-->

அண்மை

ஜமா: கலைஞரின் அகம் - கலாச்சாரப் பதிவு - தினகரன்

இயற்கை-சமூகம்-வாழ்வென எல்லாவற்றிலிருந்தும் அந்நியமாக்கப்பட்டு மனிதர்கள் ஓர் ஜடப் பொருளாக இருக்கிறார்கள். அவர்கள் தொலைத்த-மறந்த பொதுமைப் பண்பை மீட்டெடுப்பதிலேயே கலையின் மிகப்பெரிய பங்கானது அடங்கியிருக்கிறது. சமூகத்தில் நிலவும் அனைத்துவகையான அசமத்துவத்திலிருந்தும் சமத்துவத்தை வேண்டுவதே கலைபடைப்பின் நோக்கமாக இருக்கவேண்டும்.

ஜமா – தெருக்கூத்து என்பது தமிழர்தம் மரபான நிகழ்த்துக் கலைகளுள் முக்கியமான இடத்தைப் பெறுவது. அத்தகைய கலையில் கலைஞர்களுக்குள் இருக்கும் அதிகார ஆதிக்கத்தை, அசமத்துவத்தை வெளிக்காட்டி, இறுதியில் அக்கலையின் வாயிலாகவே ஏற்றத்தாழ்வுகளை உடைத்துச் சமத்துவத்தைப் படைத்துள்ளார் இயக்குநர் பாரிஇளவழகன்.

அர்ச்சுனன் வீரம் பொருந்தியவன், அர்ச்சுனன் போல் வில்வித்தை கற்றவர்கள் எவரும் இலர். அர்ச்சுனன் எதிர்த்து நின்று அனைவரையும் வீழ்த்தக் கூடியவன் என அதிகாரத்தின் படிமமாக அர்ச்சுனன் கதாபாத்திரம் இருக்கிறது. மேலும், இந்திய இராணுவத்தில் ஒருசக்தி வாய்ந்த பீரங்கிவண்டிக்கு “அர்ச்சுனா” என்று பெயரிட்டு இருப்பது, ஒரு புனைவுக் கதாபாத்திரம் இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைக் காட்டுகிறது. இப்படி ஆண்மை-அதிகாரம் பொருந்திய அர்ச்சுனன் வேடத்தைப் 'பெண்மை' தன்மையுள்ள கல்யாணம் என்ற ஆண் ஏற்று நடிக்க மறுக்கப்படுகிறது. பெண் வேடத்தைத் தனக்குப் பிடித்து ஏற்று நடிக்கும் கல்யாணம் 'பெண்மை' தன்மையுடன் இருப்பதால், அவரது தலைமையில் ஜமாவை உருவாக்க மற்ற குழு உறுப்பினர்கள் மறுக்கிறார்கள்.

ஜமாவின் தலைவராக இருக்கும் தாண்டவமும் இறுதிவரை என்னுடைய தலைமையின் கீழ்தான் ஜமா இருக்கவேண்டும் என மற்ற உறுப்பினர்களுக்குத் தலைமைப் பாத்திரங்களைக் கொடுக்க மறுக்கிறார். குறிப்பாகக் கல்யாணத்துக்குப் பெண் கதாபாத்திரத்தைக் கொடுத்து வளரவிடாமல் தடுத்து வருகிறார். தன்னுடைய அப்பாவின் கனவான ஜமாவைக் கைப்பற்ற வேண்டும் என்றால் அர்ச்சுனன் வேடம் போட வேண்டும். ஆனால், கல்யாணத்துக்கு இறுதிவரை அந்த வாய்ப்பைத் தாண்டவம் வழங்காமல் மறுத்துக் கேவலமாக நடத்துகிறார்.

பெண்தன்மையுடன் இருப்பதால் மறுக்கப்பட்ட அர்ச்சுனன் கதாபாத்திரத்தைத் தன்னாலும் சரியாக நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற வேட்கை கல்யாணத்திற்கு இருந்துகொண்டே இருக்கிறது. இறுதியில் அதற்கான ஒரு வாய்ப்பு வரும்போது தாண்டவம் குறுக்கிட்டுச் சூழ்ச்சி செய்து குந்தி வேடத்தைக் கல்யாணத்துக்குக் கொடுக்கிறார்.

ஒரே ஒரு காட்சி மட்டும் வரும் குந்தி கதாபாத்திரத்தைக் கல்யாணத்துக்குக் கொடுக்கும் தாண்டவம் கர்ணன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். கர்ணன் போரில் இறந்துவிட்டார். தன் மகனுக்காகக் கண்ணீர் விட்டுக் கதறுகிறாள் தாய் குந்தி. குந்தியின் அழுகையும் சோகமும் குழுமி இருந்தவர்களின் உள்ளத்தில் பெரும் துயரத்தை வரவழைக்கிறது. தன்னைப் புறக்கணித்த ஆதங்கம்-வலி எனக் கல்யாணத்தின் அழுகை குந்தியின் அழுகையோடு சேர்ந்து வெளிப்படுகிறது. கல்யாணம், எந்தப்பாத்திரமாக இருந்தாலும் கலைஞராக அதை ஏற்றுக்கொண்டு உயிர்க்கொடுக்கிறார். குந்தியாகக் கல்யாணம் தனக்குள் இருக்கும் கலைஞரை உலகிற்கு வெளிப்படுத்திவிட்டார்.

தாண்டவம்- அதிகாரத்தாலும் போட்டியாலும் பொறமையாலும் கல்யாணம் என்ற கலைஞரைப் புறக்கணித்து விட்டார். அவர் கலைக்கும் கலைஞர்க்கும் நேர்மையாக இருக்கவில்லை. குந்தியின் கண்ணீர் கர்ணனான தாண்டவத்தின் மனச்சாட்சியை உலுக்குகிறது. அவரது கண்ணீர் கல்யாணத்தின் நடிப்பின் உச்சத்திற்குக் கிடைத்த பரிசாகிறது. கல்யாணத்தின் கால்களில் விழுந்துமரியாதை செலுத்திய தாண்டவம் இறந்து தான் ஓர் கலைஞனாக உயிர்ப்பெறுகிறார்.

ஓர் ஆண் உடல் "பெண்மை" குணத்தில் இருப்பதால் உனக்கு அர்ச்சுனன் வேடம் போடத் தகுதியில்லை என்று கேவலப்படுத்தும்போது அவ்வேடத்தை ஊரின் நடுநாயகமாக அரிதாரம் பூசி உரத்தக் குரலில் அடக்கி வைத்த கோபத்தை எல்லாம் உணர்வெழுச்சியாகமாற்றி ஆடிப்பாடுகிறார் கல்யாணம்...

இந்திரனால் வளர்க்கப்பட்ட மகன்..

அரசன் அர்ச்சுனன் உங்கள் முன் நிற்கிறேன்…

துள்ளும் கால் அடியில் இசையை உருவாக்கியும், பஞ்சவர்ண கிளிப்போல பாடியும்..

உங்கள் அர்ச்சுனன் வந்தேன்…

சாதி, மதம், இனம், பாலினம், வர்க்கம் போன்றவற்றின் அடிப்படையில் மறுக்கப்படும் உரிமைகளைப் போராடி பெறுவதிலேயே மனித இருத்தல் அடங்கியிருக்கிறது.

சமூகத்தால் எவை எல்லாம் எனக்கு மறுக்கப்படுகிறதோ அதை துணிந்து செய்வதே எனது அரசியல் நடவடிக்கையின் முதற்கட்டம்.

“பெண்மை”யால் மறுக்கப்பட்ட அர்ச்சுனனை, ஜமாவைப் போராடிப் பெறுவதே கல்யாணத்தின் அரசியல் நகர்வின் முதற்கட்டம்.

தெருக்கூத்தும் பெண்வேடமும்

தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகக் கருதப்படுகிற சங்க இலக்கியங்களில் பாடினியர், விறலியர் போன்ற பெண்கள் கலைச் செயற்பாடுகளில் பங்கெடுத்துள்ளதைக் காணமுடிகிறது. ஒளவை என்ற பாடினி அதியமானுக்கு அறிவுரை வழங்கியது என்பது அரசியல் அரங்கில் பெண் பெற்றிருந்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அதியமானுக்கும் ஒளவைக்கும் இடையில் இருந்த மரியாதையும் அன்பும் இன்றைய சூழலில் பார்க்கையில் அவை இலட்சியப்பாத்திரங்களே. உடைமைச் சமூக உருவாக்கத்திற்குப் பிறகு பெண்கள் பொது நிகழ்வுகளில் பங்கெடுப்பது தடைசெய்யப்பட்டது. பொருள் உற்பத்தியில் தொடங்கி அரசியல்-கலை-இலக்கியம் என எல்லாவற்றிலும் பெண்கள் மறுக்கப்பட்டார்கள். பெண்கள் முழுவதுமாக இனஉற்பத்திக்கான இயந்திரமாக மாற்றப்பட்டார்கள். இச்சூழலில் அரசியல்-கலை-இலக்கியம் என்பன ஆண்களுக்கானதாகவே வெளிப்படுகிறது.

இச்சமூகச் சூழலில் தெருக்கூத்துக் கலையிலும் பெண்களின் கதாபாத்திரங்களை ஆண்களே ஏற்றுநடித்தார்கள். பெண்கதாபாத்திரங்களை ஏற்றுநடிக்கும் ஆண்கள் கேலி கிண்டல் எனப் பலவகையான வன்முறைகளை எதிர்க்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். பெண்கதாபாத்திரங்களை ஆண் ஏற்று நடிப்பதைப் பற்றி எம்.ஆர்.ராதா வெளிப்படுத்திய கருத்து பின்வருமாறு…

“பெண்கள் நடிக்க வந்தது கலை மேம்பாட்டுக்கு உதவியதோ இல்லையோ, கலைஞர்களிடமிருந்த இயற்கைக்கு விரோதமான பாலியல் ஒழுக்கங்கள் விடுபட வாய்ப்பாக இருந்தது”

“எனக்கும் அப்போ பொம்பளை மோகம்னா என்னன்னே தெரியாது, ஆம்பளை மோகம்தான் தெரியும். அந்த மோகத்திலேதான் எத்தனை காதல், எத்தனை ஊடல், எத்தனை சண்டை, எத்தனை தற்கொலைகள், எத்தனை சொல்லிக்காம ஓடிப்போற ஜோடிகள்... எல்லாம் வேதனையோடு கூடிய வேடிக்கைதான் போங்கள், அதன் பலனாகச் சகதோழர்களில் சிலர் இன்னிக்கு மகப்பேற்றுக்குக் கூட லாயக்கற்றவர்களாகப் போய்விட்டதைப் பார்க்கிறப்போ என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்குது...”

“இந்த அக்கிரமத்துக்கெல்லாம் காரணம், அந்தநாள் நாடகங்களில் பெண்கள் நடிக்க முன்வராததுதான், இல்லையா? அதுதான் காரணம்னு சொல்லமுடியாது, அதுவும் ஒரு காரணம்னு வேணும்னா சொல்லலாம். மனுஷன் பல விஷயங்களிலே இன்னும் தன் காட்டுமிராண்டித்தனத்தை விட்ட பாடில்லையே, அதைத்தானே இன்னிக்குப் பெரியார் பேச்சுக்குப் பேச்சு சொல்லிக்கிட்டிருக்கார்?”

“டி.பி.ராஜலட்சுமி நாடக மேடைக்கு வந்த பிறகு… அந்த அசிங்கம் நாடக மேடையை விட்டுக் கொஞ்சங் கொஞ்சமா மறைந்தது என்னவோ உண்மைதான். ராஜ லட்சுமியைத் தொடர்ந்து இன்னும் பல பொண்ணுங்க நாடக மேடைக்கு வந்தாங்க...” (நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்-விந்தன், பக்-159-162, 1995)

மேற்கண்ட எம்.ஆர்.ராதாவின் கருத்து என்பது மிக மோசமான ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடகவே இருக்கிறது. பால்புதுமையினர் பற்றிய பார்வை எம்.ஆர்.ராதாவுக்கு மட்டுமல்லாமல் அன்றைய திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் இருந்திருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது. சமூகத் சீர்திருந்தங்களைத் தீவிரமாக வலியுறுத்திய தலைவர்களிடமே பால்புதுமையினரை பற்றி சரியான பார்வை இல்லாதபோது பொதுச்சமூகத்தில் எந்தளவு மோசனமான பார்வை இருந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. சமூகக் கட்டமைப்பிற்குள் பொருந்தமுடியாத ஆண்கள் கேலி கிண்டலுக்கு உள்ளானார்கள். இப்படிச் சிலர் கேலி கிண்டலிலிருந்து காப்பாற்றிக் கொள்ள பரதநாட்டியம், தெருக்கூத்து போன்ற கலையில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். பொதுச் சமூகம் ஆண்மை-பெண்மை என்ற வேடங்களை ஒவ்வொருவர் மீதும் திணிக்கும்போது அவ்வேடங்களைக் கலைகளின் வாயிலாகக் கலைக்கிறார்கள்.

ஜாமாவில் மேற்கண்ட கருத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுக் கல்யாணம் கதாபாத்திரம் உருவாக்கப்படவில்லை. மாறாக, ஆணாக இருக்கக்கூடிய ஒருவர் கூத்தில் பெண்வேடம் ஏற்று நடிப்பதால் அவரின் உடல்மொழி மாறுகிறது. ‘பெண்மை’ தன்மையால் அவரை இழிவுப்படுத்தும் சமூகத்திலிருந்து போராடி தன் ஆசையை நிறைவேற்றும் கலைஞராகக் கல்யாணம் என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜாமாவில் கலாச்சார பதிவு

தோழர் லெனின்பாரதி கூறுவதுபோல் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. வருங்காலத்தில் ஒரு டாக்குமென்டாக (பதிவாக) மாறக்கூடியது. அந்தவகையில் ஜமா திரைப்படத்தில் திருவண்ணாமலையின் வட்டார மொழியும் கலாச்சாரப் பதிவும் முக்கியமானது.

திருவண்ணாமலையைத் “திர்ணாமல”என்று அழைப்பதில் இருந்து அது தொடங்குகிறது. பால்மாறாத - என்ற சொல் என்பது தினமும் கேட்டுப் பழகிய வடார்க்காடு மாவட்டத்தின் வட்டாரச்சொல். இச்சொல்லைச் சினிமாவில் காண்பது ஓர் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.

ந்திரி- என்பது உரிமையுடன் சற்றுமிரட்டல் தொனியில் அழைக்கும் பிரத்தியேகமான வடார்க்காடு பகுதியின் வட்டாரச்சொல். நல்லா வாய் மட்டும் எம்மா கீது பாரு? எம்மா நேரம்? எம்மா பெருசு? எதுக்கு இம்மா அலப்பர? இப்படி ‘ஜமா’வில் திருவண்ணாமலையின் வட்டாரமொழி என்பது அனைத்துக் கதாபாத்திரங்களாலும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கார்த்திகையில் மாவளி சுற்றுதலும் திருவண்ணாமலை –விழுப்புரம் மாவட்டத்தின் கலாச்சார நிகழ்வு. குண்டு படத்திற்கு அடுத்தாக ஜமாவிலும் அது பதிவாகியிருக்கிறது. மாவளி சுற்றுதல் என்பது நாலாயிர ஆண்டுகால தொன்மையான பழங்குடி மரபாகக் கருதப்படுகிறது. பனைமரத்துக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு இருக்கிறது. அந்தவகையில் பனம்பூவை எறித்து நடத்தப்படும் மாவளி சுற்றும் சடங்கு தமிழ்மரபின் எச்சமாக உள்ளது.

மற்றொன்று, மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றும் திருவிழா. திருவண்ணாமலை சுற்றியுள்ள மாவட்டங்களில் இதில் சில மாறுதல்கள் இருந்தாலும் அதன் அமைப்புமுறை ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. மாரியம்மனுக்குச் சிலபகுதிகளில் சித்திரைமாதம் கூழ் ஊற்றுவார்கள். சிலபகுதியில் ஆடிமாதம் கூழ்ஊற்றுவார்கள். எங்கள் பகுதியான திருப்பத்தூர் சுற்றுவட்டாரங்களில் பெரும்பாலும் சித்திரைமாதம் கூழ் ஊற்றுவார்கள். கூழ்ஊற்றுவதற்கு முன்பாக ஊர் எல்லையிலிருந்து அம்மனை அழைப்பது திருவிழாவின் முக்கியமான நிகழ்வு. ஊரின் எல்லை பகுதியில் பம்பை மேளத்தோடு ஊர் மக்கள் சென்று அம்மனைக் கூட்டிக்கொண்டு கோவிலுக்கு வருவார்கள். அந்த எல்லையில் மூன்று கற்களை எடுத்துக்கொண்டு அதற்கு மஞ்சள் பூசி, பூ வைத்து அலங்காரம் செய்வார்கள். (ஜமாவில் காட்சிப்படுத்தியதுபோல)

ஒவ்வொரு ஊரிலும் அம்மனின் தாய் வீடு என்று ஒரு குடும்பம் பரம்பரை பரம்பரையாக இருக்கும். அக்குடும்பத்திலிருந்து ஒருவருக்கு மஞ்சள் தண்ணீரை ஊற்றிவிட்டு பம்பையை அடிக்கத் துவங்குவார்கள். பம்பைசத்தத்தைக் கேட்கும்போது கூடி இருப்பவர்களின் உடல் சிலிர்க்கும். பம்பை ஒலிக்கு ஏற்றாற்போல் அம்மனை வர்ணித்து அழைப்பது என்பது எல்லோருக்கும் கைக்கூடிவரக்கூடிய காரியம் அல்ல. இப்படி அம்மனை உணர்வெழுச்சியோடு வர்ணித்துப் பாடிவதில் எங்கள் ஊரில் தங்கராஜ் தாத்தாவுக்கு நிகர்யாருமில்லை. சாமி ஆடுபவர் பாதியில் நிறுத்தி என் மகன் தங்கராஜ் எங்கடா...அவன என்ன வர்ணித்துப் பாடச்சொல்லுடா.... என கேக்குற அளவுக்கு அவ்வளவு அருமையான குரல் வளமும் உணர்வும் கொண்டவர் தங்கராஜ். இப்படி, அம்மனை எல்லை பகுதியிலிருந்து ஆரவாரமாக ஊருக்குள் அழைத்துவந்து கூழ்ஊற்றுவார்கள். மொத்தஊரில், அந்தக் குறிப்பிட்ட குடும்பம் மட்டும்தான் அம்மனுக்குத் தாய்வீடாக இருப்பதும், அக்குடும்பத்தில் உள்ளவர்களின் தலைகளில் மட்டும்தான் கரகம் ஏற்றவேண்டும் என்பதும் எழுதப்படாதவிதி. கரகம் எடுப்பவரும் அவரது குடும்பமும் மதிக்கக் கூடியதாக மாறுகிறது. கரகம் எடுப்பவரின் வீட்டுக்கு ஊர்பொதுவிலிருந்து ஓர் ஆட்டைக் கொடுப்பதும் மரபாக இருக்கிறது. அக்குடும்பம் பல்கிப் பெருகி பங்காளி குடும்பமாக மாறும்போது ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் கரகத்தை யார் தூக்குவது என அக்குடும்ப ஆண்களுக்கிடையே போட்டி தீவிரமடைகிறது. இப்பொழுது பங்காளி குடும்பத்தில் உள்ள எல்லா ஆண்களையும் அம்மனின் முன் நிற்கவைத்து யாருக்கு சாமி வருகிறதோ அவரே கரகம் எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது. நிற்கும் பலருக்கும் குறைந்தபட்சம் சாமி வந்ததுபோல் பாவனைக்கூட செய்யதெரியாது. ஊரில் இருக்கும் இளவட்டங்கள் அவர்களின் பக்கத்தில்சென்று காதுகிழியகத்துவார்கள். சிலர் சாமி வந்ததுபோல் ஆடுவார்கள். அவர்களிடம் “யாரு நீ? எந்த ஊரு? எதுக்கு இப்ப இங்க வந்தனு? எனக் நக்கலாக கேட்க அங்கு எப்பொழுதும் ஒருவர் இருப்பார்.. இப்பொழுது வந்தது உண்மையான சாமியா என்று சாமி வந்தவரைப் பரிசோதனை செய்வார் பூசாரி. வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, பூ இதில் எதையாவது ஒன்றைப் பூசாரி மனதில் நினைத்துக் கொண்டு சாமிவந்தவர்களிடம் “நான் நினைத்ததைச் சரியாக எடுக்க வேண்டும் அப்பதான் நீ உண்மையான சாமி” என்று சவால் விடுவார். சாமி வந்தவர்கள் பலர் அதில் தோற்றுப்போய் விடுவார்கள். கடைசியில் யாரேனும் ஒருவர் ஏதேச்சையாகச் சரியாக எடுத்துவிடுவார். அவரின் மீது கரகத்தை வைத்துவிடுவார்கள். சில நேரங்களில் யாரும் சரியாக எடுக்காதபோது கூழ் ஊற்ற நேரமாகினால், பூசாரி நினைத்ததைச் சாமி ஆடுபவர்கள் எடுக்கவில்லை என்றாலும் சரியாக எடுத்துவிட்டார் என்று கூறி கூழ் ஊற்றிவிடுவார்கள். இப்படியாக அம்மனுக்கு கூழ் ஊற்றும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. இதில், கரகம் என்பது அதிகாரத்தின் குறியீடாக இருக்கிறது. ஊரில் ஒரு பங்காளிகுடும்பம் மட்டும் அம்மனுக்குத் தாய்வீடாக இருப்பதும், அந்தப் பெரிய பங்காளி குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொரு தனிக்குடும்பமும் கரகம் எடுப்பதில் போட்டி போடுவதும், அக்குடும்பத்திலும் ஆண்களின் தலைகளில் மட்டும்தான் கரகம் வைக்கவேண்டும் என்ற கறாரான விதி என்பது சாதிய ஆணாதிக்க மனோநிலையாகத் தெரிகிறது. ஆதிக்கவெறியால் பலிகொடுக்கப்பட்ட பெண்ணை அம்மனாக வழிபடுவதும், அம்மன் பெண்ணாக இருந்தும் அம்மனுக்காகக் கரகம் எடுக்கும் உரிமை பெண்ணுக்கு இல்லை என்பதில் இருந்தும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தைப் புரிந்துக்கொள்ளலாம் .இப்படி, நாட்டார் தெய்வங்கள் என்பது அந்தந்தப் பகுதிக்கூறிய கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தாலும், பெரும்பாலும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவும், ஒருகுறிப்பிட்ட சாதிக்குரிய சிறுதெய்வங்களாகவும் இருக்கிறது.

ஜமா - தெருக்கூத்து என்ற கலையின் முழுமையான படைப்பாக இல்லையென்றாலும், தெருக்கூத்து கலைஞர்களின் அகம்சார்ந்த பிரச்சனைகள், பாலின ஏற்றத்தாழ்வுகள், வட்டாரமொழி, கலாச்சாரம் என முக்கியமான பதிவையும், உரையாடலையும் மனதில் நிறுத்தி இருக்கிறது.

திருவண்ணா’மலை’யின் அசலான ஒருபகுதி மனிதர்கள் ஜமாவில் சேர்ந்துள்ளனர்.
Author Picture

தினகரன்

கலை, இலக்கிய, சமூக விமர்சனத்தில் ஆர்வத்துடன் செயல்படுபவர். மார்க்சிய, விளிம்புநிலை அரசியலில் தொடர்ந்து இயங்கி வருபவர்

மின்னஞ்சல் - dinakaran0618@gmail.com

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு