வேண்டுகோள்
என்னை மறந்து விடுங்கள்
ஆம் என்னை மறந்து விடுங்கள்
என் நினைவுகளை
உங்கள் இதயத்தில்
சுமத்தி சிலுவையாக்காமல்
என்னை மறந்து விடுங்கள்
ஆண்களே பெண்களே
என்னை நேசித்தவர்களே
மண்ணில் பிறந்த
காரணத்தை அறிந்து கொள்ளாத
என்னை மறந்து விடுங்கள்
கண்ணீர் பண்டமாற்றில்
அனுபவங்களை வாங்கியவனை
புன்னகைக்க முயன்ற போது
புழுதி சோகத்தில் மூழ்கியவனை
தன்னையறிய முடியாதவனை
தன்னை நேசிக்காதவனை
கற்பனைகளை விற்று
அற்புதங்களைச் செய்ய
முடியும் என்று
நினைத்த பேதையை
என்னை மறந்து விடுங்கள்
ஆம் என்னை மறந்து விடுங்கள்
மனைவி மக்களுக்கும்
சேர்த்தே சொல்லுகிறேன்
என்னை மறந்து விடுங்கள்
ஆம் என்னை மறந்து விடுங்கள்
எங்கே இருக்கிறாய்
எல்லோரும் எப்போதும்
உன்னைத் தேடுகிறார்கள்
நீதான் இருப்பதெங்கே
உண்டென்பார் சிலர்
இல்லையென்பார் சிலர்
சிலைகளில் பலர்
கலைகளில் சிலர்
உன்னைத்தேடிக் கதறுகிறார்
உன் இருப்பிடம் எது
இருத்தலா இன்மையா
தூணும் துரும்பும்
உன் இருப்பிடமாமே
எனில் சொல்வாய்
என் விழித்திரையில்
மட்டும் நீ
இல்லாதது ஏன்
நாளை உன் வேலை
நான் சொல்வது புரிகிறதா
தனலைப் பொதிந்து
மௌனத்தை நட்டு வை
நாளை அவை
புரட்சி மலர்களாய்ப்
பூத்துக் குலுங்கலாம்
கனவுகளின் யதார்த்தம்
கண்ணீர் பொழிவில் அல்ல
கைகோர்த்த எதிர்ப்பில்
இன்றைய சகாரா
நாளைய சோலைவனம்
இன்றுனக்கு வாக்குறுதி தரப்படலாம்
குப்பையில் எறியப்படும்
விண்ணப்பங்களைப் போல
உன் கனவுகள்
கிழித்தெறியப்படும் முன்
உன் உணர்வுகள்
சுரண்டி களையப்படும் முன்
விழித்துக் கொள் தோழனே
பேரின தர்மத்தில்
நிராயுதபாணி இலக்கு
நீ மட்டுமே
மன்னிக்கப்பட முடியாதவர்
டால்பினைப்போலத் தூங்கு
விரைந்து விழித்துக்கொள் தோழனே
