-->

அண்மை

ஊனமுற்றோரியலைப் புரிந்துகொள்ளல் | 1-ஊனம் தொடர்பான கலைச்சொற்கள் - ப.பூபதி


சமூக மற்றும் பண்பாட்டு அடையாளங்களில் ஊனம் என்பது, மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அடையாளமாக மற்ற அடையாளங்களோடு இணைந்து 1990களுக்குப் பிறகு உலக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது. பின்நவீனத்துவத்தின் அறிமுகத்துக்குப் பிறகு விளிம்புநிலை சமூக மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் ஐரோப்பிய நாடுகளில் மைய நீரோட்டத்துக்கு வந்தன. இந்த மைய நீரோட்டமாக்கும் போக்கில் அதுவரை கட்டமைக்கப்பட்ட சமூக மற்றும் பண்பாட்டுப் பெரும் அடையாளங்கள் கட்டுடைக்கப்பட்டு விளிம்புநிலை அடையளங்கள் முன்னிறுத்தப்பட்ட்டன. அதன் விளைவாக 1990களுக்குப் பிறகு விளிம்புநிலையியல் விளிம்புநிலை மக்களின் அரசியல் போராட்டத்தின் வாயிலாகக் கல்விப் புலங்களுக்குள் நுழைந்தது. விளிம்புநிலை மக்களைக் குறிக்கும் கலைச்சொற்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. அதனடிப்படையில் மிக முக்கியமான ஒரு விளிம்புநிலை அரசியலாகவும் அறிவுத்தளமாகவும் 1990களின் முற்பகுதியில் இருந்து உருவாகி இன்றுவரை அரசியல், சமூக, பண்பாட்டு சட்டரீதியான மாற்றத்தை உருவாக்கிய ஒரு இயம்தான் ஊனமுற்றோரியம்.

மற்ற சமூக விளிம்புநிலை அடையாளங்களைக்காட்டிலும் ஊனம் என்பது உலக அளவில் ஒரு கீழ்நிலையான பொதுச்சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் கலைச்சொல்லாகவும் வரலாற்றுக்காலம் முதல் இன்றுவரை நிலவிவருகிறது. இந்தியா போன்ற கிழக்கத்திய நாடுகளில் இன்றுவரை ஊனமுற்றோரியம் அறிவுத்தளத்திலும் கல்விப்புலத்திலும் சமூகத்தளத்திலும் பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதே எதார்த்த உண்மை. ஊனம் குறித்த கலைச்சொற்கள் வரலாற்றுக்காலந்தொட்டு இன்றுவரை பல்வேறு காலங்களில் பல்வேறுவகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இந்தியாவிலும் ஊனமுற்றோர் மட்டுமே மற்ற விளிம்புநிலை மக்களைக்காட்டிலும் பல பெயர்களைச் சுமந்துவந்திருக்கிறார்கள். கிரேக்கக்காலமுதல் இன்றைய பின்நவீனத்துவக்காலம்வரை ஊனமுற்றோரைக் குறிக்கும் கலைச்சொற்கள் ஏராளமாக இலக்கியத்திலும் ஆன்மீக நூல்களிலும் மதபோதக நூல்களிலும் நிரம்பக் கிடைக்கின்றன.

கிரேக்கக் காலத்தில் ஊனமுற்றோரை தீயோர் (Monstrous) எனவும் சீரான உடலற்றோர் (Deformed) எனவும் குறித்தனர். இடைக்காலத்திலும் இவ்வாறான பெயர்களே ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடப்பட்டன. மேலும் மதபோதனைகளின் வாயிலாக கிரேக்கக் காலத்திலும் இடைக்காலத்திலும் குறிப்பாகப் பார்வையற்றோர் எதிர்காலத்தைக் கணிக்கும் மந்திர ஆற்றலுடையவராகக் கருதப்பட்டனர். கிறித்தவ இறையியலின் பழைய ஏற்பாட்டில் ஊனமென்பது கடந்த காலத்தில் செய்த பாவத்தின் விளைவான தோற்றம் எனக் கருதப்பட்டது. அதேவேளையில் புதிய ஏற்பாட்டில் ஊனமென்பது இயேசு மக்களுக்குக் கொடுத்த வரமெனவும் அந்த வரத்தின்வாயிலாக ஒரு புதிய உலகத்தை ஊனமுற்றோர் இன்பத்தோடு அடைந்து அனுபவிக்கிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. மறுமலர்ச்சிக் காலத்தில் ஊனமென்பது ஒரு அறிவுத்தளத்தைக் கொண்டு ஒதுக்கப்பட்டது. தெகார்தே, ஜான் லாக் போன்ற தத்துவவாதிகள் மனம், உடல் என்ற இரட்டைத்தன்மையைப் பற்றிப் பேசுவதன் வாயிலாக, ஊனமுற்றோர் குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனிதரல்லாதவர் என்று கட்டமைத்தனர். “சிந்திப்பதனால் நான் நானாகிறேன்” என்ற தெகார்த்தேயின் புகழ்வாய்ந்த முழக்கம் சிந்திக்க முடியாதவர்களை மனிதநிலையற்றவர்கள் என்ற கட்டமைப்பிற்குள் தள்ளியது. அதன் விளைவாகச் சிந்திப்பவர்கள் இயல்பானவர்கள், சிந்திக்க இயலாதவர்கள் இயல்பற்றவர்கள் என்ற இரட்டைப் படிநிலை, மறுமலர்ச்சிக் காலமுதல் உருவாகப் புத்தொளிக்காலத்தில் வலிமைபெற்றது. 19ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஒரு முழுநிலையை அடைந்தபோது மேற்கத்திய நாடுகளில் உழைப்பின் மூலமாக வருமானமீட்ட முடியாதவர்களான ஊனமுற்றோர், நோயுற்றோர், முதியோர், பெண்கள் போன்றோர் சமூகத்தில் வாழ்வதற்குத் தகுதியற்றோர் என்று அழைக்கப்பட்டனர்.

தொழிற்புரட்சி உச்சநிலையை அடைந்தபோது மிகத்தெளிவாகத் திறனை மையமாகக் கொண்டு திறனுடல் படைத்தோர் X ஊனமுற்றோர் (Abled X Disabled) என்ற அதிகாரப்படிநிலை சமூகத்தில் உருவாக்கப்பட்டது. உழைப்பின் மூலமாக ஊதியம் ஈட்டுவோர் திறனுடல் படைத்தோர் என்றும் மற்றவர்களைச் சார்ந்து வாழக்கூடியோர் ஊனமுற்றோர் என்றும் அழைக்கப்பட்டனர். திறனுடல் படைத்தோர்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களுக்கென்று முதல் முறையாக உயிர்க்காப்பீட்டுத்திட்டங்கள் (Life Insurance) உருவாக்கப்பட்டன. மேலும், ஓட்டுரிமை இவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதேவேளையில் ஊனமுற்றோர் சமூகத்துக்குக் கேடானவர்கள் என்றும் குடும்பத்துக்குச் சுமையானவர்கள் என்றும் நாட்டுக்குத் தேவையற்றவர்கள் என்றும் கருதப்பட்டனர். இவ்வாறான கற்பிதங்களின் விளைவாக ஊனமுற்றோர் பொதுச்சமூகத்தில் இருந்து அகற்றப்பட்டு காப்பகங்களில் அடைக்கப்பட்டனர். 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஊனமுற்றோர்களுக்கென்று முதல்முறையாக மேற்கத்திய நாடுகளில் காப்பகங்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் பேணப்பட்டனர். இன்று பொதுவாக வழங்கப்படும் ஊனமுற்றோர் குறித்த கலைச்சொற்களான ஊனமுற்றோர் மற்றும் திறனுடல் படைத்தோர் ஆகியன இக்காலகட்டத்திலிருந்தே உருவாயின. பல ஊனமுற்றோரியம் சார்ந்த ஆய்வாளர்கள் ஊனம் என்ற சொல் முதன்முறையாக ஆங்கிலத்தில் 16ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இருந்து உருவாகியது என்று குறிப்பிட்டாலும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே ஊனம் என்ற கலைச்சொல், திறன் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்லாகப் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1990களின் முற்பகுதிவரை ஊனமுற்றோர் குறித்தான வேறு எந்த கலைச்சொற்களும் சமூக மற்றும் பண்பாட்டுத்தளத்தில் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படவில்லை. உலகமயமாதல் மற்றும் தனியார்மயமாதலின் விளைவாக 1990களின் மையப்பகுதியில் இருந்து திறன் குறித்தான கலைச் சொற்கள் பெருமளவில் உருவாயின. திறன் குறித்த கலைச்சொற்களான தகுதி, திறமை, வலிமை, தனித்திறன் போன்றவை சமூகப் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் அரசியல் தளத்தில் பெருமளவு வழங்கப்பட்டது. அதேவேளையில் ஊனமென்ற கலைச்சொல் ஒருவாறாக சமூகரீதியாக ஒதுக்கப்பட்டு, விரும்பத்தகாத உடலைக்குறிக்கும் ஒரு சொல்லாக மொழித்தளத்தில் முத்திரை குத்தப்பட்டது. அதனடிப்படியில் ஊனத்தை நேரடியாகக் குறிக்கும் சொற்களான, பார்வையின்மை, காதுகேளாமை, மனநலம் குன்றிய தன்மை, அறிவுத்திறன் குன்றிய நிலை, பேச்சுத்திறன் குன்றிய நிலை, உடல் குறைபாடு போன்றவை மொழித்தளத்தில் பயன்படுத்தக்கூடாத இழி சொற்களாக முத்திரை குத்தப்பட்டன.

அதேவேளையில் ஊனமுற்றோரைக் குறிப்பதற்கான மாற்றுக் கலைச்சொற்கள் உலகமயம் மற்றும் தனியார்மயமாதலால் உருவாகிய அறிவுத்தளத்தில் இருந்து திறனுடல் படைத்தவர்களால் பல சொற்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டன. அவ்வாறு உருவாக்கப்பட்ட மாற்றுக்கலைச்சொற்களான மாற்றுத்திறனாளிகள் (Differently Abled), தனித்திறனாளிகள் (Specially Abled), உடல் திறனாளிகள் (Physically Challenged), பார்வைத்திறனாளிகள் (Visually Challenged) போன்றவை 2000த்தின் மையப் பகுதியில் இருந்து மேற்கத்திய, கிழக்கத்திய நாடுகளில் ஊனமுற்றோரைக் குறிப்பதற்குத் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு உலகம் முழுவதும் அரசுகள் பொதுநல அரசிலிருந்து முதலாளித்துவத்தை மையமாகக் கொண்ட அரசுகளாக மாறியபோது ஊனமுற்றோரைப் பாதுகாப்பதற்கான செலவீனங்கள் பெருமளவு குறைக்கப்பட்டன. மறுபுறம் திறனை மையமாகக் கொண்ட ஊனமுற்றோர் குறித்தான மேலே குறிப்பிட்ட மாற்றுக் கலைச்சொற்கள் பெருமளவில் மேற்கத்திய அரசுகளால் உருவாக்கப்பட்டு சமூக, பண்பாட்டுத் தளங்களில் பயன்படுத்துவதற்கென்று அறிவுறுத்தப்பட்டன. மற்றொருபுறம் கடந்த இரண்டு பத்தாண்டுகளாக மதம் சார்ந்த சிந்தனை ஊனமுற்றோர் குறித்த மாற்றுக் கலைச்சொல்லாக்கத்தில் அதிகாரம் செலுத்தி வருகிறது. அதன் விளைவாக இந்தியா போன்ற நாடுகளில் ஊனத்தைப் புனிதத் தன்மையோடு இணைத்துப் பார்க்கக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. ஊனமுற்றோரைப் புனித உடல் படைத்தவர்கள் (Divyangjan) என்று அழைக்கும் நடைமுறை பரவிவருகிறது. ஒருபுறம் திறனையும் மறுபுறம் புனிதத் தன்மையையும் மையமாகக் கொண்டு கடந்த 30 ஆண்டுகளில் பல மாற்றுச் சொற்கள் ஊனமுற்றோரைக் குறித்து மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது இந்தியாவில் சமூக, பண்பாட்டு, அரசியல் மற்றும் மொழித்தளத்தில் பெரும் தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஊனமுற்றோரியம் இவ்வாறான ஊனமுற்றோர் வாழ்வியலில் மாற்றத்தைக் கொண்டுவராத சொற்களைக் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்குவதோடு மட்டுமல்லாமல் அதன் பொருண்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மாற்றுத்திறனாளர் என்ற சொல் ஒருவகையில் ஊனமுற்றோருக்குச் சமூகத் தளத்தில் சுயமரியாதையைக் கொடுப்பதாக இருந்தாலும் திறனை மையமாகக் கொண்டு உலகமயம் மற்றும் தனியார்மயமாதலின் பின்னணியில் உருவாக்கப்பட்டதால் இச்சொல் திறனியத்தைத் தூக்கிப்பிடிப்பதாக அமைந்துள்ளது. நடைமுறையில் எவ்விதத் திறனும் பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் பலநூறு ஊனமுற்றோர் இருக்கும் சூழலில் அவர்களைத் தனித்திறன் படைத்தவர்கள், மாற்றுத்திறன் படைத்தவர்கள் என்று அழைப்பது மொழிவாயிலாகவே அவர்களைத் திறன்படைத்தவர்களாக முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் நடைமுறையில் ஊனமுற்றோர் பல பட்டங்கள் பெற்றப்பிறகும் தனியார் கல்வி மற்றும் தொழில்நிறுவனங்களில் திறனற்றவர்கள் என்று ஒதுக்கப்பட்டு வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. மேலும் ஊனமுற்றோர் குறித்த விழிப்புணர்வு குடும்பம், சமூகம் மற்றும் பண்பாட்டு வெளிகளில் பெருமளவில் ஏற்படாமல் மாற்றுத்தினாளர் என்ற சொல் ஊனமுற்றோரைக் குறிக்க ஒரு மாற்றுச் சொல்லாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல ஊனமுற்றோரியம் சார்ந்த ஆய்வாளர்கள் மற்றும் போராளிகள் குறிப்பிடுவதுபோன்று ஊனமுற்றோர் என்று வழங்குவது மொழித்தளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் அவர்களை நேரடியாகக் குறிக்கும் சொல்லாக இருக்கும் என்கின்றனர். மாற்றுச் சொற்கள் பல குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.

பொதுவாக ஊனமுற்றோரியலில் ஊனமென்பது வேறு, உடல் குறைபாடு என்பது வேறு என்று விளக்கப்படுகிறது. உடல் குறைபாடு என்பது ஒருவருக்குப் பிறவியில் இருந்தோ அல்லது இடையிலேயோ உருவாவது. அது, அவருக்கு ஒருவகையான உடல்சார்ந்த இயலாமையை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக அந்த உடல் குறைபாடு என்பது ஊனமாக மாற்றப்பட்டு ஊனமுற்றோரை ஒடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனவே உடல் குறைபாடு என்பது உடல் சார்ந்தது. ஊனம் என்பது சமூக, பண்பாடு சார்ந்தது. ஊனமுற்றோரியம் ஊனத்தை முதன்மையாகக் கொண்டு சமூகப் பண்பாட்டு, கலை, இலக்கிய அறிவுத் தளங்களில் ஊனமுற்றோர் எவ்வாறெல்லாம் ஒடுக்கப்படுகின்றனர் என்பதை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு முந்தைய அதிகாரப் பிற்போக்கான கட்டமைப்புகளை உடைத்து புதிய அரசியல், அழகியல் வெளிகளை ஊனமுற்றோர் அனுபவம் சார்ந்துக் கட்டமைக்கிறது.

(தொடரும்)
Author Picture

ப.பூபதி

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஊனமுற்றோரியம் குறித்து தொடர்ச்சியாக இயங்கி வருபவர்.

மின்னஞ்சல் - pathisamy@gmail.com

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு