-->

அண்மை

அகதிகளா ஆகுதிகளா – வே.சுகுமாரன்


அரும்பெரும் நாகரிகங்கள் அனைத்தும் நதிக்கரையில் பிறந்தவை. காரணம் அதன் மீது படியும் அழுக்கைப் போக்க நதியே சிறந்த வழி. சரி அழுக்கு போயிற்றா? நாகரிகம் தூய்மையாயிற்றா? இல்லையே ஏன்? சொல்லித் தெரிய வேண்டியது இல்லை அது சொல்லாமல் புரியும் கதை. தோல் அழுக்கை நதிநீர் போக்கும், மன அழுக்கை?

பாரதியும் கேட்டான் இப்படி,

“துணி வெழுக்கச் சாம்பல் உண்டு,
தோல் வெளுக்க மண்ணும் உண்டு
மனம் வெளுக்க என்ன உண்டு எங்கள் முத்துமாரி”

இக்கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இனியும் அதுவே நிலை. தமிழ் மூதாட்டி இன்னும் சற்று நிலைமையைக் கடுமையாக்குகிறாள்,

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது”

என்று தொடங்கி அடுத்த ஒரு சம்மட்டியால் ஒரு கோடு போடுகிறார்,

“கூன் குருடு செவிடு பேடு”

இந்நால்வரும் இல்லாத பிறப்பைப் பற்றி பேசுகிறாள். ‘நீங்கி’ என்ற சொல் பயன்பாட்டின் வழியே இந்நால்வரின் இருத்தலையே கேள்விக்குறியாக்குகிறாள். இதுவே உயர் நாகரிகம் என்று பேசப்படுகிறது.

அனைத்தையும் உள்ளடக்கியதுதானே நாகரிகம். சில குழுக்கள் புறக்கணிக்கப்படுமானால் அது எப்படிச் சிறந்த நாகரிகமாகும். சட்ட ரீதியாகவோ, சட்டவிரோதமாகவோ ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறந்து விட்டால் அது வாழ சகல உரிமையும் உண்டு என்கிறார் பிலிட்சர் (family system in Britain by Flitcher)

மேலே கூறப்பட்டவர்களில் திருநர் மிகக் கொடூரமான சூழலில் வாழ்கிறார்கள். வசிக்க வீடற்றவர்களாய் பெயர் சொல்ல நாடற்றவர்களாய் வாழ்கிற இவர்கள் வாழ்க்கைக்கு ஏங்குகிறார்கள். தங்கள் பிரச்சனைகளை எழுதினால் படிப்பாரில்லை, துயர்களைக் கண்டு கண்ணீர் வடிப்பாரில்லை. இவர்கள் அகதிகளா? துயரம் என்னும் வேள்விக்குச் சொரியப்படும் ஆகுதிகளா?

இத்தகையதொரு சூழலில் தான் நாம் தனிச்சொல் என்னும் மின்னிதழில் வெளிவந்த லக்ஷயா மன்னார், ஜாஸ்மின் ஆகியோர் எழுதிய கவிதைகளைப் பார்க்கிறோம். அவைகள் கவிதைகள் தானா? சமூக மேட்டுக்குடி நோக்கின் ஊடாகச் சொல்லப்படும் எதுகை, மோனை, படிமம், தொன்மம் இன்ன பிற இலக்கணங்களுக்கு இவை அடங்குகின்றனவா. கவித்துவம், கலை அழகியல் போன்ற சொல்லாடல்களுக்கு இக்கவிதைகளில் பொருள் இருக்கின்றனவா. இல்லைதான் அவை தேவையும் இல்லை.

அடி வாங்குபவர் ஐயோ என்று கத்தும்போது இலக்கணம் தேடிப் பிடித்தா கத்துவார். இக்கவிதைகளும் அப்படித்தான் இதயத்தில் வடியும் ரத்தத்தைக் கண்ணீராக்கி வெளியே கொட்டுகின்றன. அது கலை என்று காலங்காலமாகச் சொல்லப்பட்ட கலைகளுக்கெல்லாம் மேம்பட்ட கலை. அவர்கள் விதியையும் அவர்களுக்கெதிரான சமூகச் சதியையும் நோக்கித் தங்கள் வேதனை அம்புகளை எய்துகிறார்கள்.

லஷ்யா மன்னாரின் நெஞ்சைத் துளைக்கும் நேர்மையான கேள்விகள்,

“எத்தனை
குரூரப் பார்வைகள்
என் மீதும் என் உடல் மீதும்”

இதோ அடுத்த கேள்வி இதயத்தில் கூர்வாளாகப் பாய்கிறது,

“பருத்த என் முலைகள்
துணியா?, பஞ்சா?
எதனால் ஆனதுயென
உடல் கிளர்ச்சியால் உண்மையைத் தேடுமொரு கூட்டம்”

பவித்திரம் என்று பசப்பு வார்த்தைகளால் பாசாங்குத்தனமாகப் பேசும் சமூகத்திற்கு இந்தக் கேள்வி போதாதா?

ஜாஸ்மின் என்றால் மல்லிகை பூ என்று அர்த்தம். பூ எவ்வளவு மென்மையானது. ஆனால் ஜாஸ்மின் எழுதிய கவிதைக்குள் இருக்கிற ஒவ்வொரு சொல்லிலும் கூர்மையான ஊசி செருகப்பட்டிருக்கிறது. அவரது கவிதையின் சொற்கள் இதயத்தைத் தாக்குவதோடு வாசகரைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கி அவரைக் கூண்டில் நிறுத்துகிறது.

“இது என்னவோ
என்னுடைய காதலோ
கவிதையோ கதையோதான்
அமைதியாக என்
கதவு மணி அடித்தது
கதவுகளைத் திறந்தேன்
கூடவே என்
மனக்கதவுகளையும் சேர்த்து தான்”

இந்த வரிகளில் வரும் சொற்கள் வாழ்வின் எதார்த்தத்தின் பிரதிபலிப்புகள். ஒழுக்க நியாயம் பற்றிப் பசப்புகிற சமூகம், எதார்த்தத்தை ஏற்க மறுப்பது ஏன்? “பொருளாதார ரீதியாக ஒரு பெண் நிர்பந்தப்படுத்தப்பட்டால் அவளை ஒழுக்கமற்றவள் என்று சொல்ல முடியாது” என்கிறார் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். அப்படியெனில் ஆயிரம் ரூபாய்க்காகத் திறக்கப்பட்ட கதவு அடுத்த 1000 ரூபாய் வரும் வரை மூடப்பட்டிருக்கும் கதவு ஒழுக்கமின்மையின் சின்னமாய் எப்படி மாற முடியும். இந்தக் கேள்விகள் நம்மை நாமே கேட்டுக் கொள்ளும்போது நாம் நிற்கும் இடம் எது? அது தவிர்க்க முடியாத குற்றவாளிக் கூண்டல்லவா?

கண்ணுக்கு மையழகு கவிதைக்குப் பொய்யழகு என்கின்ற இந்தத் திரைப்படப் பாடலைத் தன்னுள் வாங்கிய ஜாஸ்மின்,

“இருக்கட்டும்
கவிதைக்குப் பொய்யும் அழகுதானே”

என்று தனக்கேற்றவாறு மாற்றிக்கொள்கிறார். மருத்துவராக, ஓட்டுநராக, செய்தி வாசிப்பாளராக, ஆசிரியராக எனப் பல பரிமாணம் எடுக்கும் திருநர்கள் இருக்க, கேவலத்தில் ஊறி உலுத்துப்போன மனம் கேட்கிறது, உங்களுக்கு அது எப்படி இருக்கும்? இந்த வெட்கங்கெட்ட சமூகத்தின் முகத்தில் காரி உமிழும் கவிதை அது,

“நான் நேர்மையான வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டேன்
ஆனால் இன்னும் உன் கேள்வி
உங்களுக்கு அது எப்படி இருக்கும்
அடப்பாவி
உன் தேடல் என் வாழ்வா? இல்லை என் உறுப்பா?”

20, 25 ஆண்டுகளுக்கு முன் லண்டன் தமிழோசை வானொலியில் திருநரைப்பற்றி ஒரு சித்திரம் ஒளிபரப்புச் செய்திருந்தார்கள். அதில் ஒரு திருநர் சொன்னார், கட்டணக் கழிப்பறையில் சிறுநீர் கழிக்க ஆண்கள் பகுதிக்குச் சென்றால் இங்கே வராதீர்கள் பெண்கள் பகுதிக்குப் போங்கள் என்கிறார்கள், பெண்கள் பகுதிக்குச் சென்றால் ஆண்கள் பகுதிக்குப் போ என்கிறார்கள், உண்மையில் நாங்கள் எங்கு தான் சிறுநீர் கழிக்க? அன்றிரவு என் தூக்கத்தைக் கெடுத்த இந்தக் கேள்வி இன்று வரை நெஞ்சுக்குள் இருக்கிறது. உண்மையான விளிம்பு நிலை என்பது திருநரின் வாழ்வுதான். சமூகம் விழிக்க வேண்டும் மற்றவர்கள் வேதனையை உணர வேண்டும். அப்போதுதான் இவர்களும் மனிதர்கள் என்று உணரப்பட்டு இவர்களுக்கான அனைத்து உரிமைகளும் கிடைக்க வழி பிறக்கும். ஆயிரமாயிரம் லக்ஷயா மன்னார், ஜாஸ்மின் போன்றோர் விழித்தெழ வேண்டும். எழுதிக் குவிக்க வேண்டும். இறுக்கமான இச்சமூகக் கட்டமைப்பைத் தங்கள் படைப்புகளால் அவர்கள் உடைக்க வேண்டும். வளரட்டும் அவர்கள் பணி. வாழ்க லஷயா மன்னார், ஜாஸ்மின்.

Author Picture

வே.சுகுமாரன்

கவிஞர், வே.சுகுமாரன், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். கோவையில் இவர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவேதுணை ஆய்வு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவருடைய மொழிபெயர்ப்பு நூலான "காட்டு வாத்துக்கள்" முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு