![]() |
ஓவியம் - சாய் அரிதா |
நான் அப்போது சிறுமியாக இருந்தேன். எட்டு வயது.
உன்னை அந்த அதுலுக்குத்தான் கட்டிக்கொடுப்பேன் என்று பாட்டி சொல்லிக்கொண்டே இருப்பார்.
நான் மாமாவின் வீட்டில் வளர்ந்தேன், அப்பா வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தார் – இதன் சரியான பொருளைச் சற்றே பெரியவளான பிறகே உணர்ந்துகொண்டேன்.
அதுல் எனது பாட்டியின் ஒரு தோழியின் பையன், அவன் ஏதோ ஒரு பள்ளியில் படிக்கிறான், நல்ல உயரமும் உடல்வாகும் கொண்ட பையன். அவன் எங்கள் சமையலறையில் உட்கார்ந்துகொண்டு பாட்டியுடன் பேசிக்கொண்டிருப்பான். அதுலை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது, அவனும் அவன் பேசும் விதமும்! “ஏய் பாஞ்சி, இங்க என்ன பண்ற? போ, அந்தப்பக்கமா போய் விளையாடு போ” என்று என்னிடம் சொல்வான்.
சிலநேரங்களில், “இப்படியே சேட்டை செய்திட்டிருந்தா மூங்கில் தோப்புல இருக்குற பெரிய நரி கிட்ட கொண்டுபோய் உன்னைய விட்டு வந்துருவேன்” என்பான்.
எல்லோருக்கும் அதுல் மிகவும் நல்ல பையன். அவன் கல்வியில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கி அடுத்தடுத்த வகுப்புக்கு முன்னேறினான். எனது சின்ன மாமாவிடம் அவன் ஆங்கிலத்தில் எல்லாம் பேசுவான் – எனக்குத்தான் அது எதுவும் புரியாதே!
இவற்றின் காரணமாகத்தானோ என்னவோ அதுலை எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவே இல்லை. அவன் எவ்வளவு நல்லவனாகவும் இருக்கட்டும், எல்லோரும் அவனை எவ்வளவுதான் நல்லவன் என்று சொல்லட்டுமே!
முகர்ஜிவீட்டு நசுவைத்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எவ்வளவு அழகான சிவந்த முகம், பால்வடியும் தோற்றம், பெரிய பெரிய கண்கள், எப்போதும் சிரிக்கின்ற முகம். வயதும் அதுல் மாமாவைப் போல அவ்வளவு ஒன்றும் அதிகம் இல்லை. என்னைவிட கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அதுல் மாமாவுக்குத்தான் பதினாறு பதினேழு வயசு இருக்குமே.
நசு சிரிக்கும்போது அவர் வாயிலிருந்து முத்துக்கள் உதிர்வதைப் போல இருக்கும், பாட்டியின் கதைகளில் வருவதைப்போல. இவ்வளவு அழகான முகத்தை எனது எட்டு ஆண்டு வாழ்க்கையில் இந்தக் கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் இதற்கு முன்பு நான் எப்போதும் பார்த்ததில்லை! அவரும் பாட்டியிடம் வந்து உட்கார்ந்து எப்போதாவது பேசிக்கொண்டிருப்பார். அவர் எது பேசினாலும் இனிமையாக இருக்கும், அதீத இனிமையாக! நான் ஆ’வென அவர் முகத்தைப் பார்த்தபடி இமைக்காமல் அவரது பேச்சை விழுங்கிக்கொண்டிருப்பேன். அதுலும் தான் பேசுகிறான், ஆனால் அவனுடைய பேச்சு இவ்வளவு நன்றாக இருப்பதில்லையே?
“பாஞ்சியை அதுலுக்குக் கல்யாணம் கட்டிக்கொடுப்பேன், ரொம்பவே பொருத்தமா இருக்கும்” என்பார் பாட்டி.
நான் முகத்தைக் கோவமாக வைத்துக்கொண்டு, “ஆமா, வெளங்கும்” என்பேன்.
“அம்மாடியோவ் புள்ளைக்குக் கோவத்தப் பாரு, ஏனம்மா ஒத்து வராது?” என்பார் பாட்டி, சிரித்துக்கொண்டே.
“உங்களுக்குத் தான் எல்லாம் தெரியுமே!”
“இருந்தாலும் உன் மனசுல என்ன இருக்குன்னு கேட்டுக்கிறேன், நீ யாரை கட்டிக்கப் போற?”
“நசுமாமா”
பாட்டி விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே, “அதுக்குள்ள இந்தப் பொண்ணு அவளுக்கு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துக்கிட்டா, பாத்தியா! என்ன இருந்தாலும் இந்த காலத்துப் பொண்ணு இல்லையா! கேட்டியாடி, நசு தான் இவளுக்கு மாப்பிள்ளையாம்” என்பார்.
அதுலின் அம்மா சிரித்துக்கொண்டே கேட்பார், “ஏண்டியம்மா, உனக்கு அதுல் மாமாவைப் பிடிக்கல?”
“அதுல் மாமாவுக்கு வயசு ரொம்ப அதிகம்.”
“அப்படி என்ன ரொம்ப அதிகம்? பதினாறு வயசு.”
“எப்படியிருந்தாலும், ஒரு பதினாறு வயசு கிழவனையா நான் கட்டிக்கனும்? நசுமாமா சின்னப் பையன்.”
“இந்தக் காலத்துப் பொண்ணுங்களப் பாத்தியாடி. நசுவுக்கு வயசு பன்னிரண்டு, அவனதான் ரொம்பப் புடிச்சிருக்காம். உன்னோட காலமும் என்னோட காலமும் முடிஞ்சு போச்சு. பதிமூனு வயசுல எனக்குத் திருமணம் நடக்கும்போது அவருக்கு நாப்பத்திரண்டு வயசு.”
“எனக்கு அவ்வளவு இல்லை! அவருக்கு முப்பத்தொன்னு, எனக்குப் பதினோரு வயசு.”
“அதுவும் நீ ரெண்டாவது தாரம் தானே!”
“ஆமா, அது மட்டுமா? முதல் தாரம் அப்போ உயிரோடதான் இருந்தாங்க.”
“அந்த வகையில் கடவுள் என்னைய காப்பாத்திட்டாரு, அதனால நான் கொஞ்சம் தப்பிச்சேன்.”
சில சமயம் நசுவைப் பல நாட்கள் பார்க்க முடியாது. அவர் எங்கள் வீட்டுப்பக்கம் விளையாட வரவே மாட்டார். எனக்கு மூச்சுத் திணற ஆரம்பித்துவிடும், உடனே நான் முகர்ஜிவீட்டுக்கு ஓடிவிடுவது வழக்கம்.
நசுமாமா முற்றத்தில் அமர்ந்து குச்சி வெட்டி விளையாட்டுத் திடலுக்கு வேலி கட்டிக்கொண்டிருக்கிறார். உடன் மூன்று அல்லது நான்கு பையன்கள், அவர் வயதில்.
“ஓய் நசுமாமா, ஏன் எங்க வீட்டுப்பக்கமே வரலெ?”
‘‘தெனந்தெனம் வர முடியுமா என்ன! நீ ஏன் இவ்வளவு தூரம் வந்த? வரும்போது பயமா இல்லையா?’’
“இல்ல.’’
“விளையாட வரியா?”
“ம்ம்ம்”
உடனே மற்ற பையன்கள், “பொம்பளப்புள்ள நம்மகூட எதுக்கு விளையாடனும்? போய் பொட்டப்புள்ளைங்களோட விளையாடு, போ” என்பார்கள்.
“விளையாடட்டுமே நம்மகூட, அதனால் என்ன” என்பார் நசுமாமா.
“அருவாள எடுத்துட்டுப் போய் குச்சி வெட்டிட்டு வர முடியுமா அவளால? அவள வச்சி என்ன விளையாட முடியும்? போடி நீ’’ என்பான் ஹபு.
அழுதுவிடுவதைப் போல நிற்கும் என்னைப் பார்த்ததும் நசுமாமா என் அருகில் வந்து கையைப் பிடித்துக்கொள்வார். “அவள ஏண்டா இப்படி பண்றீங்க? அவ எதுக்குக் குச்சி வெட்டிட்டு வரப்போறா? சின்னப்புள்ள, பேசாம உட்காந்திருப்பா. நீ உட்காரு பாஞ்சி” என்பார்.
நான் மிகவும் மகிழ்ச்சியுடன் முற்றத்தின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்துகொள்வேன். நசுமாமா விளையாடிக்கொண்டிருக்கும்போதே ஒரு கொய்யாப்பழத்தைத் தூக்கி என் பக்கமாக வீசுவார். நான் உட்கார்ந்தபடியே கொய்யாப்பழத்தை மென்றுகொண்டிருப்பேன். நீண்ட நேரம் கழித்து, “நசுமாமா, பசிக்குது” என்பேன்.
ஹபு எரிச்சலைடந்து கத்துவான். “இந்தா ஆரம்பிச்சிட்டா, சரியான இம்சை.”
“நீ வாய மூடிட்டு இரு ஹபு. பசிக்குதா? சரி வா, அத்தை கிட்ட போய் எண்ணெய், உப்பு சேர்த்து அரிசிப்பொறி சாப்பிடுவோம், இல்லைனா நான் ஒரு வெள்ளரிப்பிஞ்சு தோல் சீவித் தர்றேன்” என்பார் நசுமாமா.
“இல்ல, நீங்க என்னைய வீட்டுல விட்டுட்டு வாங்க. நான் வீட்டுக்குப் போய் சோறு சாப்பிடுவேன். தனியாப் போக பயமா இருக்கும்.”
ஹபு கண்களை உருட்டிக்கொண்டு கத்துவான். “அப்போ வரும்போது மட்டும் தனியா எப்படி வந்த? இப்போ யாரு உன்கூட வந்து விட்டுட்டு வருவா? ஸ்ஸ்ஸ்… சரியான வம்பு புடிச்ச புள்ள.”
நசு எனக்கு முன்பாக நடந்தபடி என்னை வீட்டில் விடுவதற்காக வருவார். செம்மண் பாதையின் ஓரங்களில் மண்புழுக்கள் ஊர்ந்து சென்ற தடங்கள், மரங்களில் எத்தனை எத்தனை குருவிகள், பழுத்த மகிழம்பழங்கள் மகிழமரத்துக்கு அடியில் குவிந்து கிடக்கின்றன. அந்த மகிழம்பழத்தை எடுத்து நசுவுக்கு ஊட்டிவிடத் தோன்றும், மகிழம்பழம் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனால் நசுமாமா, “ச்சீ போ, அது பிசுபிசுன்னு இருக்கும். நீ சாப்பிடு, நான் சாப்பிடமாட்டேன்” என்பார். நசுவுக்கு ஊட்டிவிடுவதில் எனக்கு அவ்வளவு திருப்தி, அந்த வாய்ப்பை அவர் எங்கே கொடுத்தார்.
இப்படியாக எனது குழந்தைப் பருவமும் பால்யகாலமும், சிறுவயதில் மிகவும் பழக்கமானதாக இருந்த மாமாவின் கிராமத்து மரங்களின் நிழலில், பறவைகள் கீச்சிடும் பங்குனி மாதத்தின் குளிர்ந்த காலைப்பொழுதைப் போல முழுவதுமாகக் கடந்துபோய்விட்டது. அதன் பிறகு, வாழ்க்கையின் வெயில் படிப்படியாக வெக்கையேறத் தொடங்கியது. பூக்கள் பூக்கும் பறவைகள் பாடும் வசந்தகால விடியல் மெல்ல மெல்ல மறைந்தது. காற்று சூடேறிப் போனது.
அந்தத் தாக்ரா-ஷேக்ஹாட்டி கிராமம் இன்னும் இருக்கிறது. நான் இப்போதும் அவ்வப்போது அங்கு செல்வதுண்டு, அந்த இடம் எவ்வளவு மாறிவிட்டது! மாமாவின் அந்த வீடு இப்போது இல்லை, எனது பாட்டியும் இல்லை.
அப்பா யாரோ ஒருவரது வயலில் வேலை செய்தார். அவருக்கு மிகமிகக் குறைவான கூலியே கிடைத்தது. வீட்டுச்செலவு தொடர்பாகப் பாட்டி அவருடன் அடிக்கடி சண்டைபோட்டுக்கொண்டே இருப்பார். அப்பா கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவது வழக்கம். ஓரிரு மாதங்கள் எந்தத் தகவலும் இருக்காது. அம்மா அழுதுகொண்டே இருப்பார், திடீரென்று ஒரு நாள் அப்பா வந்து நிற்பார். நாட்கள் இப்படியே கழிந்தன.
பதின்மூன்றாவது வயதில் ஆரங்காட்டாவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் எனக்குத் திருமணம் ஆனது. திருமணத்திற்கு சில நாட்கள் முன்பாக நசுவின் வீட்டுக்குச் சென்றேன். நசுமாமாவின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, நசு சமையலறையில் சோறு சமைத்துக் கொண்டிருந்தார். அவரது வெளுத்த முகம் அடுப்புச் சூட்டில் சிவந்துபோயிருந்தது. அவர்களது வீட்டில் எந்த வசதியும் இல்லை. நசுமாமாவுக்கு நிறைய சகோதரர்கள். அவர்களில் சிலர் வெளியில் படிக்கிறார்கள், சிலர் வேலை செய்கிறார்கள். அம்மாவின் உடல் நலிவுற்றதால் சமைப்பது உள்ளிட்ட குடும்பப் பொறுப்புகளின் சுமையனைத்தும் நசுமாமாவின் தலையில் விழுந்தது. வெகுநாட்களாகவே நான் நசுவின் இந்தக் கஷ்டத்தைப் பார்த்து வந்திருக்கிறேன்.
நசுவின் இந்த நிலைமையைப் பார்த்து எனக்கு உண்மையிலேயே மிகவும் கவலையாக இருந்தது. நசுவின் நல்லது, கெட்டதைப் பார்க்க யாரும் இல்லை, அவரது சகோதரர்கள் எல்லாம் சுயநலவாதிகள், குடும்ப பாரத்தை இவர் மீது தூக்கிப்போட்டுவிட்டு அவர்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறார்கள்.
நசுமாமா என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே பேசினார். “வா பாஞ்சி, உட்கார். நேத்து தயிருக்கு உறை ஊத்தி வச்சேன். திரியவே இல்ல. அடுப்புக்குப் பக்கத்துல வச்சிட்றேன், என்ன சொல்ற?”
நசு எப்போதும் பெண்கள் பேசக்கூடிய விசயங்களையேதான் பேசிக்கொண்டிருப்பார். இதனால்தான் அவரை அனைவரும் ஜனார்த்தன் முகர்ஜியின் ‘விதவை மகள்’ என்று கேலி பேசுகிறார்களோ?
“தெரியுமா, நேத்து பருப்பை வறுத்து உடைச்சேன். பருப்பை உடைச்சி எடுக்குறதுக்குள்ள நாளே முடிஞ்சி போச்சு. கை, கால் உடம்பெல்லாம் ஒரே வலி” என்றார் அவர்.
“நீங்க பருப்பு வறுத்தீங்களா? உண்மையாவா?” என்று கேட்டேன் நான்.
“ஆமா. இல்லாவிட்டால் வேற யாரு செய்வாங்க? நாளைக்கு ஒரு மூட்டை அழுக்குத்துணிகளை சோப்புப் போட்டுத் துவைக்கனும்.’’
“அதெல்லாம் பொம்பளைங்க வேலை. நீங்க ஏன் அதெல்லாம் செய்றீங்க? என்னைய ஏன் கூப்புடல? நான் பருப்பு வறுத்துக் கொடுத்திருப்பேன்.” நான் சோகமான தொனியில் கூறினேன்.
“ஆஹா! என்னால முடியாதா என்ன? எதுக்கு உன்னை வேற கூப்புடனும்?”
“எழுதுறது படிக்கிறதெல்லாம் செய்ய மாட்டியா நசுமாமா? இதெல்லாம் உங்க வேலையா? ஆம்பளப் பையன் படிக்கிற வேலையைப் பாருங்க.’’
“என்னைய யார் படிக்க வைப்பாங்க? அண்ணனுங்க ஒத்த பைசா கூட தரமாட்டாங்க. அதுவுமில்லாம அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நான் வீட்டைவிட்டு வெளியே போனால் சமையல் மத்த வேலையெல்லாம் யார் செய்வாங்க, சொல்லு. படிக்கிறதுக்குக் காசு கெடச்சாலும் என்னால் படிக்க முடியாது.”
அவரது வேலைகளைக் கொஞ்சம் பகிர்ந்துகொண்டேன். பின்னர், எனது திருமணத்தைப் பற்றி கூறினேன். நசுமாமா குறிப்பிட்ட எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. அவர் கொஞ்சம் போல ஆர்வம் காட்டியிருந்தால், நான் எந்த ஊருக்குத் திருமணம் முடித்துச் செல்லப் போகிறேன் என்பதையாவது கேட்டிருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால், அந்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவே இல்லை. நசுமாமா அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.
எனது திருமண நாளன்று இரவு நசு வயிறுமுட்ட பந்தியில் சாப்பிட்டுவிட்டு வந்தார், ஆனால் திருமணத்தைப் பார்க்க ஒருமுறைகூட வரவில்லை, ஒருமுறைகூட கூட்டத்தினுள்ளிருந்து எட்டிப் பார்க்கவில்லை. எனது மனம் என்னவோ மாதிரி வெறுமையாகிவிட்டது, அவர் ஒருமுறையாவது வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மனக்கவலைக்குள் மூழ்கிவிடுவதற்கான நேரம் இல்லை அப்போது எனக்கு, இருந்தாலும் இவ்வளவு இசை, இவ்வளவு சாப்பாடு, இவ்வளவு மனிதர்களின் வருகை, எனது புதிய ஆடை ஆபரணங்கள், - இவை எதுவும் பிடிக்கவில்லை. மனதிற்குள் உற்சாகமே இல்லை.
முன்பே சொன்னதைப் போல எனக்குத் திருமணம் ஆனது ஆரங்காட்டாவுக்கு அருகிலுள்ள சிகார்பூரில். கணவரின் வயதும் பதினேழு, பதினெட்டுக்கு மேல் இல்லை; மெலிந்த தோற்றம், வழுக்கைத் தலை. திருமணத்திற்குப் பிறகே தெரிய வந்தது கணவர் மலேரியாவால் பாதிக்கப்பட்ட நீண்டநாள் நோயாளி. மாதமிருமுறை மலேரியா காய்ச்சல் வந்து அவரை முடக்கிப்போடும். ஆரங்காட்டாவின் ஜுகல்கிசோர் டாகூர் கோவில் திருவிழா சமயத்தில் எனது கணவரின் சித்தப்பா ஒரு பலகாரக்கடையைத் திறந்தார். அந்தக் கடையில் என் கணவருக்கு பாகு பிசைந்து சந்தேஸும் ஜிலேபியும் தயாரிக்கும் வேலை.
மாமியார் வீட்டுக்குப் போகும்போது மனதுக்குள் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. வீடு வாசல் எப்படி, சோறு தண்ணீர் எப்படி எதுவும் தெரியாது. போய் பார்க்கிறேன், பழைய காலத்து செங்கல் வெளித்தெரியும் ஓட்டுவீடு, இரண்டே அறைகள், சின்னதாய் ஒரு தாழ்வாரம், வீட்டுக்கு முன் கூரைவேய்ந்த நீண்ட முற்றம் இருந்தது, சமையலறையும் ஓடு வேயப்பட்டிருந்தது. மிகப் பெரிய மாமரம் ஒன்று வீட்டு முற்றம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தி நின்றது.
எனது மாமியார் பெருமிதத் தொனியில் பேசத் தொடங்கினார். “இங்கே பாரு மருமகளே, மாமரம் காய்க்கிற பருவம் வந்துருச்சு. எங்க மரத்து மாம்பழம் போல சுவையான பழம் இந்தச் சுத்துவட்டாரத்துல வேற எங்கேயும் கிடையாது. இது இஸ்தக் கோவாரி அல்லது சாந்திப்பூரில் இருந்து கொண்டுவந்து நட்டு வளர்த்த மரம்.”
மாம்பழப் பருவம் வந்தது, எங்கிருந்தோ வியாபாரிகள் வந்து விலைபேசினார்கள். எங்கள் வீட்டிற்கு வந்த இரண்டு கூடை மாம்பழங்களிலிருந்து, எனக்கு ஒன்றிரண்டு கிடைத்தது. மாமியார் பொய் எதுவும் சொல்லவில்லை, மாம்பழம் நன்றாகவே இருந்தது.
எனது கணவரின் பேச்சுவார்த்தை அவ்வளவு மோசம் ஒன்றுமில்லை. மெல்ல மெல்ல அவரைப் பிடித்தும் போய்விட்டது.
“உனக்குச் சாப்பிட என்ன பிடிக்கும்?” என்று ஒருநாள் கேட்டார்.
நான் வெட்கத்துடன் நாணி கோணி ஒருவழியாகச் சொன்னேன், “எண்ணெய்ல பொறிச்சது.”
“என்னடி! இம்புட்டு விவரம் தெரியாத புள்ளையா இருப்பியா? நல்ல தின்பண்டம் பேராச் சொல்லு.”
“காசா, ஜிலிபி.”
“ஏன் காஜா?”
“அது என்ன ஜா? எங்க கிராமத்தில் கேட்டதே இல்லையே.”
அவர் ஹோ-ஹோ என்று சிரித்துக்கொண்டே பேசினார். “கிணத்துப்பூதம்! இந்த நகரம் ஒரு சந்தை இடம். நாளைக்கு உனக்காக ரகசியமா காஜா கொண்டு வர்றேன். ஆனால், கவனமா இரு, அம்மாவுக்குத் தெரிஞ்சிராம, திட்டுவாங்க. நான் நல்லா காஜா செய்வேன்.”
அப்போதிருந்து அடிக்கடி ஏதாவது தின்பண்டம் ஒளித்துவைத்துக் கொண்டு வருவார். சில சமயம் காஜா, சில சமயம் மிஹிதனா. நாங்கள் இருவரும் ரகசியமாகச் சாப்பிடுவோம். “எல்லாருக்கும் கொடுத்தால் பத்தாது. உறவுக்காரங்க எல்லாம் எறும்புக்கூட்டம் மாதிரி, அவங்க எல்லாருக்கும் கொடுத்தால் உனக்கும் எனக்கும் இத்துணூண்டாவது வாய்க்கு வந்து சேருமோ சேராதோ” என்பார்.
மாமியார்வீடு எனக்குப் பிடிக்கவில்லைதான், இருந்தாலும் இந்தத் திண்பண்டம் சாப்பிட்டதும் கணவரைக் கொஞ்சம் பிடித்திருந்தது. உலோ இனத்தினரின் திருவிழாவைப் போன்ற வேறு பெரிய திருவிழா இந்தப் பகுதியில் இல்லை. திருவிழா சமயத்தில் கடையில் வேலை அதிகமாக இருக்கும். அவர் மிகத் தாமதமாகத்தான் இரவில் வீடு திரும்புவார், கையில் பெரிய பெரிய பை நிறைய தின்பண்டங்களுடன். “சாப்பிடு, சாப்பிடு, நல்லா சாப்பிடு. வா ரெண்டு பேரும் வயிறு நெறைய சாப்பிடுவோம்” என்பார், சிரித்துக்கொண்டே.
ஒரு நாள் ரகசியமாகத் தின்பண்டம் கொண்டு வருவதை மாமனார் எப்படியோ கண்டுபிடித்துவிட்டார். இதனால் வீட்டில் பெரும் களேபரம் ஆகிவிட்டது. அவரும் நானும் போதுமான அளவுக்கு அவமானங்களையும் வசவுகளையும் சகிக்க வேண்டியிருந்தது.
மாமியாரின் தங்கை, “அப்படி வாய்க்கு வக்கணையா கேக்குதோ? விளக்கமாத்தக் கொண்டு நாலு சாத்து சாத்துறேன். ஒளிச்சி வைச்சி ஒளிச்சி வைச்சி தின்னு தின்னு கடையவே காலி செய்துட்டியேடி! இப்படி ஒரு தரித்திரம் புடிச்ச மருமகள வேறெங்கேயும் பாத்ததும் இல்ல கேள்விப்பட்டதும் இல்ல. வயசானவங்களுக்குத் தெரியாம ஒளிச்சு வச்சுத் தின்ன வெட்கமா இல்ல!” என்று பேயாட்டம் ஆடினார் மாமியாரின் தங்கை.
நான் இரவு தூங்கும்போது, “இனிமேல் இதெல்லாம் கொண்டு வர வேணாம். எம்புட்டு பேச்சு பேசிட்டாங்க பாருங்க!” என்றேன் அவரிடம்.
கணவர் ஒத்துக்கொள்ளவில்லை. “ஏன் கொண்டு வர மாட்டேன்! என் சித்தப்பா எனக்கு என்ன சம்பளம் தருகிறார்? சம்பளமே இல்லாத வேலைக்காரனாத் தானே வச்சிருக்காரு. வயித்துக்கு ரெண்டு சாப்பிடக் கூடாதா? கண்டிப்பா ஒளிச்சு வச்சி எடுத்துட்டு வருவேன், நீ பாரு. சித்தப்பா எப்படி கண்டுபிடிக்கிறார்னு நான் பாக்குறேன்.”
கணவருக்கு உடல்நிலை சரியில்லை, ஆனாலும் நிறைய தின்றபடி இருந்தார். என் பேச்சைக் கேட்கவேயில்லை. உணவைத் திருடித் தின்பதை நிறுத்தவே இல்லை. ஒவ்வொரு நாள் இரவும் அவர் ஒரு பொட்டலம் லூச்சியும் ரசகொல்லாவும் வீட்டுக்குக் கொண்டு வருவார். அவரும் சாப்பிடுவார், எனக்கும் போதுமான அளவுக்குக் கொடுப்பார். அவரது வயிற்று வலி சரியாகவே இல்லை. நான் சாப்பிடுவதைக் குறைக்கச் சொல்லி எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவர் துளியும் கேட்கவே இல்லை.
“எவ்வளவுதான் தின்னு தீர்க்க முடியும்னு பாக்குறேன்! சித்தப்பாவிடமிருந்து ஒரு பைசா கூட கிடைக்காது எனக்கு.”
நான் பேச்சை மாற்றினேன். “ஆடி மாசம் எங்க அப்பா வீட்டுக்குப் போகனும், நீங்க எனக்குப் புதுத்துணி வாங்கித்தர மாட்டீங்களா?”
“யார் காசு கொடுப்பாங்க? சித்தப்பாவா? அவரை நம்பி இனி வாழ முடியாது!” என்றார் உதட்டைப் பிதுக்கியபடி.
“உண்மையாவே நான் புதுத்துணி உடுத்திட்டுப் போக முடியாதா? அப்பா வீட்டில் எல்லோரும் திட்டுவாங்களே.”
“என்னால செய்ய முடிஞ்சா எல்லாமே செய்திருப்பேன். எனக்கு மட்டும் விருப்பமில்லையா என்ன, உனக்குப் புதுத்துணி வாங்கிக் கொடுக்க? காசுக்கு எங்க போவேன்?”
“சரிதான், எல்லோரிடமும் வசவு வாங்கனும் அதைத்தான் யோசிக்கிறேன்.”
ஆடி மாதம் அப்பா வீட்டுக்கு வந்தேன். என்னுடன் என் கணவரும் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த என் வயதுப் பெண்கள் அவரைப் பலவாறு ஏசத் தொடங்கினர்.
ராய்பாரியின் மூத்த மருமகள் ஒரு நாள் என்னிடம் கேட்டார், “ஆமாம் பாஞ்சி, மாப்பிள்ளை பாகு பிசைஞ்சி இனிப்புப் பலகாரம் செய்யுற வேலை பாக்குறாராமே?”
எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. “ஆமாம். அவரு நல்லா காஜி செய்வாரு. அவரு கைப்பக்குவத்தை எல்லாரும் புகழ்வாங்க சின்னம்மா” என்றேன்.
அவர் சிரிப்பிலேயே என்னைக் கொன்றுவிட்டார்! அப்பா வீட்டுக்குப் போன அவரது மூத்த மருமகள் திரும்பி வரவேயில்லை. அங்கே பக்கத்து வீட்டுப் பையனைக் காதலிப்பதாகப் பேச்சு அடிபடுவதை எல்லாம் அவர் அப்போது மறந்தேவிட்டார். இனிப்புக் கடையில் என் கணவர் வேலை செய்வது அவருக்குப் பெரும் குற்றமாகவும் அவமானத்திற்குரியதாகவும் ஆகிவிட்டது. ஊர் மக்கள் என் கணவருக்குப் புதுமாப்பிள்ளைக்கு உரிய மரியாதையைத் தரவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. புது மாப்பிள்ளையை எல்லோரும் விருந்துக்கு அழைத்து உபசரிப்பார்கள், எனது கணவரை மட்டும் ஏனோ இப்படி அவமானப்படுத்தினார்கள்.
நசுமாமா முன்பு போலவே சோறு சமைத்துக்கொண்டிருந்தார். எனக்கு அங்கு சென்று கொஞ்ச நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தால் சற்றே மகிழ்ச்சியாக இருக்கும். நசு இந்த வயதிலேயே சாமி, சமயம் என்று மனதைச் செலுத்துவதைக் கவனித்தேன். அவர் சந்தனம் அரைப்பதைப் பார்த்து, “இப்போதெல்லாம் பாட்டி நிறைய சாமி கும்பிடுறாங்க போல இருக்கே?” என்று கேட்டேன். நசு சிரித்துக்கொண்டே, “அம்மா இல்லை, நான்தான் சாமி கும்புடுவேன். நான் தினமும் சிவனைக் கும்பிடுறேன். மனிதனாகப் பிறந்துவிட்டு வெந்ததைத் தின்று விதிவந்தால் போய்ச்சேர முடியுமா ஒரு பன்றியைப் போல!” என்றார்.
அவர் வாயிலிருந்து தத்துவங்களைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்தது. நசுமாமா வெள்ளரிக்காய் நறுக்கிச் சாப்பிடக் கொடுத்தார். வீட்டில் அவரே தேங்காய் லட்டு செய்துவைத்திருந்தார், அதைக் கொடுத்தார். தேநீரும் கொடுத்தார்.
இரண்டு மூன்று வருடங்கள் கழிந்தன. எனது கணவரின் உடல்நிலை தேறவில்லை. படிப்படியாக மோசமாகிக்கொண்டுதான் வந்தது. மாமியாரும் அவரது தங்கையும், “இந்த தரித்திரம் புடிச்சவள கட்டிக்கிட்டு வந்ததில் இருந்து புள்ளைக்கு ஒருநாளும் உடம்பு தெளிச்சியா இருந்ததில்லை” என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்.
“குடும்ப விவகாரங்கள் எதிலேயும் அவளுக்கு ஒரு பிடிப்பும் இல்லை, நல்லா கவனிச்சியா?” என்று மாமியார் கேட்டார்.
அது அவ்வளவு பொய்யல்ல என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். எனக்கு உண்மையில் எதன்மீதும் எவ்விதமான பிடிப்பும் இல்லை. நல்ல ஆடைகள், விலையுயர்ந்த ஆபரணங்கள் எதிலுமே பற்றில்லை. “நீ ஏன் காசு சேர்த்து வைப்பதே இல்லை? அவ்வப்போது கொண்டுவந்து தருகிற காசைக் கொஞ்சம் சேர்த்துவை. பின்னாடி உனக்கு உதவியா இருக்கும்” என்பார் என் கணவர்.
அந்த வார்த்தைகளை நான் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை ஒருநாளும். கடைசியில் யாருக்கு என்ன நடக்கும் என்று யோசிப்பதனால் என்ன ஆகிவிடப் போகிறது! எனக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது, அதுவும் சில மாதங்களில் இறந்துவிட்டது. கணவனுக்கு நோய் குணமாகவே இல்லை. நான் வீட்டுவேலை செய்தே சாகிறேன், யாரும் என்னிடம் இனிமையான வார்த்தைகளைப் பேசுவதே இல்லை. எனது கணவர் எனக்கு பல்வேறு இல்லற ஆலோசனைகளை வழங்கினார். அவரது உடல்நிலை இருப்பதைப் பார்த்தால், எப்போது இறந்துபோவார் என்பதே உறுதியில்லை. அதன் பிறகு என்ன ஆகும்? நான் கையில் ஏதாவது சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லிக் கேட்கும்போது மட்டுமே நினைவில் இருக்கும், பிறகு அது நினைவில் தங்காது.
ஒரு மாசி மாதத்தில் அப்பா வீட்டுக்கு வந்தேன். ஊருக்கு வந்ததும், நசுமாமா மூளைகெட்டுப் போய், இரவு பகல் பாராமல் பூஜை செய்கிறார், யாருடனும் பேசுவதில்லை, ஏதோ மாதிரி ஆகிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். மத்தியான வேளையில் அவரைப் பார்க்கச் சென்றேன். “எப்படி இருக்க பாஞ்சி, எப்போ வந்த?” என்று கேட்டார்.
“நான் நேத்து வந்தேன். நீங்க நல்லா இருக்கீங்களா?”
“நான் நல்லா இருக்கேன். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்.”
“எல்லோரும் நீங்க பைத்தியம் ஆகிட்டதா சொல்றாங்களே?”
நசுமாமா லேசாகப் புன்னகைத்துவிட்டு மௌனமாக இருந்தார். பிறகு சாந்தமான பார்வையுடன் என்னைப் பார்த்துப் பேசினார். “நான் உண்மைப் பொருளைக் கண்டடையும் முயற்சியில் இருக்கேன். யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும். நான் பைத்தியம் ஆனாலும் சரி, பரதேசியானாலும் சரி ஹீ-ஹீ-ஹீ என்ன சொல்ற பாஞ்சி?”
கடைசி வார்த்தைகள் என் காதுகளில் விழும்போது சற்றே அசௌகரியமாக இருந்தாலும், நசுமாமாவின் மீது எனக்கிருந்த மரியாதை மேலும் அதிகரித்தது. சாதாரண மனிதர்களிடம் காண முடியாத ஏதோ ஒன்றை அவரிடம் கண்டேன். அவரது முகத்தின் தோற்றம் வேறு ஏதோவாக மாறிவிட்டதுபோல தோன்றியது. காசு பணம், வீடு வாசல் என்று கட்டிக்கொண்டு அழுபவர்களையே நான் என்னைச் சுற்றிலும் பார்க்கிறேன். வீட்டுக்கு முன்னிருக்கும் மரத்தடியில் விழுந்து கிடக்கும் ஒரு சிறிய மாம்பழத்தைச் சிறுவர்கள் யாரேனும் எடுத்துவிட்டாலே அவர்களுடன் சண்டையிட்டு அக்கம்பக்கத்தை அதகளம் செய்துவிடும் எனது மாமியாரின் தங்கையைப் பார்க்கிறேன். கிராமத்தில் யாரோ ஒருவர் தனது நிலத்தில் வேலி போடும்போது கொஞ்சம் கூடுதலாக அடுத்தவர் நிலத்தையும் ஆக்கிரமித்து வேலி அமைத்துவிட்டார். அதனால் சண்டை, மோதல் என்றாகி, இப்போது இரண்டு மூன்று வருடங்களாக வழக்கு நடந்து வருகிறது. இத்தகைய சூழலில், நசுமாமா ஒரு மனிதராக இருந்தும் சுதந்திரமாக இருக்கிறார். அவருக்கு உடைகள், உணவு, பொன் பொருள் விவகாரங்களில் எந்தப் பற்றும் இல்லை. பூர்வீகச் சொத்து உள்ளது, அதையும் சகோதரர்களுக்குக் கொடுத்துவிட்டு நிம்மதியாக உட்கார்ந்து இருக்கிறார், அவர்களிடமிருந்து ஒரு பைசாகூட பெறவும் விரும்பவில்லை.
என் கணவர் வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கினார். கணவர் மீது எனக்கு ஏதோ ஒரு விதமான பிரேமை உண்டாகிவிட்டது. என் மாமியாரைத் தவிர வேறு யாரும் அவர் முகத்தைக்கூட பார்க்க விரும்பவில்லை. அவருக்கு வயதாகிவிட்டாலும்கூட எனது கொழுந்தன்கள் யாரும் அவர் பேச்சைக் கொஞ்சமும் சட்டை செய்வதில்லை.
எங்கள் கிராமத்திலும்கூட அவருக்கு அவ்வளாக மரியாதை எதுவும் கிடைக்கவில்லை.
“இந்தக் கிராமத்திலேயே ஒரு வீடு கட்டிக்கொண்டால் நன்றாக இருக்கும்” என்றார்.
“ஏன், மாமியார் வீட்டில் வீட்டோட மாப்பிள்ளையா இருப்பீங்களா? யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா?
“சொல்லட்டுமே! சித்தப்பாவின் அந்த வீட்டில் இனியும் இருக்கப் பிடிக்கவில்லை.”
“நல்லா யோசிச்சி முடிவெடுங்க.”
“உங்க கிராமத்தில் உள்ளவங்களும் வித்தியாசமா இருக்காங்க. யாரும் சரியாகப் பேசுவதே இல்லை” என்றார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. “பொம்பளைங்க மாதிரி பாகு பிசைந்து பலகாரம் சுடும் மாப்பிள்ளைக்கு யாருதான் மரியாதை கொடுப்பாங்க?” என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, “அய்யடா! தெனந்தெனம் ராத்திரியில காஜா சாப்பிடும்போது ரொம்ப நல்லா இருந்துச்சா?” என்று கேட்டுவிட்டு கண்ணடித்தார்.
ஓரிரு நாட்கள் கழித்து அவர் கிளம்பிப் போய்விட்டார். போகும்போது எனது கையில் பதிமூன்று அணா காசு கொடுத்துவிட்டு, “இந்தக் காசை வைத்து ஏதாவது வாங்கித் தின்னுக்கோ. ஒரு மாசம் இங்க இரு, அப்பறமா வந்து கூப்புட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
பிறகு அவர் வரவேயில்லை. அந்த மாதக் கடைசியில் எனது நெற்றிக் குங்குமத்தையும் கையில் அணிந்திருந்த சங்கு வளையலையும் பறித்துக்கொண்டு, நீண்ட நாளைய நோவினால் இவ்வுலகைக் விட்டுப் பிரிந்தார். கடிதம் கிடைத்ததும் அப்பா முதலில் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. இரண்டொரு நாட்கள் கழித்து அம்மாவிடம் சொன்னார், “ம்ம்ம் ஒரு விசயம், மருமகனுக்கு ரொம்ப முடியலைன்னு கடிதம் கிடைத்தது.”
“என்னங்க சொல்றீங்க! ஏன் இவ்வளவு நேரம் சொல்லவில்லை? கடிதத்தில் என்ன இருந்தது? கடிதத்தைக் கொடுங்க பாக்குறேன்” அம்மா தளுதளுத்த குரலில் கேட்டார்.
அப்பா மென்று மென்று பேசினார், “நான் வந்து அப்படி நெனைக்கல, அது வந்து நியாபகம் இல்ல, வந்து…”
பக்கத்து அறையில் அமர்ந்து நான் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு நெஞ்சு படபடத்தது. இரத்தம் தலைக்கேறுவதைப் போல இருந்தது. நாக்கு வறண்டு போனது. எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. தந்தை எப்போதும் வேலையாக இருக்கும் மனிதர்தான், ஆனால் மருமகன் நோய்வாய்ப்பட்ட செய்தியைக் கேட்டும் அமைதியாக இருந்துவிடும் ஆள் இல்லை. அம்மா அப்பாவிடம் விழுந்தெழுந்து போய், “அவரு கிட்ட, இப்பவே கிளம்பிப் போங்க. பொண்ணக் கூப்புட்டு வரச்சொல்லி எழுதலையா? அவளையும் அழைச்சிட்டுப் போங்க” என்றார்.
“இனிமே அங்க போய் என்ன ஆகப் போகுது கின்னி? எல்லாம் முடிந்துவிட்டது!” என்று உணர்ச்சியற்ற குரலில் அப்பா சொன்னார். அம்மா கதறி அழுதுகொண்டே தரையில் விழுந்தார். ஆனால், நான் மிக இயல்பாகவே கேட்டுக்கொண்டிருந்தேன், அப்பா என்ன சொல்வார் என்பதை நான் ஏற்கனவே புரிந்துகொண்டேன்.
இவ்வாறாக எனது திருமண வாழ்க்கை நிறைவடைந்தது. என்ன செய்வது, என் துர்பாக்கியம். அப்பா என்னை வயதான கிழட்டுக் கணவரிடம் ஒப்படைக்கவில்லை, இளவட்டமாகப் பார்த்துத்தான் கட்டிக் கொடுத்தார். என் தலையெழுத்து, யாருடைய குற்றமும் இல்லை. எனக்குச் சொல்லிக்கொள்ளும்படியாக வருத்தம் எதுவும் இல்லை மனதில். சிறப்பான ஒன்றை இழந்துவிட்டேன் என்ற அசாதாரண உணர்வு எதுவும் இல்லை. எல்லோரும் எனக்கு சர்வநாசம் நிகழ்ந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். எனக்கு என்ன சர்வநாசம் நிகழ்ந்ததென்று ஒன்றும் விளங்கவில்லை. மீன் சாப்பிட முடியாதா, சாப்பிடவில்லை. ஏகாதசிக்கு விரதம் இருக்க வேண்டுமா, இருக்கிறேன். நன்றாகச் சாப்பிடுவதற்கோ உடை அணிவதற்கோ எனக்கு ஒருபோதும் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் அந்த ஆள் மீது ஒரு பிரேமை தோன்றியிருந்தது உண்மைதான். இனி அவரைப் பார்க்க முடியாது என்பது மட்டும்தான் கவலை.
விதவையான பிறகு பலமுறை என் மாமியார் வீட்டுக்குச் சென்றேன்.
மாமியாருக்குச் சேவை செய்கிறேன், முகர்ஜி வீட்டில் பிள்ளை இல்லாத முதியவருக்கு அத்தனைக் கவலை, என்னால் முடிந்தவரை அந்தக் கவலையை அகற்ற முயற்சிக்கிறேன். ஏகாதசி அன்று நானும் எனது மாமியாரும் முழு விரதம் இருக்கிறோம், மாலையில் அவரது பாதத்தில் எண்ணெய் தடவி நீவுகிறேன்.
நான் தரித்திரம் பிடித்த மருமகள், என்னை வீட்டுக்குக் கொண்டுவந்து தான் தனது பொன் நிலவைப் போன்ற மகன், பால் போன்ற பிள்ளை இறந்து போனான் என்பதாக எனது மாமியாரின் தங்கை ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அக்கா மகன் மீது அவருக்கு இவ்வளவு பாசம் இருந்ததை, அந்த அக்கா மகன் உயிருடன் இருக்கும்வரை ஒருநாளும் பார்த்ததாக என்னால் நினைவுகூர முடியவில்லை.
ஒருமுறை அப்பாவின் வீட்டுக்கு வந்தபோது, நசுமாமா வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போய்விட்டார் என்று கேள்விப்பட்டேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஹலிசாகரில் உள்ள ஒரு காளி கோவிலில் அவர் இருப்பதாகவும், அங்கே கங்கைக் கரையில் உள்ள பாழடைந்த இரண்டு கோயில்களில் பூஜை சடங்குகளைச் செய்துகொண்டிருப்பதாகவும் செய்தி வந்தது.
இந்தத் தகவலைச் சொன்னது பக்கத்துத் தெருவில் வசிக்கும் கோயலின் தாயார் புதோ. கோஷ்பாராவின் திருவிழாவுக்குப் போய்விட்டு வீடு திரும்பும் வழியில் அவர் ஹலிசாகருக்குச் சென்றுள்ளார், அங்கேதான் நசுமாமாவைப் பார்த்துள்ளார். நான் மனதுக்குள்ளேயே நினைத்துக்கொண்டேன், அவர் செய்தது சரிதான். என்னவோ ஏதோ தெரியவில்லை நசுமாமா எது செய்தாலும் அது சரி என்றே என் மனதுக்குத் தொன்றுகிறது.
இப்படியே ஒவ்வொரு நாளும் கழிந்தது. வயதான மாமியாரை அவ்வளவு கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன், வயதான காலத்தில் அவர் தனியாகக் கஷ்டப்படுவார் என்பதால் அப்பாவின் வீட்டுக்குப் போய் நீண்ட நாள் இருக்க முடிவதில்லை. ஒரு நாள் மாமியார், “வாம்மா, சன்யால்மொஷாய் வீட்டுல போயி பாகவதம் கேட்டுட்டு வருவோம்” என்றார்.
“அது யாரு?”
“இந்தத் தெருவின் வயதான சன்யால் தாத்தா, பாத்ததில்லையா கிழவரை?”
சன்யால்மொஷாய் வீட்டிற்குச் சென்றோம். வீட்டைப் பார்த்தவுடன் அவர் நல்ல நிலையில் இருப்பதாகத் தோன்றியது. அவரது இரண்டு மகன்கள் கொல்கத்தாவில் நல்ல வேலையில் இருப்பதாகவும், அவர்களது மனைவி, மக்கள் அவர்களுடனே கொல்கத்தாவில் உள்ள வீட்டில் வசிக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டோம். சன்யால்மொஷாய் மனைவியை இழந்தவர். தனக்கு எழுபத்தாறு வயது என்று அவரே சொன்னார். விதவையான அவரது சகோதரி ஒருவர் வீட்டில் இருக்கிறார், அவர்தான் சமையல் வேலைகளையெல்லாம் செய்கிறார். சன்யால் எங்களை சிறப்பாகக் கவனித்துக் கொண்டார், எங்களுக்கு பாகவதக் கதைகள விளக்கிக் கூறினார்.
அன்றிலிருந்து தினமும் சன்யால்மொஷாய் வீட்டுக்குப் போவேன். அவர் என்னை மிகவும் நேசித்தார், யோகவாசிஷ்டமும் பாகவதமும் அவருக்கு மிகவும் பிடித்த நூல்கள். நான் இரண்டு நாட்கள் போகாமல் இருந்துவிட்டால் சன்யால்மொஷாய் எனது மாமியார் வீட்டுக்கு வந்துவிடுவார். என் மாமியார் அவருக்கு மருமகள். “ஏ மருமகளே!” என்று கூப்பிடுவார்.
வயதான மாமியார் தலையில் சீலைத்தலைப்பைப் போட்டுக்கொண்டே என்னவென்று கேட்பார்.
“நிர்மலா (என் பெயர்) எங்கே? கூப்புடு.”
நான் வெளியில் வந்து, “என்ன தாத்தா?” என்பேன்.
“தாத்தா என்னடி தாத்தா, நான் உனக்குப் பெரியப்பா வேணும். உன் மாமனாரைவிட பதினோரு வயசுதான் மூத்தவன். சரி, நீ கொஞ்சநாளா ஏன் வீட்டுப்பக்கம் வரவே இல்ல? இன்னைக்குக் கண்டிப்பா வரனும்.”
மீண்டும் தவறாமல் செல்வேன். சன்யால்மொஷாய் இப்போதெல்லாம் வேறு யாரும் பார்க்க வருவதை விரும்பவில்லை. என்னிடம் அவர் எதையோ கண்டுகொண்டார், என்னைக் கண்டாலே அவருக்கு அவ்வளது மகிழ்ச்சி. நான் போகவில்லை என்றால், அவருக்கு யோகவாசிஷ்டம் படிக்கப் பிடிப்பதில்லை.
ஒரு நாள் அவரிடம் கேட்டேன். “பெரியப்பா, நான் ஒரு முட்டாள் பெண், என் கிட்ட இருந்து அப்படி உங்களுக்கு என்ன கெடச்சது?”
“என்ன கிடைச்சதோ தெரியல. ஆனால் நீ வந்தால்தானம்மா எனக்கு கீதையும் யோகவாசிஷ்டமும் வாசிக்கும்போது அர்த்தமுள்ளதா இருக்கு. அதன் சுலோகங்கள்ல இருந்து புதுப்புது வியாக்கியானங்கள் புறப்பட்டு வருது. சாஸ்திர விவாதங்களின் நோக்கம் ஆனந்தம் பெறுவதாக இருந்தா, அந்த ஆனந்தத்தை அவ்வளவு எளிதாக வாங்கிவிட முடியும் அம்மா நீ வருவதாக இருந்தால்.”
“அப்படியானால் சொல்லுங்க, பெரியப்பா! நீங்க பாகவதம் சொல்லிக் கேட்க என்னைய மாதிரி யாரும் உங்களுக்கு ரொம்ப நாளா கெடைக்கலையா?” சிரித்தபடி கேட்டேன்.
“உண்மை அம்மா, பிறருக்குப் பாடம் சொல்லுவது இவ்வளது ஆனந்தத்தைத் தரும் என்று இவ்வளவு நாட்களாக எனக்குத் தெரியாது. இதுவரையிலும் நானே பயிற்சி செய்து வந்தேன். ஆனால் இன்று எல்லாத்தையும் வேறு விதமாப் புரிஞ்சுக்கிறேன். கேட்பதற்குப் பொருத்தமான ஆள் கிடைச்சதாலே…”
எனக்கும் பிடித்திருந்தது என்றே சொல்லலாம். மனதுக்குள் ஏதோ மாற்றம் நிகழ்வதைப் போல இருந்தது. இல்லற வாழ்வில் என் மனதுக்கு எப்போதுமே ஈடுபாடு இருந்ததில்லை, இப்போது அது மேலும் அலட்சியமாகிவிட்டது. வயதான மாமியார் மட்டுமே அந்த வாழ்வுடன் பிணைத்திருந்த ஒரே தளை. கிழவர் அழுகிறார், நான் உட்கார்ந்து யோகவாசிஷ்டத்தின் உபதேசங்களை வாசித்துக்காட்டுகிறேன். ஆனால் அது அவரது மனதைத் தொடவில்லை. அவருக்கு எத்தனை ஆழ்ந்த மனம்.
இந்த வயதிலும் பலாப்பழத்தையும் முருங்கைக்காயையும் பங்கு பிரிப்பதில் மாமியாருக்கு அவரது தங்கையுடன் சண்டை. “அம்மா, இந்தப் பலாப்பழமும் முருங்கைக்காயும் பங்கு பிரிச்சா எம்புட்டுத் தேறப் போகுது? அது என்னத்துக்குப் பயன்படப் போகுது? பகவானை சேவிச்சிக்கோங்க” என்பேன் நான்.
பங்குனி மாதத்தில் வழியெங்கும் ஓர் அற்புதமான நறுமணத்தைப் பரப்பிக்கொண்டு எலுமிச்சைப் பூக்கள் மலர்ந்தன. மூங்கில் காட்டின் தரை முழுக்க காட்டுப்பூக்களால் நிறைந்திருக்கிறது. குயில் கூவும்போது மதிமயங்கிப் போகிறது மனம், அப்போது எதைக் குறித்தெல்லாம் சிந்திக்கிறேன்! பால்ய காலத்தைப் பற்றி, அப்பா-அம்மாவைப் பற்றி, கணவரைப் பற்றி – வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காவிட்டாலும் எல்லாமே கிடைத்திருந்தது எனக்கு. கட்டுப்பெட்டியான யாராவது இந்த வாழ்வில் உனக்கு என்ன கிடைத்தது காட்டு என்று கணக்குக் கேட்டால், என்னால் எதையும் காட்ட முடியாதுதான். அழுக்குப் படிந்து பாதிக்கும் மேல் நைந்துபோன எனது சேலையிலும், மிக மெலிதாய் கைகளில் நிறம் மங்கிக் கிடக்கும் தங்க வளையலிலும் எந்த லாபத்தின் தடயத்தையும் யாராலும் கண்டுபிடிக்க முடியாதுதான். இருந்தாலும், எவ்வளவு அற்புதமான ஒன்றின் முகவரி கிடைத்திருக்கிறது, அதன்மூலம் முடிவற்ற மகிழ்ச்சியின் பொக்கிஷம் இன்று எனக்காகத் திறக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்தும் துச்சமாகிப் போய்விட்டன என்று என் மனம் சொல்கிறது.
ஒரு நாள் என் மாமியார், “மருமகளே, உங்க கிராமத்திலிருந்து ஒரு பையன் எங்கள் கிராமத்தில் ஹரி காலுவின் வீட்டிற்கு வந்து வேலை செய்றான். பிராமணப் பையன், திவ்வியமான தோற்றம். ஆனால் பாவம், காலுவீட்டில் நீர் எடுக்கிறான். தொழுவத்தில் சாணி அள்ளுறான், இது என்ன கொடுமை! ரொம்பவே ஏழையாக இருப்பான்னு தோணுது. நான் பார்க்கல, யாரோ நேத்து வழியில் சொன்னாங்க. மருமக ஊருக்காரப்பையன்னு சொன்னாங்க” என்றார்.
கேள்விப்பட்ட அன்று நசுமாமாவை வழியில் சந்தித்தேன். முதலில் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. நசுமாமாவின் தலையில் நீண்ட கூந்தல், புடவை அணிந்திருந்தார், அரை முக்காடு, கைகளில் கண்ணாடி வளையல், பெண்ணின் தோற்றம். ஆனாலும் முகத்தில் லேசாக மீசை, தாடி தெரிந்தது. அவருடைய இந்த வடிவான முகத்தைப் பார்த்து எனக்குச் சிரிப்பு வந்தது. என்னைப் பார்த்து, “ ஏய் பாஞ்சி, நல்லா இருக்கியா?” என்று பெண்கள் பேசும் தொனியில் கேட்டார்.
நான் திகைப்புடன், “இது என்ன வேசம் நசுமாமா?” என்று கேட்டேன்.
நாசுமாமா வினோதமாகச் சிரித்துவிட்டு, “ஏய், அதெல்லாம் அப்படித்தான்” என்றார்
“நீங்க காலுவீட்டுப் பாத்திரங்களை கழுவுறீங்களாம், தண்ணி எடுக்கிறீங்களாமே?”
“அதுல என்ன தப்பு?”
“உங்களுக்கு எல்லாம் தெரியும்.”
வயதான எனது மாமியார் ஆவணி மாதத்தில் உடலை விட்டுப் பிரிந்தார். பத்து நாட்களுக்கு மேல் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு, நள்ளிரவில் இறப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு கண்களில் நீர் ததும்ப என்னைப் பார்த்து, “அம்மா, உன்னைத் தன்னந்தனியாக விட்டுவிட்டுப் போகிறேனே?” என்றார்.
கிழவியின் துயரமான குரல் என் மனதில் வேதனையை உண்டாக்கியது. காய்ச்சலால் கொதிக்கும் அவரது இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டு கூறினேன், “ஏன் மா, என் தங்க வளையல் இருக்கு, ஒரு பிகாவுக்கும் மேல் நெல் வயல் இருக்கு, எனக்கு வேறென்ன கவலை? எனக்காக எதுவும் யோசிச்சிக் கவலைப்படாதீங்கம்மா.”
அவரை அவரது மொழியிலேயேதான் சமாதானப்படுத்த முடியும். எனக்குத் தெரியும் இப்போது யாருக்கு அருகில் நான் இருக்கிறேனோ அவர் எப்போதும் என்னைக் கைவிடமாட்டார், காலடியில் எனக்கு நிச்சயமாக இடம் தருவார்.
நசுமாமாவை மீண்டும் ஒருநாள் சந்தித்தேன். அவர் ஒரு பொதிமூட்டை நிறைய அழுக்குத்துணிகளை எடுத்துக்கொண்டு துவைப்பதற்காகக் கண்மாய்க்கரைக்குச் சென்றுகொண்டிருந்தார். “இந்த மாதிரியான வேலை எல்லாம் என்னிடம் கொடுங்க நசுமாமா. நான் உங்களைச் செய்யவிட மாட்டேன்” என்றேன்.
வற்புறுத்தி அந்தத் துணிகளை எல்லாம் அவரிடமிருந்து பிடுங்கி நானே துவைத்து முடித்தேன். என் கண்ணுக்கு முன்னால் அவரை இந்த மாதிரியான வேலைகளை எல்லாம் செய்யவிட மாட்டேன். “ஹரி காலுவின் தொழுவத்தை நானே சுத்தம் செய்து விடுகிறேன்” என்றேன்.
“வேணாம் பாஞ்சி, நீ லட்சுமி, எல்லாரும் என்ன சொல்லுவாங்க?”
“எனக்கு அதைப் பற்றி கவலையில்லை.”
“எனக்கு உண்டு”
“பொய், நீங்க எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டீங்க. இல்லைனா, காலு வீட்டுப் பாத்திரங்களைக் கழுவுவீங்களா?”
“பாஞ்சி, இதெல்லாம் உனக்குப் புரியாது. எப்போவும் அதெல்லாம் செய்யாதே.”
அவரைப் பற்றி சன்யால் பெரியப்பாவிடம் சொன்னதும் அவர் உடனே நசுமாமாவைப் பார்த்தாக வேண்டும் என்று கிளம்பிவிட்டார். ஹரி காலுவின் வீட்டுக்குப் பின்னால் ஒரு குளம், குளக்கரையில் மா, பலா மரங்களின் தோப்பு. அங்கே ஒரு மரத்தடியில் சந்திப்பு நிகழ்ந்தது. நசுமாமா கண்களை மூடி உட்கார்ந்துவிட்டார். அப்போதிருந்து சன்யால்மொஷாயுடன் அவருக்கு ஓர் நெருக்கம் தோன்றிவிட்டது. யோகவாசிஷ்டம் கேட்கும் கூட்டத்தில் அவரும் சேர்ந்துகொண்டார்.
“பையன் ரொம்பவே பரிசுத்தமானவன்” என்பார் சன்யால்மொஷாய்.
குளிர்காலத்தின் தொடக்கத்தில் காலுவின் குடியிருப்புப் பகுதியில் காலரா பரவியது. ஒரே நாளில் பதினெட்டுப் பேருக்கு காலரா தொற்றியது, ஐந்துபேர் இறந்துபோயினர். நசுமாமா அவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாருக்கும் உதவிகளைச் செய்யத் தொடங்கினார். ஹரி காலுவின் இளைய தம்பி அவரது உதவியால்தான் உயிர் பிழைத்தார். இரவு பகலும் தூங்காமல், தனது கையாலேயே நோயாளிகளின் உடம்பையும் படுக்கையையும் சுத்தம் செய்வார்.
காலராவிலிருந்து காலுபாரா மீண்டது. ஆனால், அதற்கு மிக அருகிலிருந்த முச்சிபாராவில் பரவத் தொடங்கியது. பயத்தில் அப்போது முச்சிபாராவின் பெரும்பாலானோர் தப்பியோடிவிட்டனர். வயசாளியான ஹிரு முசி நோய் தொற்றி ஒரே நாளில் இறந்துபோனார். அப்போது எல்லோரும் பெரும் அச்சத்திலும் பீதியிலும் இருந்தனர். இறந்த உடல் நாள் முழுக்க வீட்டுக்குள்ளேயே கிடந்தது, யாரும் எடுத்துச் சென்று புதைக்க முன்வரவில்லை. பொழுதுசாய்ந்ததும் நசுமாமா தனியாகச் சென்று பிணத்தைக் கயிற்றில் கட்டி தூக்கிக் கொண்டு போய் கால்வாய்க்கு மறுபுறம் சுடுகாட்டில் போட்டுவிட்டு வந்தார்.
யோகவாசிஷ்டம் கேட்கப் போகும்போது இதைக் கேள்விப்பட்டு நான் உணர்ச்சிவசப்பட்டுப்போனேன். “நானும் போவேன், நசுமாமாவுக்கு உதவியாக இருப்பேன். யார் என்ன சொன்னாலும் சொல்லிவிட்டுப் போகட்டும்.”
பெரியப்பா சிரித்துக்கொண்டே, “இந்த வேலை உனது நசுமாமாவினுடையது. உனக்கானது அல்ல. எல்லா வேலைக்கும் உரிமைப்பாகுபாடு இருக்கு” என்றார்.
“ஏன்? எனக்கு அந்த அதிகாரம் பிறக்கவில்லையா?”
“உனது வயதான மாமியார் இறந்துவிட்டார், உலகில் வேறு வயதானவர்களே இல்லையா என்ன?”
“நீங்க நசுமாமாவிடம் சொல்லுங்க. அவர் என்னை எந்த வேலையிலும் சேர்த்துக்க விரும்ப மாட்டார். நான் போவேன், பெரியப்பா.”
இந்நிலையில் திடீரென ஒரு நாள் நாசுமாமா கிராமத்தை விட்டுப் போய்விட்டார். காலுபாராவைச் சேர்ந்த அனைவரும் அழுது அரற்றத் தொடங்கினர். எனது மாமியாரின் தங்கை மட்டும், “நல்லதாப் போச்சு போய்விட்டான், நல்ல புத்தி வந்துருச்சு. பிராமணப்பிள்ளை இப்படியா நகைப்புக்கு உள்ளாகுறது? ச்சி, ச்சீ!” என்றார்.
பின்னர் முகத்தைச் சுருக்கி சிரித்துக் கொண்டே சொன்னார். “மருமகளின் அப்பா வீட்டு ஆளு. ரொம்ப கஷ்டமா இருக்கும் இல்லையா மருமகளே? அடிக்கடி பாத்துக்கலாம்! அதுக்காகத்தான் பையன் வேற கிராமத்துல இருந்து இந்தக் கிராமத்துக்கு வந்தானோ என்னவோ! இருக்கலாம், என்ன இருந்தாலும் சொந்த ஊருக்காரங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசைய இருக்கிறதுதானே…”
வில்லிருந்து விடுபட்ட அம்பைப்போல நேராக நிமிர்ந்து நின்றபடி, “ஆமாம், நிச்சயமா. எனக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு, இருப்பது நியாயம்தானே” என்றேன்.
ஒருநாள் ஹரி காலு சன்யால் பெரியப்பாவிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார். “இப்படியும் ஒரு மனுசன் இருக்க முடியுமா? இளைய தம்பியைக் காப்பாத்திக் கொடுத்தான், காலைத் தொட்டுக் கும்பிடப் போனேன். நீ பிராமணன், உன்னை என் வீட்டு எடுபிடி வேலைகளை இனிமேலும் செய்யவிட மாட்டேன் என்றேன். இரண்டுமாத சம்பளப் பாக்கி இருந்தது, போகும்போது ஒரு பைசாகூட வாங்காமல் போய்விட்டான். திடீரென ஓடிப்போய்ட்டான். என்னைய அவர் மன்னிச்சிக்கிட்டா போதும்.”
கைகூப்பி நசுமாமாவை நினைத்து ஏதோவொரு திசைநோக்கிக் கும்பிட்டுக்கொண்டார்.
பங்குனியில் மீண்டும் வனமெங்கும் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மீண்டும் வழியெங்கும் குயிலின் இசை கேட்கிறது. முசுகுந்தச் சம்பாப் பூக்களின் மணத்தில் கண்மாய்க்கரையில் வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. இப்போது நான் முற்றிலும் அனாதாரவான பெண். நாள்தோறும் மாலையில் யோகவாசிஷ்டம் கேட்க சன்யால்மொஷாயின் வீட்டுக்குப் போகிறேன். முற்றிலும் நிர்க்கதியாகவும் அனாதரவாகவும் உணரும்போது அங்கே சென்றுதான் ஆகவேண்டும் என்று தோன்றுகிறது.
குறிப்பு:
‘நசுமாமா ஓ ஆமி’ என்னும் கதையின் தமிழாக்கம் இது. வங்காள நவீன இலக்கியத்தில் பால்புதுமையர்களைப் பற்றிய குறிப்பு இடம்பெறும் முதல் சிறுகதையாக இது சுட்டப்பெறுகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிராமப்புற வங்காளத்தின் சமூகச் சூழலையும் பெண்களின் நிலையையும் சாதியின் இருப்பையும் எவ்விதப் பிரச்சாரத் தன்மையுமின்றி வெளிப்படுத்துவதாக இக்கதை அமைகிறது. பூஷணின் மற்ற கதைகளைப் போலவே வர்க்கம், சாதி, பாலினம் ஆகியவற்றின் சமூக இருப்பைப் பதிவு செய்வதுடன் மாற்றுப்பாலினத்தவரின் இருப்பையும் பதிவு செய்வதன் வழியாக இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.