-->

அண்மை

மாற்றுத்திறனாளர் படைப்பாக்கப் பயிலரங்கம் – ஒரு இருட்டுடைப்பு


மனம் இறுகி இருட்டுக்கட்டி கெட்டித்து நின்றால் இதை மௌனம் என்கிறோம். இன்றைய உலக பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம் உடைபடாத மௌனம் தான். இத்தகைய மௌனம் சிந்தனையை மழுங்கடித்து சித்தத்தைக் குழப்புகிறது. இதைத் தவிர்க்க ஒரே வழி மௌனத்தை உடைப்பது தான்.

ஆம். 2025 ஜூன் 14, 15 ஆகிய நாட்களில் திண்டுக்கல் புனித சூசையப்பர் தேவாலயத்திலும், திருவள்ளுவர் தமிழ்ப் பண்ணையிலும், பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம், தனிச்சொல், அமைப்புசாரா மற்றும் புலம்பெயர் தொழிலாளர் நல்வாழ்வுச் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய பயிலரங்கம் அந்த மௌன உடைப்பைச் செய்து முடித்தது. சனிக்கிழமை (14/6/2025) காலை அறிமுக நிகழ்வில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் இன்றைய சமூக நிலையையும் மாற்றுத்திறனாளிகளின் முயற்சிகளையும் கவிதைகளூடாக எப்படி பேசுவது என்பது பற்றி குறிப்பிட்டார்.

குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும், கவிதை ஆக்கம், கவிதையின் உள்ளடக்கம், கவிதை நோக்கு போன்றவற்றைப் பற்றி விவாதித்தது. கவிதையின் உள்ளடக்கம் பொதுமைப்படுத்தலா? சுயம் பற்றியா? சுயம் பற்றி எனில் பொது இதழ்கள் ஒரு முத்திரை குத்தி விட்டு ஏற்க மறுத்துவிடும். பொதுவெனில் எழுத எத்தனையோ பேர் இருக்க நாம் எதற்கு என்ற கேள்வி வரும். பொதுமையும் சுயமும் கலந்து இருத்தலே கவிதை ஆக்கத்திற்கான நோக்கமாக இருக்க வேண்டும்.

கவிதையின் வடிவம் கவனிக்கத்தக்கதே. நீண்ட சந்தக் கவிதைகள் பொதுவாக வரவேற்கப்படுவதில்லை. எனவே கவிதையின் வடிவம் இன்றைய சூழலுக்கு ஏற்றதாய் அமைய வேண்டும். கவிதைக் களத்தில் உள்ளவரின் பாடுகளைக் குறிக்கும் கருவியாக இருக்க வேண்டும். கவிதைக்குள் அரசியல் இருக்கலாம். ஆனால் அரசியலுக்குள் கவிதை இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது பிரச்சார நூலாக இருக்குமேயன்றி படைப்பிலக்கியமாகாது. இப்படி பல்வேறு கருத்துக்கள் கவிதை பற்றி விவாதிக்கப்பட்டன.

ஞாயிறன்று (15/6/25) சிறுமலை அடிவாரத்தில் திருவள்ளுவர் தமிழ்ப் பண்ணையில் மரத்தடியில் இயற்கைச் சூழலில் முந்தைய நாளைப் போன்றே குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. சிறுகதை, புதினம், தன் வரலாறு போன்றவை அன்றைய பேசுபொருளாகின. சிறுகதை, புதினம் போன்றவற்றுக்கான விளக்கங்கள் சொன்னவர்களின் கூற்றுகள் மேற்கோளாயின. எனினும் இலக்கணம் வகுத்து இலக்கியம் படைத்தல் சாத்தியமில்லை என்பது பொதுவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. புதினங்களில் தன் வரலாறும் இணைக்கப்படலாமா? அப்படி இணைக்கப்படும்போது அதற்குப் புனைவுகள் இன்றியமையாதவை தானே என்றும் பேசப்பட்டது.

தன் வரலாறு அபுனைவாக எழுதப்பட வேண்டும் என்றும், ரசனையைக் கூட்ட புனைவு இருத்தல் நல்லது என்றும் விவாதங்கள் எழுந்தன. லத்தின் அமெரிக்க நாடுகளில் சமீப காலங்களில் தன் வரலாறு புனைவுகளோடு இப்பொழுதெல்லாம் எழுதப்படுவதாகவும், இலக்கிய உலகம் அவற்றிற்கு இப்போது பேராதரவு தருகிறது என்றும் பேசப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் இடையே கூட ஒரு படைப்பு முன்வைக்கும்போது இது படைப்பாளியின் சொந்த அனுபவமா என்ற கேள்வி எழுகிறது. இது பற்றி பேசியவர்கள் பொதுவெளியில் கூட நூலைப் பார்க்காமல் ஆளைப் பார்க்கும் பழக்கம் உள்ளது. எனவே இது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும் பேசப்பட்டது.

எழுத அமரும் போது அண்டை வீட்டாரைப் பற்றி, எதிர் வீட்டாரைப் பற்றி, உங்களைச் சார்ந்து இருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் உங்களால் எழுத முடியாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை மனமிட்டு எழுதுங்கள்”. இது எழுத முயல்வோருக்குத் தரப்பட்ட செய்தி.

இப்படியாக நாட்கள் இரண்டு உருண்டது தெரியாமல் பயிலரங்கம், வந்திருந்த ஒவ்வொருவர் மனதிலும் இறுகிக் கிடந்த இருட்டை உடைத்தது. இது இந்தப் பயிலரங்கத்தின் முதல் வெற்றி. இது முடிவல்ல தொடக்கம்.
Author Picture

வே.சுகுமாரன்

கவிஞர், வே.சுகுமாரன், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். கோவையில் இவர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவேதுணை ஆய்வு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவருடைய மொழிபெயர்ப்பு நூலான "காட்டு வாத்துக்கள்" நூல் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு