காய் அடித்த தலைமையாசிரியர்
ரோபோ எனக் கலாய்த்த பள்ளி மாணவர்கள்
பாலியல் சீண்டல் அளித்த உறவினர் எல்லோரும்
பெருவெள்ளம் உமிழ்ந்த வானம்
சுவடுகளற்று நீலமாவதைப் போல
அவற்றை நினைவில் கூட
வைத்திருக்கவில்லை
எனக்கோ அவையெல்லாம்
சிலுவையில் பிணைய
தசை துளைத்த ஆணிகளாயின
என்னைப் பொறுத்தவரை
ஊர் திரும்புதல் என்பது
பால்யத்தின் பஞ்சுப்பொதியை
நீரில் முக்கிச் சுமத்தல்
கனக்கும் அதன் சுமையை இறக்கிவைக்க இடமின்றி
தள்ளாடியபடியே இருக்கிறேன்
நகரம் நோக்கி
பயணிக்கையில் அப்பொதி
எதிர்க்காற்றில் காய்ந்து இலகுவாகிவிடுகிறது
விரிந்த கைகளுடன்
வரவேற்கும் பெருநகரம்
என்னை
அணைக்கிறதோ இல்லையோ
பெரும்பாலும் நெறிப்பது இல்லை
- மழைவில்
