-->

அண்மை

தொடர் வண்டித் தடத்தில் ஓர் தொடராக் கதை - சரண் செயராமன்


செம மழை, ஏதாவது ஆர்டர் செஞ்சி சாப்பிடலாம்னு ஒரு பீட்சா வாங்கி சாப்பிட்டு அந்த மழைய ரசிச்சிட்டு இருந்தோம் குடும்பத்தோட... இரவு 11 மணி இருக்கும் நண்பனோட அழைப்பு அந்த ஓசைல தெளிந்த வண்ணமாய் கால் அட்டன் பண்ணி பேசுனேன், வரியா தம் அடிக்க போலாம்னு கேட்டான்.. இது வழக்கமா செய்யுற வேலை தான்!!

இரவு நேரத்துல பைக் ரைட் பண்றது புடிக்கும்.. சரி மழையும் விட்டுடுச்சு, நா வரேன்னு சொல்லிட்டு என்னோட வண்டிய எடுத்துட்டு பஸ் ஸ்டான்ட் பக்கம் வந்து தம் அடிச்சோம்... சரி! வா ஒரு ரைட் போவோம்னு சொன்னான், அன்னைக்குனு பாத்து அந்த ரயில்வே சுரங்கப்பாதை வழியா போனோம். அன்னைக்குதான் அந்தக் காட்சியைப் பார்த்தேன்...ஒரு நிமிஷம் உடம்பு நடுங்கிடுச்சு, இந்த சமுதாயத்து மேல தீராத கோவம் அந்த ஒரு நொடி வந்து போச்சு ஒரு திருநங்கை தனக்கான உணவை சாப்டுட்டு இருந்தா.!!! இதுல என்ன இருக்கு அப்படினு நீங்க கேக்கலாம்.. நா சொல்றேன் முடிஞ்சா புரிஞ்சிக்கோங்க,

பாலியல் தொழில் நடக்குற அந்த இடம், இரவு 11:30 மணி இருக்கும், அது முட்செடிகள் இருக்கும் புதர், அந்த சுரங்க பாதையைக் கடந்து போகும்போது முகம் சுளிக்க வெக்க கூடிய அளவுக்கு அடிக்கும் சிறுநீர் துர்நாற்றம். இந்த மாதிரி சூழ்நிலைல ஒருதவங்க அங்க உட்கார்ந்து சாப்புட்றாங்கனா நம்மள நாமளே சுயபரிசோதனை பண்ணக்கூடிய நிலைமை அது... என்னடா அமைதியா வரனு நண்பன் கேக்கும்போது தான்!

"இல்ல! இந்த சமூகம் அமைதியா இருந்துருந்தா இந்த நிலை வந்துருக்காதுனு" சொன்னேன்.

அன்றைக்கு அந்த இரவ கடக்கறதே பெரிய சவாலா இருந்துச்சு. அடுத்த நாள் நானே என் நண்பன அழைச்சு அதே இடத்துக்குப் போக யோசிச்சேன். ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல தொடர்ந்து மூணு நாள்.. அவங்களப் புடிச்சு பேசணும்னு மனசு சொல்லிட்டே இருந்துச்சு ஆனா முடிவு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் போல அதான் என்னய பாத்து ஓடிட்டே இருந்தாங்க. மூன்று நாள் துரத்தலுக்கு அப்பறம் ஒரு நாள் அவங்க என்னைப் பாத்துட்டு ஓடின எதிர் திசைல இருந்து போய் அவங்களப் புடிச்சேன். சார்!! சாரி.. சார்!! என்ன விட்ருங்க சார்!!னு சொல்லும்போது தான் புரிஞ்சிக்கிட்டேன் என்னோட ஆஜானுபாகுவான தோற்றம் அவங்கள என்னை போலீஸ்னு நெனக்க வச்சிட்டு. நானே புரிஞ்சிகிட்டு சொல்லிட்டேன் ஐயோ பயப்படாதீங்க நா உங்க கிட்ட பேசணும்னு தான் உங்கள துரத்துனேன் ஆனா நீங்க தான் ஓடிட்டே இருந்திங்கனு அப்பவும் அவங்க பயம் போகல, சரி இவங்கள சமாதானம் படுத்த எனக்கு வேற வழி இல்லாம அவங்களோட பாஷையைப் பேசுனேன், எஸ் அவங்க கூட நெறய பயணிச்சிருக்கேன் அதனால அவங்க பேசுற பாஷை நல்லாவே தெரியும். எப்படி அந்த ஒரு மாற்றம்னு தெரியல அவங்க மொழியைப் பேசுனதும் ஒரு சகோதரத்துவம் தெரிஞ்சிது அவங்க உடல் மொழில. எனக்கு சில கேள்விகள் இருக்கு கேக்கலாமானு கேட்டதுக்கு கேளு செல்லம்!! நா பதில் சொல்றேன்னு சொன்னாங்க. உங்க பேரு, அக்ஷயா!. எங்க இருக்கீங்க, இங்க பக்கத்துலதான்டி செல்லம். ஜமாதத்துல இருக்கீங்களானு கேட்டேன்.. இல்லடி செல்லம் நா வீட்டோடு இருக்கேன் ஜம்மாத்துலாம் சரிப்பட்டு வராது. ஆமா நீ யாரு எதுக்கு இதெல்லாம் கேக்குற நல்லா பேசுறியேனு கேட்டாங்க. இல்ல அன்னைக்கு ஒரு நாள் பாத்தேன் உங்கள நீங்க தான இங்க உட்காந்து சாப்டுட்டு இருந்தீங்க. ஆம்மா செல்லம், எப்படி இந்த நாத்தத்துல உட்காந்து அதுவும் இவளோ கொசுகடிலனு கேட்டேன் அப்போ ஒரு சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க, செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு. வா சொல்றேன்னு சொல்லிட்டு என்னையும் அதே இடத்துக்கு கூட்டிட்டு போய் அங்க ஒரு வயர் கூடைல இருந்து பொட்டலம் ஒண்ண எடுத்தாங்க. நாலு இட்லி இருந்துச்சு அதுல. இதே தான் அன்னைக்கு சாப்டுட்டு இருந்தேன். என்ன பண்ண சொல்ற செல்லம் பூ*** ****** தான் வரோம் மொதல்ல மாதிரி இருந்தா அத மட்டும் பண்ணிட்டு வீட்டுக்குப் போய்டலாம் ஆனா இப்ப காசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அதான் ராத்திரி பூரா இங்கயே இருந்து ஏதோ சம்பாதிச்சிட்டு போறோம். கொரோன வேற நாசம் பண்ணிடுச்சு. இப்படிலாம் கஷ்டபடணுமா ஏன் இந்த மாதிரி வாழ்க்கையை அமைச்சிங்க இப்ப உங்களுக்குத் தான கஷ்டம்னு சொன்னது தான்... நீ! வேற செல்லம் நான் சட்ட போட்ட பொட்டையாவே இருந்துருப்பேன்.. நல்லா வேலைக்கும் போயிருப்பேன்!! என்ன இந்தத் திருநங்கைக விவரம் தெரியாத வயசுல இப்படி கூட்டிட்டு வந்துடுச்சிங்க...

அறுத்தத ஒட்ட வெக்க முடியுமா சரி விடு!!..
இந்த ஒரு இட்லி சாப்பிடுன்னு கைல ஒரு இட்லிய கொடுத்தாங்க...

பூமி காலுக்கு அடியில இருந்து நழுவுறத அப்ப உணர்ந்தேன். ஒரு நிமிஷம் என்னையே பல கேள்விகள் கேக்கவேண்டியதா இருந்துது. ஆனா கேள்விகளைக் கேட்கவந்தது என்னமோ அவங்களத் தான். சரி செல்லம் நீ கெளம்பு போலீஸ் மாமா வர நேரம் ஆச்சுனு சொன்னதும் நா கிளம்பிட்டேன். அதே வாரம் ஒரு பால் புதுமையினர் (LGBT) நிகழ்ச்சியில பேச்சாளரா எனக்கு ஒரு அழைப்பு வந்தது நானும் அத ஏத்துக்கிட்டு அங்க பேச ஒப்புக்கொண்டேன். எத பத்தி பேசணும்னு ஒரு தலைப்பு கொடுத்தாங்க அங்க தான் அந்த நிகழ்ச்சியில பேச ஒப்புக்கொண்டதோட பலனை அடைஞ்சேன்.

ஆமாம்!! "திருநங்கையா இருப்பதோடு கஷ்டம் என்ன மற்றும் அது இயற்கையான நிகழ்வானு"

பேச சொல்லி கேட்டுக்குட்டாங்க அதுக்கான சில பல தேடல்களுக்கு ஆள் ஆனேன் பல மருத்துவர்கள் ஆலோசனை.. சில புத்தகங்களோட உதவியோடு அந்த மேடையை அடைஞ்சேன் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அரங்கம் முழுக்க நிரம்பி இருந்தாங்க... சிறப்பு விருந்தினர்களா மாதர் சங்கப் பெண்கள் மற்றும் சில உயரிய ஆட்களும் வந்திருந்தாங்க.. அவங்களோட அந்த மேடையைப் பகிர்ந்ததுக்கு அவளோ சந்தோஷம் ஆனா இந்த வாய்ப்பை இப்படியே விட்டுடக்கூடாதுனு இங்கு இருந்து ஒரு உதவிய எடுத்து போயி ஆகணும்னு அவளோ ஆர்வம்... அதே மாதிரி என்னோட தருணம் வந்துச்சு, பேச ஆரம்பிச்சேன் பேச்சுக்கு நடுவுல "அக்ஷயாவை"பத்தி சொல்ல ஆரம்பிச்சேன் எதிர்ல இருக்க மற்ற திருநங்கைகளுக்கு நினைவோட்டங்கள் எப்படி இருந்துச்சுனு தெரியல ஆனா முன் வரிசைல இருக்க பெரிய ஆட்களுக்கு நான் அவங்க வாழ்வாதாரத்துக்காகப் பேசுறேன்னு சட்டுனு புரிஞ்சிக்கிட்டாங்க அதற்கான அடுத்த நகர்வும் அங்க நடந்துச்சு. முன் வரிசைல இருந்த ஒரு 60 வயதிற்குரிய அம்மா உடனே அவங்கள வரச் சொல்லு சரண்.. நான் என்னோட நிறுவனத்துல receptionistஆ எடுதுக்றேன்னு சொன்னதும் ஒரு பேச்சாளரா வெற்றி அடஞ்சிட்டேன்னு மனசுக்குள்ள அவளோ ஒரு சந்தோஷம் இத எப்படியாவது அக்ஷயா கிட்ட சொல்லிடனும் இனிமேல் அந்த ரயில் பாதைல துர்நாற்றம் அடிக்கும் அந்த இடத்துல நீங்க இருக்க வேணாம்னு சொல்ல மனசு அவளோ துடிச்சுது, அந்த அம்மாவுக்கு அவளோ நன்றி பாராட்டி அன்னைக்கு நிகழ்ச்சிய முடிச்சிட்டு வீட்டுக்கு வர மாலை 6 மணி எனக்கு என்னமோ நேரம் அவளோ வேகமா ஓடல அன்னைக்கு. அதே மாதிரி நண்பனைக் கூட்டிட்டு அன்னைக்கு ராத்திரியே அந்த ரயில் சுரங்கப்பாதை வழியா இரவு 11 மணிக்கு போனேன் அக்ஷயாவைப் பாக்க, முன்னாடி தேடுன இடமெல்லாம் தேடிட்டேன் ஆளையே காணோம் ஆனாலும் விடல 12 மணி ஆயிடுச்சு தூரத்துல ஒரு மொபைல் டார்ச் லைட் அது என்னமோ எனக்கு சிக்னல் தர மாதிரியே இருந்துச்சு சரி நானும் நண்பன் கிட்ட சொல்லிட்டு தானாக அந்த இருட்டுல அவங்க கிட்ட போனேன் ஆனா அந்த வரவேற்பு வேற விஷயத்துக்குனு தெரிஞ்சதும் நான் சொல்லிட்டேன் இல்ல இங்க அக்ஷயாவைப் பாக்க வந்தேன் அவங்கள காணோம்னு சொல்லி முடிப்பேன்னு காத்துட்டு இருந்த மாதிரி, “உனக்கு கத தெரியாத தம்பி அவ செத்து போயி இன்னையோட 12 நாலு ஆகுதுன்னு” சொன்னதும் கொஞ்ச நேரம் என்ன பேசுறதுனே தெரியாம நின்னுட்டு இருந்தேன் அந்த பாதையில போற ரயில் சத்தத்துல தெளிஞ்சி கேட்டேன் எப்படினு, இல்ல தம்பி ரொம்ப பண கஷ்டம்னு சொல்லிட்டே இருந்தா திடிர்னு தேவிடியா தொங்கிட்டாபானு சாதாரணமா அவங்க சொன்னாங்க.

எவளோ கேலி கிண்டல், பொறந்ததுல இருந்து பொட்ட, ஒம்போது, உஸ்ஸு, அலினு கிண்டல் பண்ணி கிண்டல் பண்ணி எவளோ நிராகரிச்சிட்டோம்ல. கொஞ்சம் மதிச்சு அவங்களோட வாழ்க்கையை வாழ விட்ருக்கலாம் அவங்களுக்கான இடத்தைக் கொடுத்திருந்துருக்கலாம். பள்ளிக் கூடத்துல படிக்க விட்ருக்கலாம், ஒரு நல்ல வேலைல உட்கார வெச்சிருக்கலாம் நாம தான அவங்கள அந்த ரயில் பாதை ஓரம் தொழில் பண்ண வெச்சிருக்கோம் நமக்கும் இதுல சம்மந்தம் இருக்கே.. சரி நாம ஒரு வேலை வாங்கி கொடுத்துட்டோம்னு சந்தோஷமா வந்தா.. நான் பேச்சாளரா வெற்றி அடைஞ்சேன் ஆனா ஒரு மனுஷனா அவங்கள நிராகரிச்சு தோல்வி அடஞ்சிட்டேனே. அந்த 60 வயது அம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். எப்போ தான் இந்த சமூகம் மாறும் எவ்ளோ நாள் தான் நிராகரிப்போம். சாதியெல்லாம் யாரு பாக்குறானு பேசிட்டு ஒரே சாதி பொண்ணு தேடுற ஆட்கள் மாதிரி இவங்கள அரசு காகிதங்கள் ஏத்துக்குட்டாலும் ரயில்ல பாத்தா இப்பவும் வராத தூக்கத்த வரவெக்குறோம்ல. இதெல்லாம் எப்போ மாறும். வலிகளைக்கூட தாங்கி கொள்வேன் ஆனால் ஏக்கங்களையும் நிராகரிப்புகளையும் ஒருபோதும் தாங்கி கொள்ள முடியாது.

அது.... நீயும் நிராகரிக்கப் பட்டிருந்தால் புரியும்!!
வலிகளுடன் நான்!!
Author Picture

சரண் செயராமன்

சென்னையைச் சேர்ந்த சரண் செயராமன் ஒரு குரல் கலைஞர், விளம்பரங்களுக்குக் குரல் கொடுத்தும் ஒலிப் புத்தகங்களுக்குக் குரல் பதிவு செய்தும் வருகிறார். தன் அனுபவங்களையும் உண்மை நிகழ்வுகளையும் சிறுகதைகளாக எழுதி வரும் குயர் செயற்பாட்டாளர். இவரைப் பல தனியார் அமைப்புகள் விருது வழங்கி பாராட்டியுள்ளன. நாடகத்துறையிலும் இயங்கிவரும் இவர் சமீபத்தில் திருக்குயர் என்ற மேடை நாடகத்தில் நடித்துள்ளார்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு