-->

அண்மை

தினகரன் கவிதை


சில்லுகள் உருவங்களில் மட்டுமே வெவ்வேறானவை

உடைக்கப்பட்ட ஒவ்வொரு சில்லுகளையும்
கவனமாக அள்ளியெடுத்து
மூடிய குடுவையில்
அடைத்து வைத்திருக்கிறேன்.

உடைபட்ட சில்லுகள் அனைத்தும்
உருவங்களில் மட்டுமே வெவ்வேறானவை.
உடைபட்ட வலிகளைச் சுமந்துக்கொண்டு
இனியும் வாழமுடியாத பெருவெடிப்பு தோன்றியபோதே,
சில்லுகளைச் சேகரிக்க தொடங்கிவிட்டேன்.

சில்லுகள் சில நேரம் தானகவே உடையும்
பல நேரம் தன்னை உணராதவர்களால் உடைக்கப்படும்.
கயல்விழியும் தனலட்சுமியும் அஞ்சாங்கல் ஆடும்போது
தவறவிட்ட கல்லை
விழவில்லை என்று நான் சாதித்துச் சண்டையிட்டதை
கபடி ஆடும் ஏழுமலை பார்த்ததும்
என்னாட பொட்டமாறி சண்ட பிடிச்சுனு இருக்கனு
கத்தியபோது முதல்முதலாக உடைந்தது அந்தச் சில்லு.
அக்காபோடும் மஞ்சளை லேசாக முகத்தில் தேய்த்ததற்கு
அப்பா விட்ட அடியால் உடைந்தது ஒருநாள்.
என் கைகளுக்கு மருதாணிக் கோலம் போட்ட
அக்காவிற்கும் எனக்கும் விழுந்த உதையால்
உடைந்தது மறுநாள்.
தங்களைப் போன்ற பிறப்புறுப்பு இவனுக்கும்
இருக்கா எனும் மூளையைச் கசக்கிய
பெருங்கேள்விக்குக் கழிவறையில்
விடை தேடிய சக மாணவர்களால்
பலமாக உடைக்கப்பட்டது அந்தச் சில்லு.
கல்லூரிக் கலைவிழாவில்
முழு ஆன்மாவைக் கொடுத்துக்
கைகால் அசைவுகளின் நளினத்தோடு
நாட்டியத்தில் மெய்மறந்துபோனபோது
அவனா நீ?
என்ற குரல்களால் மீண்டும் நொறுக்கப்பட்டது
அந்தச் சில்லு.

மற்றவர்கள்போல் இல்லாமல்
தன்மீது அன்பைப் பொழிந்த மகிழனிடம்
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று கூறிய போது
காதலா? செக்ஸ்தான உனக்கு வேணும்?
என்று கூறியபோதே
பட்டென முழுவதும் உடைந்து விழுந்தன
அந்தச் சில்லுகள்.

சில்லுகள் உருவங்களில் மட்டுமே வெவ்வேறானவை
இனியும் சில்லுகளைச் சேர்க்க
குடுவையில் இடம் இல்லாதபோது
பத்திரமாகச் சில்லுகளை எல்லாம் எடுத்துக் குவியலாக்கினேன்.

குவியலைச் சிதறாமல் ஒன்று சேர்த்து
கனமான சம்மட்டி வைத்து அடிக்கும்போது
தப்பிக்கும் சில்லுகளைத் தனியாக எடுத்து
அடித்துச் சேர்த்துக்கொண்டேன்.
சம்மட்டியின் கணம்தாங்காமல்
சில்லுகள் பொடியாகின.
பொடியை எடுத்துக் கூழில் கரைத்துக்கொண்டேன்.
அச்சேர்மத்தை நூலின் மீது தடவி
காற்றில் விட்டேன்!
பாருங்கள்
வானத்தை முட்டிக்கொண்டு பறந்தது
பட்டம்.
உடைந்த சில்லுகளைக்கொண்டு
மாஞ்சா நூலைத் தாயரித்தது
மற்ற பட்டங்களைக் கிழிப்பதற்காக மட்டும் அல்ல.

Author Picture

தினகரன்

கலை, இலக்கிய, சமூக விமர்சனத்தில் ஆர்வத்துடன் செயல்படுபவர். மார்க்சிய, விளிம்புநிலை அரசியலில் தொடர்ந்து இயங்கி வருபவர்

மின்னஞ்சல் - dinakaran0618@gmail.com

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு