-->

அண்மை

நவீன வந்தேறி - மழைவில் கவிதை

நவீன வந்தேறி - மழைவில் கவிதை

ஈராயிரமாண்டு தொன்மையின்
அறுபடாத் தொடர்ச்சியாம்
என் பாலீர்ப்பின் தடம்
எங்குமே தென்படவில்லையே
என் காதலைச் சுட்டிக்காட்ட
எந்தவொரு பதிவும் இல்லையே
விலங்குகளின் காதலைக் கூட
பதிவு செய்த இலக்கியம்
என் காதலை மட்டும் எப்படித் தவிர்த்தது

என்னைப் போல எவருமே
இல்லாமலா போயினர் எழுதிவைக்க
எழுதிவைத்தும் வேண்டுமென்றே
பிறர் அழித்திருக்கலாம்
திரித்திருக்கலாம்
காலம் கூடப் பசியில்
தெரியாமல் தின்றிருக்கலாம்
வாய்மொழி மரபிலும்
இறுகிய மௌனம்தானே
ஏற்பினைத் தாண்டி
மறுக்கக் கூடவா ஒருவரும் இல்லை

எந்தப் பதிலுமே திருப்தி தருவதாயில்லை
நினைத்து நினைத்து
வியக்கத்தான் முடிகிறது
இவ்வளவு திட்டமிட்ட (அ) திட்டமிடாத
கனகச்சிதமான இருட்டடிப்பு
எங்கேனும் நிகழ்ந்திருக்கிறதா?

நான்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப்
பிதுங்கி வழியும்
தமிழ்ப் பண்பாட்டுப்
பெருமிதச் சோற்றுலையில்
தொடர்ந்து வழித்தெறியப்பட்ட
நுரையின் எச்சம்

நானில்லாத வரலாறு
நானில்லாத மொழி
நானில்லாத இலக்கியம்
நானில்லாத பண்பாடு
எல்லாம் சேர்ந்து நான் என்ற ஒன்றே
இதற்கு முன் இங்கில்லை
நவீன வந்தேறி என
என்மீது திணிக்கும்
வன்முறைக்கு என்னதான் பதில்

- மழைவில்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு