-->

அண்மை

பெரியாரிய நோக்கில் மாற்றுத்திறனியம் - வே.சுகுமாரன்



உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட எந்தத் தத்துவமும் நூறு விழுக்காடு முழுமையானதும் அல்ல நூறு விழுக்காடு முழுமையாகச் சொல்லப்பட்டதும் அல்ல. எனவே சொல்லப்பட்ட தத்துவத்திலிருந்து சொல்லப்படாதவற்றை நாம்தான் தயாரிக்க வேண்டும் அல்லது தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தத் துருவி எடுத்தல் நாம் விரும்பும் மெய்யியலை மேம்படுத்த உதவும். எந்த ஒரு தத்துவமும் வளர்ந்து முடித்த முற்றுப் பெற்றதாக இருக்க முடியாது. எல்லாத் தத்துவமும் வளரும் தத்துவமாகவே இருக்கும். மேலே சொல்லப்பட்ட இவ்வனைத்தும் விதிவிலக்கின்றி பெரியாரியத்துக்கும் பொருந்தும்.

பெரியாரியம் - தோற்றத்திற்கான தேவை

பெரியார் 19ஆம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை வாழ்ந்தவர். இக்காலத்திய சமூகச் சூழல் அவரைச் சிந்திக்க நிர்ப்பந்தப்படுத்தியது. அந்தச் சிந்தனை ஊற்றுகளே பெரியாரின் கோட்பாடுகளாக வளர்ந்தன. பெரியார் சமூகத்தில் இருந்த சாதி மேலாதிக்கத்தையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்தார். இவற்றை எதிர்க்க சில கோட்பாடுகளை அவர் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டார். மக்கள் அதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பிராமண எதிர்ப்பு எனும் சிமிழுக்குள் அவரை அடைக்க முயன்றனர். வீரியமிக்க அவரது கோட்பாடுகள் சமூகத்தின் அடித்தளத்தை அசைத்துப் பார்த்தன. அவை சமூகத்தின் அடித்தளத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின.

வரலாற்றில் பெரியார்

உலக வரலாற்றை நாம் புரட்டிப் பார்த்தால் சமூகத்தின் அடித்தளத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் என்று ஒரு ஆறு பேரைச் சொல்லலாம். அவர்கள் முறையே கௌதம புத்தர், இயேசுநாதர், நபிகள் நாயகம், லெனின், காந்தியடிகள், பெரியார். இவர்களின் முதல் மூன்று பேர் மதத்தை அடிப்படையாகக் கொண்டு மாற்றங்களை உருவாக்கியவர்கள். காந்தியடிகளைப் பொறுத்தவரை பரவலாகப் பேசப்படும் தத்துவமாக அது இருக்கின்றதே அன்றி சமூக அடித்தளத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை. ஆன்மீக பலமும் அரசியல் பலவீனமும் சராசரி மனிதனால் பின்பற்ற முடியாத அகிம்சைக் கோட்பாடும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

அரசியல் பலம் மிக்க கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் லெனினால் ரஷ்யாவில் ஒரு சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது. எனினும் வேறு அரசியல் கோட்பாடுகள் இதை எதிர்கொண்டபோது சிக்கல்கள் தோன்றக் காரணமிருந்தது.

ஆனால் பெரியாரின் கோட்பாடுகள் மனிதத்தை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்பட்டவை. பல நூற்றாண்டுக்காலங்களாக ஆதிக்கம் செலுத்திவந்த பிராமணக் கட்டமைப்பை உடைத்தெறிந்து மற்ற இனத்தவர் அனைவரையும் ஒன்று திரட்டிப் போராட முற்பட்டது அவருடைய போராட்டத்தின் முதற்படி.

பெரியாரிய நோக்கில் மாற்றுத்திறனியம்

இத்தலைப்பு நூதனமான அல்லது புரிதலுக்குச் சற்றுத் தொலைவில் நிற்கிற ஒன்றாகச் சிலருக்குத் தென்படலாம். வியப்புற ஒன்றும் இல்லை. ஏனெனில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்துதான் மாற்றுத்திறனியம் உருவாகிறது. மாற்றுத்திறனாளிகள் மனிதர்கள்தான் என்பதை முன்வைக்கும்போது அவர்கள் வழிவந்த மாற்றுத்திறனியம் பேசுதலுக்கான பொருளே. அப்படியானால் அது பெரியாரியத்தில் அடங்கிய ஒன்றே. இப்படியான நமது அவதானிப்பில் பெரியாரியத்தின் ஒரு கூறாக மாற்றுத்திறனியத்தை முன்வைத்து ஒரு கட்டமைப்பை நாம் செய்யவேண்டி உள்ளது.

தோண்டுதல் / கல்லுதல்

நாம் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்லும் போதே இல்லாத ஒன்றை எப்படி கட்டமைப்பது. இல்லாத ஒன்றுக்காக நாம் ஏன் மெனக்கெட வேண்டும். இத்தகைய கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்.

கல்லுதல் என்பதற்குத் தோண்டுதல் என்று பொருள். ஆங்கிலத்திலும் இதே பொருளில் cull out என்று சொல்லப்படுகிறது. எனவே உள்ளிருந்து தோண்டி எடுக்கப்பட வேண்டும் என்பதே இதன் எதார்த்தப் பொருள். இந்தப் பொருண்மையில் நாம் தத்துவங்களுக்குள்ளிருந்து நமக்கான விடயங்களைத் தோண்டி எடுக்கிறோம். அந்தக் குறிப்பிட்ட தத்துவஞானி அதுபற்றி பேசாமலோ சொல்லாமலோ இருக்கலாம். அவர் பேசிய வேறு சில விடயங்களில் இந்தப் பொருண்மை புதைந்து கிடக்கலாம். மார்க்ஸ் பேசியதால் மார்க்சியமானது. ஆனால் அதில் எந்த இடத்திலும் அது பிரித்துக் காட்டவில்லை. 1970களின் பிற்பகுதியில் சான்டியாகோ கரில்லோ (Santiago Carrillo) என்பவர் ஐரோப்பிய கம்யூனிசம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். ஆனால் மற்றவர்கள் ஐரோப்பாவுக்கு, ஆசியாவுக்கு, ஆப்பிரிக்காவுக்கு என்று தனித்தனி கம்யூனிசம் இல்லை என்று வாதித்தனர். நாடும், கண்டமும், கலாச்சாரமும் மாறும்போது கம்யூனிசமும் மாறத்தான் செய்யும். மாறித்தான் ஆக வேண்டும்.

தோழர் எஸ்.என்.நாகராஜன் கீழை மார்க்சியம் என்னும் நூலில் ஐரோப்பிய கம்யூனிசம் என்றும் ஆசியக் கம்யூனிசம் என்றும் வகைப்படுத்தினார். ஐரோப்பிய கம்யூனிசம் ஆணிய கம்யூனிசம் என்றும் ஆசியக் கம்யூனிசம் பெண்ணியக் கம்யூனிசம் என்றும் அவர் தன் வாதத்தைத் தொடர்ந்தார். கோவை ஞானி இவற்றில் இருந்து ஒன்றைப் பிரித்து மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்றார். இவையெல்லாம் மார்க்சியப் பிளவுகள் அல்ல வளரும் மார்க்சியத்தைத் தோண்டி எடுத்து கட்டமைக்கப்பட்ட வகைமைகள்.

தமிழ் இலக்கியத்தில் மார்க்சியம்

தமிழ் இலக்கியங்களிலும் மார்க்சியத்தின் கூறுகளைக் காண முடிகிறது. மார்க்ஸ் 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவருடைய கூறுகள் எப்படிச் சங்க இலக்கியங்களில் காண முடியும். 1980களின் முற்பகுதியில் திருவாரூரில் நடந்த கூட்டம் ஒன்றில் இலக்கியத்தில் முற்போக்குக் கூறுகளை அறியும் வகைப்பாட்டை விளக்கினார் திருவையாறு தமிழ்க் கல்லூரி முதல்வர் பாரதிபித்தன். எந்த இலக்கியம் மனிதத்தை முன் வைக்கிறதோ அந்த இலக்கியம் முற்போக்கு இலக்கியம் என்றார். இதைத்தான் நாம் வேறு சொல்லில் மார்க்சிய இலக்கியம் என்கிறோம். “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று தமிழ் இலக்கியம் கூறியபோது மக்கள் உயிர், தசரத மன்னன் உடல் என்று மாற்றிச் சொன்னவன் கம்பன். மானுடம் வென்றதம்மா என்று சேர்த்துச் சொன்னவன். எனவே கம்பராமாயணத்தை நாம் முற்போக்கு இலக்கியம் என்கிறோம். தன் பாடலில் கணியன் பூங்குன்றன் எந்த இடத்திலும் சோசலிசம், கம்யூனிசம் போன்ற சொற்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” வரிவழியாக அவன் சர்வதேசக் கம்யூனிசத்தைப் பாடினான் என்று நம்மால் கூற முடிகிறது இல்லையா?.

மாணிக்கவாசகர் தன் திருவாசகத்தில் “வானாகி மண்ணாகி” என்ற பாடலில் “யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி” என்றுதான் பாடினார். அவர் சோசலிசம் என்ற சொல்லை எங்கும் பயன்படுத்தவில்லை. ஆனால் பக்தி இயக்க இலக்கிய காலத்தில், இலக்கியத்தில் சோசலிசம் இருந்தது என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம் இல்லையா?. வள்ளுவர் தன் குறளில் எங்கும் சோசலிசம் பற்றிப் பேசவில்லை. ஆயினும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறள் வழியாகவும், “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்” என்ற குறள் வழியாகவும் சமத்துவம் பாடியதை நாம் ஏற்கிறோம். 70 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் மு.வ. எந்த நாட்டில் கூட்டுறவு அமைப்புகள் உருவாகின்றனவோ அங்கே சோசலிசம் காலூன்றி விட்டது என்று பொருள் என்று எழுதினாரே. “சமத்துவத்தை நோக்கி” என்னும் நூலில் தாமஸ் பிக்கெட்டி (Thomas Piketty) கூட இதுவரை நடந்த போராட்டங்கள், போர்கள் போன்ற அனைத்தின் வழியாகச் சமத்துவத்தை நோக்கிய போராட்டம் வளர்ந்து வந்திருக்கிறது என்றுதானே கூறுகிறார்.

எனவே ஒரு கூற்றை அல்லது ஒரு தத்துவத்தைத் துருவி எடுப்பதன் மூலமே அதனுடைய முழுப் பரிமாணத்தை நம்மால் வெளிக்கொணர முடியும். அப்படித்தான் நாம் பெரியாரியத்தைத் துருவி அதற்குள் இருக்கும் மாற்றுத்திறனியத்தை விரிவுபடுத்திப் பார்க்கிறோம். பெரியார் சொன்னவற்றில் எவையெல்லாம் இதற்குப் பொருத்தமானவையோ அவற்றை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்துகிறோம்.

பெரியாரியத்தின் முக்கியக் கூறுகள்

பெரியாரியம் பல விடயங்களைப் பேசின. அவை அனைத்தையும் முக்கூறாய்ப் பிரித்து வகைமைப் படுத்த முடியும். ஒன்று சுயமரியாதை இரண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை மூன்று உள்ளடங்கிய அரசியல். இவை பொதுவில் பேசப்பட்டவை. இவற்றில் எங்கே மாற்றுத்திறனியம் இருக்கிறது என்ற கேள்வி எழுமானால் அதற்கான விடை நாம் முன்னரே குறிப்பிட்டதுபோல இச்சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளும் மனிதர்களே என்பது ஏற்கப்படுமானால் பெரியாரியத்தில் மாற்றுத்திறனியம் இருக்கிறது என்பதை நம்மால் ஏற்க முடியும்.

1.சுயமரியாதை

மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை உண்டு. அந்த வாழ்க்கை சுயமரியாதையோடு இணைக்கப்பட்டது. சுயமரியாதையோடு வாழ்வதே ஒவ்வொருவரின் கனவும் லட்சியமும் ஆகும். ஜல்லிக்கட்டு வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் வந்த போது நீதிபதிகள் விலங்குகளுக்கும் இங்கிதத்துடனும் மரியாதையுடனும் வாழும் உரிமை உண்டு என்றனர். அப்படியானால் இந்த உரிமை மாற்றுத்திறனாளிகளுக்கும் உண்டுதானே. மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உரிமை உண்டெனில் அவர்கள் சுயமரியாதைக்காக எழுந்து நிற்கிற கட்டாயம் இருக்கிறதில்லையா?. மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும்போது அந்தப் போராட்டத்தில் நுட்பமான உட்கூறாக நிற்பது சுயமரியாதை தானே. சுயமரியாதைக்கான இந்தப் போராட்டத்தில் பெரியாரியத்தின் பங்கும் இருந்தாக வேண்டும் அல்லவா?. மாற்றுத்திறனாளிகளும் இக்கட்டத்தில் ஒன்றை மனதில் வைப்பது நல்லது. பேராசிரியர் ராஜ் கவுதமன் சொன்னதுபோல ஒருவர் மற்றவருக்கு அறம் செய்யும்போது அறம் செய்பவர் அதிகாரம் பெற்றவராகவும், அறம் பெறுபவர் அதிகாரம் அற்றவராகவும் ஆகிவிடுகிறார். எனவே மாற்றுத்திறனாளிகளின் கைகள் கவிழ்ந்து இருக்கும்வரைதான் சுயமரியாதை நிமிர்ந்து நிற்கும். எனவே சுயமரியாதைக்கான பெரும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு அளப்பரியது.

2.ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை

மாற்றுத்திறனாளிகள் யார்? இவர்கள் மேம்பட்ட நிலையில் இருக்கிறார்களா? அல்லது ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்களா? இவர்களுக்கு விடுதலை தேவைப்படுகிறதா? இல்லையா? இன்னோரன்ன கேள்விகளுக்கு விடை கிடைத்தால் அதுவே இந்தத் தலைப்பிற்கான தேடலின் முடிவாக இருக்கும். பெரியார் தலித்துகளின் விடுதலை பற்றி, பெண்களின் விடுதலை பற்றி, பிற சாதியினர் பிராமணர்களின் அடக்கு முறையில் இருந்து விடுதலை பெறுவது பற்றிப் பேசினார். நம் கேள்வி பார்வையற்றோரில் தலித்துகள் உண்டா? இல்லையா? பிற சாதியினர் உண்டா? இல்லையா? பெண்கள் உண்டா? இல்லையா? இக்கேள்விகளுக்கு விடை ஆம் எனில் இவ்விடுதலையைப் பற்றி பெரியார் பேசினார் என்பதுதான் பொருள். பெரியார் மாற்றுத்திறனாளிகளைப் பற்றித் தனியாக எதுவும் சொல்லவில்லை என்று கவலைப்படுவதைவிட சொன்னவற்றில் எவையெவை மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருத்தப்பாடாக இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதே அறிவுடைமையாகும்.

விடுதலை வெளிச்சத்தை ஒடுக்கப்பட்டோர்மேல் பாய்ச்ச பெரியார் காலமெல்லாம் உழைத்தார். அவர் உழைப்பே இன்று சமூகத்தின் அடித்தளத்தை மாற்றி அமைத்திருக்கிறது. இம்மாறுதலை நாம் வேரிலிருந்து புரிந்து கொண்டால் பெரியாரிய நோக்கில் மாற்றுத்திறனியம் எப்படிச் செயல்படுகிறது என்பதை நம்மால் யூகித்து உணர முடியும்.

3.உள்ளடங்கிய அரசியல்

அரசியல் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்ததல்ல அது ஒரு சிந்தனை ஓட்டம். நம் எண்ணங்களின் வெளிப்பாடு. இவ்வரசியல் சமூகத்தில் எல்லோருக்கும் உண்டு. அப்படியெனில் சமூகத்தில் வாழும் மாற்றுத்திறனாளிக்கும் ஒரு அரசியல் கோட்பாடு இருந்தாக வேண்டும்.

ஒரு சமூகத்தைப் பற்றி அதன் ஒட்டுமொத்த அமைப்புப் பற்றிப் பேசும்போது அங்கு விடுபடல் இருத்தல் கூடாது. அந்த விடுபடலற்ற ஒட்டுமொத்த மக்களுக்கான அரசியலையே நாம் உள்ளடங்கிய அரசியல் என்று பேசுகிறோம். மாற்றுத்திறனாளிகள் இச்சமூகத்தில் உள்ளடங்கியவர்களே. எனவே உள்ளடங்கிய அரசியல் என்பது மாற்றுத்திறனாளிக்கும் சேர்ந்ததே. இவர்களை உள்ளடக்காமல் ஒரு குழு புறத்தே நின்று இவர்களைப் பற்றிப் பேசுவதும் திட்டங்கள் தீட்டுவதும் செய்வதால்தான் மாற்றுத்திறனாளிகள் நாங்கள் இல்லாமல் எங்களைப் பற்றி எதுவும் இல்லை என்பது பற்றி பேசுகிறார்கள். இந்த முழக்கம்தான் nothing about us without us என்று ஒலிக்கிறது. 2020-21 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் துறைக்காக ஒதுக்கப்பட்ட பணம் 1325 கோடி. 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் 1275 கோடி. ஆனால் 2020-21 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பொதுச் செலவு 30 லட்சம் கோடி. 2025-26 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பொதுச் செலவு 40 லட்சம் கோடி. ஏன் முழக்கங்கள் எழுகின்றன என்பதற்கான காரணங்கள் நமக்குத் தெரிகின்றன இல்லையா?. எனவே பெரியாரியத்தின் உள்ளடங்கிய அரசியலை கூர்மைப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

பெரியாரிய நோக்கில் மாற்றுத்திறனியம், சுயமரியாதை, ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை, உள்ளடங்கிய அரசியல் போன்ற முதன்மைக் கூறுகளை நாம் ஆராயவேண்டி இருக்கிறது. அண்மையில் வெளிவந்த முனைவர் மு.முருகேசன் எழுதிய “கூண்டிலேற்ற முடியாத குற்றவாளிகள்” எனும் நூல் இந்த மூன்று கூறுகளையும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது எனக் கூறலாம். இது சார்ந்த ஆய்வுகள் இன்னமும் மேல்நோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும். அப்போதுதான் மாற்றுத்திறனாளிகள் பற்றிய நல்லதொரு கருத்தாக்கம் உருவாகும்.


Author Picture

வே.சுகுமாரன்

கவிஞர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். கோவையில் இவர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவேதுணை ஆய்வு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவருடைய மொழிபெயர்ப்பு நூலான "காட்டு வாத்துக்கள்" முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு