-->

அண்மை

சிறகைவிரிக்கும் சொற்கள்: திருநர் மற்றும் குயர் மக்களுக்கான படைப்பிலக்கியப் பயிலரங்க நிகழ்வு



பொ.ஆ.மு 6 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.மு 2 ஆம் நூற்றாண்டு வரையில் எழுத்தறிவு பரவலாகக் காணப்பட்ட நகர நாகரிகத்தை உடையது கீழடி என்பது சமீபத்திய தொல்லியல் ஆய்வின்படி வெளிவந்திருக்கும் உண்மை. இந்த ஆய்விற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக சங்க இலக்கிய ஆதாரங்களும், ஆய்வின் தரவுகளும் ஒரே நேர்கோட்டில் வருவதாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஆர்.பாலகிருஷ்ணன் குறிப்பிடுகின்றார்.

குறியீட்டளவிலிருந்து மாறி மொழியின் ஒலி வடிவத்தை ஒளிவடிவாக பிரதிபலிக்கும் எழுத்தென்பது மனித குல முன்னேற்றத்தில், பண்பாட்டு கலாச்சார வேர்களில் மிக முக்கியமானது. வாய்மொழித் தகவல்கள் வழக்கொழிந்து போகலாம் ஆனால் எழுத்தென்பது அப்படியல்ல அது ஓர் ஆவணம்.

நம் முந்தைய வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கும், சார்பு பேதமின்றி ஆராய்ந்து அறிவதற்கும் தொல்லியல் அகழாய்வுகள், கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் இதனூடே பெறப்பட்ட தகவல்களும் சான்றுகளாக உள்ளன.

ஆனால் என்ன..? பண்டைய எழுத்துகள் பலவும் அரசனையும், அவனாட்சியின் பராக்கிரமங்களையும் ஆதிக்கத்தையும், ஆதிக்கத்தில் ஊன்றி நின்றவர்களையும் போற்றும் விதமாகத்தான் இருந்ததேயன்றி எளிய மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் பற்றியதென்பது மிகக்குறைவு.

நவீன இலக்கியச் சூழலிலும்கூட பல தசாப்தங்களாக விளிம்புநிலை மக்கள் குறித்த நேர்மையான படைப்புகள் பெரிதளவில் இல்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதப்பட்ட சில படைப்புகள் கூட நேர்மையாகவும், அம்மக்களின் வாழ்வியல் துயரங்களை, போராட்டங்களை நெருக்கமாகப் பிரதிபலிக்க கூடியதாகவும் இல்லை.

சென்ற நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில்தான் இந்நிலை மாறத்தொடங்கியது. குறிப்பாக விளிம்புநிலை சமூக மக்களே அவர்களின் படைப்பைப் படைக்கத்தொடங்கியது நவீன இலக்கிய உலகின் புரட்சி என்றே சொல்ல வேண்டும்.

அத்தகையதொரு புரட்சிக்கு அச்சாரமிடும் நிகழ்வாக, குயர் பப்ளிகேஷன் மற்றும் தனிச்சொல் அமைப்பு இணைந்து ஏற்படுத்திய குயர் மற்றும் திருநர் மக்களுக்கான "சிறகை விரிக்கும் சொற்கள்" என்கிற படைப்பிலக்கியப் பயிலரங்கம் ஜூலை 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை அசோக் பில்லரில் உள்ள அரங்கம் என்ற இடத்தில் நிகழ்ந்தேறியுள்ளது.

உலகம் முழுதும் ஜூன் மாதம் என்பது பால்புதுமையினருக்கான பெருமைமிகு சுயமரியாதை மாதமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. கொண்டாட்டத்திற்கென மட்டுமில்லாது பால்புதுமையினர் பற்றி, பாலாதிக்க சமூகம் பெறவேண்டிய புரிதல்களை, கலை, இலக்கியத்தின் மூலம் கற்பிக்க வேண்டிய பொறுப்பும் உள்ளதென்பதை உணர்த்தும் வடிவே இந்த நிகழ்வு.


முதல் நாளில் முதல் எழுத்தாளுமையாகப் பயிலரங்கை சிறப்பித்த மூத்த பெண்ணிய எழுத்தாளரான திருமிகு.கிருஷாங்கினி அவர்கள், "கண்ணுக்கு மையும் அழகல்ல கவிதைக்குப் பொய்யும் அழகல்ல" எழுத்தில் நேர்மை இருக்க வேண்டும், அத்தகைய எழுத்தே மனித வாழ்க்கையை நெருக்கமாக வெளிப்படுத்தும்" என்று படைப்பின் அறம் குறித்து விளக்கினார். தான் எழுத வந்த காலத்தே பெண்ணிய எழுத்தாளராக தான் எதிர்கொண்ட சிக்கல்களையும் பகிர்ந்து கொண்டார். "நம்முடைய வலிகளை நாம் எழுத வேண்டும், நம்முள் இருப்பதை நாம் எழுத வேண்டும்" என்றவர், வாசிப்பின் அவசியம் பற்றியும் தன்னைக் கவர்ந்த தற்போதைய பெண்ணிய எழுத்தாளர்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

அவரைத்தொடர்ந்து இதழியல் துறையில் இருபது வருடங்களாகப் பணியாற்றிவரும் பத்திரிக்கையாளரும் மொழிபெயர்ப்பாளருமான கவிதா முரளிதரன் அவர்கள், இலக்கிய உலக சஞ்சாரத்தைச் சற்றே நிறுத்தி விட்டு , நிஜ உலக நிகழ்வுகளுக்கு நம் கவனத்தைத் திருப்பினார்.

"ஒன்றைப்பற்றி எழுதப்போகும் முன் சுற்றி இருப்பவற்றை நாம் கவனிக்க வேண்டும். எப்பொழுது (When) , எங்கே (Where) , யார் (Who), எந்த (Which) , எப்படி (How) என்ற கேள்விகளை நாட்டில் நிகழும் ஒவ்வொரு நிகழ்விற்கும் பொருத்தி அதிலிருந்து நேர்மையான விடைகளை நாம் பெறமுடியும். பிரபலமடைய வேண்டும், பெயர் வாங்க வேண்டும், விறுவிறுப்பைக் கூட்டுகிறேன் பேர்வழியென ஊடக அறத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்யாமல் இருத்தல் அவசியம். பத்திரிக்கை என்பது ஒருநபரின் சுயமரியாதையைக் குலைக்காமல் இருக்கவேண்டும்" கூடவே, "ஒரு செய்தி நேரத்திற்கு வரவேண்டுமென்பதை விட, சரியானதாக வரவேண்டும்" என்றும் கூறினார்.

தொடர்ச்சியாக, ஊடகங்களில் குயர் மற்றும் திருநர் மக்களை இழிவுசெய்யும் சொற்களின் பயன்பாட்டைத் தவிர்க்க ஊடகவியாளாலர்களுக்கு விழிப்பு ஏற்படுத்த வேண்டும், கையேடு ஒன்றும் தயாரித்து வழங்க வேண்டும்" என்பதைக் கவிதா முரளிதரன் கூறியதும்,

"பல ஆண்டுகளாக ஒவ்வொரு வானவில் சுயமரியாதை மாதத்தின்போதான பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதும், தனிப்பட்ட முறையிலும் பலமுறை ஊடங்களுக்குப் பால்புதுமையினரை எப்படி அழைக்க வேண்டும், அவர்களைப் பற்றிய செய்திகளை எப்படி கண்ணியக்குறைவின்றி பிரசுரிக்க வேண்டுமென்று பாடம் எடுத்து எடுத்து நொந்து விட்டோம்" என்று திருமிகு.நேகா (பதிப்பகத்தார், குயர் பப்ளிஷிங் ஹவுஸ்) கூற..,

அதற்குப் பதிலளித்த தோழர்.கவிதா முரளிதரன், “இப்படிப் பல நெடுங்காலச் சுட்டல்களுக்குப் பின்தான் கற்பழிப்பு, கௌரவக்கொலை போன்ற அரசியல் பிழையான வார்த்தைகள் ‘பாலியல் வன்கொடுமையெனவும்’, ‘சாதிய ஆணவப்படுகொலை’ எனவும் மாற்றம் கண்டன” எனவே தொடர் முயற்சி அவசியம் என்றார்.

எழுதுவதற்கு மொழி முக்கியம், வாசிப்பு அவசியம் என்கிற அறிவுரையோடு தன் பங்களிப்பை நிறைவு செய்தார்.

தொடர்ந்து திருமிகு.நேகா அவர்கள் மனதை இலகுவாக்க உளவியல் பயிற்சி, உடலைச் சுறுசுறுப்பாக்க உடற்பயிற்சியையும் அளித்தபின், "Intersectionality of India" என்ற தலைப்பில் கவிதையும், மாற்றுதிறனாளிகள் என்ற தலைப்பில் கட்டுரையும் எழுதுமாறு பங்கேற்பாளர்களுக்குக் குழுப்பயிற்சி அளிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு முதல்நாள் பயிற்சி முற்றுப்பெற்றது.


"சொல் மிக முக்கியம், சொற்களைத் தெளிவாக முறையே பயன்படுத்தும்போது, நமது அரசியலைக் காத்திரமாக வெளிப்படுத்தமுடியும்" என்று இனிமையான இரண்டாம் நாளை அற்புதமான அரசியல் பார்வையுடன் துவங்கி வைத்தார் எழுத்தாளர் வ.கீதா அவர்கள். "நம் பார்வையை வாசகர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கமுடியாது. எழுத்தில் நாம் சொல்வதற்கும் உலகம் அதைப் புரிந்து கொள்வதற்குமான இடைவெளியுண்டு, கூடியமட்டும் அந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும். சில படைப்புகளுக்கு அந்த இடைவெளியும் அவசியமாகிறது."

மேலும் தொடர்ந்து அவர் கூறியதாவது

"மணிமேகலையில் மந்திரம்கொடுத்தகாதை, நிலையான பால் அடையாளத்திற்குள் பொருந்தாத குருநானக்-கின் மொழிகள், பாரதியாரின் "மிளகாய்ப் பழச்சாமியார்" சிறுகதையில் வரும் சாமியார் என நம்மிடம் உள்ள இலக்கியங்களின் (சங்க மற்றும் பக்தி) , கதைகளை உற்று நோக்குகையில் அவற்றில் குயர் தன்மை மிக்க மாந்தர்களைக் காணமுடியும். அதற்குச் சொற்பயன்பாடுகளுக்கு இடையே உள்ள வாழ்வியலைப் புரிந்து கொள்ள வேண்டும்." என்றார்.

பின்னர் நேற்றையநாளில் வாட்சப் குழுவில் பகிரப்பட்ட மொழிப்பெயர்ப்புக் கவிதைகளைப் படித்துப் பார்த்துத் தங்களுக்குப் பிடித்த வரிகளை வாசிக்குமாறு கூற, அனைவரும் வாசித்தோம்.

எழுதும்போது திடீரென்று ஏற்படும் எழுத்துத்தடை என்கிற சவாலைச் சமாளிப்பது எப்படி என்று தோழர் ரிஸ்வானின் கேள்விக்கு, "தொடர் வாசிப்பால் நம்மை செப்பனிட்டு, வார்த்தைகளோடு வாழப்பழகுதல், பல்வேறு எழுத்து வடிவங்களை வாசித்துணர்தல், எல்லா எழுத்துகளையும் இலக்கிய யுக்திகளில் விளையாட முயற்சித்தல், ஆழமாக யோசித்து எழுதுவது ஆகியவற்றின் மூலம் சவாலைச் சமாளிக்க முடியும்” என்று கூறிய வ.கீதா தன் எழுத்தனுபவத்தை எடுத்துரைத்து நிறைவு செய்தார்.

அவரைத்தொடர்ந்து....

" பேசப்பட வேண்டிய நம் கதைகளை கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, தன் வரலாற்று நூலென எழுத்தின் எந்த வடிவத்திலேனும் பேச வேண்டியது மிக அவசியம். தயக்கத்தை உடைத்து முதலில் எழுதத்தொடங்குங்கள் தொடர்ந்து எழுதுங்கள், தொடர்ந்து வாசியுங்கள்" என்று எழுத்தாளர், குயர் சமூக செயற்பாட்டாளர் , அரங்க நாடக கலைஞர் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள் காணொளிக் காட்சி மூலம் பங்கேற்பாளர்களிடம் பேசினார். இவ்வாறான நிகழ்வுகள் மூலம் ஓர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முனையும் குயர் காஸ்டிங், குயர் பப்ளிஷிங் ஹவுஸ் மற்றும் தனிச்சொல் அமைப்பிற்குத் தன் வாழ்த்துகளைக் கூறி விடைபெற்றார்.

"குயர் மற்றும் திருநர் மக்கள், நமது மக்கள் சார்ந்த படைப்புமட்டுமன்றி அதைத் தாண்டிய பொது இலக்கியங்களையும் படைக்க வேண்டும். பத்திரிக்கைகளில், கட்டுரைகள் எழுதுவதன் மூலம் நம்மால் சம்பாதிக்கவும் இயலும்" என எழுத்துலகின் மற்றொரு கோணத்தை நம் முன்னே விவரித்தார் குயர் எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் திருமிகு கிரீஷ் அவர்கள்.


முன்னதாக அவர், . இதுவரையிலான தமிழ் இலக்கியச்சூழலில் குயர் மற்றும் திருநர் மக்கள் பற்றி வெளிவந்துள்ள குறிப்பிடத்தகுந்த புதினம், சிறுகதை, கவிதை, தன்வரலாற்று நூல்களைப் பட்டியலிட்டது அவசியமான ஒன்று.

பெரும்பான்மையான படைப்புகள் திருநங்கைச் சமூகம் சார்ந்ததாக உள்ளதெனவும், பால் புதுமையினர் அனைவரையும் உள்ளடக்கிய பரவலான படைப்புகளின் தேவை உள்ளதென்பதையும், அதைப் படைக்கவேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

பின்னர் பங்கேற்பாளர்களை மூன்று அணியாகப்பிரித்து, சமகாலச் செய்திகளைத் தலைப்புகளாக்கிக் குழுப்பயிற்சியொன்று அளித்தார். சமீபத்தில் அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் தற்பாலீர்ப்பை "Perversion" என்று குறிப்பிட்ட விடயம், இணையச் செயலி மூலம் உணவு விநியோகம் செய்யும் தொழிளாலர்களுக்கு அரசு, பொது இடங்களில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை ஏற்படுத்தும் விடயம், தமிழ்நாட்டில் முதல் திருநங்கை பேராசிரியர் ஜென்ஸி, ஆகிய மூன்று தலைப்புகளில் குழுவாக விவாதித்துக் கருத்துக்களை எழுதுமாறு கூறி, பின்னர் பங்கேற்பாளர்கள் தங்கள் குழுப் பயிற்சியைச் சமர்ப்பித்ததும் அதில் விடுபட்ட விடயங்கள் மற்றும் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து குழுவாக விவாதிக்கப்பட்டது. அத்துடன், மொழிபெயர்ப்பாளராக, சிறார் எழுத்தாளராக உள்ள சவால்களை நம்முடன் பகிர்ந்து விடைபெற்றார் தோழர் கிரீஷ்.

"ஒரு ஒப்பனைக்கலைஞரான என்னை, எழுத்தை நோக்கி நகரச்செய்த இப்பயிலரங்கு மறக்க முடியாதவொன்று" என்று பயிற்சி குறித்து தன் கருத்தைத் தெரிவித்த திருநங்கை ஜாஸ்மின் மதியழகன் பயிலரங்கப் பயிற்சியின் போது கவிதையொன்றை எழுதி வாசித்தது நினைவுக்கூற வேண்டியது.

"தோழி அழைத்ததின் பேரில் எதேச்சையாக வந்தேன், பயிற்சிக்குப் பின்னர் வாழ்வில் என் முன்னேற்றத்திற்காக நான் செலவிட்ட உபயோகமான நாட்களில் இவ்விரண்டு நாளும் இணைந்து கொண்டன" என்று தன் பயிலரங்க அனுபத்தை வண்ணத்துப்பூச்சிநிலவன் பகிர்ந்து கொண்டார்.

"குயர் பப்ளிஷிங் ஹவுஸ் மற்றும் குயர் காஸ்டிங் நடத்தும் இரண்டாவது எழுத்து பயிற்சிப்பட்டறை இது. சென்ற பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற இரு திருநங்கைகளின் கவிதைத்தொகுப்புகளை குயர் பப்ளிஷிங் ஹவுஸ் விரைவில் வெளியிடவுள்ளது. சிரத்தையோடு நீங்க படைப்பைச் செவ்வனே செய்யுங்கள் அதை வெளியிடும் பொறுப்பு எங்களுடையது" என்று பதிப்பாளர் நேகா அவர்கள் தெரிவித்தார்.

"தயக்கமற்ற உரையாடல்கள், மனதிற்கு ஆசுவாசமான சூழல், சமூக அதிகாரம் குறித்த தீவிரமான விமர்சனப் பார்வை, திருநர் மற்றும் குயர் எழுத்து அரசியலின் முக்கியத்துவம் குறித்தெல்லாம் விரிவாக உரையாடினோம். பெருமகிழ்வான அர்த்தமுள்ள நாட்கள், உணர்வு மற்றும் அறிவுத்தளத்தில் ஒத்திசைவான தோழர்களுடன் இணைந்த உரையாடல். பங்கேற்ற அனைத்துத் தோழர்களுக்கும் மிக்க மிக்க நன்றிகள்" என தனிச்சொல்லைச் சார்ந்த தோழர் சவகர் தனது நிறைவுக்கருத்தைப் பதிவு செய்தார்.

தனிச்சொல் அமைப்பானது, பெண்ணியம், தலித்தியம், பால் புதுமையர், மாற்றுத்திறனாளர், பழங்குடியினர், புலம்பெயர்வு, சூழலியல் முதலிய விளிம்பின் குரல்களை மையப்படுத்தி இயங்கி வருகிறது. இந்தப் பயிலரங்கிற்காகத் தனிச்சொல் குழுவினர், திருநர் மற்றும் குயர் மக்களின் இலக்கியப் படைப்புகளின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய பயிற்சிக் கையேட்டினை தயாரித்து வழங்கியிருந்தனர். இது பங்கேற்பாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

நிகழ்விற்குப் பின், பயிலரங்கில் பங்கேற்ற மழைவில், திருநங்கை ஜாஸ்மின் மதியழகன், திருநங்கை லக்ஷ்யா மன்னார் ஆகியோரின் கவிதைகள் தனிச்சொல் மின்னிதழில் வெளியிடப்பட்டதும் சிறப்பானதொன்று.

இதுதான் ஒழுங்கென கட்டமைக்கப்பட்டு அதை, சாதி, மத சாயத்தின் வழியே பண்பாடாகவும் கலாச்சாரமாகவும் மாற்றி ஏனையோர் உரிமைகளைப் பறித்திடும் கூட்டத்தின், அர்த்தமற்ற அநீதிகளை, அறத்தின் வழிநின்று அம்பலப்படுத்துவதற்கு,

நேர்மையான துணிச்சலான படைப்புகளைப் படைக்க விளிம்புநிலைச் சமூகத்தினர் பெருமளவில் முன்வர வேண்டும். அதற்கு சிறகை விரிக்கும் சொற்கள் போன்ற அறிவார்ந்த நிகழ்வுகள் இடையறாது நிகழவேண்டும்.

Author Picture

திருநங்கை லக்ஷயா மன்னார்

திருநங்கை எழுத்தாளர். கலை இலக்கிய இயக்கச் செயல்பாட்டாளர், அரங்கக் கலைஞர், திவ்ய பாரதி இயக்கத்தில் வெளிவந்த 'ஜில்லு' திரைப்படத்தில் நடித்திருப்பவர்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு