-->

அண்மை

நானும் என் எழுத்தும் - தேனி சீருடையான்


படிப்புத்தான் எழுத்தின் அஸ்திவாரம். எழுதுவதற்குத் தேவையான கச்சாப் பொருள் வாழ்க்கை அனுபவத்தில் இருக்கிறது என்றாலும் வாசிப்பு அனுபவம்தான் முதல் தேவை.

உறங்கி கிடந்தேன்
தட்டி எழுப்பியது
புத்தகம்.” (கவிஞர் லட்சுமி குமரேசன்.)

புத்தகம் என்பது மனிதர்கள் ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்து முடித்த அனுபவங்களின் தொகுப்பு. ஆக பலநூறு அனுபவங்களை வாசிப்பின் மூலம் நாம் வாங்கிக் கொள்கிறோம். அவை நமது வாழ்வியல் அனுபவங்களைத் தொகுப்பதற்கு உதவுகின்றன. வாசிப்பும் வாசிப்பு வழிப்பட்ட இலக்கியங்களும் உலகில் மகத்தான மாற்றங்களைச் செய்திருக்கின்றன என்பதை உலக வரலாறு பதிவுசெய்து வைத்திருக்கிறது.

நான் படித்து முடித்து வேலையற்றவனாய் வீட்டில் இருந்தபோது நூலகம்தான் எனக்கான புகலிடம். “கடை” நாவலில் இதைப் பதிவு செய்திருக்கிறேன். நிறங்களின் உலகம் நாவலின் முன்னுரையிலும் கூட “வறுமைக்கப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அரசியல், வரலாறு, பண்பாடு எனப் பல்வேறு தளங்களில் வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை வாசிப்புப் பழக்கத்தின் மூலம் புரிந்துகொண்டேன்.” எனப் பதியமிட்டிருக்கிறேன். அகவாழ்க்கை நம்பிக்கை பெறவும் புறவாழ்க்கை மேன்மைப் படவும் வாசிப்பும் எழுத்தும் பயன்படுகின்றன.

உலகின் மிக உயர்ந்த உயிர்ஜீவியாகிய மனிதஜீவி தானும் வளர்ந்து தன்னையொத்த பிற மனிதர்களும் வளர்வதை உத்திரவாதப் படுத்தும் போதுதான் கூடிவாழும் சமூக இயல்பு பதியமாகிறது. அதன் வழியில் உளவியல் வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் நிகழ்கின்றன. மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் தன்னை ஒத்த பிற மனிதர்களிடம் அன்பு காட்டவும் அன்பே பிரபஞ்ச வளர்ச்சியின் அடித்தளம் என்று நிரூபிக்கவும் துணை செய்பவை புத்தகங்களும் வாசிப்பும்தான். ஆகவே எழுதும் முன் வாசிக்க வேண்டும் என்ற உந்துதல் வரவேண்டும்.

நான் ஆறாப்புப் படித்துக் கொண்டிருந்தபோது தமிழ்ப் பாடம் நடத்திய தமிழாசிரியர் இலக்கணப்பாடம் நடத்தினார். அது “செய்யுளியல்” பாடமாகும். அதை நடத்திவிட்டு ஆளுக்கொரு கவிதை எழுதச் சொன்னார். மறுநாள் அனைவரும் (10 மாணவர்கள்) ஆளுக்கொன்றை எழுதிச் சென்றோம். அனைத்தையும் வாசித்த தமிழய்யா அனைவருக்கும் சில ஆலோசனைகள் சொல்லித் திருத்தம் செய்தார். என்னுடையதை வாசிக்கச் சொன்னார்.

”மாசின்றிப் பிறக்கிறாய்;
மாசேற்று வாழ்கிறாய். .
தேனை நீ திருடிவிட்டுத்
தேன் கூட்டை அழிக்கிறாய்.”

“என்ன சொல்ல வருகிறாய் என்றார் தமிழய்யா. அப்போதே புரிந்துவிட்டது. என் பாட்டில் ஏதோ குறையிருக்கிறது. ”என் பாட்டில் என்ன குற்றம் கண்டீர்?” என்று வசனம் பேசும் அளவுக்குத் தைரியமோ தகுதியோ வாய்க்கப்பெறாதவனாய் இருந்தேன். சிறிதுநேர அமைதிக்குப் பிறகு “பாவம் தேனீக்கள்” என்றேன்.

“ஆட்டையும் கோழியையும் வெட்டுவது அதைவிடப் பாவமில்லையா?” தமிழய்யா கேட்ட கேள்வியின் ஆழத்தை ஓரளவு புரிந்தேன். “மனிதனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது இலக்கியம்” என்றார் தமிழய்யா. ”இயற்கை படைத்தவை அனைத்தும் மனிதனுக்காகவே.”

இந்த அறிவுரை இன்றளவும் என் படைப்புகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது சமுதாயத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது இலக்கியத்தின் நோக்கமாக இருக்கக் கூடாது. அன்றுமுதல் வேறுவேறு வடிவங்களில் வேறு வேறு கவிதைகள் எழுதினேன். புறவெளி வாசிப்பும் அகவெளிப் படைப்பும் சம நேரத்தில் சமதளத்தில் நடக்கவேண்டும். வாசிக்காமல் எழுதுவது சமைக்காமல் சோறு உண்பது போல என்று பின்னாளில் புரிந்துகொண்டேன்.

நான் பயின்ற அந்த அறுபதுகளின் காலகட்டத்தில் பார்வையிழந்தோருக்கான பிரைலி வடிவ நூல்கள் தமிழில் வந்திருக்கவில்லை. அதனால் எனக்கு விருப்பம் இருந்தபோதிலும் வாசிக்க இயலாமல் போனது. அதனால் வாசிப்பதில் ஆர்வமுள்ள சில ஆசிரியர்களை அணுகி உதவி செய்யக் கோரினேன். கிருஷ்ணன் சார் செய்தித் தாள்கள் வாசித்துக் காட்டினார். வசந்தா டீச்சர் விகடன், குமுதம் போன்ற பருவ ஏடுகளில் வரும் சிறுகதைகளை வாசித்தார். சரோஜினி டீச்சரோ “கள்ளோ காவியமோ.” “சத்தியசோதனை” மாதிரியான அற நூல்களை நான் புரிந்துகொள்ளும் வகையில் பாடம் நடத்துவது போல வாசித்துக் காட்டினார்.

முனைவர் மு. வரதராசனார் எழுதிய “கள்ளோ காவியமோ” நாவல் மிகவும் பிடித்துப் போயிற்று. அந்நாவலில் ‘அருளப்பன் என்ற நாயகனும் ‘மங்கை’ என்ற நாயகியும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கல்லூரிக் காலத்தில் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டனர். (ஆணவக் கொலைகள் நடக்காத காலம் அது.) இருவீட்டாரும் அவர்கள் காதலை ஏற்காதவர்களாய் இருந்தார்கள். இருவரும் துணிச்சலோடு வெளியேறி தனிக் குடும்பமாய் வாழ ஆரம்பித்தனர். அருளப்பன் அரசு வேலையில் சேர்ந்து சிறப்பாகக் குடும்பம் நடத்தினான். மங்கை இல்லத்தரசி.

ஒருநாள் மங்கை தலைவலி வந்து படுத்துக் கிடந்தாள். அன்று பார்த்து அருளப்பன் தனது சில நண்பர்களை அழைத்து வந்து, வீட்டுக்குள் நுழையும்போதே சிற்றுண்டி தயாரிக்கச் சொல்கிறான். கணவன் நண்பர்களோடு வந்ததைக் கவனிக்காத மங்கை, “நீங்களே ரெடிபண்ணிச் சாப்பிடுங்க” என்கிறாள். இது ஒரு சாதாரணச் சங்கதிதான் என்றாலும் ஆண்மனம் அல்லாடுகிறது. ஐம்பதுகளில் எழுதப் பட்ட நாவல் அது. 90 விழுக்காடு ஆண்கள் தன்முனைப்புக்காரர்களாய் இருந்தார்கள். அதுவும் அரசு ஊழியர்கள் என்றால் ஈகோ கொஞ்சம் அதிகம். நண்பர்கள் முன்னால் மனைவி தன்னை அசிங்கப் படுதிவிட்டதாக நினைக்கிறான். அவளை வீட்டைவிட்டு வெளியேறும்படி விரட்டுகிறான். அவள் தன் நிலமையை எவ்வளவோ எடுத்துரைத்தும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியாக “உன் துணையின்றி வாழ்ந்து காட்டுகிறேன் பார்” என்ற சபதத்தோடு ரயில் ஏறுகிறாள்.

இந்த நாவல் என்னை அதிர்ச்ச்நியடையச் செய்தது. ஆண் துணையின்றி பெண்களால் வாழ முடியாது என்ற கருத்து சமூகவெளியில் ஆழப் பதிந்திருந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு வித்தியாசமான துணிச்சல் வருகிறது என்றால்... மனம் புளகாங்கிதமடைந்து அவளைப் பாராட்டியது. பின்னாளில் பெண்விடுதலை பற்றிய எனது படைப்புகளுக்கு மங்கைதான் உந்துசக்தி. இப்படியாக என் பள்ளிப் பருவம் நேசமுள்ள ஆசிரியர்ளின் துணையோடு புத்தக வாசிப்பாளனாகவும் கவிதை எழுத்தாளனாகவும் இயங்கி நிறைவடைந்தது.

1969ல் எஸ்.எஸ்.எல்.சி பரிட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தபோது வாழ்க்கை இருண்டு கிடந்தது. இனிமேலும் பெற்றோருக்குப் பாரமாக இருக்கவேண்டுமா என்ற கேள்வி மனதைத் துளைத்தது. கண் தெரிந்தால் போதும்; அத்தக்கூலி, அரக்கூலிக்குப் போய்க் குடும்பத்துக்கு உதவ முடியும். பெரியவர்கள் உழைக்க இளைஞனாகிய நான் தேமேன்னு கிடக்க முடியவில்லை. எப்படியாவது பார்வை பெற்று சமூக மனிதனாய் மாறவேண்டும். உழைப்பாளியாய் உயர்ந்து சம்பாத்தியக் காரனாய் நிறைவடைய வேண்டும். அந்தப் பொன்னான நாளும் வந்தது. நான் குடிசைக்குமுன் அமர்ந்து சில்ட்ரன்ஸ் ஃப்ரண்ட் (Children's friend) என்ற மாதாந்திர இதழை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது உலக நாடுகளின் பல நிறுவனங்கள் பார்வை இழந்தோருக்கான பருவ ஏடுகளை நடத்திக் கொண்டிருந்தன. பெரும்பாலும் கிறித்துவ அமைப்புகள் நடத்திய பைபிள் பிரச்சார இதழ்கள். அதையும் தாண்டி சமூகம் சார்ந்த சில இதழ்கள் வந்தன. சில்ட்ரன்ஸ் ஃப்ரண்ட், லைஃப் அண்ட் ஹெல்த,, ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகியவை அனைத்துமே பார்வையிழந்தோருக்கு இலவசம். உலகம் பூராவும் பார்வையிழந்தோருக்கு அஞ்சல் செலவு கிடையாது. தமிழில் பிரைலி புத்தகம் இல்லாத நிலையில் ஆங்கில இதழ்களை வரவழைத்துப் புரிந்தும் புரியாமலும் வாசித்தேன். பள்ளிக்கு ஒன்றும் வீட்டுக்கு ஒன்றுமாய் இரண்டு படிகள் வரும்படி ஏற்பாடு செய்திருந்தேன். அதனால் உண்டான லாபம் என்னவென்றால் அவற்றைச் சேமித்து, கடையில் போட்டுக் காசாக்கி, வறுமையின் வேகத்தைக் கொஞ்சம் குறைக்க முடிந்தது என்பதுதான்.

குடிசை வாசலில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தபோது விளம்பர வண்டி ஒன்று எங்கள் வீதிக்கு வந்து நின்றது. அது குதிரை வண்டி என்பதைக் காலடிச் சத்தத்தால் மானசீகமாக உணர்ந்தேன். அந்த நாட்களில் குதிரை வண்டி விளம்பரம் பிரபலம். மதுரை எர்ஸ்கின் மருத்துவ மனை சார்பாக நாடார் சரஸ்வதி பள்ளியில் இலவசக் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட இருப்பதாகவும் கண் குறைபாடு உள்ளவர்கள் வந்து பயன்பெறலாம் என்றும் வண்டியில் இருந்தவர் பேசினார்.

இப்போது மதுரையில் ராஜாஜி மருத்துவமனை என்று அறியப்படுகிற அரசு மருத்துவமனைதான் அன்று எர்ஸ்கின் ஆஸ்பத்தரி. எர்ஸ்கின் என்ற ஆங்கிலேயர், மருத்துவமனை கட்டி ஏழைகளுக்கு இலவசமாய் மருத்துவம் பார்த்தார். அதன் ஒரு பகுதியாகக் கண் பரிசோதனைக் கூடம் இயங்கியது. 1975ல் "அரவிந்த்” வருவதற்குமுன் “எர்ஸ்கின்” மூலம்தான் மக்களுக்கு இலவசக் கண் மருத்துவம் கிடைத்தது. கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் ஆனபிறகு “எர்ஸ்கின் ஆஸ்பத்தரி” “ராஜாஜி மருத்துவமனை” ஆனது.


எனக்கு, கேட்ராக்ட் என்று சொல்லப்படுகிற சாதாரண கண் புரைநோய்தான். கண்புரையில் இரண்டு வகை உண்டு. ஒன்று விழி வட்டத்துக்குமேல் படர்ந்திருக்கும் லேசான சதைப்படலம். இன்னொன்று விழியின் உட்புறத்தில் கண்மணியை மறைத்துத் துவரம்பருப்பு அளவு வளர்ந்த சதை. எனக்கு இரண்டாம் வகைக் கேட்ராக்ட் என்பதால் “நீட்லிங் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேல்புரை என்றால் சிறு கத்தியால் புரையை வழித்து எடுத்து விடுவார்கள். உள்புரையை சிறு ஊசிகொண்டு கண்ணைக் குத்தி உள் சதையைக் கீறி கலைத்துவிடுவார்கள். மருந்து ஊற்ற ஊற்ற கலைக்கப்பட்ட சதை கரைந்துவிடும். (இப்போது கண்மருத்துவம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து லேசர் ஒளிவீச்சு மூலம் அறுவை சிகிச்சை நடக்கின்றது.)

சிகிச்சை முடிந்து ஒருவாரம் கழித்து அரைப்பார்வை கிடைத்தது. (பதின்மூன்று ஆண்டுகள் ஒளியிழந்திருந்த நான் முதல் வெளிச்சம் கிடைத்தபோது பட்ட அவஸ்தையை ”சிறகுகள் முறியவில்லை” நாவலில் பதிவு செய்துள்ளேன்.) கண்ணாடியும் கூட இலவசமாகத் தந்தார்கள். இப்போது 75 விழுக்காடு பார்வை. பிரபஞ்ச வெளியைக் கடந்த அந்தரத்தில் மனம் பறந்து விளையாடியது. அதன் பிறகு சாலையோரத்தில் சிறு சிறு தொழில்கள் செய்து (வியாபாரக்கூலி) பொருளியல் ரீதியாக வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்தேன்.

அதன்பிறகு வியாபாரம் செய்துகொண்டே வாசிக்கவும் எழுதவும் செய்தேன். ஒரு மழைநாள் இரவில் குடிசைக்குள் மழைநீர் புகுந்து தரை குளமானது. இரவு முழுக்கத் தூங்க வழியில்லாமல் நானும் குடும்பத்தாரும் தவித்தோம்.

மறுநாளும் வானத்தில் மழைக்குறி தெரிந்தது. “மலையாளமின்னல், ஈழ மின்னல் சூழ மின்னுதே” என்று மூணாப்பில் வாசித்த பூவண்ணன் அவர்களின் கவிதை மனசுக்குள் வந்து அழவைத்தது. அப்போது நான் நிலக்கடலை விற்றுக் கொண்டிருந்த அந்த மரத்தடியில் அமர்ந்து நான் எழுதிய கவிதை “மின்னல்.” (பின்னாளில் அது “சிகரம்” இதழில் பிரசுரமானது.)

மீன்களை விழுங்கிவிட்டு,
மெல்லியல் நிலவையும்
விழுங்கிச் செரித்துவிட்டு
என்னையும் விழுங்கவா
இப்படி
எட்டி எட்டிப் பார்க்கிறாய்.”

காலை ஆறுமணிமுதல் இரவு பத்து மணிவரை வியாபாரம் செய்தேன். வெயில் மழை எதுவானாலும் நிழலில் ஒதுங்க முடியாது. பின்னால் இருக்கும் பெரிய கடைக்காரர்கள் அண்ட விடமாட்டார்கள். கொடூரக் கோடைக்காலம் ஒன்றில் நான் எழுதிய கவிதைதான் “வெயில்.”

”நெருப்புப் பொறியலைகள்
நெட்டுயிர்த்த கனலலைகள்”

என்று அந்தக் கவிதை தொடங்கியது. நிறைவாக

”சாலையோரத்துச்
சிறுகடை ’முதலாளி’
வீட்டில் அடுப்பெரிய
வெயிலடுப்பு விறகானேன்.

அதன்பிறகும் எனது எழுத்துப் பணியாகக் கவிதைகளே தொடர்ந்தன. ஞானரதம், கணையாழி, வானம்பாடி போன்ற முக்கிய இதழ்களில் கவிதைகள் பிரசுரமாயின. பல்வேறு கவியரங்கங்களிலும் கலந்துகொண்டு கவிதை வாசித்தேன். என்ன சோகம் என்றால் இன்றுவரை கவிதைத் தொகுப்பு ஒன்றுகூட பிரசுரமாகவில்லை.

1980ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேனிக் கிளைச் செயலாளராக இருந்த தோழர் பொன்.விஜயன் ”புதிய நம்பிக்கை” என்ற பெயரில் மாதாந்திர இலக்கிய இதழ் ஒன்றை ஆரம்பித்தார். தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகளிடம் கதை, கவிதை, கட்டுரை வாங்கிப் பிரசுரித்தார். என்னிடம் வந்து “நீங்களும் ஒரு கத குடுங்களேன்” என்று கேட்டபோது. எனக்குக் கதை எழுத வருமா என்று யோசித்தேன்.

“நிச்சயம் முடியும்” என்றார் பொன்.விஜயன். “உங்கள் கவிதைகளில் கதைக்கான கூறு இருக்கிறது; உங்களால் எழுத முடியும்.”

இரவெல்லாம் யோசித்தேன். என்னிலும் என்னைச் சுற்றிலும் இருக்கிற வாழ்க்கையை எழுதுவது சுலபம். அப்படி எழுதினால் அது கதையாகுமா; அல்லது கட்டுரை ஆகிவிடுமா? எழுதித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்தபோது ஒரு தைரியம் வந்தது. அப்போது மனசுக்குள் வந்தவர் என்னுடைய அம்மாவும் “கள்ளோ காவியமோ” மங்கையும்தான்.

அம்மா ஓய்வறியா உழைப்பாளி. தன் குடும்பத்துக்காக சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டே இருந்தார். தேனியில் பெரிய சந்தை இயங்கிக் கொண்டிருந்தது. பொள்ளாச்சி சந்தைக்கு அடுத்த பெரிய சந்தை தேனிச்சந்தை என்று சொல்வார்கள். அங்கு கிடைக்காத பொருள் இல்லை. உழுதொழில் சார்ந்த பொருட்களோடு கடல்வளம் சார்ந்த கருவாடு, கிளிஞ்சல், சங்கு, சோவி முதலியவையும் கிடைத்தன. கிளிஞ்சலை வேகவைத்தால் உயர்தர சுண்ணாம்பு கிடைக்கும். சின்னச்சின்ன இரும்புப் பொருட்களும் ஆடு, மாடு, கோழி ஆகிய உயிரினங்களும் விற்பனையாயின. பொதுவாக, தேனிச்சந்தைச் சுற்றுவட்டார மக்களின் பஞ்சந்தாங்கியாய் இருந்தது என்று சொன்னால் மிகையல்ல. அங்கு விற்பனை சார்ந்தும் உழைப்பு சார்ந்தும் வருமானம் கிடைத்தது. ஒருநாள் வருமானத்தை வைத்து ஒரு வாரத்தை ஒப்பேத்தி விடுவார்கள். சுற்றுவட்டார கிராமங்களில் தாழ்த்தப் பட்ட அடித்தட்டு மக்கள், உள்ளூரிலிருக்கும் பெரிய சம்சாரிகளிடம் சந்தை நாளில் காலையில் நூறு ரூபா கடன் வாங்கி, சந்தையில் வியாபாரம் செய்துவிட்டு மாலையில் 110 ரூபா தந்துவிடுவார்கள். ஒருவேளை அன்று மாலை தராவிட்டால் மறுநாள் 120 தரவேண்டும். இப்படி ஒருநாளைக்குப் பத்துப் பத்து ரூபாயாய் வட்டி குட்டிபோடும். அதுதான் மீட்டர் வட்டி. வங்கி விகிதாச்சாரப்படி பார்த்தால் இது முப்பதாயிரம் விழுக்காடு வட்டி.

அம்மா அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்து ஒரு மூங்கித் தட்டை இடுப்பில் இடுக்கிக் கொண்டு சந்தைக்குச் செல்வார். மார்கழி - தை மாதங்களில் கரும்பும் மாசி பங்குனியில் தர்பூசணியும் வாங்கித் துண்டு கத்தரித்து விற்பார். பெரிய வியாபாரிகளிடம் கடனுக்கு வாங்கி விற்று லாபத்தை எடுத்துக் கொண்டு சரக்குக்காரரிடம் உரிய பணத்தைத் தந்துவிட்டு வீடு வந்து சேர்வார். அம்மாவை நம்பி எவ்வளவும் தருவார்கள் பெரிய வியாபாரிகள். நான் எழுதிய முதல் சிறுகதையின் நாயகி அம்மாதான்.

சுப்புவும் குருவம்மாவும் லோடு வியாபாரிகளிடம் கரும்புக் கட்டுகளைக் கடனுக்கெடுத்து, சந்தை நுழைவாயிலில் துண்டு கத்தரித்து விற்கிறார்கள். அன்றைய வருமானம் சிலநாள் உணவளிக்கும். சந்தை கூடும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் குருவமாவுக்கு மகிழ்ச்சியான நாள். கரும்பு வியாபாரம் சிறப்பாக நடந்துகொண்டிருந்த ஒருநாள் மழை பொழிந்து நட்டமாகிவிடுகிறது. முழுத் தொகையையும் தரமுடியவில்லை. அடுத்த வாரம் சேர்த்துத் தருவதாக சுப்பு சொல்லிவிட்டு வருகிறான். அடுத்த வாரமும் அதே நிலைதான். மேலும் கடன் கூடுகிறது. லோடு வியாபாரி திட்டுகிறார். “ஒம்பொண்டாட்டி அழகாருக்கா; ஒருநா என்னோட வரச்சொல்லு; கடனப் பூராக் கழிச்சுக்க.”

சாந்த சொரூபியான குருவம்மா கொதித்துக் குமுறுகிறாள். “என்னடா சொன்ன?” என்றபடி கரும்பு வெட்டும் அரிவாளைத் தூக்கி ஓங்குகிறாள். ”மௌனத்தின் விழிப்பு” என்ற இந்தச் சிறுகதை 1980 புதிய நம்பிக்கை ஜனவரி இதழில் பிரசுரமானது.

குருவம்மா வாழ்வியல் அரங்கத்தின் நிஜப் பாத்திரம். அவளின் உணர்ச்சிவேகத் துணிச்சல், கள்ளோ காவியமோ மங்கைப் பாத்திரத்தின் மறு அவதாரம் சார்ந்த புனைவு. நான் எழுதிய பெரும்பாலான சிறுகதைகளில் பெண்கள் துணிச்சல்காரிகளாகவும் அடிமைத் தளையிலிருந்து விடுபடத் துடிக்கும் ஆன்மாக்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த முதல் கதையே எனது உரைநடை இலக்கிய வளர்ச்சியின் அடித்தளம். 40 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால் மனித சமுதாயத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். காலவளர்ச்சியையும் காலமாற்றத்தின் சுவடுகளையும் கவனமாகப் பரிசீலிக்கிறேன். அவற்றை என் படைப்புகளில் பதிவு செய்கிறேன். எழுத்தாளன் என்பவன் சமூக அறிவியல் ஞானி.

எனது படைப்புகளில் காலமாற்றத்தைப் பதிவு செய்யும் படைப்புகள் பல உண்டு. அவற்றுள் “புதுமின்னல்” என்ற சிறுகதை முக்கியமானது. வரதட்சணை பற்றிய கதை அது.

நமது இந்திய சமூக அமைப்பு ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆண் அதிகாரம் பெண்ணை அடிமைப்படுத்தி அவர்களின் சுதந்திரத்தைப் பலிவாங்குகிறது. அப்படியான அசமத்துவத்தின் கருதுகோள்களில் ஒன்று வரதட்சணை. குடும்பத்தில் நிறையப் பெண்கள் பிறந்திருந்தால் அவர்களுக்குத் திருமண ஏற்பாடு செய்கிறபோது ஆண்களின் அதிகாரம் செயல்பட்டு வரதட்சணை என்ற பண்பாட்டு அடிமைச் சாசனம் எழுதப்பட்டு நிறைய முதிர்கன்னிகள் உருவாகி, வறண்டுபோன காடுபோல சமுதாயம் உருக்குலைந்து நின்றது. இந்த வேளையில்தான் குடும்பக் கட்டுப்பாடு அமுலாகி குடும்பங்களில் ஓரிரு பெண்குழந்தைகள் தோன்றினர். இந்தச் சூழல் ஆண் அதிகாரத்தில் கீறல் விழுவதை யதார்த்தத்தில் உணர்ந்தேன். ஆணதிகாரம் மாறிப் பெண்ணதிகாரம் வரப் போகிறது என்பதை முன்னுணர்த்தும் கதைதான் “புதுமின்னல்.”

பார்வை மாற்றுத் திறனாளிகள் உலகில் அதிகம் சாதித்திருக்கிறார்கள். லத்தீன் அமெரிக்காவின் ஒப்பற்ற எழுத்தாளர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் ஒரு பார்வைமாற்றுத் திறனளி. story of my life மற்றும் mid stream nights dream. போன்ற நூல்களை எழுதிய ஹெலன் ஹெல்லர், இலியட் காவியம் படைத்த ஹோமர், இழந்த சொர்க்கம் படைத்த மில்டன் ஆகிய படைப்பாளிகளும் பார்வையற்றவர்களே. ஸ்டீவ் ஒண்டர், பார்வையற்ற பாடகர் ரே சார்லஸ் பார்வையற்ற இசையமைப்பாளர். நொபுயுக்கி ட்ஸுஜி பார்வையற்ற ப்யானோ இசைக்கலைஞர். தமிழகத்தின் வீரராகவ முதலியார், மாம்பழக்கவிராயரும் பார்வையிழந்த இலக்கியவாதிகளே. இவர்கள் எல்லாம் உலகப்புகழ் பெற்றவர்கள். அவர்களைப் போல் நாமும் உயர்வடைய வேண்டுமானால் வாசிப்பதையும் வாசிப்பு வழியில் எழுதுவதையும் நமது உடமையாக்கிக் கொள்ள வேண்டும்.

நான் 9 சிறுகதைத் தொகுப்புகளும் 7 நாவல்களும் ஒரு கட்டுரை நூலும் எழுதியிருக்கிறேன். அவற்றுள் “கடை” மற்றும் “நிறங்களின் உலகம்” நாவல்கள் பல விருதுகளை வென்ற படைப்புகளாகும்.

நிறங்களின் உலகம் பற்றிய சில குறிப்புகள்
  1. வறுமை.
  2. அறியாமை.
  3. படிப்பு.
  4. வாசிப்பு.
  5. காதல் மற்றும் காமம்.
  6. இந்தி எதிர்ப்புப் போராட்டம்.
  7. கீழவெண்மணிப் படுகொலைகள்.
  8. வாழமுடியும் என்ற நம்பிக்கை.
இன்றளவும் பேசப்படும் நாவலாக இது இருக்கிறது. 1886ல் எழுதப்பட்ட “கண் தெரியாத இசைஞன்” நாவல்தான் பார்வையில்லாதவரை நாயகனாகக் கொண்ட நாவலாகத் திகழ்கிறது. உக்ரேனிய எழுத்தாளர் கொரலன்கோ என்ற எழுத்தாளர் ரஷ்ய மொழியில் எழுதிய படைப்பு. பார்வையுள்ள படைப்பாளி பிறவியில் பார்வை இல்லாமல் பிறந்த பியோதர் என்ற பையனைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. பார்வை இழப்பு மற்றும் வறுமையை அனுபவித்த ஒருவர் பார்வை இழந்த பையனை நாயகனாக வைத்து எழுதப்பட்ட ஒரே நாவல் “நிறங்களின் உலகம்" அது குஜராத்தி மொழியில் ஆக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

படிப்பின் வலிமையே படைப்பின் வலிமை என்பதால் நிறைய வாசிப்போம்; தேவையான அளவு எழுதுவோம்.

ஒரு படைப்பு வாசகனின் மனதில் உணர்வெழுச்சியை அல்லது பௌதீக சக்தியை உருவாக்க வேண்டும். அப்படி நிகழ்ந்தால்தான் சமூக மாற்றத்துக்கான விதை ஊன்றப்படுகிறது என்று அர்த்தம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவரும் அதை வலியுறுத்துகிறார். இப்போதுபோல் வள்ளுவர் காலத்தில் புத்தகங்கள் இல்லை; ஓலைச் சுவடிகள்தான். ஒவ்வொருவருக்கும் ஒன்று என்ற முறையில் ஓலைச் சுவடிகள் வினியோகிக்க முடியாத காலம். ஆகவே ஒன்றிரண்டு எழுதப்பட்டுப் பலரும் கேள்வி ஞானத்தால் உள்வாங்கி வாசிப்பு ஞானத்தை வளர்த்துக் கொண்டனர். வள்ளுவர் சொல்கிறார்.

“விரைந்து தொழில்கேட்கும் ஞாலம், அரிதுஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.” (குறள் 648. சொல்வன்மை)

(அரிய கருத்துகளை இனிய மொழியில் சொல்ல முடிந்தால் அதைக் கேட்கும் மனிதர்கள் உணர்வெழுச்சியடைந்து களத்தில் இறங்கிச் செயல் படுவார்கள்.)

இப்படியான உணர்வெழுச்சியை உண்டாக்கக் கூடிய இலக்கியப் பனுவல்கள் உலகெங்கும் விரவிக் கிடக்கின்றன. சிலி நாட்டில் ஜனநாயகம் மறுக்கப்பட்ட காலத்தில் விக்டர் ஹோரா என்ற கிதார் இசைக் கலைஞர் வீதிகள்தோறும் சென்று கிதார் இசைத்து, இளைஞர்களை அணிதிரட்டி, பௌதீக சக்தியை உருவாக்கவல்ல கவிதைகளைப் பாடினார். அதன்மூலம் இளைஞர்கள் களத்தில் இறங்கிப் போராடி சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிந்து ஜனநாயகத்தை மீட்டெடுத்தனர். அப்படியானதோர் கவிதை இதோ;-

பாடுவது எனக்குப் பிரியமானது என்பதால்
நான் பாடுவதில்லை.
என் குரல் அழகை
வெளிக்காட்டுவதற்காகவும்
நான் பாடுவதில்லை.

என் கிதார் உரக்க முழங்கும்
உண்மைகளின் வழிநின்றே
நான் பாடுகிறேன்.

ஏனெனில்
என் மண்ணின் இதயமே
என் கிதாரின் இதயமும் ஆகும்.

வீரர்களையும்
இந்த மண்ணுக்காக
மடிந்துகொண்டிருப்பவர்களையும்
ஆசீர்வதிக்கும் புனிதநூல் போன்றதும்
மென்மையாகப்பறந்து செல்லும்
புறா போன்றதும்
ஆகும் என் கிதார்.

என் பாடலுக்கு
ஒரு குறிக்கோள் உண்டு.
ஆம்.என் கிதார்
ஒரு பாட்டாளியின் பிம்பம்.

ஒளிமிக்கதாய்
வசந்தகால நறுமணம் மிக்கதாய்
அது திகழ்கிறது.

என் கிதார் இசை
கொலையாளிக்கு அல்ல;
பேராசையும் அதிகார வெறியும்
கொண்டவருக்கானதுமல்ல.

எனது கிதார்
உழைக்கும் மக்களுக்கே
உரித்தானது.
ஆம்!
நாளை விடியலுக்காக
உழைக்கும் மக்களுக்கே
அது உரித்தானது.

ஏனெனில்
ஒரு பாடல் பொருள் உடையதாய்
மாறுவது
அதன் இதயத் துடிப்பு
வலுவானதாய் இருக்கும்போதுதான்.
அந்தப் பாடலைப்
பாடிக்கொண்டே
மடிகிற ஒருவனால்
பாடப்படும்போதுதான்.

நான் புகழுக்காகப்
பாடுவதில்லை.
அன்னியர்கள்
என் இசைகேட்டு
இரக்கப்படுவதற்காகவும்
நான் பாடுவதில்லை.

நான் பாடுவது
இந்த என் சின்ன தேசத்துக்காக;
குறுகலான ஆனால்
மிகவும் அழகான
இந்த நாட்டிற்காக. 

திண்டுக்கல் 14-15-6-2025 நாட்களில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப் பட்ட பயிலரங்கில் நிகழ்த்திய உரைச் சுருக்கம்.
Author Picture

தேனி சீருடையான்

இயற்பெயர் கருப்பையா. ஏழாவது வயதில் பார்வையை இழந்த இவர் சென்னை பூந்தமல்லியிலுள்ள பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பிரெய்லி முறையில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் இருபதாவது வயதில் அறுவை சிகிச்சை மூலம் பார்வை பெற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். கடை, நிறங்களின் உலகம், சிறகுகள் முறியவில்லை இவரின் குறிப்பிடத்தக்க நாவல்களாகும். ஆகவே, ஒரே வாசல், விழுது முதலிய சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. அய்.தமிழ்மணியின் இயக்கத்தில் 'தனித்த பறவை' என்ற பெயரில் தேனி சீருடையான் குறித்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு