-->

அண்மை

சியாமல்குமார் பிரமாணிக் கவிதைகள் தமிழில்: ஞா.சத்தீஸ்வரன்

ஓவியம்: சாய் அரிதா


1. பிறப்பு இறப்பின் பாடல்
தாகத்தில்
ஓய்வின்றி தண்ணீரைத் தேடியலைகிறது ஒரு நதி
அதைச் சந்திக்க நேர்ந்தது
கைகளால் தொட்டுப் பார்த்தேன்
கட்டியணைத்துக்கொண்டேன்
திகைப்புடனும்
பதற்றத்துடனும்
அது எனக்குச் சொன்னது அழியாத காலத்தின் கதை
மண்
ஆகாயம்
காற்று
மனிதர்களின் கதை
ஆற்று மணல்வெளியில்
பிறப்பு இறப்பின் பாடல்.

2. அடுத்த தலைமுறைக்கான விதைகள்
வீட்டின் வெளியே நின்று பார்க்கிறேன்
நமது உலகத்தை
பதறிப் போகிறேன்
ஆனாலும் கனவுக்குள் பறந்து வருகின்றன
ஒவ்வொரு நாளும்
விடுதலையின் வெளிச்சம்
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
எல்லாத் திசைகளிலும்
மண்ணின் ஆழத்தில் பார்க்கிறேன்
அடுத்த தலைமுறைக்கான விதைகள்
மழைக்காகக் காத்திருக்கின்றன

3. வெளிச்சம் தராத சூரியன்
எனது வீட்டருகே ஒரு நதி
ஒரு நாள் அது எனக்கு முத்தமிட்டது
கட்டியணைத்துக்கொண்டது ஆழ்ந்த காதலுடன்
நான் ஆற்றுநீரில் குளித்தேன்
நீச்சலடித்தேன் கொஞ்சநேரம்
என் உடல் அமைதியற்று நடுங்கியது
உணர்ச்சியின் பறவைகள் பறந்து கொண்டிருந்தன
விலா எலும்புகள் நொறுங்கின
இரவின் அந்தகாரத்தில் தூள்தூளாகிப் போகிறது
வெளிச்சம் தராத சூரியன்.

4. நான் பார்க்கிறேன்
இந்த இரண்டு கண்களால் நான் உன்னைப் பார்க்கிறேன்
நிலவின் மங்கல் ஒளியில்
பார்க்கிறேன்
மாலை நட்சத்திரங்களின் நீர்ப்பிம்பம்
பூக்களின் மலர்தல்
வேர்களின் நிழல்
நான்கு எல்லைகளால் பிணைக்கப்பட்ட வாழ்வு
பார்க்கிறேன்
உடைந்த பாத்திரத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
பாம்புகளின் புணர்ச்சி
உனது பிறப்பு இறப்பு.

5. களைத்த உடல் இரவானதும் உறங்கி விடுகிறது
களைத்த உடல் இரவானதும் உறங்கிவிடும்போது
சமுத்திரத்திலிருந்து திரும்பி வருகின்றனர் பண்டைய மாலுமிகள்
என்னைச் சூழ்ந்திருக்கின்றன வேதனையின் முகங்கள்
வானவில்லின் ஏழு வண்ணங்கள்
கனவின் வீடு
தேய்பிறை நிலவு
உலகம்.

6. எப்போதும் போல
சாதியத்தின்
பேதாபேதத்தின் தீராத வேதனை
நெஞ்சுக்குள் மறைந்திருக்கிறது
மங்கலாகிப் போகிறது பூமி
அவர்கள் என்னை நிர்வாணமாக்கி
தூக்கியெறிகின்றனர் வீதியில்
ஆயிரம் கேள்விகள் கேட்கின்றனர்
ஒளிர்கின்றன அவர்களது கண்கள்
பாம்பைப் போல
குருதி வழியும்
கள்ளிச்செடியின் முட்கள் உடலுக்குள் நுழைந்துவிடுகின்றன
ஒவ்வொரு நாளும்
வன்புணரப்படலாம் நாங்கள்
எப்போதும் போல.

7. எல்லையற்ற ஆழத்தில்
வெள்ளைத் தாள்கள் படிப்படியாகப் பூனைகளாகிவிடுகின்றன
அது என்னைக் காயப்படுத்துகிறது
நினைவுப்படுத்துகிறது எங்களது தோல்விகள் அனைத்தையும்
பறவைகள் பறந்துசெல்வதைப் பார்க்கிறேன்
வேதனையின் சொற்கள் நாள் முழுக்க இரவு முழுக்க
என்னைச் சூழ்கின்றன
நான் எழுந்து நிற்கிறேன்
பார்க்கிறேன்
நெல்வயல்
எல்லையற்ற ஆழத்தில்.


Author Picture

சியாமல்குமார் பிரமாணிக்

வங்காளத்தில் தற்போது எழுதிவரும் தலித் எழுத்தாளர்களில் முதன்மையானவர். தலித் சாகித்திய அகாதெமி, தலித் சாகித்திய சன்ஸ்தா உள்ளிட்ட பல்வேறு தலித் இலக்கிய அமைப்புகளில் இணைந்து செயலாற்றி வருகிறார். இவரது இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் பங்களிப்பு செலுத்திவருகிறார். இவரது கவிதைகளும் சிறுகதைகளும் ஆங்கிலம், இந்தி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய சிறுகதைகள் கொல்கத்தா பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அனன்ய நந்தனிக் இலக்கிய விருது, சக்திகுமார் சர்க்கார் நினைவு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

Author Picture

ஞா. சத்தீஸ்வரன்

மேற்குவங்கம் விசுவபாரதி நடுவண் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 'தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்' கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. தமிழ்-வங்காள இலக்கிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.'பாங்ளா பாஷாய் தமிழ் ஷேக்கா' நூலை வங்காள மொழியில் எழுதியுள்ளார். வங்காள மொழிபெயர்ப்புக்காக கொல்கத்தா கவிதை சங்கமத்தின் மொழிபெயர்ப்பு விழாவில் 2022-ஆம் ஆண்டிற்கான 'சோனாலி கோஷல் நினைவு விருது' பெற்றுள்ளார். அகதிகள், சீதாயணம் மரிச்ஜாப்பி ஆகிய நூல்களை வங்காளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆயிஷா, சுகிர்தராணி கவிதைகள் உள்ளிட்ட நூல்களைக் கவிஞர் சீர்ஷா மண்டலுடன் இணைந்து தமிழிலிருந்து வங்காளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

மின்னஞ்சல் - tamilsathi1996@gmail.com

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு