அதேபோன்றதொரு
கசாப்புக்கடைகாரன் தான்அதேப்போன்றதொரு
வெட்டுக்கத்தி தான்
அதேப்போன்றச்சில
ஆசை வார்த்தைகள் தான்
பலியாகத் துணிகின்ற மனதை
என்னவென்றுச் சொல்ல.
----------
சுடலைப்பொடி பூசித்திரியும்
சிவன்
எச்சுடுகாட்டில் சாம்பலைப் பெற்றிருப்பான்...?
ஆதிதிராவிடர் காட்டிலா..?
ஆதிக்கச்சாதி காட்டிலா..?
----------
என் வேலையின் விவரம்
கேட்ட தோழரிடம்
நானொரு பாலியல் தொழிலாளி
என்பதைத் தெரிவித்திருந்தேன்.
"உடலை விற்பதெல்லாம் மானங்கெட்ட பொழப்பு" என
அத்தோழர் பேசிய புரணி
வேறொரு தோழரின் வழியே காதில்பட்டது
மறுமுறை சந்தித்தால்
தோழரிடம்
சொல்ல வேண்டும்.
மானம் என்பது உடலில் இல்லையென்று.
----------
உங்களால் கட்டமைக்கப்பட்ட
ஏதோ ஒரு சாதியில் தானே
நாங்கள் பிறந்திருப்போம்.
உங்களால் கட்டமைக்கப்பட்ட
ஏதோ ஒரு மதத்தில் தானே நாங்கள் பிறந்திருப்போம்.
பிறகு ஏன்
உங்கள் சாதியில் பிறந்தவளென்றும்
உங்கள் மதத்தை சார்ந்தவளென்றும்
எம் பிணத்தின் மீது நீங்கள்
அரசியல் செய்வதேயில்லை...?
அப்படியேனும் எமக்கான நீதி கிடைக்குமல்லவா...?
நீதியை விடுங்கள்,
இப்படியொருத்தி
கொல்லப்பட்ட செய்தியேனும்
வெளி உலகிற்குத் தெரியவருமல்லவா..?
என் சாவிற்கு நியாயம் கேட்பதால்
உங்கள் சட்டைப் பையோ
வாக்கு வங்கியோ
நிறையப்போவதில்லைதான்.
ஆயினும்,
வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும்
புறக்கணிப்பை மட்டுமே பரிசளித்து
திருநர் மீதான வெறுப்புகளால் காப்புக்காய்த்து போன உங்கள் இதயத்திடம்,
எம் சடலங்கள்
எதிர் பார்க்கும்
ஓர் இறுதி இரங்கல் இது.
பாலாதிக்கத் தீண்டாமையால்
நீங்கள்
இதுவரையில் இழைத்த அநீதிக்கு இழப்பீடாக
எம் பிணத்தின் மீது நீங்கள் செய்யும் அரசியல்
பேசுபொருளாகி
பலரின் கள்ள மௌனங்களைக் கலைக்கட்டும்.
அதுவே எமக்கான இறுதி அஞ்சலி.
செய்யுங்கள்.
உங்களால் கொலைக்களப்பட்ட திருநர்
பிணத்தின் மீதும் அரசியல்
செய்யுங்கள்.
