புனிதத்தின் தீட்டு
இன்னும் நான்
நுழைய முடியாத
வாசல்களின்
நிலைக்கால்களில்
ஒட்டப்பட்டு இருக்கிறது!
"இந்த வீட்டின் தலைவர் இயேசு"
என்னும் ஸ்டிக்கர்!
-ஆமென்
-
என் வேடம் கலைத்து
ஆண்டுகள் ஆயினும்
அதே கதாப்பாத்திரத்தில்
நடிக்க மீண்டும் கூப்பிடுகிறார்கள்
அவர்களுக்கு எப்படிச் சொல்வேன்
நீங்கள் என்னிடம் காட்டுவது
அன்பின் பரிவு அல்ல
வெறுப்பின் தீண்டாமை என்று!
-
ஏழு வயதில்
நாய் பொம்மைக்கு
முந்தானை மறைக்க
மலர்ந்த என்
சிறு முலைக்காம்பை
காட்டி பாலூட்டுவதில்
துவங்குகிறது என்
ஊன் உணராத
தாய்மை!