-->

அண்மை

உடைபடும் புலனதிகாரம்: ‘பார்வை தொலைந்தவர்கள்’ நாவலை முன்வைத்து (யோசே சரமாகோ - தமிழில்: எஸ். சங்கர நாராயணன்) - வே. சுகுமாரன்


இந்த நாவலை இந்தச் சொல்லாடலில் இருந்து தொடங்குவோம். “மொத்த தேகத்திலேயே கண் ஒன்னில்தான் ஆத்மா ஒளிர்கிறது” (ப.157). ஆம் இப்படித்தான் இந்தச் சமூகம் தன் புலனதிகாரத்தைப் பயன்படுத்தி யோசிக்கிறது. கண் அற்றவர் ஆன்மா அற்றவராகக் கருதப்படுவதின் மூலம் தங்களை அறியாமலேயே தங்கள் சிந்தனைக்குள் இந்த வகையினரைப் பற்றிய வன்மத்தையும் வெறுப்பையும் வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.

பார்வையின்மை என்பது ஒட்டுமொத்த இழப்பு. அங்கே வேறு எதற்கும் இடமில்லை. வேறு எத்தகைய உணர்வும் ஜீவித்திருத்தலுக்கான ஆதாரம் இல்லை. “கண் சொல்லாமல் இதயம் அழாது” (ப.302). ஆம் இதை இன்று யோசே சரமாகோ அல்ல நம் கவிஞர்கள் வரை இப்படித்தான் நினைத்து வந்திருக்கிறார்கள். “கண்கள் இரண்டும் குருடானால் காதல் கதைகள் பிறப்பதில்லை” (நிலவே நீ சாட்சி - திரைப்படம்). காதல் தொடங்கிக் கருணைவரை அனைத்தும் கண் வழியேதான் நிகழ்கின்றன.

ஒரு மனிதருக்கு மொத்தம் 13 நுண் உணர்வுகள் செயல்பட்டு அவர் வாழ்க்கையை வழிநடத்துகின்றன என்று உளவியலாளர்கள் கூறுவதை இவர்கள் நம்புவதில்லை போலும். இத்தைகைய மனோநிலை கிரேக்க சமூகம் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து வருகிறது. நகரம் சுத்தமாக இருக்கவேண்டுமெனில் மாற்றுதிறனாளிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற பிளோட்டோவின் கருத்தை 12 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞரான இப்னோ தோஸ்த் அலி அங்கீகரித்தார் என்பதை ராகுல்ஜி சுட்டிக்காட்டுகிறார். இத்தகையதோர் மனோநிலையைப் பின்னணியில் வைத்துக்கொண்டு கதைக்குள் செல்வோம்.

கதைக்குள்ளே,

நாவலாசிரியர் போர்ச்சுகீசியர். எனவே நாடு போர்ச்சிகீசாக இருக்குமா? தெரியாது. இன்றைய இந்தியாவை மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால் பூடகமான இந்த நாவல் பிரதி இந்தியாவையும் குறிக்கலாம். மொத்தத்தில் கதைக்குள் நாட்டின் பெயர், நகரம் அல்லது தெருவின் பெயர், ஏன் பாத்திரங்களின் பெயர் கூட குறிக்கப்படவில்லை. முதலாமவனின் பார்வையிழப்பின் வழியே கதை நகருகிறது. இதனால் இவன் முதல் பார்வையற்றவன் என்ற பெயரைப் பெறுகிறான்.

ஒரு பெரிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் சிக்னலில் ஒரு காரோட்டி தன் பார்வையை இழந்து விடுகிறான். பலரும் வையவும் சண்டை போடவும் தொடங்க ஒருவன் அவனுக்கு ஆதரவாக வந்து நிலைமையைத் தெரிந்து கொண்டு அவன் வீடுவரை காரை ஓட்டிச்சென்று அவனை வீட்டில் விடுகிறான். உதவியவன் உதவிக்கு பரிகாரமாக காரைத் திருடிக்கொண்டு போகிறான். அந்தோ அவனும் பார்வையிழக்கிறான். மாலையில் வீடு திரும்பிய முதல் பார்வையற்றவனின் மனைவி அவனை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் வருகிறாள். விசித்திரமான வெண்மைத்திட்டு பார்வையிழப்பு நோயைப் பற்றி மருத்துவர் பெரிதும் ஆராய்கிறார். ஆனால் அவரும் அந்த நோய்க்கு இலக்காகிறார்.

அரசங்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு மருத்துவர் செய்தியைத் தருகிறார். சிறிது நேரத்தில் மருத்துவர் உட்பட பாதிக்கப்பட்ட பலரையும் ஒரு முகாமுக்குக் கொண்டு செல்கிறார்கள். அந்த முகாம் முன்பு பைத்தியகாரர்களின் விடுதியாக இருந்த இடம். பார்வை உள்ளவர்கள் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. ஆயினும் தான் பார்வையிழந்ததாகக் கூறி மருத்துவரின் மனைவியுடன் சென்றுவிடுகிறார். அங்கே மெல்ல மெல்ல பலரும் வந்து சேருகிறார்கள். அவர்களில் பார்வையிழந்த முதல் பார்வையற்றவனின் மனைவியும் ஒரு கருப்புக் கண்ணாடிக்காரியும் ஒரு மாறுகண் சிறுவனும் ஒரு கருத்திரையாரும் வந்து சேருகின்றனர். இப்போது இவர்கள் ஒரு குழு. இவர்களுக்கு தலைவராக மருத்துவர்.

வேறு பலரும் வந்து சேருகிறார்கள். இப்படியாக வார்டு ஒன்று, இரண்டு, மூன்று ஆட்கள் நிறைய பிரச்சனைகளும் நிறைகின்றன. சுகாதாரத்திற்கான வாய்ப்பே அங்கு காணப்படவில்லை. அவரவர் அவசரம் அவரவருக்கு என்ற நிலையில் அவரவர் இடத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அசுத்தப்படுத்துகிறார்கள்.

நேரத்துக்கு நேரம் உணவு கொண்டு வந்து வைக்கப்படும் என்றும் அதைப் பெற்றுக்கொண்டு இராணுவம் சொல்லும் விதிமுறைகளைக் கடைபிடித்து நடந்து அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஒலிபெருக்கியில் சொல்லப்படுகிறது. மேலும் அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியே செல்ல முயற்சி செய்யக்கூடாது என்றும், செய்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நாட்கள் செல்லச்செல்ல உணவு வருவது குறைகிறது. காரணம் தெரியாமல் பார்வையற்றவர்கள் தவிக்கிறார்கள்.

பின்னர் ஒரு செய்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. பக்கத்து வார்டைச் சேர்ந்தவர்கள் எல்லா உணவையும் எடுத்து பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் இவர்களுக்கு உணவு தேவைப்படுமானால் கையில் இருக்கும் நகை, பணம் அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. கையில் கம்பும் ஒருவன் கையில் துப்பாக்கியும் கூட வைத்திருக்கும் அந்த முரடர்களிடம் உணவு பெறுவதைப்பற்றி யோசிக்கிறார்கள். வழக்கமான முடிவுப்படி தங்கள் கையில் உள்ள அனைத்தையும் கொடுத்து உணவு வாங்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். அடுத்த கட்டத்தில் இவர்களிடம் தருவதற்கு எதுவும் இல்லை எனும் நிலையில் இவர்களுடன் இருக்கும் பெண்களை அனுப்புமாறு கட்டளை வருகிறது. இந்தக் கொடூரம் உச்சபட்சமானது. பசியின் கொடுமையைப் போக்க இதற்கும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்தக் குழப்ப நிலையைக் கண்ணுற்ற டாக்டரின் மனைவி துப்பாக்கி வைத்திருக்கும் தலைவன் எனக் கருதப்பட்டவனைக் கொன்று விடுகிறாள். திருட்டுக்கும்பல் செய்வதறியாது அல்லாடித் தள்ளாடுகிறது. முடிவாக அவர்கள் தடுப்பாக வைத்து பயன்படுத்திய பழைய கிழிந்த சிக்குபடிந்த படுக்கை அடுக்குகளுக்கு ஒருத்தி தீ வைக்கிறாள். வைத்தவளே தீக்குள் மாட்டி இறந்து போகிறாள். எனினும் கட்டிடம் முழுவதும் தீ பரவி திருட்டு கும்பல் உட்பட எல்லோரும் மாட்டிக்கொள்கின்றார்கள். டாக்டர், டாக்டரின் மனைவி, கருப்புக்கண்ணாடிகாரி, கருந்திரையர், மாறுகண் பையன், முதலாம் பார்வையற்றவன், அவன் மனைவி என ஏழு பேர் டாக்டர் மனைவியின் உதவியுடன் தப்பி வெளியே வருகிறார்கள். அப்பொழுதுதான் அடுத்த ரகசியம் வெளிப்படுகிறது. அதாவது இவர்களுக்குக் காவல் இருந்து இதற்கு முன் காயமுற்று நோயாளியான கார்திருடன் உட்பட பத்துபேரை கொன்று குவித்த இராணுவம் இப்போது அங்கு காவலில் இல்லை.

“பார்வையற்றவர்கள் மத்தியில் ஒரு கண் தெரிந்தவன் அரசன்” எனும் ஆங்கில பழமொழிக்கு மாறாக இரண்டு கண்ணிலும் பார்வை கொண்ட டாக்டரின் மனைவி ஆறு பேரை வழிநடத்திச் செல்கிறாள். ஒவ்வொருவரின் வீட்டையும் பார்த்து அலசிய பிறகு எல்லோரும் டாக்டரின் வீட்டுக்குச் செல்லுகிறார்கள். அங்கே அவர்கள் இருக்கும் நீரைப் பயன்படுத்தித் தங்களைச் சுத்தப்படுத்திக்கொண்டு டாக்டரிடம் இருந்த உடைமைகளை அவரவர்களுக்குத் தகுந்தாற்போல பயன்படுத்திக் கொண்டு எல்லோரும் ஆசுவாசமாக நிம்மதியாக பொழுது போக்குகிறார்கள். நகரெங்கிலும் மின்சாரம் இல்லை. கடை கன்னிகள் இல்லை. அரசு அலுவலகங்கள் இல்லை. தெருவெங்கிலும் சேரும் சகதியும் பிணங்களும் பிணவாடையும் மிருகக் கழிவுகளும் மனிதக் கழிவுகளும் என இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் தன்னை ஒரு தாயாக, சகோதிரியாக பாவித்துக் கொள்ளும் டாக்டரின் மனைவி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவர்களை அமரவைத்து நூல் ஒன்றை வாசித்துக் காட்டுகிறாள். இந்த நடவடிக்கையும் இது போன்ற பிற நடவடிக்கைகளும் டாக்டரின் மனைவி உயர்ந்த நிலையில் உள்ள மனிதாபிமானி என்னும் நிலையைக் காட்டுகிறது.

பார்வை மாற்றுத்திறனாளிகளின் மதிப்பீடு:

இந்த நூல் ஆங்கிலத்தில் வந்தபோதே பார்வை மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் பரபரப்பிற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாயிற்று. அமெரிக்காவில் இருந்து வெளிவந்து 102 ஆண்டுகளுக்குப்பின் நின்றுபோன பிரெயில் பத்திரிக்கையான ‘மெட்டில்டா சிக்லரின்’ ஆசிரியரான மெல்லர் தன் தலையங்கத்தில் பெரிதும் விமர்சித்தார். அவர் சொன்னார், “சில நூற்றாண்டுகளாக நாம் போராடி உருவாக்கி வைத்திருக்கும் கருத்தாக்கங்களை யோசா சரமாகோ உடைத்துவிட்டார்”. “நாம் பார்வையற்றவர்கள் எனவே நாம் இறந்தவர்கள். நாம் இறந்தவர்கள் எனவே நாம் பார்வையற்றவர்கள் (ப. 289)” என்று கூறப்பட்டிருப்பதும், அவர்கள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுவதும், அவர்கள் கைகளை எப்படி கழுவுவது என்று அவர்களுக்குத் தெரியாது போன்ற எடுத்துக்காட்டுகளை டாக்டர் மெல்லர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவருடைய விமர்சனத்தில் உண்மை இருக்கிறது. எனினும் நாவலை முழுமையாக படிப்பவர்களுக்குச் சில விசயங்கள் புரியும். அதாவது இந்த நாவல் பின்நவீனத்துவம் என்றும் உலகமயமாக்கலின் பின் விளைவு என்றும் அல்லது மக்களின் கண்மூடித்தனமான பழக்கத்திற்கு ஓர் உவமை என்று இது பேசப்பட்டாலும் வாசகர் சில விடயங்களை மனங்கொள்ள முடியும். பார்வையற்றவர்களின் குணாம்சங்களாகச் சொல்லப்படுகின்ற எதுவும் பார்வை மாற்றுதிறனாளியின் விசேட குணம் அல்ல. பார்வை உள்ளபோது ஒருவருக்கு என்ன குணாம்சம் உள்ளதோ அதுவே தொடர்ந்து வருகிறது. டாக்டர் கென்னத் ஜெர்னிகன் (அமெரிக்க பார்வையற்றோர் சம்மேளத்தின் தலைவர்) ஒரு கூட்டத்தில் பேசும்போது சொன்னார். “நாம் சமூகத்தில் இருந்து பிரித்து வைக்கப்பட்டிருக்கிறோம் என்று யார் சொன்னது. நம்மிடையே வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள், ஆசிரியர்கள் இருக்கிறார்கள், பிட்பாக்கெட்டுகள் இருக்கிறார்கள், ஏன் விலை மாதர்கள் கூட இருக்கிறார்கள்” என்றார். இதன் பொருள் பார்வை உள்ளவர் எந்த குணாம்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறாரோ பார்வை இழப்பிற்குப் பிறகு அதையே பின்பற்றுகிறார் என்பதுதான். விபத்துகளைத் தவிர்த்துப் பார்த்தால் பார்வையிழப்பிற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. பிறவிலேயே பார்வையிழப்பவர்களின் நிலைவேறு. ஆர். பி. என்று அழைக்கப்படுகின்ற ரெட்டினிட்டிஸ் பிக்மெண்டோசா பெரும்பாலும் நடுவயதிலேயே பார்வையை இழக்கிறார்கள். பார்வையில் நிலைமாற்றம் இருக்கிறது. மனநிலையில் மாற்றம் இல்லை. எனவே இந்த அடிப்படையில் பார்த்தால் யோசே சரமாகோ ஓரளவு சரியாகவே பேச முயன்றிருக்கிறார். அவர் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதால் ஒரு பிரிவினரைப் பற்றிய கீழான சிந்தனை கொண்டிருக்கமாட்டார் என்று நம்பலாம்.

இந்நாவலில் இதர கூறுகளாகச் சில பண்பாட்டு நடவடிக்கைகளையும் பாத்திரப் படைப்புகளையும் குறிப்பிடலாம். இந்தியப் பண்பாட்டில் இருப்பது போலவே போர்ச்சுகீசியப் பண்பாட்டிலும் ஆண்கள் குளிக்கும்போது பெண்கள் முதுகு தேய்த்து விடும் பழக்கம் இருக்கிறது போலும். கருந்திரையாரின் முதுகை ஒரு பெண்ணின் கை தேய்த்துவிடும்போது அது டாக்டரின் மனைவியாகத்தான் இருக்க முடியும் அவளுக்குத்தான் தாய்மை உள்ளமும் கருணை நெஞ்சமும் இருக்கிறது என்று கருந்திரையார் நினைப்பதும், உங்களோடு வாழ விரும்புகிறேன் என்று கூறி கருப்பு கண்ணாடிகாரி கை கொடுத்தபோது இந்தக் கைதான் முதுகு தேய்த்துவிட்ட அந்த கை என்று கருந்திரையார் நினைப்பதும் நம் இந்திய பண்பாட்டுக் கூறுகளாகத் தோன்றுகின்றன. டாக்டரின் மனைவியும், முதல் பார்வையற்றவனின் மனைவியும் தங்கள் கணவன்மார்களைக் கவனிப்பதை வாசிக்கும்போது ஏறத்தாழ அது நமது நாகரிகம் போலவே தோன்றுகிறது. பூமியெங்கிலும் மனிதர்கள் ஒன்று போலத்தான் என்பதற்கு இது ஓர் உதாரணமோ என்னவோ!

மொழி

இந்த நாவலின் தமிழாக்கம் பற்றி கொஞ்சம் பேசலாம். ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டதுபோலத் தெரியாத நிலையில் எஸ். சங்கரநாராயணன் மொழிபெயர்த்திருப்பது பாராட்டுக்குரியது. பணத்தையும் பொருள்களையும் பெற்றுக்கொள்ளும்போது ஒரு நிரந்தரப் பார்வையற்றவன் அவற்றைச் சோதித்து எடுத்து பிரெயிலில் குறித்து வைக்கிறான். இதில் எது அசலானது எது டுபாக்கூர் என்று குறித்து வைக்கிறான் என்பது போன்ற மொழியாக்கமும், பெண்கள் தங்களை ஒப்படைக்க கூட்டமாகக் கிளம்பும் இடத்தில் “அந்த காரிடர் வழியே பேரிடர் நோக்கி முன்னேறியது அந்தப் பேரணி” என்பது போன்ற சொல்லாட்சிகள் வாசிப்பவர் மனதில் மகிழ்ச்சியையும் அதே சமயம் நிகழவிருக்கும் கொடூரத்தின் எதார்த்தத்தையும் ஒரு சேர உணர்த்துகின்றன. ஆயினும் புட்டுகிட்டது என்பதற்கு பதிலாக புட்டுகிச்சி என்று இருந்திருந்தால் இன்னமும் மொழியின் எதார்த்தம் கூடியிருக்கும். மொழிபெயர்ப்பாளர் தம் மொழிபெயர்ப்பில் குருடன் என்பதற்குப் பதிலாக பார்வையற்றவர் என்று மொழிபெயர்த்திருக்கலாம். எஸ். சங்கரநாராயணின் மொழிபெயர்ப்பு வாசகனைச் சுணக்கமின்றி நாவலை விறுவிறுப்பாக வாசிக்க வைக்கிறது என்பது மிகையில்லை.

Author Picture

வே.சுகுமாரன்

கவிஞர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். கோவையில் இவர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவேதுணை ஆய்வு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவருடைய மொழிபெயர்ப்பு நூலான "காட்டு வாத்துக்கள்" முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு