அந்தோனியோ கிராம்சி இத்தாலியில் பிறந்தவர். 46 ஆண்டுகள்தான் உயிருடன் இருந்தார். ஆனால் அவர் ஒரு பெரிய அறிவுப் புரட்சியைச் செய்தார். செவ்வியல் மார்க்சியம் என்ற தளத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுபோக உதவியவர் அவர். உடல்ரீதியாகப் பல இன்னல்களுக்கு உள்ளானவர். அவரது முதுகெலும்பு வளர்ச்சியின்மையால் அவரால் எந்நேரமும் நிமிர்ந்து நடக்க முடியாத நிலை. மேலும் பல உடல்ரீதியான பாதிப்புகளுக்கு அவர் உள்ளான போதும், அவரது தந்தையார் வேலையை இழந்த போதிலும், அவருக்குச் சரியான நிதி ஆதாரங்கள் கிடைக்காத போதிலும், படிப்பைத் தொடர்வதற்கு அவர் சிரமப்பட்ட போதிலும், அவர் அக்காலத்திய இத்தாலியில் நிகழ்ந்த அரசியல், சமுகப் பிரச்சனைக்களினூடே தன்னை ஈடுப்படுத்திக் கொண்ட காரணத்தினால், இடதுசாரிக் கட்சி காலுன்றிய அந்தக் காலத்தில், அதனால் ஈர்க்கப்பட்டு, அதன் கருத்தியல் சார்ந்து அவர் இயங்கத் தொடங்கி, பின்னாளில் அதன் தலைவராகவும் அவர் உருவெடுத்தார். ரஷ்யப் புரட்சிக்கு அடுத்தக் கட்டமாக என்ன நடக்க வேண்டும், மற்ற அய்ரோப்பிய நாடுகளில் இந்தப் புரட்சி எவ்வாறு பரவ வேண்டும் என்பதைப் பற்றி தீர்க்கமான பார்வையைக் கொண்டிருந்தார். செவ்வியல் மார்க்சியவாதம் ஏன் பயன்படாது என்ற கேள்விக்கான பதிலை 1920-30களிலே அவர் புரிந்துக் கொண்டிருந்தார்.
அற்புதமான மனிதர் கிராம்சி. அவர் உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பல சிக்கல்களுக்கு உட்பட்டு இருந்தாலும், மார்க்ஸ் செய்யாத ஒரு புரட்சியை, அறிவுசார் புரட்சியைக் கிராம்சி செய்ததாக நான் பார்க்கிறேன். கொச்சையாகச் சொல்ல வேண்டும் என்றால், மார்க்ஸ் எங்கே கோட்டை விடுகிறார் என்றால், அடிப்படைப் பொருளாதார வாதத்திலிருந்து அவர் வெளியேவர மறுக்கிறார். முதல் முறையாக, புதிய மார்க்சியவாதிகளான, பிராங்பர்ட் அறிஞர்களும் கிராம்சி போன்றோர்களும் இந்தப் புதிய மார்க்சியவாதத்தைக் கட்டமைக்கின்றனர். அடர்னோ, ஆர்க்கைமர், பின்னாளில் அல்துசர் போன்றோர் அதை வளர்த்தெடுக்க ஒரு பாதையைப் போட்டுத் தந்தவர் கிராம்சி. Hegemony, ideology, historicism ஆகியவை பற்றிய ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் கிராம்சி. முதலாளிகள், மூலதனம் சார்ந்து இயங்குபவர்கள் எவ்வாறு மக்களை, சமுக அங்கங்களை, பண்பாட்டு ரீதியாக, கருத்தியல் ரீதியாக, தங்கள் பக்கம் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிய கருத்தியல் விளக்கத்தை அளித்தவர் கிராம்சி. இன்றைக்கும் நீங்கள் தமிழ்நாட்டுச் சூழலில் ஒன்றைப் பார்க்கலாம். ஒவ்வொரு தேர்தலிலும் நாம் நடிகர்களைச் சார்ந்து, அவர்கள் கருத்துகள் சார்ந்து இயக்கப்படுகிறோம். திரைக்கு வெளியே நமக்கும் அவர்களுக்கும் எந்த வாழ்வியல் தொடர்பும் கிடையாது. ஆனால், வெகு மக்கள் ஊடகங்கள் இவர்களின் செல்வாக்கைப் பிரகாசமாக வெளிச்சம் போட்டு அறிமுகப்படுத்தும் காரணத்தினால், இந்த நடிகர் இவருடன் சேர்ந்தால் இது நடக்குமா என்று நம்மை யோசிக்க வைப்பதுதான் கிராம்சி சொன்ன cultural hegemony. ஒரு சராசரி மனிதர், தினமும் சாப்பாட்டுக்காக அல்லல்படும் நபர், ஒரு புரட்சி நடிகரைப் பார்த்து தன்னிலை மறப்பது ஏன்? வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், அந்தக் காலத்தில் எம்ஜியார் ரசிகர்கள் ஏன் அவர் படங்களைப் பார்த்தார்கள், இந்தக் காலத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஏன் அவர்கள் படங்களைப் பார்க்கிறார்கள் என்பதற்குக் கிராம்சிய விளைவைப் பற்றிய புரிதல் நமக்கு அவசியம். அஜித்/விஜய் ரசிகர்கள் ஏன் அவர்கள் படங்களைப் பார்க்கிறார்கள் என்றால், இதில் கிராம்சிய விளைவு இருக்கிறது. கிராம்சிய விளைவு இல்லையென்றால், எம்ஜிஆர், ரஜினி, அஜித், விஜய் எல்லோரும் தோற்று விடுவார்கள். அவர்கள் படங்கள் ஓடும் அரங்கங்களில் ஆள் இருக்காது.
இதுதான் பண்பாட்டுரீதியாக நம் மனதில் விதைக்கப்பட்ட மேலாதிக்கச் சிந்தனை விளைவு. அவர்கள் கடவுளாக உருவகம் பெறுவதற்கு முன், நாம் அவர்களைக் கடவுளாக மாற்றுகிறோம். எவ்வாறு மாற்றுகிறோம்? இந்த வெகுமக்கள் பண்பாட்டுத் தளங்களைக் கட்டுப்படுத்தும் மூலதனம் சார்ந்து இயங்குபவர்கள் நமது மூளையில் உட்கார்ந்துக் கொண்டு பண்பாட்டு மூளைச்சலவை செய்வதுதான் இந்த மாற்றத்திற்குக் காரணம்.
கிராம்சி 1926ல் சிறையில் அடைக்கப்படுகிறார். 1934ல் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள்தான் உயிருடன் இருக்கிறார். இதற்கு முன், ரஷ்யாவில் நடந்த துர்பாக்கிய சம்பவங்களும் மார்க்சியத்தின் "தோல்விக்குக்" காரணம் ஆகின்றன. We misread Marxist history because of these so called “violations” by the Stalinist regime. நாம் எல்லாமே முடிந்து விட்டதாக ஒரு மாய பிம்பத்திற்கு வந்ததற்குக் காரணம், இந்த ஸ்டாலின் என்ற தவறான மனிதர் லெனினுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தது. மேலும், இதன் கதை முடிந்து விட்டது, இனிமேல் கதை தொடராது என்று நாம் நினைத்ததும் ஒரு காரணம். We should read it as an aberration or “violation” within the system.
இதையும் மீறி, கிராம்சி இத்தாலியில் நடக்கும் விடயங்களைப் பற்றி மாஸ்கோவிற்குக் கடிதம் எழுதுகிறார், “இங்கு நடப்பது சரி என்று தோன்றவில்லை,” என்று. ஆனால், மாஸ்கோவில் இருந்த அவரது முகவர் அக்கடிதத்தைக் கொடுக்கத் தவறுகிறார், வேண்டும் என்றே. கிராம்சிக்கு இத்தாலிய பொதுவுடமை கட்சியிலேயே ஆதரவு இல்லையென்று இதன் மூலம் தெரிகிறது.
நாம் வரலாறை மேலும் கவனமாக, விரிவாக, பரந்துப்பட்ட பார்வையில் பார்க்க வேண்டும். கேள்விகள் எழுப்ப வேண்டும். இந்தியாவில் ஏன் மார்க்சியம் வளரவில்லை? பொதுவுடமை கட்சிகளை நாம் ஏன் வேறு பார்வையில் பார்க்க வேண்டும்? வெகுமக்கள் ஊடகங்கள் நமக்குச் செய்யும் அநியாயங்கள் யாவை? சராசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இன்னல்களுக்கும் கிராம்சி சொன்ன கருத்தாக்கங்களுக்கும் என்ன தொடர்பு? இவற்றைக் கிராம்சிய பார்வையில் நாம் சிந்திக்க வேண்டும்.
இந்தியாவில் மார்க்சியம் வெகுவாகப் பரவவில்லையே என்று நாம் ஆதங்கப்பட வேண்டும். ஏன் ஆதங்கப்பட வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் தங்களை ஒரு சிறிய எல்லைக்குள் சுருக்கி விட்டனர். மார்க்சியத்தை எந்த அளவிலும் வளர விடக்கூடாது என்று நினைத்தவர்களில்/நினைப்பவர்களில் முதலாளித்துவக் கட்சிகள் முதலிடம் வகித்தால், இடதுசாரிக் கட்சிகள் தங்கள் செயல்பாடுகளால் அந்த நிலைக்கு ஆதரவு அளிப்பது ஒரு சோகமான உண்மை. மார்க்சியம் இந்தியாவில் வளராததற்குக் காரணம் என்ன என்று என்னைக் கேட்டால், நான் சுட்டிக் காட்டக்கூடிய முக்கியமான காரணம், தொண்டர்கள் அல்ல, இடதுசாரிக் கட்சிகளின் தலைமைத் தளங்களில் இயங்கும் தோழர்கள் என்றுதான் கூறுவேன் (ஒரு சில ஆளுமைகளைத் தவிர்த்து). முதலில், மார்க்சியத்தை வெகுமக்களிடம் பரப்ப அவர்கள் பெரிய முயற்சிகளை எடுக்கவில்லை. மார்க்சியத்தை அவர்கள் அடுத்த கட்டத்திற்கு, அய்ரோப்பிய நாடுகளில், கிராம்சி மாதிரியான ஆளுமைகள் கொண்டுபோன அளவிற்கு, இவர்கள் சிந்திக்கவில்லை. இந்திய சமுக யதார்த்தமான சாதியத்திற்கு எதிராக மார்க்சியத்தின் கருத்தியல் பரிமாண வளர்ச்சிக்கு வித்திடவில்லை. இவர்கள் இன்றும் வர்க்கரீதியாகவும், சாதியரீதியாகவும், ஒரு சிறிய வட்டத்திற்குள் தங்களை நுழைத்துக்கொண்டு, தங்களது அமைப்புகளை (அரசியல் கட்சிகள்) வளப்படுத்த, “முற்போக்கு" அரசியல் வளர்ச்சி சார்ந்த நிலையைநோக்கித் தாங்கள் பயணிப்பதாக நினைத்துக் கொள்ளும் utopian நிலையில் இருக்கிறார்கள். அன்று பெரியார் இடதுசாரி இயக்கத்தின்மேல் வைத்த விமர்சனத்தை இவர்கள் இன்றும் உள்வாங்காத நிலையைத்தான் பார்க்கிறோம்.
இரண்டாவது, ஏன் இங்கு மார்க்சியம் காலுன்றவில்லை என்றால், கிராம்சி முன்வைத்த பண்பாட்டு மேலாதிக்கச் சக்தியாகவே இவர்கள் உருவெடுத்து விட்டார்கள். உதாரணம், Youtube ஊடகங்களின் முக்கியமான பயன்பாட்டுப் புரவலர்களில் இடதுசாரிகள், வலது சாரிகள் மற்றும் மயக்க நிலையில் இருக்கும் நாம் அனைவரும் அடக்கம் என்பது உண்மை. மார்க்ஸ் சுட்டிக்காட்டிய அந்நியப்படுதல் மற்றும் லூகாச் சுட்டிக்காட்டிய பருமையாக்கத்தை அன்றும் இன்றும் செய்ய வல்லவைதான் மூலதனவாதிகளின் ஊடகங்கள். அவை உருவாக்கிய களங்களில் களமாடுவது இன்றைய தேவை என்ற மயக்க வாதத்தில், அந்தக் களங்களை அறியாத வெகுமக்கள் திரளை இவர்கள் வெகுவாக அணுக இயலாத நிலை கண்கூடு.
மேலும், பனிப்போர் காலத்திற்குச் சொந்தமான கருத்தியலால் பிளவுப்பட்ட CPI/CPM “கம்யூனிசம்” என்ற இயக்க அடையாளங்கள், மார்க்சியத்தையும் வெகுமக்களையும் வெகுவாக அந்நியப்படுத்தும் வேலையைச் செய்வதைப் பார்க்கிறோம். மார்க்சையும் அண்டம் போல் இன்றும் விரிவடையும் அவரது கருத்தியல் மற்றும் கோட்பாடுகளையும் பரவலாக்காத வேலையை இவை செய்வது மூலதனவாதிகள் இன்றளவும் மார்க்சியத்தைத் தங்களது கருத்தியல் எதிரியாகப் பார்ப்பதற்குத் துணைபோவதாக நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய வெகு மக்கள் ஊடகங்களை இயக்கும், மூலதனம் சார்ந்து இயங்கக்கூடிய முதலாளிகளில், அல்லது அவர்களுடன் திருமண உறவு வைத்துக்கொண்டு இயங்கும் பலரில், வலது சாரிகளும், இடதுசாரிகளும், இடைநிலை சார்பாளர்களும் அடக்கம். அவர்கள் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. கடந்து போன மார்க்சிய தலைமுறை இப்படி இல்லை. இதிலே notable exceptions இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நல்ல உதாரணங்கள் உண்டு. மறைந்த அய்யா சங்கரய்யா அப்படிப்பட்டவர். அய்யா நல்லக்கண்ணு மாதிரியான உன்னதமான தலைவர்கள் இருக்கிறார்கள். நல்லக்கண்ணு அய்யா அவர்களைப் பார்த்தீர்கள் என்றால், கிராம்சியை வேறு பார்வையில் பார்ப்பீர்கள். மற்ற இந்திய இடதுசாரித் தலைவர்களை வேறு பார்வையில் பார்ப்பீர்கள்.
சென்னைப் பல்கலைகழகத்தில் “பக்தீன் மற்றும் கிராம்சி” பற்றிய இரண்டுநாள் கருத்தரங்கில் (எப்ரல் 16-17, 2014), கோ.இரவீந்திரன் ஏப்ரல் 17,2014 அன்று நிகழ்த்திய அறிமுக உரையின் கட்டுரை வடிவம்.
கருத்தரங்க உரையை நிகழ்த்தியவர் பேராசிரியர் கிரெய்க் பராண்டிஸ்ட், பண்பாட்டுக் கோட்பாடு மற்றும் அறிவுசார் வரலாற்றுத் துறை, ஷெபில்டு பல்கலைக்கழகம், ஐக்கியப் பேரரசு.