“என்ன ராவண்ணம்மா, குழந்தையைக் குளிப்பாட்டினீங்களா இன்னைக்கு?” காலங்காத்தால வேலைக்குப் போய்க்கொண்டிருக்கும்போது சுமதி கேட்டாள்.
“இப்போதுதான் குளிப்பாட்டி, சாப்பாடுக் கொடுத்தேன். இன்றிலிருந்து திரும்ப தொழிற்சாலைக்கு வேலைக்குப் போறேன்…” ராவண்ணம்மா பதில் அளித்தாள்.
“குழந்தையைக் கூப்பிட்டுப் போக முடியுமா? எப்படி? வேலை எப்படிச் செய்வாய்?”
“வேலைக்குப் போய் ரெண்டு வருடமாச்சு அக்கா. இன்னும் இப்படியே வீட்டில் உட்கார்ந்திருந்தால் எப்படி? அவர் தனியாக வேலை செய்வது குடும்பத்துக்குப் பத்துமா?”
“நீ சொல்லுறதும் உண்மைதான். தொழிற்சாலையில் குழந்தையைக் கொஞ்சம் கவனமாகப் பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் சுமதி.
ராவண்ணம்மாவும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேலைக்குக் கிளம்பினாள். ராவண்ணம்மாவின் மகனின் பெயர் சிரஞ்சீவி. ராவண்ணம்மாவும் அவளது கணவர் பிரதாபும் தங்களின் மகன் பிறந்தவுடனே யோசித்து, யோசித்துத் தேர்ந்தெடுந்து அந்தப் பெயரை மகனுக்கு வைத்தனர்.
பிரதாப் குழந்தைப் பருவத்தில் இருந்தே வேலைக்குச் சென்று வளர்ந்தவர். அவர் நன்றாக சம்பாரித்தாலும் அப்பா வாங்கியிருந்த கடனை அடைப்பதற்கே அந்த வருமானம் சரியாக இருக்கும். ராவண்ணம்மாவைத் திருமணம் செய்வதற்கு வாங்கிய கடனும் சேர்த்து அதிகமானது. கடைசியில் பிரதாபிடம் கடனும் மனைவியும்தான் எஞ்சியிருந்தனர். ராவண்ணம்மாவும் பிரதாபும் வேலைக்குச் சென்று வரும் வருமானம் கடன் அடைப்பதற்கும் குடும்பச் செலவுக்கும் சரியாக இருந்தது.
ராவண்ணம்மா பிள்ளைதாச்சியானதில் இருந்து வேலைக்குப் போகவில்லை. பிரதாப் மட்டும் வேலைக்குச் சென்றார். அவர் ஈட்டும் வருமானம் குடும்பச் செலவுக்கே சரியாகவிட்டது. அதனால் கடன் மேலும் அதிகரித்துக்கொண்டே போனதே ஒழிய குறையவே இல்லை. இப்படி எத்தனை நாட்கள்? என்று நினைத்துவிட்டுதான் வேலைக்குப்போகலாம் என்று முடிவெடுத்தாள் ராவண்ணம்மா.
******
குழந்தையைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்துத் தொட்டிலில் படுக்கவைத்தாள் பார்வதியம்மா. மின்விசிறியின் காற்றில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான் பார்வதியின் மகன் கணேஷ். ராவண்ணம்மாவும் பார்வதியம்மாவும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். சிரஞ்சீவியும் கணேஷும் ஒரே வயதினர். இருவருக்கும் இரண்டு வயது ஆகிறது.
மாலையில் குழந்தைகள் விளையாடும்போதும் இரவில் குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்டும்போதும் ராவண்ணம்மாவும் பார்வதியம்மாவும் வீட்டிற்கு வெளியே ஒன்றாக இருக்கும் நேரம் அது. குழந்தைகள் இருவரும் நன்றாக விளையாடினர். ராவண்ணம்மா வேலைக்குப் போகிறாள் என்பதை அறிந்த பார்வதியம்மா, ராவண்ணம்மாவின் வீட்டிற்குச் சென்று “இன்னும் கொஞ்சம்நாள் கழித்து வேலைக்குப் போகலாம்தானே?” என்று கேட்டாள். அதற்கு ராவண்ணம்மா “நீயும் பார்க்கிறாய்தானே அக்கா, நாங்க ஒரு வாய்க் கஞ்சிக்குக் கூட எவ்வளவு கஷ்டபடுறோம்னு. அதுக்குதான் போகிறேன்” என்று சொன்னாள் ராவண்ணம்மா.
அதுவும் உண்மைதான் என்று தோன்றியது “சரி, அப்போ குழந்தையை எங்க வீட்டுல விட்டுட்டு போ, நான் பார்த்துக்கிறேன். என்னோட குழந்தையும் உன்னோட குழந்தையும் சேர்ந்து விளையாடுவார்கள்” என்றாள்.
“உனக்கு எதுக்கு அக்கா தேவையில்லாத வேலை. நான் சிரஞ்சீவியை என்னுடன் அழைத்துப் போகிறேன்”.
“என்ன உன் கூட கூப்பிட்டுப்போகிறாயா? உன்னோட குழந்தை அழமாட்டான். நான் அழாம பார்த்துக்கிறேன். இன்னைக்கு விட்டுட்டு போ, நாளை எப்படினு பார்ப்போம்” என பார்வதியம்மா சொன்னது சரிதான் என்றுபடவும் குழந்தையைப் பார்வதியம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்குப் போனாள் ராவண்ணம்மா.
தொழிற்சாலையில் வேலை செய்யும்போது மகன் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். “அழுகிறானோ என்னமோ?, சாப்பிட்டானோ இல்லையோ?, தண்ணீர் குடித்தானோ குடிக்கவில்லையோ? விளையாடும்போது ரோடுக்குப் போய்விடுவானோ என்னமோ? இப்படியான கேள்விகளே வந்துகொண்டு இருந்தன. பார்வதியம்மா “நான் உன்னோட மகன் கூடயே இருப்பேன். நீ வேலைக்குப் போய் வா” என்று சொன்னது நினைவுக்குவந்ததும் நிம்மதியானாள்.
ராவண்ணம்மா மாலைவரை வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வந்தாள். பிரதாப்பையும் வேகமா வா என்று அழைத்தாள் “நான் இன்னும் மூன்று மணிநேரம் வேலை செய்துவிட்டு வருகிறேன். அரசாங்க வேலை அதிகமாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டார். அதனால் பார்வதியம்மாவின் வீட்டிற்குச் சென்றாள். சிரஞ்சீவியும் கணேஷும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
“அக்கா, அழுதானா என்ன?” என்று பார்வதியம்மாவிடம் ராவண்ணம்மா கேட்டாள்.
“அப்படி எதுவுமில்லை. இருவரும் நன்றாக விளையாடினர்” என்றாள் பார்வதியம்மா.
சிரஞ்சீவி தூங்கிறவரைக்கும் அங்கே இருந்துவிட்டு, தூங்கி எழுந்தவுடன் அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். இப்படியே ஒரு வாரம் கடந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேலைக்குப் போகவில்லை, வீட்டிலேயே இருந்தாள் ராவண்ணம்மா. எதிர்வீட்டினரும் பக்கத்து வீட்டினரும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ராவண்ணம்மா வீட்டில் பருப்பு கடைந்தவாறு அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“குழந்தையை யாராவது இப்படி அடுத்தவங்க வீட்டுல கொடுத்துப் போவாங்களா?”, “குழந்தையைப் பெற்றெடுத்தால் மட்டும் போதாது, அதை ஒழுங்காக வளர்க்கவும் தெரிஞ்சு இருக்கணும்”, பார்வதியாம்மா என்ன சொன்னாலும் இவங்களுக்கு எங்கப் போச்சு அறிவு? அந்த அம்மா இவங்களுக்குச் சொந்தகாரவங்களா இல்லை ஒரே இனமா? அது எப்படி அவங்க வீட்டுல கொடுத்துவிட்டு போகலாமா? என்று பலவிதமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
இவை அனைத்தும் தெளிவாக ராவண்ணம்மாவிற்குக்கேட்டன. கேட்க வேண்டுமென்றே அவர்கள் அப்படிச் சத்தமாகப் பேசிக்கொண்டிருக்கலாம். ராவண்ணம்மா வெளியே வந்து, ஒரு பார்வைப் பார்க்கவும் அனைவரும் அவரவர் வீட்டிற்கு அமைதியாகச் சென்றுவிட்டனர்.
*****
ராவண்ணம்மாவிற்குச் சமைப்பதற்கு விறகு தேவைப்பட்டது. ஒருவண்டி விறகும் தீர்ந்துபோனது. குழந்தையைத் தூக்கிக்கொண்டும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டும் காட்டிற்குப் புறப்பாட்டாள். காட்டில் தண்ணீர் பாட்டிலைக் கீழே வைத்துவிட்டு, ஒரு துண்டை விரித்து அதில் குழந்தையை அமரவைத்தாள். ரெண்டு மணிநேரம் விறகுவெட்டிவிட்டு, அதை சுமந்து செல்வதற்கு ஏற்றதுபோல கட்டினாள்.
குழந்தையை ஒரு கையில் தூக்கிக்கொண்டாள், வழியில் வருபவர்களிடம் சொல்லி விறகு கட்டைத் தலையில் தூக்கிவைக்கச் சொன்னாள். அதைச் சுமந்துகொண்டு வீட்டிற்கு வந்தாள். விறகைச் சுமந்துகொண்டு வரும்போது பார்த்தால், எந்த வேலைக்கும் ராவண்ணம்மா சளைத்தவள் இல்லையென்று தோன்றும். மறுநாள் ராவண்ணம்மா வேலைக்குப்போகும்போது சிரஞ்சீவியைப் பார்வதியம்மாவிடம் தராமல் கூடவே கூப்பிட்டுப்போனாள். பார்வதியம்மா ஏன் என்று கேட்டதுக்கு “எதுக்கு அக்கா தேவையில்லாத பேச்சுப் பேசுறவங்க மத்தியில் ஏன் இப்படிச் செஞ்சுகிட்டு, வேணாம் அக்கா” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
ராவண்ணம்மா பல்பம் (டைல்ஸ்) கல் தொழிற்சாலையில் வேலைசெய்து வந்தாள். குழந்தையை ஓர் ஒரமாக அமரவைத்துவிட்டு வேலையில் இறங்குவாள். இடையிடையே வந்து குழந்தைக்குத் தண்ணீர் குடிக்க தந்துவிட்டு போவாள். பல்பம் (டைல்ஸ்) கல் தொழிற்சாலை முழுவதும், அந்தக் கற்களின் தூசியினால் இருமல் அதிகமாக வந்துகொண்டே இருக்கும். தூசி வாய் வழியாகச் சென்று குடலில் அடையும். பின்பு இருமலைக் கிளப்பிவிடும். அதைச் சரிசெய்வதற்காக வெள்ளக்கட்டி காபியும் வாழைப்பழமும் வைத்திருப்பாள். மதியம் காபியைக் குடித்துவிட்டும் வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவிட்டும் பின்பு வேலை செய்வாள்.
தொழிற்சாலையில் வேலைசெய்யும்போது குழந்தைக்குத் தினமும் மதியச் சாப்பாடு எதுவும் ஊட்டிவிடுவதில்லை. இரவு தூங்கி எழுந்தபிறகு ஊட்டிவிடலாம் என்று தொழிற்சாலையில் இருந்து வாழைப் பழங்கள் வாங்கிவருவாள். வேலைக்குப் போகும்போதும் விறகுவெட்டப் போகும்போதும் குழந்தையைக் கூடவே அழைத்துச்சென்றாள்.
ஆறுமாதம் இப்படி நன்றாகவே போனது. ஒருநாள் குழந்தையை எப்போதும் போல் தொழிற்சாலைக்கு அழைத்துச்சென்றாள். அங்கே அமர வைத்துவிட்டு வேலை செய்தாள். அப்போது தீடீரென்று சிரஞ்சீவிக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. ராவண்ணம்மா தண்ணீர் கொடுத்துச்சென்றாளே ஒழிய உடல்நலம் சரியில்லை என்பதைப் பார்க்கவில்லை. மாலையில் காய்ச்சல் இன்னும் அதிகமானது.
டாக்டரிடம் அழைத்துச்சென்று குழந்தையைக் காட்டியபோது அவர் சிறப்பு(டானிக்) கொடுத்தார். அதைக் குடிக்கவைத்துவிட்டு படுக்கவைத்தாள். குழந்தையும் நன்றாகத் தூங்கியது. எப்போதும் தூக்கத்தில் இருந்து எழுந்து அழுவான். ஆனால் அந்தநாள் இரவு அழவில்லை. விடியும்போது எழுந்திருக்கவேண்டும். அப்போது எழவில்லை. நன்றாக விடிந்த பின்பும் எழுந்திருக்கவில்லை.
ராவண்ணம்மாவுக்கும் பிரதாப்புக்கும் என்ன நடந்தென்று புரியவில்லை. ரெண்டு வயது குழந்தைக்கு, பச்சிளங் குழந்தைக்கு, சிரஞ்சீவி என்று பெயர் வைத்த மகனுக்கு. இப்படி நடந்ததால் ராவண்ணம்மா மனம் உடைந்துபோனாள். வேலைக்கு மட்டுமில்லை, வீட்டைவிட்டு வெளியே வருவதும் கஷ்டமாகிப் போனது.
வீட்டுக்குள்ளேயே இருந்தாள். வெளியே பேசுகிறப் பேச்சு மீண்டும் கேட்கத் தொடங்கியது.
“பச்சக் குழந்தையைப் போய் அந்தத் தொழிற்சாலைக்குக் கூப்பிட்டுப் போகலாமா? காட்டுக்கு விறகுவெட்டப் போகும்போது கூப்பிட்டுப்போகிறாள். விறகுகட்டுப்போல பிள்ளையையும் தூக்கி வருகிறாள். பிள்ளைப்பெற்றால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் தெரிந்திருக்கணும்”. இந்தப் பேச்சுக்குப் பதில்சொல்ல வெளியே போய்வரலாம் என்றால் உடம்பு சரியில்லை என்பதால் ராவண்ணம்மாவுக்கு எழுந்துபோகமுடியவில்லை.
******
ஒருநாள் பார்வதியம்மாவின் மகன் கணேஷ் விளையாடியபடி ராவண்ணம்மாவின் வீட்டிற்குள் வந்துவிட்டான். படுத்திருந்த ராவண்ணம்மா அருகில் சென்று நின்றான். கணேஷைப் பார்த்தால் சிரஞ்சீவியைப் பார்த்துப்போன்று தோன்றியது. “என்னோட மகனும் இப்படி விளையாடுவான் தானே…” என்று நினைத்து அழுதாள்.
கணேஷை தனது அருகில் அழைத்துத் தூக்கிக்கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். சுவரில் சிரஞ்சீயின் புகைப்படம் கையில் கணேஷ் இருந்தான். அந்தத் துயரம் மறந்துபோவது அசாத்தியமே என்றாலும் அந்த ஒரு நொடிபொழுதும் கணேசனுக்குள் சிரஞ்சீவியைப் பார்த்தாள்.
அதற்குள் மீண்டும் வெளியே பேசுவது தொடங்கிவிட்டது. இந்தமுறை குசுகுசு என்று இல்லை. பார்வதியம்மாவே கேட்கும்படி அவர்கள் வீதியில் பேசினர். அதில் ஒன்று பெரிய கல் போன்றது ராவண்ணம்மாவின் இதயத்தில் இடிப்போன்று விழுந்தது.
“உன்னோட பிள்ளையை எதுக்கு அந்த அம்மாவிடம் அனுப்புனீங்க?” அவங்கள போலவங்கிட்ட கொடுக்கக் கூடாது.” அந்த அம்மாவோட மகனுக்கு என்னாச்சுனு தெரியும் தானே?” இப்படி அவர்கள் கல் எரிவதை நிறுத்தவில்லை. ஒவ்வொன்று ராவண்ணாவின் இதயத்தின் மீது விழுகின்றன.
“கணேஷை அருகில் அழைத்து தூக்கிக்கொண்டு அவங்க வீட்டில் விட்டுட்டு வரலாம் என்று வெளியே வந்தாள்.
அப்போது பார்வதியம்மா “பக்கத்துவீட்டில் விட்டுப்போனால், இப்படிப் பக்கத்துவீட்டில் விட்டுவேலைக்குப் போகலாமா என்று பேசுறிங்க. வேலைக்குப் போகும்போது கூட அழைத்துப்போனால், வேலைசெய்யும் இடத்துக்கு எல்லாம் அழைத்துச்செல்லலாமா என்று பேசுறிங்க. குழந்தை உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டால், அந்த அம்மாவை ஏன் சொல்லுறிங்க? அந்த அம்மா இப்போ எவ்வளவு கஷ்டத்துல இருப்பாங்க. இதுல நீங்க வேற உசுர வாங்குறிங்க. முதலில் அவங்க அவங்க விஷயத்தப் பாருங்க” என்று திட்டிவிட்டு ராவண்ணம்மாவின் பக்கம் பார்த்து “ உனக்கு எவ்வளவு நேரம் குழந்தையை வைத்து இருக்கணுமோ அவ்வளவு நேரம் வைச்சுக்கோ. அழுகும்போது மட்டும் என்னைக் கூப்பிடு” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றாள் பார்வதியம்மா.
இப்போது யாரும் ராவண்ணம்மா மீது கற்களை எரிந்து காயப்படுத்துவதில்லை. சிரஞ்சீவி இருக்கிறனோ இல்லையோ என்ற உண்மையைத் தாண்டி, வாழ்க்கையில் இன்னும் முன்னேறி செல்லவேண்டும் என்ற தைரியம் மட்டும் ராவண்ணம்மாவுக்கு நன்றாக வந்தது.