நைந்துபோகாமல்
தன்னைத் தற்காத்துக் கொண்டவன்/ள்/
அவன்/ள்
மழலையாய் இம்மண்ணில்
பிறந்தநாள் முதலாய்
கட்டமைந்த கட்டமைக்கப்பட்ட
எந்தக் குப்பிக்குள்ளும்
அடைபடாதவன்/ள்
அன் விகுதிக்குள் அடைக்கப்பட்டவன்
தன் தலைமுடியைக்
காணிக்கைக்காக வளர்ந்த நாட்களில்
நீண்டு வளர்ந்திருந்த அந்தக் கருங்குழலில்தான்
பூக்களைச் சூடினாள் அம்மா
பொம்பளயா பிறந்திருக்கலாம்
எவ்ளோ நீள கூந்தல்
பொம்பளயா பிறந்திருக்கலாம்
காதுல 5 பவுன் போட்டிருந்தாலும்
பத்தியிருக்காது
பொம்பளயா பிறந்திருக்க வேண்டியவன்
தப்பிப் பையனா பிறந்துட்டான்
குழப்பங்கள் தொடர்கின்றன
ஆண்
பெண்
என்கிற பதங்களும்
கட்டமைப்புகளும் துரத்துகின்றன
கேள்விகளும் குழப்பங்களும்
அவனைக் காரிருளைச்
சூழ்ந்து ஒரு வெறிநாயைப் போல்
விடாது துரத்துகின்றன
பூக்களுக்காய் சண்டையிட்டு
தலையில் சூடிக்கொண்ட தருணங்கள்
பெண்ணா பிறந்திருந்தா நானே கட்டியிருந்திருப்பேன்
என்றபோது ஏற்பட்ட நாணங்கள்
பாலியல் துன்புறுத்தல்களுக்கும் சீண்டல்களுக்கும்
தொடர்ச்சியாய் உள்ளாகி
பயந்து நடுங்கிய பொழுதுகள்
ஆண்கள் என்றாலே
ஆத்ம பயமும் வெறுப்புகளாலும்
நிறைந்திருந்த நாட்கள்
ஆண்களின் பாசத்திற்காய்
ஏங்கிக் குழம்பி நின்ற பருவகாலங்கள்
பொட்டை
ஒம்போது
நயன்
என்று நகைத்துக்கொண்டே
எப்போதும் என்மேல் விழுந்த
கூரிய கத்திகளால்
கிழிப்பட்ட எனது கண்ணீர் பைகள்
யாருமறியாமல் அழுது தொலைத்து
ஆலயங்களில் மன்றாடி
என்ன மட்டும் ஏன் இப்டி வித்யாசமா படச்சிட்ட
ஒன்னு என்னயா கொன்னுடு
இல்ல எல்லார மாதிரி மாத்திடு
ஏ அம்மனே
சிவனே
மாலவனே
கிருஷ்ணா
கோவிந்தா
அல்லாவே
பிதா சுதன் பரிச்சுத்த ஆவியே
யாரும் இந்தப் பாவியின் குரல் கேட்டு
வரவில்லை
ஆமென்.!
கூரிய நகைச்சுவைகளால் வார்த்தைகளால்
கட்டியணைக்கும் பாசங்குகளால்
கூசி நின்ற உடல்
சாப்பிடும் பாத்திரத்தில்
கொட்டப்பட்ட மண்
பைகளை எடுத்துக்கொண்டு கெஞ்ச வைத்து அழவைக்கும்
காட்சிகள்
மிதிவண்டி பழுதாக்கிக் கொல்லும்
யுத்திகள்
அவனா நீ?
எவன்தான் நான்?
அவன் ஒரு மாதிரி?
நான் எம்மாதிரி?
சொல்கிறேன் கேளுங்கள்
உங்களின் கட்டமைப்புகளில் சிக்காதமையால்
உங்களால் நாடோறும்
அணு அணுவாய்ச் சித்ரவதைச் செய்யப்பட்டவன்
தன் உடலை உணர்வை
யாவற்றையும் மறுத்து
கணந்தோறும் சாகத்துடிப்பவன்
ஆமாம்
நான் ஒரு மாதிரிதான்
உங்களின் முறையுடைய காதலோ
முறையுடைய காமமோ
முறையான வாழ்க்கையோ
முறையான எதுவுமே கிடைக்கப்பெறாதவன்
உங்களின்
இச்சைகளுக்கு இரையாக்கப்பட்டவன் நான்
உங்கள் மொழியில்
நான் ஒரு ஐட்டம்
உங்களைக் காமத்திற்கு அழைப்பவன்
ஆமாம் எதையும் நான் மறுக்கப்போவதில்லை
மறுப்பதால் என்னாகப் போகிறது?
முறையான காதலையோ காமத்தையோ
வழங்க இயலாத எங்களுக்கு
நீங்கள் வழங்கியிருக்கும் பெயர்தான்
இவையாவும்
ஆமாம்
கழிவறைதோறும் எங்களை
உங்களது குறிகளைக் காட்டி அழைக்கிறீர்
நானும்
இனித்தயங்காமல்
உங்களை அனுமதிப்பேன்
புணர்ந்து செல்லுங்கள்
இவ்வுடலை
உங்களது கணநேர வல்லுறவாவது
என்னை
என் உணர்வை
அங்கிகரிப்பதாய்
நானும் மகிழ்ந்து போகிறேன்
இதுதான்
எமக்கு நீங்கள்
வழங்கிய வாழ்க்கை
ஆனால் நானோ ஒருமாதிரி
ஆமாம்
ஆத்மா
கணந்தோறும் நையட்டும்
மௌனத்தின் காரிருள்
என்னுள் புகுந்து ஒரு மீச்சிறு
அகல் வெளிச்சத்திற்காய்
அச்சத்துடன் ஏங்குகிறது
மனம்
கொஞ்சம் விலகுங்கள்
உங்களது கட்டமைப்பால்
நிராகரிப்பட்ட உடல் தனது
இறுதி வேசைத்தனத்தைத் துவங்குகிறது
கவிஞர் அமணாதி அதிதீ