-->

அண்மை

வே. சுகுமாரன் கவிதைகள்



1. எனக்குப் பிடித்தவை

விகாரங்களைக் கூட
விமர்சனம் செய்யாத
என் கண்களை
எனக்கு
மிகவும் பிடிக்கும்

“அவர் பார்வை
சரியில்லை” என்று
பிறரைப் பழிக்க
என்னை அனுமதிக்காத
என் கண்களை
எனக்கு
மிகவும் பிடிக்கும்

குற்றத்தைக் கண்டு
ஒதுங்கிச் செல்லும்
மன உறுத்தலை
எனக்கு அளிக்காத
என் கண்களை
எனக்குப் பிடிக்கும்

வேடப் புன்னகை
வெளிச்சத்தில் வீழும்
விட்டிலாய் என்னை
மாற அனுமதிக்காத
என் கண்களை
எனக்குப் பிடிக்கும்

சமூக அவலத்தை
சற்றேனும் தெரிந்திட
வாய்ப்பளித்த என்
கண்களை
எனக்குப் பிடிக்கும்

நெருக்கடி நேரத்திலும்
நிதானம் நல்கிய
என்
நிசப்த கண்களை
எனக்குப் பிடிக்கும்.


2. அழைப்பிதழ்

எனக்கும் ஒரு
அழைப்பிதழ் கொடுங்கள்
என்ன சாத்தியமில்லையா?
எப்படி சொல்கிறீர்கள்
உறவும் இல்லை
நட்பும் இல்லையா?
முப்பாட்டன் சொன்னானே
யாவரும் கேளீர் என்று
சரி சக மனிதன் கணிப்பு தேறுமா?

எல்லாம் விடுங்கள்
இயற்கைக்கு எதிரான
மனிதர் நீங்கள் என்ற
விமர்சனம் தவிர்க்க
உங்கள் அழைப்பிதழ்
மறுபிறவி எடுக்க

எனக்கும் ஒரு
அழைப்பிதழ் கொடுங்கள்
பிரெயிலில் ஒரு
கவிதை எழுதிக்கொள்கிறேன்.


Author Picture

வே.சுகுமாரன்

கவிஞர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். கோவையில் இவர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவேதுணை ஆய்வு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவருடைய மொழிபெயர்ப்பு நூலான "காட்டு வாத்துக்கள்" முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு