-->

அண்மை

திருநங்கை லக்ஷயா மன்னார் கவிதைகள்


எத்தனை
குரூரப்பார்வைகள்
என் மீதும் என் உடல் மீதும்.

என் யோனியின் வடிவம்,
அதன் ஆழம் யாதென்று
அறிய துடிக்குமொரு கூட்டம்.

பருத்த என் முலைகள்
துணியா...? பஞ்சா...?
எதனால் ஆனதுயென
உடல் கிளர்ச்சியால் உண்மையைத்தேடுமொரு
கூட்டம்.

அது எப்படி ...?
இது எப்படி ...? என்று
ஆபாச இச்சைக்கும், ஆர்வக்கோளாறு கேள்விகளுக்குமிடையே
சிக்கித் தவித்து
அத்தனைக்கும்
அஃறிணையாய் நின்ற நான்தான்.

தொலைக்காட்சி தொடரொன்றில்
துகில் உரியப்படும் திரௌபதியைக் கண்டு வெடித்து அழுகிறேன்.

----------

உன் வருகையே என் பருவநிலை மாற்றத்தின் காரணி.

என்மீதான உன் பேரன்பின்
பெரும் அழுத்த தாழ்வு மண்டலம்
சற்றே வலுப்பெற்றதை அறிந்த நண்பர்கள்,
அவ்வன்பு புயலாக மாறியதையும்,
அதற்குக் காதலென்ற பெயரையும் சூட்டியுள்ளனர்.

நேசமான மனநிலை நிலவும்.

அதில் சற்றே மாறுதல் நிகழக்கூடுமென
அவ்வப்போது வரும்
பிற அறிக்கைகள் எதையோ சமிக்ஞை செய்கின்றன.

கரையைக்கடக்காமல்
இயல்புநிலை திரும்பாமல்
இப்படியே
காதற்புயலில் மையல் கொள்ளவே விரும்புகிறது,
என் இதயப்பெருங்கடல்.
Author Picture

திருநங்கை லக்ஷயா மன்னார்

திருநங்கை எழுத்தாளர். கலை இலக்கிய இயக்கச் செயல்பாட்டாளர், அரங்கக் கலைஞர், திவ்ய பாரதி இயக்கத்தில் வெளிவந்த 'ஜில்லு' திரைப்படத்தில் நடித்திருப்பவர்.

1 Comments

  1. லக்ஸ் அருமை மா...தொடர்ந்து எழுதி சிறப்பு செய்க

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு