-->

அண்மை

கிருஷாங்கினியுடன் நேர்காணல் (தனிச்சொல் குழு)

ஓவியம் - சாய் அரிதா

கேள்வி: தமிழில் உங்கள் எழுத்துப் பயணம் எவ்வாறு தொடங்கியது? நீங்கள் எழுத வந்தபோது - அதாவது பெண்கள் எழுத வந்தபோது நவீனத்தமிழ் எழுத்துலகம் எப்படி அதைப் பார்த்தது? நீங்கள் எவ்வாறு அதை எதிர்கொண்டீர்கள்?

என் அம்மாவும் (பூரணி) அண்ணனும்தான் (கே.வி.ராமசாமி) நான் எழுத வந்ததற்குக் காரணம். அவர்கள் எனக்குப் படிப்பு சொல்லிக்கொடுத்தார்கள். என் பாட்டி (அம்மாவின் அம்மா) தனியாகப் பள்ளி ஒன்று நடத்தினார். அதை இலவசமாக அன்னிபெசன்டிடம் கொடுத்துவிட்டார். நான் 1948இல் பிறந்தேன். என் அப்பா பெரிய தொழிலதிபர். சொந்தமாக ஹோட்டல் வைத்து நடத்தினார். பாதாம் அல்வா மற்றும் ரவா தோசையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது எங்கள் ஹோட்டலில்தான். திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் எங்கள் வீட்டில் வேலைப்பார்த்து இருக்கிறார். அந்த ஹோட்டலில் எப்பவுமே ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கொடியேற்றி, போனஸ் கொடுத்து புதுத்துணி வழங்குவார்கள். மற்ற பண்டிகைகளைவிடச் சுதந்திர தினத்தையே முக்கிய பண்டிகையாக எண்ணிக்கொள்வோம். என்னுடன் பிறந்தோர் ஒன்பது பேர் என்பதால் என் அம்மாவினால் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட இயலவில்லை. அதனால், இந்தியைச் சுதந்திர ஆயுதமாக எடுத்து பெண்களுக்கு மட்டும் கற்றுக்கொடுத்தார்கள். இந்தி என்பது வீட்டுமொழி மாதிரி. இளம்வயது விதவைகள் வீட்டிற்கு வருவார்கள். என் அம்மா அவர்களிடம் ‘காலம் என்பது உன்னுடையது, இடையில் வருபவனே கணவன், அதனால் நீ எதையும் இழக்கக்கூடாது, திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று சொல்வார்கள். அவர்களுக்குப் பூவும் பொட்டும் வைத்து அலங்காரம் செய்து வைப்பார்கள்.

பெண் கொடுமை என ஒன்று உள்ளது என்பதே எனக்குத் தெரியாது. ஏனென்றால், என் வீட்டில் அது துளியும் இல்லை. உறவினர் எங்களை ஏமாற்றி எங்களிடம் உள்ள அனைத்துச் சொத்துக்களையும் அபகரித்துக்கொண்டனர். அத்தனை சொத்துக்களையும் விட்டு ஏதுமற்று நின்றோம். அப்போது எனக்கு ஒன்பது வயது. அந்த மாற்றம் எனக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது மட்டுமின்றி பாடத்தையும் கற்றுக்கொடுத்தது. அப்போதுதான் எழுத ஆரம்பித்தேன். எழுதிவிட்டு தலையணைக்குள் மறைத்து வைப்பேன். அதை என் அண்ணனும் அம்மாவும் எடுத்து படித்துவிட்டு அழுவார்கள். உண்மையை மட்டும் எழுதினேன். அதில் ‘எனக்கு க்ரீம் பிஸ்கட் வேணும். ஏன் இப்படி வாழ்க்கை ஆனது? ஏன் சாப்பாடு கிடைக்காமல் போனது? மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள்? ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதையெல்லாம் எழுதி வைப்பேன். ஒன்பதாவது வயது முதல் தொடர்ந்து எழுதி வருகிறேன். எழுதுவதைத் தவிர்த்து வேறொன்றும் தெரியாது.

நான் எழுதும்போதும் என் அம்மா எழுதும்போதும் பெரும்பாலும் எழுத்தாளர்கள் பிராமணர்களாகத்தான் இருந்தார்கள். காரணம், அவர்களுக்குப் படிப்பறிவு இருந்தமையாலே. கிராமத்தில் பெண்கள் பாடக்கூடிய பாடல்கள் எவ்வளவு கவித்துவமாக இருக்கின்றன. எழுத்தில் பதிவானது மட்டும்தான் இலக்கியம் என்று வருவதால்தான் பிராமணர்கள் அதிகமாக எழுத வருகிறார்கள். கிராமப் பாடல்கள் எழுத்தில் பதிவாகவில்லை. அதனால் இலக்கியமாகக் கருதுவதில்லை. பிராமணர்களோடு சேர்த்து சில முற்பட்ட சாதிக்காரர்களும் வருகிறார்கள். அதிலும் பெண்கள் அதிகமாக இல்லை. சங்ககாலத்தில் சில புலவர்களைப் பெண்கள் எனச் சொல்கிறோம். அவர்கள் பெண்களா? எப்படி அவர்கள் வாழ்க்கை இருந்தது என்றெல்லாம் நமக்குத் தெரியாது. வரலாற்றில் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவும் தனித்திருக்கக் கூடியவர்களாகவும் வீட்டிற்குள்ளேயே புலம்பிக்கொண்டிருப்பர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். எழுதவந்த பெண்களும் தனக்கு முன்பு இருக்கும் ஆண்களைப் பார்த்துத்தான் எழுதினார்கள். பெண்களுக்குத் தனியாக எழுத வேண்டும் என்றெல்லாம் தெரியாது. லக்ஷ்மி உட்பட பல பெண் எழுத்தாளர்கள் ஆண்கள் எழுதும் சாயலில்தான் எழுதினார்கள். ஆனால் அது பெண் எழுத்து இல்லை. நாற்று நடக்கூடிய ஒரு பெண்ணின் பாடலில் வலி இருக்கும், வேதனை இருக்கும், துன்பம் இருக்கும், குடும்பத்திலிருந்து வெளிவரமுடியாத தவிப்பு இருக்கும், குடித்துவிட்டு அடிக்கும் புருஷன் இருப்பான். ஆனால், எழுத்தில் இது எதுவும் இருக்காது. இன்று வரையிலும் அப்படித்தான் நிகழ்கிறது. பெண்ணின் உண்மையான வலிகளைப் பதிவு செய்யத் தெரியாமல், ஆணின் பார்வையிலேயே எழுத்தாளர்கள் பதிவு செய்கின்றனர். அது பெண் எழுத்து இல்லை. சாதாரண டப்பா மாதிரி. பரிசுப்பொருளை கவர் போட்டு மூடுவதுபோல் வாழ்க்கையின் அனுபவங்களை உள்ளேவைத்து அழகான ஜிகினாபேப்பர் கவர் போட்டதுபோலத்தான் எழுதினார்கள். அவர்களுக்கு அதற்குமேல் தன்னுடைய அனுபவத்தை எப்படி எழுத வேண்டுமென்று தெரியவில்லை. வலிகள்மீது மூடிய தாள்போல அனைத்து வலிகளையும் ஒடுக்குமுறைகளையும் மறைத்து எழுதுகின்றனர். என் அம்மாவோ, சூடாமணியோ, ராஜம்கிருஷ்ணனோ எழுதும்போது பெண்ணின் வலியை எழுத வேண்டும் என்று எழுதினார்கள். இதையெல்லாம் சகஜமாக ஏற்றுக்கொண்டார்கள் என்று பெரிதாகச் சொல்லமுடியாது. இவர்களைப் போலவே நாங்களும் எழுதுகிறோம். பெரிய மாற்றம் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. இன்றும் ஒரு பெண் எழுத்து அச்சில் வரவேண்டுமென்றால் பல சிக்கல் இருக்கு. இன்றும் பலரின் கவிதைகளைத் தொகுத்துத் தொகுப்புப் போடுகிறார்கள் என்றால் அதில் ஆண்கள் 97பேர் இருப்பார்கள். 3பேர்தான் பெண்கள் வருவார்கள்.

கிருஷாங்கினியுடன் நேர்காணல்

இலக்கியக்கூட்டங்களுக்குச் சென்றால் பெண் எழுத்தாளர்கள் என்று இருவரோ மூவரோதான் வருவார்கள். இன்றுவரை பெண்களுக்கு என்று அங்கு தனிக்கழிப்பறை கிடையாது. சாகித்திய அகாதமியிலும் பெண்களுக்கு என்று தனிக்கழிப்பறை  இல்லை என்ற நிலைமைதான் முன்பு இருந்தது. இப்படித்தான் நம் இலக்கியச் சூழல் இருக்கிறது. கழிப்பறைகூட சரியாக ஒதுக்கத்தெரியாதவர்கள் என்ன எழுதி என்ன செய்யப்போகிறார்கள். பெண்களின் மனத்தை எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? சாதியை எப்படி ஒழிக்கப்போகிறார்கள்? பெண்களை, குழந்தை பெறுவதிலிருந்து எப்படி விடுவிக்கப் போகிறோம்? இதெல்லாம் பெரிய பெரிய விஷயம்.

கேள்வி: பல தடைகளைத்தாண்டி நீங்களோ ராஜம் கிருஷ்ணனோ, சூடாமணியோ எழுத வந்தீர்கள். தமிழ்ப் பொது எழுத்து வெளி என்பது முழுக்க ஆண்மையமாக இருக்கிறது. நீங்கள் எழுத வரும்போது புதிய குரலாக எதிர்க்குரலாக இருக்கிறது. ஆண்மைய எழுத்துவெளி எப்படி இதை எதிர்கொண்டது? அவர்களுடன் உங்கள் எதிர்வினை என்ன?

நானும் பெரியதாகச் சண்டை போடுவதுபோல் எழுதவில்லை. ஆண்கள், ‘ஐயையோ இப்படி எழுதிட்டாங்களே’ எனும்படி சூடமணியோ ராஜம்கிருஷ்ணனோ எழுதவில்லை. வீட்டில் ஒரு பெண் சமத்தாக இருந்தால் ஊக்குவிப்பார்கள் அல்லவா அதுபோலத்தான் என்னையும் அவர்கள் ஊக்குவித்தார்கள். எனக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஆனால் பட்டியல் போடும்போது, தொகுப்புப் போடும்போது மறந்துவிடுவார்கள், வெளியில் சொல்லும்போது என்னை மறந்துவிடுவார்கள். அப்புறம் அவர்களைக் கொஞ்சம் உசுப்பி, ‘பெண் எழுத்து என்று ஒன்று இருக்கு தெரியுமா’ என்று கேட்க வேண்டும். உடனே, ஆஹா என்று விழித்துக்கொண்டு ஒரு நான்கு பேரைச் சொல்வார்கள். அதுதான் எப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. எல்லோரும் இதைத்தான் செய்கிறார்கள். ஆனால் எங்களுக்கெல்லாம் எதிர்ப்பு வரவில்லை. "நா சொல்றதயெல்லாம் கேட்டு நீ எழுதற, சமத்து. நீ ஒருபக்கம் உக்காந்துகோ நான் ஒரு பக்கம் உக்காந்துகிறேன். எனக்குக் குறுக்கே வராதவரையில் உனக்குப் பிரச்சன இல்லை" என்ற நிலையே இருந்தது. எனவே, வீட்டிலும் வெளியிலும் எனக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. நான் தத்துவ நிலையில் உலகம், நிலையாமை என்றுதான் எழுதிக்கொண்டிருந்தேன். புருஷன் அடித்தான் என்றோ, அந்த ஆண்மேல பிரியம் இருந்தது என்றோ, இந்த ஆணைக் கல்யாணம் செய்து கொண்டேன் என்றெல்லாமோ எழுதவில்லை. அம்பைக்கு எதிர்ப்பு வந்தது. அம்பை எழுதும்போது காத்திரமாக, தீர்மானமாக எழுதினார். ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’யையும் ‘அம்மா ஒரு கொலைசெய்தாள்’ இரண்டையும் இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதைவிட அற்புதமான கதைகளையெல்லாம் அவர் எழுதிவிட்டார். அவர்களுக்கு எதிர்ப்பு வந்தது மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் பல ஆண் எழுத்தாளர்கள் மிக இழிவாக அம்பையைப் பற்றி என்னிடம் பேசியிருக்கிறார்கள். அப்பொழுது, ‘இவனெல்லாம் ஒரு எழுத்தாளனா? சமூகத்துக்கு என்ன செய்யப்போகிறான்’ என்று தோன்றும். ஆனால், அம்பை எல்லாவற்றையும் எதிர்கொண்டார்கள். ரொம்பப் பெரிய விசயம். இரா.மீனாட்சிக்கும் பெரிய எதிர்ப்பு வரவில்லை. அவரும் மென்மையாகவே எழுதினார்.

கேள்வி : இது முக்கியமான இடம். 20ஆம் நூற்றாண்டின் இறுதியில், ‘ஆணின் அதிகாரத்தில் குறுக்கிடக்கூடிய இடத்தில், ஆண் உடலை முன்னே நிறுத்திக் கேள்வி கேட்கும் இடத்தில் பெண் எழுத்து தீவிரமடைகிறபோது, பெண் எழுத்தாளர்கள் கூடி அமைப்பாகச் செயல்படத் தொடங்கும்போது சிக்கல் வருகிறது. புதிதாக எழுத வந்த அடுத்த தலைமுறைப் பெண்களுடன் இணைந்து செயல்படுகிறீர்கள். குறிப்பாக மாலதி மைத்ரி, குட்டி ரேவதி போன்றோருடன் இணைந்து செயல்பட்டிருக்கிறீர்கள். அவை குறித்துச் சொல்லுங்கள்?

கிருஷாங்கினியுடன் நேர்காணல்

1998இல் என்னுடைய முதல் புத்தகம் வெளிவருகிறது. அந்த வெளியீட்டில் பழமலய், ஞானக்கூத்தன் முதலியோர் பேசினர். அக்கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதை, ‘ஒரு வெண்மையான எம்டி கேன்வாஸ் (Empty canvas), அது ப்யூராக (pure) இருக்கிறது. அதில் எந்த வண்ணமும் கறையாகப் படுகிறது. அதை உற்று நோக்கும்போது, ஜூம் (zoom) செய்து அந்த கேன்வாசைப் பார்க்கும்போது அது உங்களை விழுங்கிவிடுகிறது. அந்த வெண்மையில் முழுகிவிடுவீர்கள். அப்போது பச்சை நிறமோ, நீலக் கோடோ, கருப்புப் பொட்டோ அதற்குக் கறையாகிவிடுகிறது’. என்று கவிதை எழுதியிருந்தேன். இதை, பழமலய், சாதியாகப் பார்த்தார். எம்டி கேன்வாஸ் என்பது பிராமணத்தன்மை, பச்சை என்பது முசுலீம் என்றும் சிவப்பு என்பது கம்யூனிசம் என்றும் இதையெல்லாம் இவர் கறையாகச் சொல்கிறார் என்று பொருள் கொண்டார். நான் எழுந்து சொன்னேன் 'நான் எழுதியது நான் சொன்ன நிலையில் இருந்துதான் எழுதினேன். நீங்கள்தான் இதில் சாதியைக்கொண்டு வருகிறீர்கள். எனக்குத் தெரியவில்லை' என்றேன். எனக்குப் புதுச்சட்டையும் புதுக்கவிதையும் ஒன்றுதான். புதுச்சட்டை மூன்று நாள் பயன்படுத்திய பின் பழையதாகும். புதியதாக ஒன்று வந்தால் அதை நான் போட்டுக்கொள்வேன். அப்படித்தான் பொதுவாக நான் கவிதைகளைப் பார்க்கிறேன். இதையும் அப்படித்தான் எழுதினேன் என்றேன். சிலநாட்களுக்குப் பிறகு வத்சலாவின் கவிதைத்தொகுப்பு வெளியிட்டார்கள். வத்சலா என்பவர், ஐஐடியில் கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர். அந்தக் கவிதைகளில் பெண்களின் வலிகளைக் கூறியுள்ளார். அந்தக் கூட்டத்தில், எழுத்தாளர் விக்ரமாதித்தியன், ‘ஆண்டாளுக்கு, ஔவைக்கும் அடுத்து பெண் கவிஞர்களே தமிழில் கிடையாது’ என்று கூறினார். என்னைப் பழமலய் மறுத்துப் பேசியபோதும் வத்சலாவை விக்ரமாதித்தியன் மறுத்தபோதும் 50, 100பேர் கொண்ட கூட்டத்தில் ஒருவர் கூட எழுந்து எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ரோட்டில் நாய் அடிபட்டு கிடந்தால் யாரும் அதனைக் கவனிக்காமல் இருப்பதுபோல் எல்லோரும் சத்தமில்லாமல் இருந்தார்கள். எனக்குக் கோவம் வந்துவிட்டது. 1999, 2000மாக இருக்கலாம். இதனை இனிமேல் சும்மா விடக்கூடாது. இதற்குமேல் இவர்களை நம்பிப் பயனில்லை. நாம் இந்தப் பெட்டியைத் தனியாகத்தான் இழுத்துச் செல்ல வேண்டுமெனத் தோன்றியது. என்னுடைய கவிதைத் தொகுதிக்குப் பிறகு எல்லாப் பெண்கவிஞர்களின் கவிதைகளையும் தொகுத்துத் தொகுப்பாகக் கொண்டுவரலாம் என்று நினைத்து அவர்களிடம் அனுமதி பெற்றபின் ஞானக்கூத்தனிடம் ஆலோசனை கேட்கப் போனேன். பெண்கவிஞர்களின் கவிதைகள் என்று தனியாகக் கொண்டுவரலாமென்று சொன்னேன். அப்போது அவர் சொன்ன முதல் வார்த்தை, ‘இதை நீங்கள் செய்வது தப்பு. பெண்கள் என்று தனியாகப் பிரிவு பிரித்தால் பின்னால் நிறைய சிக்கல் வரும். அதை உங்களால் சமாளிக்க முடியாது. இதை இப்படியே நிறுத்திவிடுங்கள்’ என்றார். அப்போதுதான் நினைத்தேன் என்னை மிரட்டுவதற்கு ஒரு ஆம்பிளை இருக்கான் போல என்று. நான் நிறுத்தமாட்டேன் என்றேன். அதற்கு அவர் சொன்னார், ‘மீறிச் செய்தால் நான் இறக்கும்வரை என்னுடைய எழுத்தாளர், இலக்கியக்காரர்கள் பெயரில் உங்கள் பெயரை இணைக்க மாட்டேன்' என்று கூறினார். ‘நான் நிறுத்தமாட்டேன். உங்கள் பட்டியலில் என் பெயரை இணைத்தாலும் இணைக்காவிட்டாலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நீங்க சொல்லி உங்க வாய்ல வந்துதான் எனக்கு பிரம்மப் பட்டம் ஒன்றும் வரப்போவதில்லை’ என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். பின்பு எல்லோரிடமும் அனுமதி வாங்கினேன். இலங்கையில் உள்ள சிலரிடம் மாலதி மைத்ரி அனுமதி வாங்கிக் கொடுத்தார். டிடிபி (DTP) செய்துக் கொடுத்தார். மற்ற எல்லா உழைப்பும் என்னுடையது. கல்பனாவின் கவிதையைத் தலைப்பாகக் கொண்டு ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ என்ற பெயரில் காவ்யா பதிப்பக வெளியீடாக வந்தது. அது எல்லா இடத்திலும் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் இந்த நூல் பேசப்படும் என்று எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் எல்லாம் இவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறார்களே என்ற கோபம் ரொம்பவே வந்துவிட்டது எனக்கு. அப்பொழுதான் இந்த நூலை வெளியிட்டேன். அப்போதுதான் பெண் எழுத்து என்ற பிரிவு உருவாகியது. அந்த நூலில் மாலதி மைத்ரியின் கவிதை இருக்கிறது. குட்டி ரேவதியின் ‘முலைகள்’ கவிதை இருக்கிறது. அதெல்லாம் இவர்கள் யார் கண்ணுலயும் படவில்லை. 2003, 2004இல் குட்டி ரேவதியின் ‘முலைகள்’ தொகுப்பு வந்தவுடனே பெரிதாக வண்டி கிளம்புகிறது. கையில் கோலை எடுத்துக்கொண்டு வாத்தியார் மிரட்டுவதுபோல் மிரட்டுகிறார்கள். ‘நீ எப்படி எழுதலாம், நீ எப்படி பேசலாம்’ என்று சொன்னார்கள். இப்படியான மோசமான சூழல் இருக்கிறது என அப்பொழுதான் தோன்றியது. என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு கவிஞர் என்னிடம் சொன்னார், ‘இதுகளுக்கெல்லாம் தினவெடுத்தா எவனிடமாவது போகவேண்டியதுதானே, கவிதை எழுதறாளுக’ என்று சொன்னார். இது ஒரு கவிஞர் பேசும் வார்த்தையா? ஒரு எழுத்தாளன் பேசும் வார்த்தையா இது? என்று கேட்டேன். ‘இனிமேல் உங்கள் எழுத்தை நான் படிப்பதாக இல்லை’ என்று நான் சொல்லிவிட்டேன். இவ்வளவு அசிங்கமான உணர்வுகளும் மோசமான நிலையும் ஆண்கள் மனதில் இருக்கு என்று அந்த எதிர்ப்புக்கு அப்புறம்தான் தெரிந்தது. ஏனென்றால், ஒரு புல் இருக்கிறது, ஒருபுறம் உதட்டில் உரசினால் மென்மையாக இருக்கும். எதிர்ப்புறம் உரசினால் உதட்டைக் கிழித்துவிடும். நான் எதிர்ப்பக்கம் உரசிவிட்டேன். அதனால்தான் அவர்களுக்கெல்லாம் கோவம் வந்துவிட்டது. அவர்கள் சொன்னப் பேச்சைக் கேட்காத ஆளாகிவிட்டேன். அதற்குப்பிறகுதான் பெண்கள் எழுத்தைத் தொடர்ந்து பேசியாகவேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஒரு மேடையில், தமிழ்ச் சிறுகதை வரலாறு என்று தமிழ்ச்செல்வன் பேசினார். பிறகு அவர் உணர்ந்துகொண்டார். அவர், பேசும்போது, குளத்தங்கரை அரசமரம் கதை முதல் இன்றுவரையில் பேசினார். அதில் ஒரு பெண் எழுத்தாளர் கதைகூட இல்லை. மேடையில் இருந்து அவர் வந்தவுடன் நான், ‘உங்கள் பேச்சில் ஒரு குறை இருக்கிறது’ என்றேன். ‘என்ன கிருஷாங்கினி சொல்லுங்க’ என்றார். நான் சொன்னேன், ‘நீங்க இத்தன பேரைச் சொன்னீங்க, அதில் ஒரு பெண் எழுத்தாளர்கூட இல்லை. அம்பையை, சூடாமணியைக் கூடச் சொல்லல’ என்றேன். உடனே அவர் மீண்டும் மேடைக்குப் போய், ‘கிருஷாங்கினி சொன்னாங்க, பெண் எழுத்தாளரைச் சொல்லவில்லை என்று. அதனால் நான் பெண் எழுத்தாளர் கதைகளைச் சொல்கிறேன்’ என்று மீண்டும் பேசினார். எவ்வளவு நாளைக்குக் கூடையில் சுமந்துகொண்டு நாம் பெண் எழுத்தைப் பேசுங்கள் என்று சொல்ல முடியும். இப்படித்தான் இன்னமும் இருக்கு.

