விடுதலையின் பாடல்
நின்றுகொண்டிருக்கிறேன்
நின்றுகொண்டேதான் இருக்கிறேன்
எதிரே ஆயிரம் தடைகள்
மனுவின் சட்டங்கள்
இந்தக் கறுத்த உடலிலிருந்து
நெருப்பாய் மாறி
சொட்டுகிறது குருதி
வீதிகளில் வனாந்தரத்தில்
இப்போது மேகத்தின் முதுகில்
நிலா வெளிச்சம்
பார்க்க முடிகிறது என்னால்
முன்னே நீளும் பாதையினூடே
நடந்து செல்கிறது காலம்
எங்கள் மூதாதையர் பாடுகின்றனர்
விடுதலையின் பாடலை.
உதிர்ந்து விழும் இறகு
இன்னும் சொல்லப்படாத பலவும் எஞ்சியிருக்கின்றன
சொல்ல முடியவில்லை என்னால்
எனது கிழிந்த ஆடைகளை
பசியை
வறுமையிலும் ஏழ்மையிலும் பிழைத்துக் கிடப்பதை
ஒவ்வொரு நாளும் கல்லுடைத்துக் கல்லுடைத்து
வேதனையில் கழிகின்றன நாட்கள்
மூச்சுத்திணறலைத் தள்ளிக்கொண்டு வருகிறது இருள்
அதன் மூலைமுடுக்கெல்லாம்
நம்மைப் பற்றிய புனைகதைகள்
அதனைத் தொட்டுப் படைத்தோன் தேடுகிறான்
பெயரறியாத பறவையின் உதிர்ந்த இறகினை.
தேர்ச்சக்கரம்
நாற்புறமும் மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கு
பெருஞ்சூறை வீசுகிறது
அத்துடன்
கடந்துபோன நாட்களின்
அத்தனைப் பேச்சுகளும்
விடிந்ததும் மலையின் முதுகிலேறி
உதிக்கிறது சூரியன்
அங்கே நின்றுகொண்டிருக்கும்
காலக்கிழவன்
சுற்றிக்கொண்டிருக்கிறான்
ஏழு குதிரைகள் இழுக்கும் தேரின் சக்கரங்களை.
நெருப்புப்பறவை பறக்கிறது
எனது நடைவழியெங்கும் துயர் நிறைந்திருக்கிறது
இருந்தாலும் நடந்தே செல்கிறேன் நாளும்
கடலின் உப்புநீரில் கால்களை நனைத்தபடி அள்ளிப் பருகுகிறேன்
நீரில்லை இது நஞ்சு
பூமியின்மேல் தெறித்துவிழுகிறது பகல்
விழிப்புடன் இருந்தாலும்
வாழ்க்கையைத் தொடப்போய்
தோற்றுவிடுகிறேன்
ஒவ்வொரு முறையும்
ஆனாலும் பார்க்கிறேன்
நெருப்புப்பறவை பறக்கிறது
ஓர் ஆதிப் போர்வீரன் எதிரில் வந்து நிற்கிறான்
எனது துயரத்திற்கும்
அவமானத்திற்கும் மிக அருகில்
என்னை நைல் நதியின் பாடலைக் கேட்கச் செய்வதற்காக.
கடும் நெருக்கடி
என் பிள்ளைக்குக் கதை சொல்கிறேன்
நிலவைப் பற்றியல்ல
எங்களது துயரங்களைப் பற்றி
பசியையும் வஞ்சிக்கப்பட்டதையும் பற்றி
இரவின் அந்தகாரம் நீள்கிறது
நெஞ்சின் ஆழத்தில் உடைந்துடைந்து போகிறது
வீட்டுச்சுவரில் சிதறி விழுகிறது பெருமூச்சு
தீண்டப்படாதவன் நான்
ஒரு நாளும் தொடமுடிந்ததில்லை தெய்வத்தை
பிறந்ததிலிருந்து தலைநிமிர்ந்து நிற்பது எதனால்?
சுய அடையாளத்தின் கடும் நெருக்கடிக்குள்
எப்போதும் நாங்கள்.