சாதலும் எளிதோ
கவிஞர் அறியான்
வாழ்தல் அரிது
சாதல் எளிது
என்று அறவோர் ஒருவர்
ஆய்ந்துரைத்துள்ளார்.
சாவின் மீதான விசாரணை
வாழ்வாகவும்
வாழ்க்கையின் மீதான விசாரணை
சாதலாகவும்
தொடர்வது தற்செயலானது.
வெற்றிலையைத் தன் கடைவாயிலிட்டு
மென்று துப்புவதைப் போல
குதப்பித் துப்பினாலும்
பெரும்பாலோர் சாகத் துணிவதில்லை.
கொழுத்தமரத்தைப்
பற்றிப் படரும்
சின்னக் கொடியாகத்
துயரக் காட்டின்
அடிதொட்டுத்
தொடர்கிறது வாழ்க்கை.
பலத்த காற்றடித்து
கிளைமுரிந்து
குளவிக் கடிக்குச் சிக்கி
ஓடமுடியாமல் மாற்றுத் திறனாளி
ஒருவர் இறந்து போனது
குறித்து
அங்கலாய்த்துகொண்டேயிருந்தார்
நண்பர் ஒருவர்.
அப்போது குடித்துமுடித்த தேநீர்
அடிநாவில் கசந்துகொண்டிருந்தது
அது உடல்முழுதும் பரவியது
மரணம் மரத்திலிருந்ததை
அறிந்திருந்தால்
அங்கு அவர்
வந்திருக்கமாட்டார்
ஒருவர் ஒருமுறைமட்டுமா
சாகிறார்
முகநூலில் அகநூலில்
புலனத்தில் மனனத்தில்
அலைபேசியில் தொலைபேசியில்
வலைக்காட்சியில் தொலைக்காட்சியில்
பகிரும்போதும்
சாவைக் குறித்துப் பேசும்
நினைக்கும்
ஒவ்வொருமுறையும் செத்துகொண்டேயிருக்கிறார்.
2.
சுழல் நாற்காலி
கவிஞர் அதிகாரி
நாற்காலி
என்று யாராவது
சொன்னால்
சோக்காளி,
சீக்காளி
பிக்காளி
போன்ற சொற்கள் எதனாலோ நினைவிற்கு
வந்துவிடுகிறது
சிமண்டுமூட்டை போலவோ
மணல்மூட்டை போலவோ
யாரையாவது சுமந்துகொண்டிருக்கும்
நாற்காலிகளைப்
பார்த்தால்
அவற்றின்மீது பரிதாபம் வந்துவிடுகிறது
திருவிதாங்கூர் சமஸ்த்தான அதிகாரம்
சாய்வது குறித்துச் சாய்வுநா்காலியில்
தோப்பில் முகமது மீரானும்
அதிகாரச் சாய்வுகுறித்து
நா. முத்துசாமியும் நாற்காலிக்காரர்கள்
கீ.ரா.வின் கதையில்வரும்
தேக்குமர நாற்காலிகள் சதாசவத்தை
சுமந்துகொண்டிருக்கின்றன
அன்பிற்குரிய நாற்காலிகளுக்கு
இரங்கலைத் தெரிவிப்பதைத் தவிர
வேறுவழியில்லை
ஜிகுஜிகு நாற்காலி,
வழுவழுநாற்காலி
சொரசொரநாற்காலி
மரநாற்காலி,
பிளாஸ்டிக்நாற்காலி,
ஒயர்நாற்காலி
இப்படி எத்தனையோ நாற்காலிகளை
எனக்குப் பிடிப்பதில்லை
அடர்வன மரச்செறிவில் பாயும் கதிரவன் போல
அனைத்திடங்களுக்கும்
செல்லும்
சுழல்நாற்காலி போல எதுவும்
எனக்கு உவப்பில்லை.
