புறத்தின் அழகும் அகத்தில் படியும் என்பதிலும் தவறில்லை
ஒவ்வொரு நாளும் வீட்டிற்குள் வந்தவுடன்
நான் பேசியல் செய்துக் கொள்கிறேன்
எனது பேசியல் என்பது
சோப்பு போட்டு முகம் கழுவுவது அவ்வளவுதான்
பிம்பத்தைச் சுமந்தால் கண்ணாடியும் மூர்ச்சை அடைந்து விடும்
என்று யாரோ என் காதில் சொன்ன
நாள்தொட்டு முகம் கழுவிக்கொண்டு
கண்ணாடி முன் போவதில்லை
வட்ட முகம் குண்டு முகம்
சதுரமுகம் தட்டைமுகம்
வத்தல் முகம் தொத்தல் முகம்
பால்முகம் பளிங்குமுகம்
வழுவழு முகம் குளுகுளு முகம்
நரநர முகம் சரசர முகம்
கொழுப்பு முகம் கொள்கை முகம் என்று
மனிதர்களுக்கு எத்தனை எத்தனை முகங்கள்
இவற்றைப் பார்க்கும் போதெல்லாம் பூக்களை நினைத்துக் கொள்கிறேன்
பேருந்தின் கூட்ட நெரிசலில்
பழகிய முகம் என்று உற்றுப் பார்த்தபோது
தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார் அவர்
பக்கத்தில் அழைத்து ஏன் என்று கேட்டபோது
தான் முகம் மாற்றும் நேரத்தில்
சிக்கிக்கொண்ட சங்கடத்தைச் சொன்னார்
பேண்ட் சட்டை பாக்கெட்
முதுகுப்பைகள் கைப்பைகள்
யாவற்றிலும் முகங்களை நிறைத்துக் கொண்டு
ஆண்களும் பெண்களும் சுமந்து திரிகிறார்கள்
உங்களுக்குத் தெரியாதா என்று ஏளனப் பார்வையை வீசிவிட்டு
தனக்குக் கிடைத்த மாற்று முகத்தை அணிந்து கொண்டு
இறங்கி போகிறார்
அவரது கண்கள் இரண்டும் பிளாஸ்டிக்காலும்
காதுகள் இரண்டும் மண்ணாலும்
இருப்பதனை அறிந்து துணுக்குற்றேன்
நடிப்பைத் தொடர வேண்டி ஸ்ரீதேவி
மூக்கை மாற்றிக்கொண்டார்
ஆட்டத்தைத் தொடர வேண்டி மைக்கேல் ஜாக்சன்
பிளாஸ்டிக் முகத்தை அணிந்து கொண்டார்
இப்படித்தான் நடிப்பிற்காக ஆட்டத்திற்காக அதிகாரத்திற்காக வாய்ப்பிற்காக ஒவ்வொருவரும் மாற்று முகங்களைச் சுமந்து கொண்டிருக்கிறோம்
போட்டோ ஸ்டுடியோவில் வைத்து விட்டு வந்த முகத்தை
யாரோ ஒருவர் எடுத்துக் கொண்டு போய் விட்டதாகத்
தோழி ஒருத்தி குறைபட்டுக் கொண்டார்
நன்றியின் வெளிச்சத்தால் ஜொலிக்கும் நாய்க்கண்களைப்போல
உன் முகம் ஒளிர்கிறது
என்று சொன்ன என் தாத்தாவின் போதை வார்த்தைகளை நினைத்துக் கொண்டு
என்னிடம் இருக்கும் ஒரே முகத்தை தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன்.
மு.ரமேஷ்