![]() |
ஓவியம் - சாய் அரிதா |
“இல்லை நிச்சயமாக இம்முறை அழைத்து வந்து விட வேண்டும். நான் தோற்க என்னை அனுமதிக்க மாட்டேன். சம்மதிக்கும் முறையில் பேசிச் சம்மதிக்கச் செய்ய வேண்டும். ஆம் அதுதான் சரி” இப்படி தனக்குள் எண்ணிக்கொண்டே காரை நிதானமாக ஓட்டிக்கொண்டிருந்தாள் வினோதினி. இந்த ஒன்னறை மாதத்தில் அவள் வடிவேல் வீட்டிற்கு வருவது
இது மூன்றாவது முறை.
வழக்கம்
போல், காலையில் எழுந்து தன் காலைக் கடமைகளை முடித்துக் கொண்டு தனக்கென தான் தயாரித்த காப்பியை
எடுத்துக்கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தாள். டீபாய் மீது காபியை வைத்தவள் தன் கைபேசியை எடுத்து, இரவு ஏதேனும் முக்கிய செய்தி வந்திருக்கிறதா? என்று புலனத்தைத் திறந்துப் பார்த்தாள். வடிவேல் குழு என்ற குழுவிலிருந்து ஒரு
செய்தி அனுப்பப்பட்டிருந்தது. வடிவேலின் துணைவியார் வசந்தி காலமானார். செய்தியைப் படித்தவுடன் வினோதினி துடித்தாள். எதையோ
யோசித்தபடி அமர்ந்தவளின் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது. ஏதோ முடிவுக்கு வந்தவளாக தன்னை திடப்படுத்திக் கொண்டு, ஆறிப்போன காப்பியை மடமடவென குடித்து முடித்தாள். வடிவேலின் வீட்டை நோக்கிப் புறப்பட்டே விட்டாள்.
வீட்டிற்குள்
மடமடவென சென்றவள் கூடத்தில் கிடந்த உடம்பருகே அமர்ந்தாள். சுற்றி
அமர்ந்திருந்தவர்கள் யார் நீ? என்று கேட்பது போல் இருந்தது அவர்கள் பார்த்த பார்வை. வினோதினி அதைப் பற்றி கவலைப்படவில்லை.
“இப்படி
பண்ணிட்டியேகா அவர தனியா விட்டுட்டு போயிட்டியேகா”
என்று அழுதாள். தன்னை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் அழுகைனூடாக தான்
கல்லூரிப் பேராசிரியர் என்றும், தனக்கும் இவர்கள் குடும்பத்திற்கும் நீண்ட காலமாக பழக்கம் உள்ளது என்றும், தன் பெயர் வினோதினி என்றும் கூறி
அறிமுகப்படுத்திக்கொண்டாள், அரை மணி நேரத்திற்கு மேலாக அங்கு அமர்ந்திருந்தவள் தன்
கண்களை துடைத்துக் கொண்டு மெல்ல வெளியே வந்தாள். வாசலில் ஆண்கள் அங்கும் இங்குமாக
அமர்ந்திருக்க, இருபுறமும் நாற்காலிகள் காலியாக இருக்க, வடிவேல் நடுவில் தனியாக அமர்ந்திருந்தார்.
வடிவேல் பிறந்த குடும்பம் வளமானது
என்று சொல்ல முடியாது. விவசாயக் கூலிகளான பெற்றோருக்கு மூன்று பிள்ளைகள், வடிவேல் கடைசி பையன். அண்ணனும் அக்காவும் சிறிது காலம் பள்ளி சென்று விட்டு வேலைக்கு செல்ல
தொடங்கி விட்டார்கள். சூட்டிப்பாக படிக்கும் பையன் படிக்கட்டுமே என்று வடிவேலுவை
படிக்க விட்டார்கள். வடிவேலுக்கு எப்படியோ திடீரென்று வாசிப்பு பழக்கம்
ஒட்டிக்கொண்டது. பள்ளிக்கூட நூலகத்தை அவன் பயன்படுத்திக் கொள்வதை
பார்த்து ஆசிரியர்கள் ஊக்குவித்தார்கள்.
ஏதேதோ படிக்கவேண்டுமென்று நினைத்த
வடிவேலுக்கு விருப்பம் தமிழ் இலக்கியத்தில் வந்து நின்றது. கல்லூரியில் தமிழ் இலக்கியம் எடுத்து படித்தான். கல்லூரி படிக்கும் நாட்களில் வகுப்பு தோழர்கள் சிலர் மார்க்சியம் பற்றி
விவாதிப்பதைக் கேட்டு அவர்களோடு சேர்ந்து, மார்க்சியம் படிக்க முயன்றான். மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கல்ஸ் என்று மேலும் பல அரசியல் நூல்களைப்
படித்ததோடு ரஷ்ய இலக்கியங்களையும் ஆழ்ந்து படித்தான். பள்ளியில் ஆங்கில ஆசிரியர் கற்றுத் தந்த ஆங்கிலம் பெரிதும் பயன்பட்டது. ஆங்கில இலக்கியமும் ஓரளவு பரீட்சியமானது.
பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தவுடன் பேச்சாளராக பல பள்ளிக்கு
அழைக்கப்பட்டார். ஆம் நாமும் இனி அவர் இவர் என்று மரியாதையோடு அழைப்போம்.
வடிவேல்
தன் உறவுப் பெண்ணான வசந்தியை கைப்பிடித்தார். இப்போது வடிவேல் தமிழ்நாடு எங்கும் அறியப்பட்ட ஒரு இலக்கிய அறிஞரானார். தமிழ்
இலக்கியத்திற்குள் புதிய புதிய கோணத்தில் மார்க்சியத்தின் மையப் புள்ளியை தேடினார். தமிழ் இலக்கியம் அகன்று விரிந்து அவர் தேடலுக்கு
வழிவிட்டு நின்றது. தமிழ்நாடெங்கும் கல்லூரியோ இலக்கிய மேடையோ எதுவாயினும் அவர் பேசாத இடமே இல்லை என்றானது.
சிறுவயதிலேயே ஒரு கண் பார்வையை
இழந்தவர் மற்றொரு கண் பார்வையை வைத்து நிறைய வாசித்தார். தற்போது மற்றொரு கண் பார்வையும் குறைந்து வருவதை கண்டு பயந்து
மருத்துவரிடம் ஓடிய போது அந்த கண் பார்வையும் பறிபோய் இருந்தது.
மருத்துவர் இந்த உண்மையை அவரிடம்
கூறிய போது, ஒரு நிமிடம் உறைந்து நின்றார். இனி உலகம் என்பது இருள்மயமானது என்பதை எண்ணிய போது, அவர் உள்ளம் நடுங்கியது. ஆனால் மறுநிமிடமே தன்னை சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து
நின்றார் வடிவேல். இயக்கம் என்பது பார்வையை பொறுத்தது மட்டுமல்ல, அது இதயத்தில் ஓடும் எண்ணங்களை பொறுத்தது. இந்த உண்மைகள் அவருக்கு வெளிச்சத்தை தந்தவுடன் அடுத்த
அடி எப்படி வைப்பது என்று சிந்திப்பதற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டார்.
மௌனங்களால் நிரப்பப்பட்ட விழிகளும், நம்பிக்கைகளால் நிரப்பப்பட்ட இதயமும் கொண்ட வடிவேல் தன்
துணைவியின் கையை பிடித்தபடி மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார். இனி இப்படித்தான் யார் கையையாவது பிடித்துக் கொண்டுதான்
நாம் போவதும் வருவதும் நடக்கும். ஆனால் அனைத்திற்கும் மனைவி கையை நம்பி இருக்க முடியாது. மனைவிக்கு வீட்டில்
ஆயிரத்தெட்டு வேலைகள். சரி அடுத்து என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும்.
வீட்டை அடைந்தவுடன் நண்பர்கள் சிலரை தொடர்பு கொண்டார். சிலர் பரிதாபபட்டனரே தவிர உருப்படியான ஆலோசனை எதனையும் சொல்லவில்லை.
ஆனால் வேறு சிலரோ விதவிதமான யோசனைகளைச் சொன்னார்கள். அவர்களில் ஒருவர் நடைமுறைச் சாத்தியமான வழியைச் சொன்னார். சத்தியநாதன் என்ற ஒரு பட்டதாரி இளைஞர் வேலை இன்றி இருப்பதாகவும் அவனை வாசிப்புக்கும் மற்ற
காரியங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னார். இந்த யோசனை சரி என்று பட்டது வடிவேலுவுக்கு. துரிதகதியில் செயலில் ஈடுபட்டார். சத்தியநாதன் வடிவேலின் ஒரு உற்ற துணையாக மாறினார்.
சத்தியநாதனின் துணையுடன் மீண்டும் தன் வாசிப்பையும் எழுத்தையும் தொடங்கிய
வடிவேல், கல்லூரிகளுக்கு உரை நிகழ்த்த போவதையும் தொடர்ந்தார். ஒரு பெண்கள் கல்லூரியில் அவர் உரை நிகழ்த்தினார். வழக்கம் போல தமிழ் இலக்கியங்களில் மூளை முடுக்கெங்கும்
தேடினால் சோசலிசத்தின் கூறுகளும் மார்க்சியம்
மனிதம் ஆகியவற்றின் கூறுகளும் நிறைந்து கிடக்கின்றன என்று பேசினார். எந்த இலக்கியத்தில் மனிதம் இருக்கிறதோ அது முற்போக்கு
இலக்கியமாகவும் இருக்கிறது என்று பேசினார்.
உரை முடிந்ததும் பல மாணவிகள் கேள்விகளை கேட்டனர். அப்படி கேட்ட மாணவிகளில் வினோதினியும் ஒருத்தி. “உங்கள் நூல்கள் சிலவற்றை படித்திருக்கிறேன். நீங்கள் பெண்ணியம் பெரியாரியம் அம்பேத்கரியம் போன்ற பலவற்றையும் தொட்டு
எழுதுகிறீர்கள். தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம் உள்ளதா?” வடிவேல் சொன்னார், “ஏன் இல்லை பெண்ணுக்கும் ஆணுக்கும் கற்பு சமம் என்கிறான் பாரதி. ஆனால் சங்க
இலக்கியமோ ஆண்களின் ஒழுக்கத்தில் தான் பெண்களின் ஒழுக்கம் தங்கி இருக்கிறது
என்கிறது. இது பெண்ணிய கூறி இல்லையா? கணவன் செய்யும் தவறுகளை பொறுத்துக் கொண்டு, மனைவி வாழ வேண்டும் என்று சொல்லப்படும் சமூகத்தில் பரத்தை வீட்டுக்குச்
சென்று திரும்பிய தலைவனை சேற்றில் புரண்டு எழுந்து வந்த எருமை என்று பேசும் சங்கப்பாட்டில்
பெண்ணியம் இல்லையா?" என்று இப்படி அடுக்கிக்கொண்டே போனார். கேட்டு வியந்த வினோதினி மகிழ்ந்தவளாக அவருடைய முகவரியைப்
பெற்றுக் கொண்டு அவருடைய வாசகியாக மாறினாள்.
ஒரு வாசகியாக வினோதினி கடிதம்
மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் சந்தேகங்களைக் கேட்டாள். வடிவேலின் கடவுளின் மரணம்
என்ற நூலைப் பற்றி அவளுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன.
"கடவுளுக்கு மரணம் சாத்தியமா? கடவுள் நிறுவனமயமாக்கப்பட்ட பிறகு அது எப்படி நிகழும்? சமூகத்தின் தேவைப் பட்டியலில் கடவுளின் மரணம் ஒரு கட்டாயமாக்கப்பட்ட விஷயமா? ஏழை வர்க்கத்தின்
கடைசித் துணை அது அல்லவா? என பல கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றாள். வாசகியாக இருந்த வினோதினி
அடுத்த பரிணாம வளர்ச்சி அடைந்தாள். ஆம் இப்போது அவள் வடிவேலின் காதலி. ஆனால் இது
வடிவேலுக்கு தெரியாது.
வடிவேலிடம் இதை அவள் மனம் திறந்து
சொன்ன போது, வடிவேல் அதிர்ந்து கோபத்தில் உச்சிக்கே சென்றார். தொலைபேசியில் வடிவேலின் வசவுகளை எல்லாம் பெற்றுக்
கொண்டு, “மன்னிக்கணும் என் கருத்தை மாற்ற முடியாது” என்று தொலைபேசியை வைத்தாள். சலனமற்றிருந்த இடைவெளியை
வினோதினி திருந்தி விட்டாள் என்று வடிவேல் நினைத்துக் கொண்டார்.
வடிவேலுக்கு வினோதினியிடம் இருந்து
ஒரு கடிதம் வந்தது அதில்….
"சுயமிழந்து தவிக்கச் செய்து
சுகானுபவக் கனவுகளைச் சுமந்து
மவுனமாய் பயணிப்பது காதல்
பின்னொரு நாளில்
மொட்டவிழ்ந்து மனம் பரப்பும் காதல்
விண்ணிலிருந்து அல்ல
மண்ணிலிருந்து விண்ணில்
விரவிப் பரவும் காதல்
மனவெளியில் மானுட மயக்கத்தில்
உன் மூச்சும் என் மூச்சும்
இணையும் மையப்புள்ளியில்
உன் மூச்சை இழை இழையாய்
அலசிப் பார்க்கிறேன்
உன் மூச்சில் எந்த இழை
என் உயிர்க் காதலை சீண்டி
வெளியே கொண்டு வந்தது என்று.
மௌனத்தால் நிரப்பப்பட்ட உன் விழிகளில்
என் விழிகளை பதித்து
என் விழியால் என்னை பார்க்க வைப்பேன்
உலகத்தையும் சேர்த்துத்தான்
சொல் அன்பே சொல்
ஒரு புலன் குறைவு
உருக்குலைக்குமா நம் காதலை?"
என்று அந்த கவிதையை முடித்திருந்தாள்.
வடிவேலுக்கு இப்போது கோபம்
வரவில்லை. உணர்ச்சிவசத்தில் கண்ணீர்தான் வந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்டார். "எப்படி இருக்கீங்க" என்று அமைதியாக கேட்டாள் வினோதினி. "என்னை எப்படியும் இருக்க விடமாட்டீங்கறயே" என்றார்
தழுதடுத்த குரலில் வடிவேல். அவரே தொடர்ந்தார, "திருமணமாயிருச்சி, குழந்தைங்க இருக்கு, எனக்கும் உனக்கும் இடையில் இருக்கிற வயசு வித்தியாசத்த யோசிச்சியா?" என்று அவள் பதிலுக்காக நிறுத்தினார். அமைதியாக ஆனால் அழுத்தமாக சொன்னாள் வினோதினி, "யோசிச்சேன்
காதலன் கிட்ட தந்தைமையை தேடுறது பாவமா?" என்றாள். வடிவேல் அதிர்ந்தார் வினோதினியே மீண்டும் தொடர்ந்தாள், "ராகுல்ஜீயை மாணவி காதலித்தபோது மாணவிக்கு வயது பதினெட்டு
ராகுல்ஜீக்கோ நாற்பத்திரண்டு" என்றாள்.
வருத்தத்தோடு சிரிப்பும் வந்தது வடிவேலுக்கு. "நிறைய படிச்சி தெளியறதுக்கு பதிலாக குழம்பிட்ட போல" என்றார் இறுக்கமான குரலில். "மனசு ஒரு பக்கம் வாழ்க்கை ஒரு பக்கம்னு வாழ முடியாது" என்று கூறி அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். நாட்கள்
சென்றன கடிதங்களும் தொலைபேசித் தொடர்புகளும் தொடர்ந்தன. ஆனால் அவற்றில் காதல் பற்றி ஏதும் இருக்காது. வாசித்த நூல்கள், நூல்கள் மீதான சந்தேகங்கள் என்று தான் விரியும்.
மெல்ல
வடிவேலின் அருகில் வந்து நாற்காலியில் அமர்ந்தாள். வடிவேலின் கையைத் தொட்டு "வினோதினி" என்றாள். அவள் குரல் கேட்டவுடன் வடிவேலுக்கு விம்மிக் கொண்டு வந்தது. தன் மனைவி வசந்தி மீது வடிவேல் வைத்திருக்கும் பாசம் வினோதினிக்குத்
தெரியும். "அக்காவுக்கு திடீர்னு என்னாச்சு" என்று அழுகையினூடாக கேட்டாள். அவள் சில நாட்களாக உடல் நலக்குறைவாக
இருந்ததையும் திடீரென்று மாரடைப்பு வந்ததையும் வடிவேல் விளக்கிச் சொன்னார். சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் மீண்டும் வடிவேலின் கையை
தொட்டு "கிளம்புறேன்" என்று கூறி கிளம்பியவள், வடிவேலின் மகனான பாலகுமாரனைப் பார்த்து "காரியம் எல்லாம் எப்ப வெச்சிருக்கு" என்று கேட்டாள். விவரங்களைக் கேட்டுக் கொண்டவள் தன் காரை நோக்கி நடந்தாள்.
காரியத்தன்று வந்த வினோதினி
எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தாள். அன்று அவள் வெகு நேரம் அங்கு தங்கி இருந்தாள். வந்தவர்கள் எல்லாம் வெளியேறிய பிறகு வடிவேலை தனிமையில்
சந்தித்தாள். தன்னுடன் வரும்படியும் இனி அவரை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினாள்.
எதையோ சொல்ல வடிவேல் வாயெடுத்த போது,
வினோதினி மெல்ல தழுதழுத்த குரலில் சொன்னாள், "இதுவரைக்கும் நீங்க என்ன சோதிச்சது போதும். தயவு செய்து எதையும் மறுத்துச்
சொல்லாதீங்க" என்றாள்.
வினோதினிக்கு என்னவோ வடிவேலின்
மகளை விட மகன் இங்கிதமானவனாக தோன்றினான். பாலகுமாரனை
தனியாக அழைத்து தனிந்த குரலில் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள். பாலகுமாரனும்
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.
அவனுடைய மௌனம் வினோதினிக்கு நம்பிக்கையளித்தது போல் இருந்தது.
மூன்றாம் முறையாக வடிவேலின்
வீட்டிற்கு வந்த வினோதினி காரியத்தில் மடமடவென ஈடுபட்டாள். பாலகுமாரனை அழைத்து ஏதோ சொன்னாள். இருவரும் வடிவேல் இருக்கும் அறைக்குச் சென்றனர். வினோதினி, "கிளம்புங்க போலாம்"
என்றாள். வடிவேல்
திடுக்குற்றவராய் தோன்றினார். இதை உணர்ந்த பாலகுமாரன் அப்பாவிடம் சொன்னார், "அவங்க எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாங்க நான் உங்க
துணிமணிகளை எல்லாம் பேக்பண்ணி வச்சிருக்கேன். உங்க அறையில் இருக்கிற உங்க புத்தகங்கள், நீங்க எழுதிக்கிட்டு இருக்குற உங்க குறிப்புகள் எல்லாத்தையும் இன்னும்
ரெண்டு வாரத்துல நானே கொண்டு வந்து தருகிறேன்".
" அது இல்ல பாலா"
என்று கண் கலங்கியபடி
அவன் கையைப் பிடித்தார். தனது மற்றொரு கையால் அவர் கையைத் தடவிக் கொடுத்த பாலகுமாரன் தனிந்த குரலில் சொன்னான் "என் வீட்லயும் தங்கச்சி வீட்லயும் உங்களால நிம்மதியா
எழுதவோ வாசிக்கவோ முடியாது. நானோ அடிக்கடி வெளியூர் போக வேண்டிய ஆளு. நீங்க மறுபடியும் உங்க எழுத்து உலகத்துக்குள்ள
இயங்கனும். அதுக்கு இப்படிப்பட்ட அறிவு சார்ந்த நட்புதான் சரியா
இருக்கும்", என்று கூறி அவன் அவருடைய பொருட்களை எடுத்துக் கொண்டு
வினோதினியின் காரை நோக்கி சென்றான்.
தங்கைஅழுது புலம்பத் தொடங்கினாள். பாலகுமாரன் தங்கையிடம் விரிவாகப் பேசினான். "பாரு செல்வி உன் வீட்லயும் அப்பா இருக்க விரும்ப
மாட்டாரு. என் வீட்ல இருக்கலாம், ஆனா அண்ணிய பத்தி உனக்கு தெரியுமோ தெரியாதோ. இப்ப வரைக்கும் அப்பா நிரந்தரமா என் வீட்ல இல்லாததால அப்பா மேல மதிப்பும்
மரியாதையும் காட்டி வரா அண்ணி. அப்பா நிரந்தரமா என் வீட்ல தான், அப்படின்னா அண்ணியின் குணம் என்ன வடிவமெடுக்குமோ? உள்ளயும் வெச்சிக்க முடியாம வெளியயும் சொல்ல முடியாம
அப்பா துடிப்பாரு.
கௌரவம்கிற புதைசேற்றுக்குழியில
கால் வச்ச மனுஷன் தப்பிக்கறது கஷ்டம். அந்த
நிலமய நெனச்சு பாரு. எனக்கும் நிம்மதி இருக்காது அப்பாவுக்கும் நிம்மதி
இருக்காது" என்று கூறி அவள் அழுகைக்கு முற்றுப்புள்ளி வைத்து, " நம்ம விட இந்த உலகத்துக்கு அப்பா இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படுகிறார். அதுக்கு இதுதான் சரியான வழி" என்று கூறி அவளை சமாதானப்படுத்தினான். அறிவு சார்ந்த நட்பு என்கிற சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், தனக்கு இப்படி ஒரு நிலை வந்து விட்டதே என்று கவலையும், இந்த உலகம் தன்னை எப்படிப் பழித்து பேசும் என்ற பயமும்
கலந்து அவரை சோகத்தில் ஆழ்த்தியது.
எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டவரை பாலகுமாரன் அழைத்துச் சென்று வினோதியின் கார்
முன்னிருக்கையில் அமர்த்தினான்.
கார் புறப்பட்டது. சிறிது தூரம் கார் சென்றவுடன் தற்செயலாக அவரைப் பார்த்த வினோதினி திகைத்தாள். வடிவேலின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. சந்தடி இல்லாத சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி தன் முந்தானையால் அவர் கண்களை துடைத்து "என்னாச்சு? ஏன்?" என்றாள். இப்படியொரு முடிவெடுத்துட்டியே, நீ எப்படி கஷ்டப்பட போறயோ என்ன வச்சிக்கிட்டு, நீ என்னம்மா பண்ண போற? என்றார் தழுதழுத்த குரலில். "எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீங்க இப்படி கவலைப்படறதுதான் கஷ்டமா இருக்கு. வாசிப்புக்கு ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கேன், தற்போதைக்கு மருத்துவ விடுப்பு எடுத்திருக்கேன் வீடு பழக்கமாகற வரைக்கும், அதுக்கப்புறம் உங்களுக்கு வாசிப்பாளர் கிட்ட திருப்தி இல்லனா நான் விஆர்எஸ் கொடுத்துடறேன்" என்றாள் அழுத்தமான குரலில். "அய்யோ அப்படியெல்லாம் பண்ணிராதம்மா" என்றார் அவசரமாக வடிவேல். கார் வினோதினின் வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தது.