இதில் இரண்டு விசயம் இருக்கிறது. எதைப்பற்றி எழுதினாலும் கவிதையாக இருக்கவேண்டும். உடல்ரீதியாக எழுதக்கூடியதும் கவிதையாக இருக்கவேண்டும். கவிதையாகவில்லையெனில் அதை வெளிப்படுத்தக்கூடாது. இப்போது என்னவென்றால் இரண்டு போக்கு இருக்கிறது. உடலைப்பற்றிக் கவிதை எழுதலாம் என்பது இருக்கிறது. இன்னொரு புறம் உடலைப் பற்றி எழுதினால் சீக்கிரம் பேமஸ் ஆகிவிடலாம் என்று ஒரு போக்கும் இருக்கிறது. இரண்டு கடுகைப் போட்டு தாளித்துக்கொட்டுவதுபோல், யோனி, முலை என்று போட்டுவிட்டு கவிதையாக்கிவிடுகிறார்கள். இதுவும் தாங்க முடியவில்லை. அதில் கவிதை எங்கே இருக்கிறது. எதற்கு அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள். வேற வழியே இல்லாமல் பயன்படுத்துவதற்கும், சும்மா போறபோக்கில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

(தொடரும்…)
Author Picture

கிருஷாங்கினி

கவிஞர், மொழிபெயர்ப்பாளர் பதிப்பாசிரியர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். 40 ஆண்டுகளாகத் தமிழ்ச்சூழலில் இயங்கி வருபவர். தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளை முதலில் தொகுப்பாகக் கொண்டு வந்தவர். படைப்பிலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்புக்கென்று இரண்டு முறை தமிழக அரசின் விருது பெற்றவர். ஓம்பிரகாஷ் வால்மீகி கவிதைகள், அமர்காந்தின் "இந்த ஆயுதங்களால்தான்" என இந்தியிலிருந்து தமிழுக்குப் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அம்பேத்கரின் 'புத்தரும் அவர் தம்மமும்', பாலி அகராதி, பாலி இலக்கணம் முதலியன வெளிவரவுள்ளன.



Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு