-->

அண்மை

ப. ஒலிமயக்கூத்தன் கவிதைகள்


1. ஆதிமொழி

திறந்திருந்த கதவின் வழியே
தெய்வத்தின் குரலோடு
தெரிக்கிறது அறையிலிருந்து குளிர்க்காற்று:
வேண்டுதலைக் கையளித்துவிடும் வேகம்
விரைகிறது கால்கள் கருவறை நோக்கி
“கடவுள் இப்போது இல்லை”
மறுக்கவொண்ணா பூசாரியின் மறைச்சொல்
இருப்பை நிரூபிப்பது எந்தக்காலம்?
நானே கண்டிலன்
நானே விண்டிலன்
நானே மௌன சாட்சி
நீதியற்று காற்றில் நெளிந்த
அந்த ஆதிமொழிக் கணங்களுக்கும்.

2. மௌனம்

என் மௌனம்
எனக்கான ஆடி
பிறர் மௌனம்
எனக்கோர் பேதளிப்பு
சம்மதமா?
அரைச் சம்மதமா?
எங்கோ கவனமா?
உள்ளுக்குள் தர்க்கிப்பா?
தீர்க்கத்துக்கான தேடுதலா?
உதடு அவிழ்கிறதா?
தலை அசைகிறதா?
உடன்பாடின்மையா?
ஒப்புக்கொள்ளலில் சிறு இடைவெளியா?
என்னவாயிருக்கும்?

முனுமுனுக்கத் தொடங்கிவிட்ட மனதை
முடிச்சிடுகிறேன்
இன்னும் என்னை
ஒருமுகப்படுத்திக்கொண்டு
உற்றுக் கேட்கிறேன்!
செல் நோண்டிட்டிருக்கு பய புள்ள.

3. ‘Loose Hair’

காதலிகள் சந்திக்க
கால் கடுத்தோம் நானும் நண்பனும்.
“அதோ வருகிறார்கள்”
அறிவித்தான் நண்பன்.
நெருங்கிவிட்டதை
அவள் கொலுசு சொன்னது.

எப்போதும் போலவே
இடைவெளி விட்டு
நின்று பேசினோம்.

“Loose Hair
உன்னைவிட இவளுக்குப்
பிரமாதம்” என்று
என்னவளைப் புகழ்ந்தான்
இனிய நண்பன்.

தொடுகைக் கோரிக்கையோடு
தொந்தரவு செய்தது மனம்.
நெருங்கிக் கைநீட்டி
நுனிவிரல் பட்ட கணம்
தன் பக்கமாய் என்னவளைத்
தள்ளிக்கொண்டாள்
நண்பனின் நங்கை.

“பப்ளிக்ல என்ன இது
கொஞ்சம்கூட சென்ஸே இல்ல”
செல்பேசி சினுங்கல்களில் – நண்பனிடம்
சிலாகித்திருக்கிறாள் என்னைப் பற்றி.

என்னவளும் வழிமொழிந்து
இதையேதான் என்னிடம் சொன்னாள்.
அலைஞ்சான் என முத்திரை குத்தி
அணைத்துவிட்டாள் செல்பேசியை.

அம்மா இருந்திருந்தால்
அப்பா இல்லாத தருணத்தில்
அங்குலம் அங்குலமாய்
அளந்து காட்டியிருப்பாள்.
‘Loose Hair’

மூன்று தங்கைகளுமே
கட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.
எவரிடம் கேட்பது
‘Loose Hair’

இரவெல்லாம் அமர்ந்து
இயேசுவைப் பிரார்த்தித்தாலும்
இலக்கியம், இசையென
எங்கு தப்பி ஓடினாலும்
இறுகிக்கொண்டே போகிறது
எண்ணத்தில்
‘loose Hair’

- ப. ஒலிமயக்கூத்தன்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு